Pages

Showing posts with label chennai. Show all posts
Showing posts with label chennai. Show all posts

Sunday, August 3, 2014

மழைக்கு உண்டோ ஒதுங்க ஓர் இடம்?

மழைக் காலம். எப்போதும் போல ஏழைகளுக்கு இது வேண்டிய-வேண்டாத காலம். ஏழைகள் என்று நான் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் உண்டு. அவர்கள் தான் மழையின் நிஜமான சீற்றத்தை எதிர் நோக்குபவர்கள்.

வெளியே வந்து தொழில் செய்பவர்கள், விவசாயிகள், என்று அனைத்து தரப்பு ஏழைகளுக்கும் மழை நன்மையையும் செய்கிறது; கெடுதலும் செய்கிறது.

இதில் தப்பிப் பிழைத்துக் கொள்பவர்கள் பணம் படைத்தவர்கள். எப்போதும் போல மேல்தட்டு இரண்டு பர்சன்ட்.

அவர்களுக்காகவே உருவாகும் நகரங்களின் முன்னேற்றத்தை ஸ்லோ மோஷன் கேமராவை கண்ணில் பொருத்தியது போல மெதுவாக, நிதானமாக, எதிர்கேள்வி கேட்காமல் நாம் தினமும் காண்கிறோம். எது வேண்டுமானாலும் தன்னைத் தேடி வர வழைக்கும் திமிர் பிடித்த நகரங்களாக இவை உருவாகிக் கொண்டிருக்கின்றன. மனிதனின் ஆசைகளில் ஒன்றைக் கூட விட்டு வைப்பதில்லை இந்த சோ கால்ட் சொர்க்க பூமிகள். ஒரு புதிய மாடல் செல் போன் அறிமுகமானால் முண்டி அடித்துக் கொண்டு ஃப்லிப் கார்ட்-ல் குவியும் இணைய விட்டில் பூச்சிகளைப் போல தன்னைத் தேடி வந்து நுகர இந்நகரங்கள் மனிதர்களை சுண்டி இழுக்கின்றன.

இது எங்கு செல்லும் என்று அறிந்த உலகம் ஒன்று உண்டு. அந்த உலகமும் நகரத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த உலகம் பல நல்ல விஷயங்களைச் செய்கிறது. அதுவும் நகர வாசிகளின் நன்மையையே கருத்தில் கொள்கிறது. நகரமயமாதலை எதிர்ப்பவர்களுக்கும் தேவைப்படும் நகரம், சென்ற நூற்றாண்டின் தேசிய நெடுஞ்சாலை மரங்களின் திடத்தோடு நக்கலாக சிரித்து வளர்கிறது.

என்னுடைய பரமபதத்தை பொதுத் தளத்திடம் கொண்டு சேர்க்கவும் நான் நகரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. நேரத்தை மிச்சம் பிடிக்க, மொப்பெட்-ஐ எடுத்துக் கொண்டு கிளம்பினேன். என் வசிப்பிடமும் நகரமயமாதலின் பிடியில் மெதுவாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியாக பல உயர்ரக வியாபார ஸ்தலங்களையும், வாகனங்களையும், உடையலங்காரங்களையும், மாறி வரும் வானிலையும் கண்டேன்.

நகரத்தை நெருங்க, நெருங்க வீசிக் கொண்டிருந்த காற்று கூட குளிர்ச்சியை விட்டு சூட்டை உறுஞ்சிக் கொண்டது. ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு விமான நிலையம் அருகில் மழைத்துளிகள் என் ஹெல்மெட்-ஐ நனைக்கத் தொடங்கின.

இந்தக் காலத்தில் மழை விட்டு விட்டுப் பெய்வது மட்டுமல்லாமல் ஒரே தெருவின் தொடக்கத்திலும், முடிவிலும் கூட பாரபட்சம் காண்பித்துப் பெய்கிறது என்று தோன்றியது. எது வரை போக முடியுமோ அது வரை பயணத்தை நீட்டலாம் என்று மெதுவாக முன்னேறினேன். மழைத்துளிகளின் சட, சட சத்தத்துடன் என் வாகனம் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் தள்ளாடியது. என்னைத் தாண்டி அசுர வேகத்தில் நீரை பீய்ச்சி அடித்தபடி பணக்கார வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன.

என்னால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முயலவில்லை. ஒதுங்க இடம் தேடிக் கொண்டே இருந்தேன்.

ஒரு பீட்சா கார்னர் போனது, ஹுண்டாய் ஷோரூம் வந்தது, பிறகு ஒரு கம்பெனி, நகை மாளிகை, ஐ கேர் ஹாஸ்பிடல்...இப்படியாக பெரிய பெரிய கட்டிடங்கள்; பார்கிங் ஓடு கூடிய விஸ்தாலமான இடங்கள்.

ஆனால் எனக்கு ஒதுங்க ஓர் இடம் கிடைக்கவில்லை. நான் தனி ஆள் அல்ல. என்னோடு இடம் தேடியவர்களில், இளைஞர்கள், ஒரு முசுலிம் தம்பதி, முக மூடிக் காதலர்கள் (அ) சகோதர சகோதிரிகள் ஆகியோரும் அடக்கம்.

பின் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நனைத்த பிறகு ஒரு பரோட்டா கடையின் வாசலில் நிற்க இடம் கிடைத்தது. நாங்கள் எல்லோரும் அந்த சிறிய இடத்திற்குள் நனைந்தபடி நின்று கொண்டிருக்கும் போது ஒரு நாய் ஓடி வந்து இடம் தேடியது.

பொதுவாக அந்த இடங்களில் உண்ணத் தயாராக இல்லாதவர்கள் இன்று அங்கு மழைக்கு ஒதுங்கி நிற்கிறார்கள். பொதுவாக நாயைத் துரத்த நினைப்பவர்கள் இன்று இடம் கொடுத்தார்கள். ஆனால், பொதுவாக அடிவாங்கியே பழக்கப் பட்ட அந்த நாய் அவர்கள் கொடுத்த இடத்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு மானம் கெட்ட நாயாகத் தெறியவில்லை. எங்களைத் தாண்டிச் சென்று விட்டது.

எங்களை எதிரில் இருந்த ஒரு கார் ஷோரூம் காவலாளி கண்ணாடி கதவிற்குப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவன் அங்கு வேலை செய்கிறான். இல்லை என்றால் அவனும் எங்களோடு நின்றிருப்பான் என்றே தோன்றியது.

யோசித்தேன். மழைக்கு உண்டோ இந்தச் சொர்க்க பூமியில் ஓர் இடம்? நேற்று வேலை நிமித்தமாக ஒரு கிராமத்தில் மாட்டிக் கொண்டேன். மதிய சாப்பாடே ஒரு வீட்டின் திண்ணையில் தான் முடிந்தது. இடம் ரொம்பவே குறைவு தான். ஆனால் மனம் சற்று பெரியது.

Monday, December 17, 2012

சென்னையில் சிறப்பு முத்திரைத் தாள்(special adhesive stamp) வாங்க வேண்டுமா?


ரயில்வே துறையில் இணையப் போகும் நான் Indemnity Bond-ல் ஓட்டுவதற்கு சிறப்பு முத்திரைத் தாள் வாங்க வேண்டி இருந்தது. அரசு பணியாளர்கள் விவரங்களை விளக்காமாக கூற மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த முத்திரைத் தாளை எங்கு வாங்க வேண்டும் என்ற ஒரு குழப்பத்திற்குள் நான் அகப்பட்டேன்.
தமிழ் நாடு அரசின் கருவூல இணைய தளத்தில் இந்த முத்திரைத் தாள் கீழ் கண்ட இடங்களில் கிடைக்கும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது:

 The Special Adhesive Stamps can be had from the following places in Chennai District 
 1. O/o. Assistant Superintendent of Stamps,  Collectorate Campus, Chennai-1 
  2. Egmore-Nungambakkam Sub Treasury,
 3. Perambur – Purasawalkam Sub Treasury,
 4. Fort – Tondiarpet Sub Treasury
 5. Mylapore – Triplicane Sub Treasury
 6. Mambalam – Guindy Sub Treasury   
 7. All District/Sub Registrar`s Office

நான் வசிப்பது திருவள்ளூர் மாவட்டத்தில். ஆகவே, எங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று இதை பற்றி விசாரித்துப் பார்த்தேன். இங்கு அது போன்ற எந்த தாளும் இல்லை என்றார்கள்.


அவசரமாக தேவைப்பட்டதால் உடனே சென்னை பீச் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றேன் (Collectorate campus). அங்கு விசாரித்த போது, எட்டாவது மாடியில், assistant superintendent of stamps என்ற பலகை கொண்ட ஒரு அறையில் கிடைக்கும் என்றார்கள்.
மேலே சென்று போது மணி மதியம் இரண்டு. பத்து மணி முதல் ஒன்றரை மணி வரை தான் கொடுப்போம். நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.
மறுபடியும் அடுத்த நாள் காலை பத்து மணிக்கே போய் நின்றேன். கீழே ஒரு பெரியவர் மனு எழுதிக் கொடுப்பார். வாங்கி வாருங்கள் என்றார்கள். கீழ் தளத்திற்கு வந்த போது, மரத்தடியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். விவரத்தை கூறியவுடன் முன்னதாகவே எழுதி வைத்திருந்த மனுவில்(கோர்ட் ஸ்டாம்ப் ஓட்டப்பட்டிருந்தது) என்னுடைய விவரத்தையும், எத்தனை ரூபாய்க்கு முத்திரைத் தாள் வேண்டும் என்ற விவரத்தையும் எழுதிக் என்னிடம் இருந்த Indemnity Bond-ஐ சேர்த்து பின் செய்து கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டு அலுவலகத்தில் கொடுத்தேன். ஒரு சலான் கொடுத்தார்கள். அதில் என்னுடைய விலாசம், முத்திரைத் தாள் மதிப்பு(எண்ணாகவும், எழுத்தாகவும்), கை எழுத்து ஆகியவற்றை நிரப்பி ஒரு அலுவலரிடம் கை எழுத்து வாங்கிக் கொண்டு SBI main branch வங்கிக்கு போகச் சொன்னார்கள்.
SBI வங்கி அந்த ரோட்டிலேயே சிறிது தூரத்தில் இருக்கிறது. இந்தியன் வங்கி, HSBC வங்கி ஆகியவற்றை கடந்து சென்றால் ஒரு பழைய காலத்து சிகப்பு கட்டிடத்தில் முதல் மாடியில் ஒன்பதாவது கவுண்டரில் அந்தச் சலானை கட்டலாம். முன்னதாகவே மற்றொரு SBI இருக்கிறது. அதில் நுழைந்துவிடாதீர்கள்.
அந்தச் சலானில் ­remitter’s copy என்ற பகுதியை கிழித்து வங்கி அலுவலர் என்னிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு மறுபடியும் எட்டாவது மாடிக்குச் சென்றேன். அங்கு அந்த தாளை வாங்கிக் கொண்டு ஸ்டாம்ப் எடுத்து வர சென்றார்கள். வந்தவுடன் என்னுடைய பெயரை கூப்பிட்டு சீல் அடித்துக் கொடுத்தார்கள்.
இந்த முறை முடிய ஒன்றரை மணி நேரம் ஆனது. ஸ்டாம்ப் தானே! போனால் ஒட்டிக் கொடுத்து விடுவார்கள் என்று நினைத்து கொட்டுவாயில் கிளம்பினால் அடுத்த நாளுக்கு உங்களை அலைய விடலாம். கவனமாக இருங்கள்.
இந்த தாள், ரூபாய் 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 1000, 2000 ஆகிய பிரிவுகளில் கிடைக்கிறது.