Pages

Saturday, December 6, 2014

கிருஷ்ண ஐயர்- ஒரு உதாரணம்


ஷம்சர் சிங் வழக்கு, மேனகா காந்தி வழக்கு, ரத்லாம் மாநகராட்சி வழக்கு மற்றும் முத்தம்மா வழக்குகளில் பேசப் பட்ட நீதியரசர் திரு. கிருஷ்ண ஐயர் சமீபத்தில் நூறு வருடங்களைக் கண்ட பிறகு கண் அயர்ந்தார். இவர் இதுவரை 70 புத்தகங்களை எழுதியிருக்கிறார். 
இத்தகைய தகவல்களை மட்டும் அல்ல, இவர் யார் என்பதையே அறியாத பலர் நமக்கிடையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதிலும், அடித்தட்டு மக்களை எவ்வாறு சமூக பொறுப்போடு வாழ வைப்பது எனும் விடை அறியாத கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு விடையாக, நான் இவரை எவ்வாறு அறிந்து கொண்டேன் எனும் கதையை சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். காந்தி இறந்த நாளில் பிறந்த எனக்கு, எதற்காக அவரை நினைவில் வைத்துக் கொண்டு மௌன அஞ்சலி செலுத்துகிறார்கள் என்பது கூடத் தெரியாத காலம் அது. என் பள்ளிக்கு எதிரிலேயே நூலகம் இருந்தும், அதன் சுவறுகளில் ஒட்டப்படும் திரைப்படங்களின் போஸ்டர்கள் மட்டுமே என் கண்ணில் பட்டு வந்தது அந்த நாளில். ஒவ்வொரு நாளும் நான் என்னவாக ஆகப போகிறேன் என்று என் தந்தை மண்டையை உடைத்துக் கொள்ளும் அளவிற்கு சண்டையோடு கடந்து கொண்டிருந்தது அப்போது. நான் ஒன்றும் படிக்காத பிள்ளையாக இருக்கவில்லை. சமூகப் பொறுப்பு கூடிய பிறகு நான் பெற்ற மதிப்பெண்னை விட அதிகமாகவே அப்போது எடுத்து வந்தேன். ஆனால், எந்த ஒரு குறிக்கோளும் இல்லாத காலம் தான் அது.
அத்தகைய நேரத்தில் எனக்கு பாடம் புகட்ட எவராலும் முடியவில்லை என்று தான் கூற வேண்டும். காரணம், என்னுடைய பார்வை பாடத்தை நோக்கி என்றுமே சென்றதில்லை. வயதுக் கோளாறினால் பெண்கள் பின்னாலும், சினிமாவின் பின்னாலும் தான் அலைந்து கொண்டிருந்தேன். 
அப்போது தான் என் வாழ்வில் முதல் மாற்றம் இந்த இரண்டு ஈடுபடுகளில் ஒன்றின் மூலமாக ஏற்பட்டது. மரண தண்டனை குறித்த ஒரு முக்கிய பதிவாக விருமாண்டி வெளியானது.
என்னைப் போன்று நோக்கமில்லாமல் திரிந்து கொண்டிருப்பவனுக்கு ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க துரதிர்ஷ்ட வசமாக சினிமாவால் மட்டுமே முடியும் என்பதை புரிந்து கொண்ட நாள் இது.
ஆம்! அந்தப் படம் மட்டும் வராமல் இருந்திருந்தால் நான் சமூகத்தின் பக்கம் என் பார்வையை திருப்பி இருப்பேனா என்பது சந்தேகமே. எனக்கு உருவாகியிருக்கும் பல கருத்துக்களுக்கு அதுவே ஆரம்பம் என்று நினைக்கிறேன்.
இங்கு அந்த படத்தை எடுத்த கமல் ஹாசனுக்கு பாராட்டு விழா எடுப்பதில்ல எனக்கு நோக்கம். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்தவே இந்த படத்தை பற்றிக் கூறுகிறேன்.
அடுத்த தலைமுறைக்கு நல்ல மனிதர்களையும், கருத்துக்களையும் அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கும் சமயத்தில், அதை எவ்வாறு இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் செய்வது எனும் கேள்வி நம் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
இதற்கு சுய முயற்சி அவசியம் என்பது சரியே. ஆனால், ஒருவரிடம் சுய முயற்சி உருவாக வேண்டுமானால் அவருக்கு ஒரு ஆரம்பத்தை கொடுத்தே தீர வேண்டும்.
அத்தகைய வகையில் கிருஷ்ண ஐயரின் பேட்டியோடு அந்தப் படம் துவங்கியது அம்மனிதருக்கு மட்டும் அல்லாமல் அவருடைய கருத்துக் களுக்கும் ஒரு நல்ல விளம்பரமாக அமைந்தது.
சினிமா கலைஞர்கள் மீது பல குற்றச் சாட்டுகள் வைக்கப் படும் போது, இது போன்று இடைவெளியை நிரப்பும் பாலமாக அவர்கள் செயல்பட்டால் நம் சமூகம் முன்னேற வழி கிடைக்கும். 
மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்று இன்னமும் நான் ஆய்வு செய்து கொண்டே தான் இருக்கிறேன். இந்த விஷயத்தில் எனக்கு இன்னமும் தெளிவு ஏற்படாததற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், முக்கியமாக என்னை இது குறித்து யோசிக்க வைத்ததே கிருஷ்ண ஐயரின் வெற்றி. ஒவ்வொரு முடிவுக்கும் ஆரம்பம், மனதளவில் நாம் மேற்கொள்ளும் சத்திய சோதனை தான். அந்த வகையில் கிருஷ்ண ஐயர் என்றுமே என் நினைவில் நிற்பார். 
மேலும், ஒரு மனிதரை அவருடைய  ஜாதியைக் கடந்து மதிக்க வேண்டுமானால், அவர் முற்போக்கான சில கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். இன்று தவறாக விமர்சிக்கப் படும் எந்த ஒரு பிராமணரும், தன்னுடைய கருத்துக்களுக்கே விமர்சகர்கள் எதிரியாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, இவரை ஒரு முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.

நன்றி..தி இந்து புகைப்படத்திற்கு.

Friday, November 21, 2014

ருத்ரய்யாவுக்கு பிரபல்யம் தேவையில்லை

என்னுடைய படைப்பை லட்சம் பேரிடம் சென்றடையச் செய்ய, என் பெயரை அதிலிருந்து நீக்கிவிட்டு, புகைப்படத்தையும் மறைக்க வேண்டும் என்கிற கட்டாயமான நிபந்தனை விதிக்கப்பட்டால், அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். இதை ஒரு பிரபலம் சொல்லும் போது அது வெட்டி விளம்பரம் ஆகும்..என்னைப் போன்ற ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் (இந்தப் பெயரை உபயோகிக்க இன்னமும் கூச்சமாக்வே இருக்கிறது) சொல்வது கடினம். ஆனால் இதை மிக்க யோசனையுடனேயே கூறுகிறேன். ஏனெனில், எந்த ஒரு மனிதனுக்கும் தேவையில்லாத ஒரு சுமை தான் இந்த பிரபல்யம் எனும் வார்த்தை..ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய தனிமை மட்டுமே சிறந்த வழிகாட்டி. பிரபலமாகாத படைப்பாளியின் எழுத்தில் நேர்மை குடிகொண்டிருக்கும்..இதே போலத் தான் ருத்ரய்யாவும் யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். காரணம், இன்று வழக்கத்தில் இருக்கும் பல அற்புதமான இலக்கியங்கள், இயற்றியவரின் பெயர் அறியாமலும் நிலைத்து நிற்கின்றன. இந்த பெருமை அந்த படைப்பாளியை மட்டுமே சாரும். அதை யாராலும் தடுக்க முடியாது. அந்தப் பெருமைக்கு ஒரு அங்கீகாரம் தேவையே இல்லை.. ருத்ரய்யாவுக்கு பதில் ஸ்ரீதரின் படம் பிரசுரமானால் அது தானாகவே ருத்ரய்யாவுக்கு பெருமை சேர்த்துவிடும் என்பதற்கு இப்போதைய நிகழ்வு ஒரு உதாரணம்..

Sunday, November 16, 2014

ரஜினியும் அரசியலும்- லிங்கா பேச்சு

நேற்று லிங்கா கேசட் வெளியீட்டு விழாவில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து மறுபடியும் பேசியது குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவர் பேசியதற்கு முன்பாக அமீர் முதற்கொண்ட திரைத் துறையினர் பேசியது தான் இந்த கேசட் வெளியீட்டு விழாவின் பிரபல்யத்திற்குக் காரணம். ஏனெனில், ரஜினியை பேச வைக்க யாராவது எங்காவது சாவியைத் திருகிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. 
தமிழ் நாட்டை காப்பாற்ற ரஜினியால் மட்டுமே முடியும் என்கிற இவர்களது பேச்சு அரசியலில் இவரை விட முதிந்தவர்கள் இல்லவே இல்லை என்கிற மாயையை கிளப்பும் நோக்கில் வடிவாகிறது. 
ரஜினியும், விஜயும் அடிக்கடி தன்னுடைய ரசிகர்கள் மூலமாகவும், படங்களின் மூலமாகவும் அரசியல் ஸ்டுன்ட் அடிப்பதால், இவர்களில் ஒருவர் அரசியலுக்கு வந்தால் மிகப் பெரிய மாறுதல் நிகழும் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இது போலவே பிதற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையில் இவர்களது அரசியல் பிரவேசம் எனும் பரபரப்பு இல்லையெனில், இவர்களது சினிமா வாழ்க்கையே கேள்விக்குரியதாகும் என்பது தான் நிஜமான உண்மை.
ரஜினியும், விஜயும் திரையில் தோன்றினாலே படம் ஹிட் என்பது இவர்களது கணிப்பு; நம்பிக்கை. உண்மையில் இவர்கள் இருவருமே அவ்வப்போது தங்களுடைய நட்சத்திர அந்தஸ்த்தை பிடித்து நிறுத்த திணறியபடியே சினிமாவில் தொங்கிக் கொண்டிருப்பது எவரும் அறியாத உண்மை.
அதிர்ஷ்டவசமாக நாம் அதிக காலம் பின்னோக்கிப் போகாமல், சமீபத்திய நிகழ்வுகளையும், அவ்விருவரின் பேட்டிகளையுமே எடுத்துக் காட்டாக அடிக்கோடிடலாம்.
லிங்கா பாடல் வெளியீட்டு விழாவிலேயே ரஜினி, கோச்சடையானின் தோல்வி பற்றி உருக்கமாக பேசியுள்ளார். விஜய், எஸ்.ஜே சூரியாவின் படப் பாடல் வெளியீட்டு விழாவில் சில உண்மைகளை சொல்லியிருக்கிறார். 
விஜய், எஸ்.ஜே சூரியா எடுத்த குஷி தான் தன்னை காப்பாற்றியது என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுள்ளார். இது போலவே, வேலாயுதம் வெளியான நேரத்தில், தன்னுடைய தொடர் தோல்வியை தடுத்து நிறுத்த ராஜா போன்ற ஒரு இயக்குனர் கிடைத்தது நிம்மதியை கொடுத்ததாக பேசியிருந்தார்.
எந்த ஒரு சினிமா கலைஞனுக்கும் இருக்கும் இயல்பான ஒரு போராட்டம் தான் இது. எந்த ஒரு நடிகரும் இதுவரை தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையை அடைந்ததே இல்லை. ஆனால், அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் ஒருவரின் ரசிகர்கள் உருவாக்கும் மாயையில், அவர்களுடைய படத்தின் தொடக்கத்தில் வரும் புரட்சிகரமான பாடல் வரிகளையும் நம்பி மக்கள் ஏமாந்து போகிறார்கள்.
ஒரு நடிகர் அரசியல் ஆதாயம் தேட நினைப்பதாலேயே அவருக்கு மிகப் பெரிய கூட்டம் கூடிவிடும் என்று நினைப்பது முட்டாள் தனம். அதே போல முதல் நாள், முதல் ஷோவில் முண்டி அடிக்கும் கூட்டம் எல்லாம் அரசியல் கூட்டமாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் சிறுபிள்ளைத் தனமானது.
விஜய், பேருக்கு நற்பணி மன்றம் என்று வைத்துக் கொண்டாலும், போஸ்டர் அடிப்பதில் தொடங்கி எல்லாவற்றையும் அரசியல் சாயத்தோடு தான் செய்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும் நற்பணி மன்றத்திற்கு தலைவர், துணைத் தலைவர், செயலாளர் என்று பதவிகளை உருவாக்கி, அவர்களுடைய புகைப்படத்த்திற்கு அதிக இடம் கொடுத்து, பெயரை இரட்டை வண்ணத்தில் எழுதி, பிற அரசியல் கட்சிகளைப் போல பெரியார், அண்ணா புகைப்படத்திற்கு பதிலாக எஸ்.ஏ.சியின் புகைப்படத்தை வைத்து தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்காக மக்களை டியூன் செய்கிறார்.
ரஜினி ரசிகர்களோ, தன்னுடைய தலைவர் அரசியலுக்கு வருவார் வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போன கதைகளை இணையதளத்தில், ரஜினிக்கு கடிதம் எனும் பேரில் வெளியிட்டு ஆதங்கத்தை தீர்த்துக் கொள்ளுகிறார்கள்.
இவர்கள் இருவரும் எவ்வளவு தான் புரட்சிகரமாக வசனம் பேசினாலும், போஸ்டர் ஓட்டினாலும், படம் ஓடுகிறதா என்று பார்த்தால், அது இயக்குனரின் அறிவாற்றலை நம்பியும், திரைக்கதையின் வேகத்தை நம்பியுமே இருக்கிறது.
ரஜினியின் படங்கள் ஓடினால் குதிரையைப் போலவும், ஓடாவிட்டால் எலியைப் போலவும் சுருண்டி விடுகின்றன. விஜயின் நிலைமை மிகக் கவலைக் கிடம். அவருடைய படம் நூறு கோடிகளைத் தொடுவதற்கு ஒவ்வொரு முறையும் தள்ளாடுவதை பாக்ஸ் ஆபீஸ் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.
ரஜினி எனும் பிம்பம் உருவான பிறகு, 1984-93 இற்கு இடையில், அன்புள்ள ரஜினிகாந்த், ராகவேந்திரா, விடுதலை, மாவீரன், நான் அடிமை இல்லை, சிவா, நாட்டுக்கு ஒரு நல்லவன், வள்ளி என்று பல மோசமான தோல்விகளைக் கண்டவர் ரஜினி. அதற்குப் பிறகும், பாபா, குசேலன், கொச்சடையான் என்று தோல்விகளைக் கண்டவர் தான் ரஜினி.
அதே போல, விஜயும் திருமலைக்கு முன்பும் பின்பும் பல தோல்விப் படங்களை தந்திருக்கிறார்.
இதை நன்கு அறிந்தவர்கள் ரசிகர்கள் அல்ல. துரதிர்ஷ்ட வசமாக ரஜினியும், விஜயும் தான். ஆகவே தான் அவர்கள் இருவருமே இந்த அரசியல் பிரவேசம் எனும் ஸ்டன்ட்-ஐ கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
ரஜினி கமலைப் பெற்றிப் பேசும் போது, நான் தொட்டதையெல்லாம் அவர் தொட்டார்; ஆனால் அவர் தோட்டத்தை என்னால் தொட முடியவில்லை என்கிறார். விஜயோ, தனக்கு வருவது இது தான்; அதைத் தான் மாற்றி மாற்றி செய்ய வேண்டியிருக்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இவர்கள் இத்தனை வெளிப்படையாக உண்மையை ஒப்புக் கொள்வது அவர்களுடைய பெருந்தன்மை என்று கூறும் அதே நேரத்தில் இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நாம் தயங்குகிறோம்.
சினிமாவில் மட்டும் தான் ஒருவர், மற்றொருவரை விடக் குறைவாக செயல்பட்டத்தை ஒப்புக் கொண்டதற்கு பாராட்டப் படுகிறார். ஒரு வட்டத்திற்குள் தன்னை அடைத்துக் கொண்டு செயல்படுபவர் ஒவ்வொரு நாளும் முள்ளின் மீது நடக்கும் இக்கட்டான நிலையில் இருக்கிறார் என்பதை இத்தமிழகம் உணர மறுக்கிறது.
ரஜினியும், விஜயும் தங்களுடைய பாதை எதுவாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒருமுறையும் மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர். இதற்கு அத்தாட்சி, அவர்களுடைய படங்களின் தோல்விகளே!
இன்று வரை, ரஜினியால் ஷங்கர், கே.எஸ் ரவிகுமார் தவிர மற்றொரு வெற்றி இயக்குனரை கண்டு பிடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம், அவரை சுற்றியிருக்கும் அரசியல் வட்டம் தான். ரஜினிக்கு ஏற்ற வகையில் கதை எழுதுவது கடினம். காரணம், அவருடைய தலைக்குப் பின்னால் ஒளிவீசும் போலியான பிம்பம். எவ்வளவு தான் யோசித்தாலும், அவருடைய அரசியல் எதிர்காலத்தை முன்வைத்தே எழுத வேண்டியிருக்கிறது. இதில் சற்று மாற்றமிருந்தால், அவருடைய தெய்வீக அனுபவங்களையும், பழைய வில்லன் முகத்தையும் தோண்ட வேண்டியிருக்கிறது. இதில் சற்று சறுக்கினாலும் தோல்வி தான்!
இதுவே விஜயின் நிலைமையும் கூட. பல இளம் இயக்குனர்களை நம்பித் தொடர்ச்சியாக தோல்விகளைக் கண்ட விஜய், பாக்ஸ் ஆபீசை அஜீத்திற்கு விட்டுக் கொடுத்த பிறகு, இன்று வெற்றி இயக்குனர்கள் என்று வலம் வரும் சிலரை நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்.
இந்த நிலை இப்படி இருக்க, வெளியே ஓங்கி ஒலிக்கும் கூச்சல்களை நம்பி ஒருசிலர் இவ்விருவருக்கும் மிகப் பெரிய அரசியல் எதிர்காலம் இருப்பதாக சொல்வது சிரிப்பை தான் வரவழைக்கிறது.
இவ்விருவரிடம் அரசியலுக்குத் தேவையான எந்த தகுதியும் இல்லாதிருப்பது அடுத்த குறை. அரசியலுக்கு முக்கியத் தேவையே தைரியம் தான். எதையும் எதிர்நோக்கக் காத்திருக்க வேண்டும். இனிமேல் எழவே முடியாது எனும் நிலையிலிருந்து முன்னேறி வந்திருக்கும் கட்சிகள் ஏராளம். ஆனால் ரஜினியோ, நான் சந்தேகம் கொண்டிருக்கிறேன் என்கிறார். கடவுள் தான் இதற்கெல்லாம் வழி என்று தீர்க்கமில்லாமல் பேசுகிறார்.
விஜயோ தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றிய முன்யோசனை இல்லாமல், எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் கோக் விளம்பரத்தில் நடித்துவிட்டு, அந்த கம்பெனிக்கு எதிராகவே புரட்சிகரமாகப் பேசுகிறார்.
ஆனால், இவர்கள் இருவரிடமும் ஒரு முக்கிய தகுதி இருக்கிறது. அது, நல்லது செய்வேன்; தமிழ் நாடு தான் என் வீடு என்று கூறி மக்களை ஏமாற்றும் வித்தை. அது தான் இவர்களை மேஜையை தட்ட அழைக்க உந்துதலாக இருக்கிறது.
இல்லை என்றால், அரசியலே வேண்டாம் என்று கூறும் கமலை குப்பை அள்ள சொல்லி விட்டு, இவர்களை ஆட்சிக்கு அழைப்பார்களா? 

Wednesday, August 13, 2014

பெண்களின் பாதுகாப்பும், சுதந்திரமும்- குழம்பும் சமூகம்

என் கருத்துக் கருவிழிகளுக்குள் வழுக்கி விழுந்த முக்கியமான ஒரு தலைப்பு இது. உடனடித் தெளிவு தேவைப்படும் ஒரு தலைப்பு.

 பெண்களின் பாதுகாப்போடு முட்டி மோதும் சுதந்திரம்!

நம் பெண்களுக்கு சுதந்திரம் முக்கியமா? பாதுகாப்பு முக்கியமா?

நம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பவர் உண்மையான ஆணா?

இல்லை பாதுகாப்பு அளிப்பவர்
உண்மையான ஆணா?

இந்த இரு கேள்விகளும் தவறு.

பெண்களுக்கான சுதந்திரத்தை அவர்கள் அனுபவிக்கும் ஒரு சமூகத்தில், பாதுகாப்பை உறுதிப் படுத்தவது எப்படி?

இதுவே சரியான கேள்வி.

ஆம். பெண்களுக்கான சுதந்திரத்தை நாம் ஒரு வாய்ப்பாக அளிக்க நினைப்பது முதலில் தவறு. அதை பாதுகாப்போடு முட்டச் செய்வது மிகப் பெரிய தவறு.

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப் படுத்துவது சமூகத்தின் கடமை. ஆனால், சுதந்திரம் என்பது ஒவ்வொரு உயிர்ப்பொருளும் அனுபவிக்க வேண்டிய அடிப்படை உரிமை.

ஒரு பெண்ணை தனியே ஓரிடத்திற்கு அனுப்பும் போது/தங்கச் செய்யும் போது அவளுடைய பாதுகாப்பு கேள்விக்குறியானால், அங்கு பெண்ணுடைய சுதந்திரத்தை அனுமதிப்பது தவறு என்பதாகக் கொள்ளப் படுகிறது; அதை அனுமதிக்கும் ஆண் தவறான முன்னுதாரணமாக கொள்ளப் படுகிறான். பெண்ணின் வாழ்வை கெடுத்தவனாக தீர்ப்பளிக்கப் படுகிறான்.

இந்தத் தீர்ப்புக்குப் பின்னால் ஒரு தவறான அனுமானம் உள்ளது. பெண்ணுடைய சுதந்திரத்தை 'கொடுப்பது' என்பது ஆணின் கையில் உள்ளது என்பதாகக் கொண்டால் இந்தத் தீர்ப்பு சரி.

ஆனால், பெண்ணுடைய சுதந்திரம் அவளிடமே இருக்க வேண்டிய ஒன்று. அவள் ஓரிடத்தில் வாசிக்கவும், உலவவும், தனிமையை நாடவும் அவள் மட்டுமே முடிவு செய்ய முடியும். இங்கு ஆண், தனக்குரிய பாதுகாப்பில் சந்தேகம் எழும் போது, ஆபத்தை எதிர்நோக்கும் திராணி அற்ற உடலமைப்பை கொண்டிருக்கும் போது, சுதந்திரத்தை அனுபவிக்கிறான். ஆனால், பெண்ணுடைய சுதந்திரத்தை அவளிடமே விட்டுவிட, அவளுடைய உடலமைப்பை காரணம் காட்டி உதாசீனப் படுத்துகிறான்.

உண்மையில் பாதுகாப்பு எனும் வார்த்தை நிலையிலாத ஒன்று. ஒருவரின் பாதுகாப்பு, அவருடைய சக்தியைக் காட்டிலும் வீரியமுள்ள மற்றொரு சக்தியை எதிர்நோக்கும் வரையில் மட்டுமே சாத்தியப் படும் ஒன்று. இதில் ஆண் பெண் பேதமில்லை. மிகப் பெரிய அரசாட்சிகள் கவிழ்வதற்கு இதுவே காரணமாக விளங்குகிறது.

இவ்வாறு இருக்கையில், ஒரு பெண்ணை, அவளுடைய வலுவில்லாத உடலின் தன்மையை முன்னிறுத்தி ஒடுங்கிக் கிடக்கச் செய்வது, ஒரு வகையில் அவளுடைய நன்மையை ஆயுதமாகப் பயன்படுத்தி, ஆணாதிக்கத்தை செலுத்துவதே ஆகும்.

இதை விட, எதிர்நோக்க விருக்கும் ஆபத்தை சமாளிக்கும் தைரியத்தை பெண்ணிற்கு அளிப்பதே சிறந்த ஆணின் செயலாகக் கொள்ள வேண்டும்.

Sunday, August 3, 2014

மழைக்கு உண்டோ ஒதுங்க ஓர் இடம்?

மழைக் காலம். எப்போதும் போல ஏழைகளுக்கு இது வேண்டிய-வேண்டாத காலம். ஏழைகள் என்று நான் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் உண்டு. அவர்கள் தான் மழையின் நிஜமான சீற்றத்தை எதிர் நோக்குபவர்கள்.

வெளியே வந்து தொழில் செய்பவர்கள், விவசாயிகள், என்று அனைத்து தரப்பு ஏழைகளுக்கும் மழை நன்மையையும் செய்கிறது; கெடுதலும் செய்கிறது.

இதில் தப்பிப் பிழைத்துக் கொள்பவர்கள் பணம் படைத்தவர்கள். எப்போதும் போல மேல்தட்டு இரண்டு பர்சன்ட்.

அவர்களுக்காகவே உருவாகும் நகரங்களின் முன்னேற்றத்தை ஸ்லோ மோஷன் கேமராவை கண்ணில் பொருத்தியது போல மெதுவாக, நிதானமாக, எதிர்கேள்வி கேட்காமல் நாம் தினமும் காண்கிறோம். எது வேண்டுமானாலும் தன்னைத் தேடி வர வழைக்கும் திமிர் பிடித்த நகரங்களாக இவை உருவாகிக் கொண்டிருக்கின்றன. மனிதனின் ஆசைகளில் ஒன்றைக் கூட விட்டு வைப்பதில்லை இந்த சோ கால்ட் சொர்க்க பூமிகள். ஒரு புதிய மாடல் செல் போன் அறிமுகமானால் முண்டி அடித்துக் கொண்டு ஃப்லிப் கார்ட்-ல் குவியும் இணைய விட்டில் பூச்சிகளைப் போல தன்னைத் தேடி வந்து நுகர இந்நகரங்கள் மனிதர்களை சுண்டி இழுக்கின்றன.

இது எங்கு செல்லும் என்று அறிந்த உலகம் ஒன்று உண்டு. அந்த உலகமும் நகரத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த உலகம் பல நல்ல விஷயங்களைச் செய்கிறது. அதுவும் நகர வாசிகளின் நன்மையையே கருத்தில் கொள்கிறது. நகரமயமாதலை எதிர்ப்பவர்களுக்கும் தேவைப்படும் நகரம், சென்ற நூற்றாண்டின் தேசிய நெடுஞ்சாலை மரங்களின் திடத்தோடு நக்கலாக சிரித்து வளர்கிறது.

என்னுடைய பரமபதத்தை பொதுத் தளத்திடம் கொண்டு சேர்க்கவும் நான் நகரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. நேரத்தை மிச்சம் பிடிக்க, மொப்பெட்-ஐ எடுத்துக் கொண்டு கிளம்பினேன். என் வசிப்பிடமும் நகரமயமாதலின் பிடியில் மெதுவாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியாக பல உயர்ரக வியாபார ஸ்தலங்களையும், வாகனங்களையும், உடையலங்காரங்களையும், மாறி வரும் வானிலையும் கண்டேன்.

நகரத்தை நெருங்க, நெருங்க வீசிக் கொண்டிருந்த காற்று கூட குளிர்ச்சியை விட்டு சூட்டை உறுஞ்சிக் கொண்டது. ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு விமான நிலையம் அருகில் மழைத்துளிகள் என் ஹெல்மெட்-ஐ நனைக்கத் தொடங்கின.

இந்தக் காலத்தில் மழை விட்டு விட்டுப் பெய்வது மட்டுமல்லாமல் ஒரே தெருவின் தொடக்கத்திலும், முடிவிலும் கூட பாரபட்சம் காண்பித்துப் பெய்கிறது என்று தோன்றியது. எது வரை போக முடியுமோ அது வரை பயணத்தை நீட்டலாம் என்று மெதுவாக முன்னேறினேன். மழைத்துளிகளின் சட, சட சத்தத்துடன் என் வாகனம் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் தள்ளாடியது. என்னைத் தாண்டி அசுர வேகத்தில் நீரை பீய்ச்சி அடித்தபடி பணக்கார வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன.

என்னால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முயலவில்லை. ஒதுங்க இடம் தேடிக் கொண்டே இருந்தேன்.

ஒரு பீட்சா கார்னர் போனது, ஹுண்டாய் ஷோரூம் வந்தது, பிறகு ஒரு கம்பெனி, நகை மாளிகை, ஐ கேர் ஹாஸ்பிடல்...இப்படியாக பெரிய பெரிய கட்டிடங்கள்; பார்கிங் ஓடு கூடிய விஸ்தாலமான இடங்கள்.

ஆனால் எனக்கு ஒதுங்க ஓர் இடம் கிடைக்கவில்லை. நான் தனி ஆள் அல்ல. என்னோடு இடம் தேடியவர்களில், இளைஞர்கள், ஒரு முசுலிம் தம்பதி, முக மூடிக் காதலர்கள் (அ) சகோதர சகோதிரிகள் ஆகியோரும் அடக்கம்.

பின் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நனைத்த பிறகு ஒரு பரோட்டா கடையின் வாசலில் நிற்க இடம் கிடைத்தது. நாங்கள் எல்லோரும் அந்த சிறிய இடத்திற்குள் நனைந்தபடி நின்று கொண்டிருக்கும் போது ஒரு நாய் ஓடி வந்து இடம் தேடியது.

பொதுவாக அந்த இடங்களில் உண்ணத் தயாராக இல்லாதவர்கள் இன்று அங்கு மழைக்கு ஒதுங்கி நிற்கிறார்கள். பொதுவாக நாயைத் துரத்த நினைப்பவர்கள் இன்று இடம் கொடுத்தார்கள். ஆனால், பொதுவாக அடிவாங்கியே பழக்கப் பட்ட அந்த நாய் அவர்கள் கொடுத்த இடத்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு மானம் கெட்ட நாயாகத் தெறியவில்லை. எங்களைத் தாண்டிச் சென்று விட்டது.

எங்களை எதிரில் இருந்த ஒரு கார் ஷோரூம் காவலாளி கண்ணாடி கதவிற்குப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவன் அங்கு வேலை செய்கிறான். இல்லை என்றால் அவனும் எங்களோடு நின்றிருப்பான் என்றே தோன்றியது.

யோசித்தேன். மழைக்கு உண்டோ இந்தச் சொர்க்க பூமியில் ஓர் இடம்? நேற்று வேலை நிமித்தமாக ஒரு கிராமத்தில் மாட்டிக் கொண்டேன். மதிய சாப்பாடே ஒரு வீட்டின் திண்ணையில் தான் முடிந்தது. இடம் ரொம்பவே குறைவு தான். ஆனால் மனம் சற்று பெரியது.

Friday, August 1, 2014

பிணம் தின்னும் வேலை


பிறப்பை கொண்டாடுவதும், இறப்பை எண்ணி வேதனை படுவதும் மனித சமுதாயம் தொடங்கிய காலத்திலிருந்து வழக்கமான செயல். உணவை உட்கொள்வது, குளிப்பது, பல் துலக்குவது போன்ற செயல்கள் நம் வாழ்வோடு பிணைந்த ஒன்றாக இருந்தது.



இன்று, உண்பதற்கென்று நேரம் ஒதுக்குவதும், உணவை பொறுமையாக மென்று தின்பதும் நல்ல வேலைக்காரர்களின் செயல் அல்ல என்று நினைக்கும் காலமாகிவிட்டது. உணவை வேலை செய்யும் மேஜைக்கு கொண்டு வருவது, உண்டபடியே வேலையைத் தொடர்வது, நாகரிகத்தின், அக்கறை மிகுந்த வேலையாளின் அடையாளமாகிவிட்டது.

இவ்வாறு நம் பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாக தின்று தீர்க்கும் வேலை, பிணத்தை தூக்கிப் போடுவதற்கு கூட நேரத்தை ஒதுக்க மறுக்கிறது. இதை வேறு மாதிரி சொல்லப் போனால், வேலையிலேயே மூழ்கிவிடும் இக்கால பண முதலைகள், இறப்புக்கு நேரம் ஒதுக்குவதை வேண்டாத காரியம் போல் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

திருமணத்திற்குப் போகவில்லை என்றாலும் இறப்புக்கு போய் விட வேண்டும் என்பார்கள். ஆனால், இன்று திருமணத்திற்கும் நேரம் இல்லை. இறப்புக்கும் நேரம் இல்லை.

இறப்பு நிகழ்ந்துள்ள இடத்தில் பல சங்கடங்களை சந்திக்க நேரிடும். அழுகை, ஓலம், நினைத்த நேரத்திற்கு கிளம்ப முடியாமை, முகத்தை எந்நேரமும் சோகமாகவே வைத்துக் கொள்ள வேண்டிய நிலைமை, விசாரிக்க வார்த்தைகள் இல்லை என்றாலும் சம்பிரதாயமாக பேச வேண்டிய நிர்பந்தம், சில நேரங்களில் நெருக்கமானவர்களாக இருக்கும் போது அழுகையே வராமல் அழ வேண்டிய கட்டாயம்.

ஆனால், இவற்றை முன்னிறுத்தி தேவையான நேரத்தில் ஆஜராகாமல் போவது எவ்வளவு கொடுமையான செயல் என்பதை பலர் அறிவதில்லை.

எதற்கெடுத்தாலும் வேலையை காரணமாகச் சொல்வது. தூங்கவில்லை என்றால், வேலை; சாப்பிட நேரம் இல்லை என்றால் வேலை; திருமணம் செய்து கொள்ள ஏன் இவ்வளவு நாள் என்றால், வேலை; குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியது தானே என்றாலும் வேலை; சம்பாதிக்க வேண்டும்.

இதே தவறை நானும் ஒரு காலத்தில் செய்திருக்கிறேன். என்னுடைய வேலை நிமித்தமாக ஒரு தேர்வு எழுத வேண்டியிருந்தது. அதன் தேதி அறிவிக்கப் படாததால் படுக்கையில் கிடந்த நெருக்கமான உறவு என்னை முடிவாக ஒரு முறை பார்க்கப் பிரியப் பட்ட போது நான் போகவில்லை. பிறகு அந்தத் தேர்வு, அந்த உறவை இழந்த ஆறாவது மாதத்தின் ஒரு தேதியில் தான் நடந்தது. அதை ஈடு கட்ட மற்றொரு உறவின் படுக்கை நாட்களில் நான் துணையாக எல்லா உதவிகளையும் செய்யும் வாய்ப்பு அமைந்தது.

இன்று நான் திருமணத்தையும் விடுவதில்லை. இறப்பையும் விடுவதில்லை. நாம் எல்லாம் முதலில் மனிதர்கள். சக மனிதர்கள் பிரியும் போது விடை கொடுக்க வேண்டியது நம் கடமை. துக்கம் இருந்தாலும், இல்லை என்றாலும், நாம் அங்கிருப்பது முக்கியம். இறப்புக்குப் போக முடியவில்லை என்றாலும்  குறைந்தபட்சம் சடங்கிற்காவது போகவேண்டும்.

Tuesday, July 22, 2014

கூந்தப்பனை : சிந்தனா சக்தியில் உலகத்தரம்



சில நாட்கள் முன்பு சு.வேணுகோபால் எழுதிய கூந்தப்பனை நாவலை படிக்க நேர்ந்தது. என் நாவலை வேண்டாம் என்று கூறிய ஒருவர் பரிந்துரைத்த நாவல் இது. உடுமலையில் ஆர்டர் செய்து வாங்கிப் படித்தேன்.

உலகத்தரம், உலகத்தரம் என்று கூறுவார்கள். அந்த உலகத்தரத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்ட கதை கூந்தப்பனை.

கண்ணிகள், வேதாளம் ஒளிந்திருக்கும், அபாயச் சங்கு, கூந்தப்பனை என்று நான்கு குறுநாவல்களின் தொகுப்பு அடங்கிய புத்தகம்.

ஒரு விவசாயியின் வாழ்க்கையை சொல்லத் தொடங்கும் கண்ணிகள், கணவன் மனைவிக்கு இடையில் நிகழும் மனஸ்தாபம் மற்றும் அவர்களின் இருவரின் கண்ணோட்டங்களை சொல்லும் வேதாளம் ஒளிந்திருக்கும், வேலையில்லாத ஒருவனின் விரக்திகளைச் சொல்லும் அபாயச் சங்கு முடிவில், ஆண்மையில்லாத ஒரு அப்பாவி ஆடவனின் கதையைச் சொல்லும் கூந்தப்பனை.

பொதுவாக உலகத்தரம் என்றாலே மேற்கத்திய மாயை கொண்டவர்கள், அதிநவீன விமானங்களின் இடி முழக்கத்தையும், அழுக்குப் படாத நீல நிற கட்டிடங்களை மட்டுமே கற்பனை செய்வார்கள். கூந்தப்பனை, யதார்த்தத்தை சொல்லும் சிந்தனா சக்தியில் உலகத்தரத்தை மிஞ்சியிருக்கிறது.

முக்கியமாக கூந்தப்பனையில் என்னை கவர்ந்து எழுது வைத்த பகுதியை இங்கு குறிப்பிட நினைக்கிறேன்.

தனக்கு ஆண்மையில்லை என்று திருமணத்திற்குப் பிறகு அறிந்து கொண்ட கணவன், மனைவியின் வாழ்க்கையை கெடுக்க நினைக்காமல் தன்னுடைய நண்பனுக்கு திருமணம் செய்து வைக்கிறான். முதலில் ஒப்புக்கொள்ளாத மனைவி, பிறகு நீங்களும் எங்களோடு தங்கினால் ஒப்புக் கொள்கிறேன் என்கிறாள். இந்த இடத்திலேயே சமுதாய எல்லைக் கோடுகளை தாண்டிவிட்டது கூந்தப்பனை.

மேலும்,  ஒரு புதிய தம்பதியினரின் படுக்கையறைக்கு அருகில் உறங்க நினைக்கும் ஆண்மை இல்லாத ஆடவனின் எண்ணச் சிதறல்களை ஆசிரியர் விவரிக்கும் ஒரு பத்தி, உலகத்தரங்களை வீசி எரிந்துவிட்டது.

தன்னால் முடியாத ஒன்றைத் தன் நண்பன் தரும் போது, தன்னுடைய முன்னாள் மனைவி எவ்வாறு மகிழ்ச்சி அடைகிறாள் என்று பார்க்கத் துடிக்கிறான் அந்த ஆடவன். அவ்விருவரையும் அணைத்துக் கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட விழைகிறான்.

சமூக நீதிகளால் அசிங்கத்திற்கு உள்ளாகும் இது போன்ற 'உண்மையான' எண்ணங்களை துணிச்சலாக வெளி உலகிற்கு எடுத்துக் கூறும் தைரியம் படைத்த ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.

Sunday, July 20, 2014

VIP: வேலையில்லா பட்டதாரி விமர்சனம்

வேலையில்லா பட்டதாரியின் கதைச் சுருக்கம், படம் வெளியான மூன்றாவது நாளே வெளிவருவது சரியென்று படவில்லை. பல நாட்களுக்குப் பிறகு அரசியல் பேசும் படமாக இருப்பதால் விமர்சனம் தேவைப்படுகிறது.
சமகாலச் சூழலை வைத்து பல கதைகள் வந்திருக்கின்றன. இப்போதெல்லாம் ஐ.டி துறையை தூக்கிப் பிடிப்பதற்கு பல இயக்குனர்கள் கியூவில் நிற்கின்றனர். யாரோ ஒருவர் முத்தாய்ப்பாக அந்தத் துறை தொடர்பான எதிர்மறைக் கருத்தை பதிவு செய்யும் போது, படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.
நண்பன் வெளிவந்த போது இதே ஆவல் மேலெழுந்தது. அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தையாவது இந்தப் படம் ஈடு செய்யுமா?
வேலையில்லா பட்டதாரி எதையெல்லாம் ஆதரிக்கிறார், எதையெல்லாம் விமர்சிக்கிறார், எதையெல்லாம் பற்றி பேச மறுக்கிறார் என்பதைச் சொல்வதே இந்த விமர்சனத்தின் நோக்கம்.
எதை ஆதரிக்கிறார்?
அந்தந்த துறை சார்ந்த வேலையில் எஞ்சினியர்கள் உட்கார வேண்டும் என்கிறார். அவ்வாறு உட்காரும் போது, நேர்மையை எந்தச் சூழலிலும் கடை பிடிக்க வேண்டும் என்கிறார். சமகால இளைஞர்களால் ஒதுக்கவே முடியாத குடியையும், கூத்தையும் நல்லவனின், தியாகியின் அடையாளமாகக் காட்டுகிறார். அம்மாவையும், காதலியையும் தனித்தனியாக இரு பெண்களிடம் காண முடியும் என்கிறார். சென்ட் ஜோசப் பள்ளியின் ஆங்கிலம் கிடைக்கவில்லை என்று ஏங்குகிறார்.
இது போன்ற கதைகளில் பொதுவாக ஹீரோ கேமராவுடன் திரிவார். அல்லது படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப் படுவார். இங்கு ஹீரோ சிவில் எஞ்சினியர் என்பது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது. ஆனால், அந்தப் படங்கள் செய்த எல்லா தவறுகளையும் இந்தப் படமும் செய்கிறது. வே.இ.ப சமகால இளைஞர்களுக்கு திறமை இருந்தும், படைப்பாற்றல் இருந்தும், வேலை கிடைப்பதில்லை என்று கூறுகிறது. நிதர்சனம் என்னவென்றால், எந்த எஞ்சினியரிங் கல்லூரியும், படைப்பாற்றல் மிகுந்த ஒரு என்ஜினியரை உருவாக்குவதில்லை என்பது தான். இவரைப் போன்று ஆறே மாதங்களில் ஒரு பெரிய ப்ராஜெக்ட்-ஐ எடுத்துச் செய்யும் அளவிற்கு திறமை யாரிடமும் இல்லை என்பது தான் உண்மை.
ஐ.டி துறையில் நேர்மை என்பது ரெண்டாம் பட்சம் தான் என்பது உண்மை. அதே நேரம், வெளியில் நேர்மை இருக்கிறதா என்றால், யோசிக்கத் தான் வேண்டும். அப்படிப் பட்ட சூழலில் நேர்மையை ஒரு அளவுகோலாக வைப்பது பாராட்டத் தக்க முயற்சி. இடையில் மவுலிவாக்கம் பற்றிய வசனத்தை சேர்த்தது சாதுர்யம். ஆனால், நேர்மையைக் கடைபிடிக்கும் ஹீரோ எப்போதும் போல எல்லோரையும் ஒரே ஆளாக சந்திக்கிறார். சாத்தியமே இல்லாத ஹீரோயிசச் செயல்களைச் செய்கிறார் (க்ளைமாக்சில் போலீஸ் வருவது போல, உண்மையைச் சொல்லும் போது கேமராவில் பதிவு செய்வது இப்போதுள்ள எல்லாப் படங்களிலும் வருகிறது). 
தனுஷின் தம்பி ஐ.டி துறையில் வேலை பார்க்கிறார். அப்பா, அம்மாவுக்குப் பிடித்த பிள்ளை. குடியை கூட கோக் பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தால் தான் ஒப்புக்கொள்வார். தனக்கான நல்ல பெயரை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டார். பயந்தவர். அழுக்குத் துணிகளோடு ஒன்று கூட மாட்டார்.
அண்ணனோ, இதற்கு அப்படியே எதிர் துருவம். ஆனால் இருவருக்கும் பொதுவாக உள்ளது குடி. குடித்துவிட்டு ஆடுவதை இந்தக் காலத்தில் ஒரு தகுதியாகப் பார்க்கத் தொடங்கிவிட்ட பிறகு தனுஷ் குழுமத்தை மட்டும் திட்டிப் பயனில்லை.
அம்மாவின் நுரையீரலை சிகரெட் பிடித்ததால் நுரையீரல் கெட்டுப் போன ஒரு பெண்ணுக்கு வைத்தவுடன், அவளிடம் தன் தாயைப் பார்க்கிறார். தனுஷ். ஆடியன்ஸிடம் கொஞ்சம் நல்ல புத்தியோடு வாருங்கள் என்ற அறிவுரையை மறைமுகமாக வைக்கிறார் டைரக்டர். அதே இயக்குனர், வில்லனை பொட்டை பொட்டை என்று பல முறை திட்ட வைக்கிகிறார்! (என்ன தான் சொல்ல வர்றீங்க?!) ரகுவரனை ஹீரோவாக்கும் போது ஹீரோயிசத்திற்கு துணையாக ஒரு சிகரட்டையும் கொடுக்கிறார்.
அடுத்து வே.இ.பட்டதாரி எதையெல்லாம் எதிர்கிறார்?
தந்தையின் நிழலில் வாழும் பணக்காரனை. மகனை விட்டுக் கொடுக்காத தொழில் அதிபரை. ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியின் தமிழ் வழிக் கல்வியை. டெண்டரில் விளையாடும் எம்.எல்.ஏவை. புதியவர்களை அனுபவம் அற்றவர்கள் என்று கூறி மட்டப் படுத்தும் எஞ்சினரை.
எதைப் பற்றி பேச மறுக்கிறார்?
தன்னுடைய கூட்டத்தை அடித்து நொறுக்கிய குண்டர்களை.
கார்பரேட்களின் லீலைகளை அனுமதிப்பது அரசு தான் என்பதையும், அவர்களுக்கு அரசின் தரப்பில் அளிக்கப் படும் சலுகைகளையும் பற்றி ஒன்றுமே அறியாதவர் இயக்குனர் என்பது இந்தக் கதையின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. எப்போதும் போல, தொழில் அதிபரின் வில்லத் தனம் மட்டுமே இதற்கு முழு முதற் காரணம் என்று வேற வசனம் பேசும் படமாக வே.இ.பட்டதாரி இருக்கிறது. மவுலிவாக்கத்தில் அரசு தரப்பில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்கிறீரா மிஸ்டர். இயக்குனர்?
தனுஷ் வாயிலாக மிகப் பெரியதொரு வசனம் பேசும் இயக்குனர், பி.ஈ படிப்புக்குப் பிறகும், முன்பும், வாழ்க்கைக்குத் தேவையான பொதுக் கல்வியை அறவே பெற மறுக்கும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகவே தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார். தன் தோல்விக்குக் காரணம் ஆங்கில அறிவு இல்லாமல் போனது தான் என்று கூறும் வேலை இல்லா பட்டதாரி, சமீபத்தில் தமிழ் வழிக் கல்வியின் மூலம் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆகியிருக்கும் வி.பி. ஜெயசீலனை நேரில் சந்தித்து குட்டு பெறும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார். 
எதற்கெடுத்தாலும் கை நீட்டும் பழக்கம் கொண்ட வேலையில்லா பட்டதாரி, தவறுக்கு முக்கிய காரணமான அரசை பற்றி எந்த விமர்சனத்தையும் வைக்காமல் போவதும், மீடியாவின் முன்பு பம்புவதும் அவர்கள் மொழியில் பொட்டை தனமாகவும், என்னுடைய மொழியில் தொடை நடுங்கித் தனமாகவும் படுகிறது.

பொல்லாதவன், படிக்காதவன், திருவிளையாடல் ஆரம்பம், படையப்பா போன்ற படங்களின் கலவையாக திரைக்கதை அமைந்திருக்கிறது. இந்தக் கதையின் நோக்கம் மக்களை சிரிக்க வைப்பது. அதை சரியாகச் செய்திருக்கிறார்கள். இயக்குனரின் கூற்றுப் படியே, நாற்பதாயிரம் பேர் போக மிச்சமிருக்கும் 4,60,000 வேலையில்லா பட்டதாரிகள் தியேட்டருக்கு வந்தால் கூட கலக்ஷனை அள்ளிவிடலாம் என்ற கணக்குப் படி எஞ்சினியர்களின் குமுறல் கதைக் காளமாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. தங்களோடு சேர்ந்து குடிக்க ஆளில்லாமல் திரியும் படிப்பறிவே இல்லாத சோ கால்ட் என்ஜினியர்ஸ், இந்தக் கதையை தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடலாம். மற்றபடி படத்தில் பில்டிங் ஸ்ட்ராங் (Entertainment)..பட் பேஸ்மென்ட்(Story) வீக்!       

Rating: 2.5/5

Saturday, February 15, 2014

கேஜ்ரிவால் அரசு ஜன்லோக்பால் பில்லை தாக்கல் செய்யலாமா? கூடாதா?

பல்வேறு தரப்புகளிலிருந்து கேஜ்ரிவால் அரசு மீது பல குற்றச் சாட்டுகள் வைக்கப் படுகின்றன. முக்கியமானது ஜன லோக்பால் பில்-ஐ தில்லியில் கொண்டுவர அந்த அரசுக்கு உரிமை இல்லை என்ற கருத்து. இது முற்றிலும் தவறானது.
தில்லியில் ஜன லோக்பால் பில்லை கொண்டு வர அந்த அரசுக்கு முழு உரிமை உண்டு!
கூடுதல் தகவல்கள்:
௧. ஜன்லோக்பால் பில்லும் மத்திய அரசு கொண்டு வரும் லோக் பால் பில்லும் முட்டிக்கொள்ளும் நிலைமை வந்தால், மத்தியில் தாக்கல் செய்யப்பட பில் முக்கியத்துவம் பெரும்.
௨. தில்லி மற்றும் புதுச்சேரி அரசுகள் தனித்துவம் வாய்ந்தவையே. ஆனால், தாக்கல் செய்யப்பட்ட பிறகு வரும் குழப்பத்தால் மத்திய அரசு பில்லிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
௩. லெஃப்டினன்ட் கவர்னர் இந்த பில்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஜனாதிபதியிடம் தெரிவிக்கலாம். தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் தில்லி அரசின் அமைச்சர் குழுவின் (Advice of the council of Ministers) பரிந்துரைகளை தான் ஏற்கவேண்டும். ஆகவே, இங்கேயும் தாக்கல் செய்வதில் எந்த குழப்பமும் இல்லை.
௪. தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தில்லி அரசு ஜனாதிபதியின் அனுமதி இருந்தால், ஜன்லோக் பால் பில்லை பயன்பாட்டிற்குக் கொண்டு வர எந்த வித தடையும் இல்லை.

மேற்குறிப்பிட்ட விவரங்களை படித்த பிறகு, தாக்கல் செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி தேவையற்றது என்பது விளங்குகிறது. தாக்கல் செய்தபிறகு உள்ள சிக்கல்களை பற்றிய குழப்பமே நீடிக்கிறது. தற்போதைய நிலைமையில், தில்லி அரசு சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை என்பது புலனாகிறது.