Pages

Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts

Monday, December 10, 2012

லைஃப் ஆஃப் பை விமர்சனம்


                                                                                                       

டிசம்பர் ஒன்பதன்று அபிராமி ரோபோ தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன். இது Cast Away மாதிரி இருக்கும் என்று சிலர் சொன்னார்கள். ஆனாலும் இந்தியாவில், அதிலும் பாண்டிச்சேரியில் எடுத்த படம் என்பதால் போய் பார்த்தேன். அந்த நினைப்பு பொய் என்று தெரிந்தது. இது ஒரு மனிதனுக்கும், விலங்குமான தொடர்பு சம்மந்தப் பட்ட படம்.


எங்கள் வீட்டில் ஓர் நாட்டு நாய் உள்ளது. நாயுக்கும் எனக்குமான தொடர்பு மனிதத் தொடர்பை விட மேலானது. நான் என்ன பேசுகிறேன் என்று அதற்குப் புரியும். அது என்ன சொல்கிறது என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியும். ஆச்சர்யப் படும் விஷயம் என்னவென்றால், நான் தினமும் குளித்து, புதிய ஆடை அணியும் போது, என்னை நுகர்ந்து பார்த்து வாலாட்டும். தினமும் காலையில் என் மேல் கால் வைத்து எழுப்பும். 

அதே நேரம், இரண்டு முறை கடித்திருக்கிறது. முதல் முறை கடித்த போது அது சிறிய குட்டி. என்னை விளையாட அழைக்கும் நோக்கில் தொடையில் வாயை வைத்தது. புதிதாக வளர்ந்த கூர்மையான பல் அறியாமலே உள்ளே இறங்கி விட்டது. இரண்டாவது முறை கடித்த போது மூன்று வயது. அதனுடைய காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தேன். வலி தாங்காமல் கவ்வியது. பல முறை விளையாடும் போது தெரியாமல் நகம் படும். ஆனால் ஒரு முறை கூட என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு எதையும் செய்ததில்லை. எதிர்ப்பை தெரிவிக்க வாயைத் திறந்தாலும், பற்களை உள்ளே செலுத்தியதில்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், படத்தின் நாயகன், அவன் அப்பா நடத்தி வந்த சூவை(zoo) மூடிவிட்டு கனடாவுக்கு விலங்குகளை எடுத்துச் செல்லும் போது தனியாக மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து ஓர் சிறிய படகில் ஏறிக் கொள்கிறான். அப்பா, அம்மா, சகோதரன் எல்லோரும் மூழ்கி விடுகிறார்கள். நான்கு மிருகங்கள் மட்டும் தப்பிக்கின்றன. அவை இவனுடைய படகில் ஏறிக் கொள்கின்றன. அந்த நாயகன், எப்படி ஒரு பெங்கால் புலியுடன் பயணித்து கடலில் இருந்து தப்பிக்கிறான் என்பது தான் கதை. புலியுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதை படத்தில் அற்புதமாக காட்டி இருக்கிறார்கள்.


புலியும் நாயும் ஒன்றல்ல. ஆனால் புலியுடைய பல்வேறு செய்கைகளை நான் என் நாயிடம் பார்த்திருக்கிறேன். கம்பை எடுத்தால் ஒரு காலால் அதை தடுப்பது, சோம்பல் முறிப்பது, உட்காருவது இது எல்லாமே தத்ரூபமாக இருக்கிறது.

தொடக்கத்தில் ஒரு தமிழ் பாடல்! விலங்குகளை காண்பிக்கும் போது பின்னணியில் அந்த இசை காதுக்கு இனிமையாக இருந்தது. ஒரு ஓரங்குடன் குரங்கின் தாய்ப் பாசத்தை காட்டியது, நரியை சமாளிக்க முடியாமல் அந்த குரங்கும் ஜீப்ராவும் இறப்பது மனதை கனக்கச் செய்தது. வில்லனாக சித்தரிக்கப் பட்டுள்ள அந்த நரியை வேட்டை ஆட ‘come on’ என்று நாயகன் சொல்லும் போது, நரியை கொல்ல புலி பாய்ந்து வந்தது தான் படத்தின் ஹை லைட்! அந்த புலிக்கு அது ஒரு ‘introduction scene’ என்றே சொல்லலாம்.

பசிக்காத வரை தான் மிருகம் நல்லபடியாக இருக்கும் என்று யதார்த்தத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர். அது உண்மை தான். அதே நேரம், மனிதனும், மிருகமும் மனதளவில் இணக்கமாக வாழ வழி உள்ளது என்பதையும் உணர்த்தி இருக்கிறார்.

படம் முழுவதும் உள்ளோட்டமாக கடவுள் நம்பிக்கை வருகிறது. நாயகன், இந்தியாவின் முக்கிய மூன்று மதங்களை ஒரே நேரத்தில் பழகுகிறான். கடலில் தத்தளிக்கும் போது கடவுள் நம்பிக்கை அவனுக்கு உதவுகிறது. முடிவில், கப்பல் ஏன் மூழ்கியது என்று கேட்டு வரும் ஜப்பானிய அதிகாரிகளிடம் தன் கதையை சொல்கிறான். ஆனால் அவர்கள் ஒரு தவறை கண்டு பிடித்து அந்தக் கதையை நம்ப மறுக்கிறார்கள். அதனால்,
மிருகங்களுக்கு பதில் மனிதர்களை கதாபாத்திரங்களாக மாற்றி அதே கதையை வேறு விதமாக சொல்கிறான். இரண்டில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று கதை கேட்கும் நம்மிடம்(நம் பிரதிநிதியாக படத்தில் ஒருவர் இருக்கிறார்) கேட்கிறான். நம்மைப் போலவே அவரும் டைகர் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார். அப்படியானால் நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்று சொல்கிறான்.


ஒரு தீவில் பகல் முழவதும் நிம்மதியாக வாழும் உயிரினங்களுக்கு இரவில் அத்தீவே எதிரியாகிறது. அங்கு உள்ள நீரில் ஒருவகையான ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இதை என்னால் நிரூபிக்க முடியவில்லை. ஓரங்குடன் குரங்கு கடலில் மிதக்கிறது என்று நான் சொன்னேன். அதை அவர்கள் நம்பவில்லை. ஆனால் இதெல்லாம் உண்மை. நான் பார்த்தேன்- என்று கூறி கடவுள் நம்பிக்கையை நியாயப் படுத்துகிறான்.

இந்த வாதத்திற்கு கண்டிப்பாக விஞ்ஞானத்திடம் பதில் உள்ளது. ஆனால் உணர்வு சம்மந்தமான படத்தில் அந்தக் கேள்விகள் தேவை அற்றவை. ஒரு நம்பிக்கை நன்மை செய்தவரையில் நாம் எந்த கேள்வியை எழுப்பப் போவதில்லை. எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் ஒருவனிடம் கடவுள் நம்பிக்கை இருந்து விட்டுத் தான் போகட்டுமே!   

Sunday, December 9, 2012

DTH தொழில் நுட்பம் பற்றி கமலின் பேச்சு!



DTH ஒரு புதிய பரிணாமம்:

புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும்கூட உலக வழக்கம்.

உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம் மனப்பாங்கு நீடிக்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்’ என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.

ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – ‘இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்… உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்க வைக்கும் முயற்சி’ என்று என்னைப் பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை.

ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.
இந்த DTH என்பது என்ன? எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.

சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH. இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று. என் படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு வி.ரூ வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?
DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தியேகக் காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.

விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.

DTH வசதி தமிழக ஜனத்தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.

7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரி கொண்டு போவதைத் தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள DVDக் காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.

திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.

இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம் கெடும் என்று எதிர்த்துத் தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது. பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ள ஒரு பக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திர்கும் வீட்டில் மின் விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?

முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

-கமல் ஹாசன்

Monday, October 3, 2011

உயிர்மை.காம்: ஆயிரம் விளக்குப் பகுதி..

ஆயிரம் விளக்குப் பகுதி..

"ஒன்..டூ...த்ரீ....",ராகவனின் உடலுக்கடியில் வைத்த துணியின் நான்கு முனைகளைப் பிடித்து எடுப்புப் படுக்கையின் மீது வைத்தனர் ஊழியர்கள்.

சில நிமிடங்களில், அபல்லோ மருத்துவமணை.

"எங்க அப்பா எப்பவும் குடும்பத்த பத்தியே யோசிச்சிட்டு இருப்பாரு. ஸ்ட்ரெஸ் காரணமா எங்க அப்பா உயிர் போயிருக்க வாய்ப்பிருக்கா?" அந்த வருடம் முழுவதும் எந்த பண்டிகையும் கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளப் பட்ட ஒரு அப்பாவின் மகன்.

"ஸ்ட்ரெஸ் மூலமா இதயக் கோளாறு வந்து உயிர் போக கண்டிப்பா வாய்ப்பிருக்கு", லூயிசா என்ற மருத்துவர். ஒருவர் இறந்த பின் அவரை குணப் படுத்த முயற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர், இறந்தவரின் உறவினருடன் பேசும் நிமிடங்கள் மிகக் கடினமானவை. அவர்களிடமிருந்து விடுபடும் நேரத்தை நோக்கிக் காத்துக் கொண்டிருந்த லூயிசா, விரைந்து வரும் எடுப்புப் படுக்கையை பார்த்ததும் மனதளவில் மகிழ்ச்சி கொண்டாள்.

"டாக்டர், எமர்ஜென்சி! பல்ஸ் ட்ராப்பிங்", என்றாள் நர்ஸ். 'அரை பிணமாய்' உள்ளே வந்த ராகவனை சோதித்துவிட்டு,

"ஹீ ஈஸ் இன் வி ஃபிப் (V Fib)! பாடில்ஸ் (Paddles) எடுங்க", என்ற படி .சி.யு-வினுள் எடுத்துச் சென்றாள் லூயிசா. மின்சாரம் மூலமாக இதயத்தை மறுபடியும் இயங்கச் செய்த முயற்சி வெற்றி பெற்றது; பதட்ட நிலையை ராகவனின் இதையத் துடிப்பு இயல்பு நிலைக்கு மாற்றியமைத்தது. இதையம் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் லூயிசா சில சோதனைகளை மேற்கொண்டாள்.

"அட்ரினலின் லெவல் அதிகமா இருக்கு. மோஸ்ட் ப்ராபப்லி ஸ்ட்ரெஸ் தான் காரணம். இன்னைக்கு நல்ல நாள். இதே காரணத்தால, ரெண்டு மணி நேரம் முன்னாடி ஒரு உயிர் போச்சு. அத நெனச்சு வருத்தப் பட்டுகிட்டு இருந்ததுக்குள்ள மனசுக்கு ஆறுதலா இந்த கேஸ்!" தன் அறைக்குச் சென்றதும் சக மருத்துவரான ரேவதியிடம் சொல்லி பேரு மூச்சு விட்டாள் லூயிசா.

"ஹும்..எனக்கு இன்னும் மனச தேத்திக்க சான்ஸ் கிடைக்கல",ரேவதி.

"நீ யார சாவடிச்ச?", குறும்புச் சிரிப்புடன் லூயிசா.

"அடி செருப்பால! நீ காப்பாத்தின உயிருக்கும் தவற விட்ட உயிருக்கும் ஒரே வித்யாசம், ட்ராபிக் ஜாம் தான் நெனப்புல இருக்கட்டும்"

"ஓகே! ஓகே! கூல்", லூயிசா அதைச் சொன்ன போது ரேவதி, கண்ணாடியின் வழியாக .சி.யுவினுள்ளே வினோதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன ஆச்சு?"

"ராகவன் தானே அந்த பையன் பேரு?"

"ஆமா. அவனுக்கு என்ன?" தான் கை தூக்கி விட்ட உயிரின் தலை தொங்கிவிட்டதா என்ற ஐயத்துடன் கண்ணாடியின் வழியாக பார்த்தாள் லூயிசா. சில நிமிட அவதானிப்புக்குப் பின்,

"அவன் அழுகுறான்!", என்றது லூயிசாவின் குரல்.

ஒரு மணி நேரம் கழித்து..

"நீங்க சொன்னா மாதிரி அவன் வீட்டுக்கு போய் செக் செஞ்சேன். இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சுது", லூயிசா அனுப்பிய 'வார்டு பாய்' மனோகரன். அவனிடம் ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு,

"இன்னைக்கு மதியம் பிரியாணி தான்!" என்று சிரித்தாள்.

"பதினஞ்சு ரூபா அதிகம் இருந்தா..", என்று தலையை சொரிந்தான்.

"இந்தா இருபது. அஞ்சு ரூபாய்க்கு மோர் குடி", என்று சொல்லிவிட்டு தன் அறையினுள் நுழைந்தாள்.

"என்ன அது?", ரேவதி.

"ராகவனோட ஃபைல்ஸ்"

"கமான்! உனக்கே உடம்பு சரியில்ல. டைம் கிடைக்கிற நேரத்துல ரெஸ்ட் எடுக்காம அவன் பர்சனல் பத்தியெல்லாம் ஏன் நோண்டுற?"

"அவன் அழுதான். ஒரு டாக்டரா என் கடமை முடிஞ்சிடுச்சு. ஒரு சக மனிஷியா அவனுக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு பாக்குறேன்"

"உன்ன திருத்தவே முடியாது!" சொல்லிவிட்டு தன் முகத்தின் மீது கைக் குட்டையை போர்த்தி தூங்கத் தொடங்கினாள் ரேவதி.

ராகவனின் கோப்புக்களை ஒவ்வொன்றாகப் புரட்டிக் கொண்டிருந்தாள் லூயிசா. முதலில் கண்டெடுத்த வீட்டுப் பத்திரம் அவன் அப்பா பெயரில் இருந்தது. அடுத்த ஆவணம், அவன் அப்பாவின் இறப்புச் சான்றிதழ்! அதற்குப் பின் வந்த வாரிசுச் சான்றிதழில் ராகவன் என்ற பெயருக்கு முன்னால் நிரோஷா-வயது ஐம்பது என்று இருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே அடுத்த ஆவணம், அவன் அம்மாவின் (நிரோஷா) இறப்புச் சான்றிதழ். இருவரும் இதயம் நின்று போய் தான் இறந்திருக்கின்றனர்.

"குடும்பமே மாரடைப்பால உயிரை விடப் பாத்தாங்க. நம்ம நாள் நல்ல நாள் தான்!" என்று தோன்றியது லூயிசாவுக்கு. அடுத்த சில நொடிகள், பொறுமையாய் திரும்பிக் கொண்டிருந்த காகிதங்கள், ஓர் இடத்தில் அப்படி உறைந்து நின்றன.

சென்ற ஆண்டு பனிக் காலம்..

"ஹேய்! என்ன காலங்காத்தால வந்துட்டேன்னு பாக்குறியா?", காதலுடன் ராகவனின் காதலி கொஞ்ச,

"ஆமாம்", தலையாட்டினான் ராகவன். அப்போது தான் தூங்கி எழுந்திருக்க வேண்டும்.

"காரணம் இருக்கு. இப்போ சொல்ல முடியாது. நீ எழுந்து, குளிச்சு நேரு பார்க்குக்கு வந்துடு. அங்க சொல்றேன்", என்று அவசரமாகத் திரும்பியவளின் கையை பிடித்தான் ராகவன். அவன் அடுத்த வார்த்தை உதிர்ப்பதற்குள் நொடிப் பொழுது அவகாசம் கூடத் தராமல், அவன் உதட்டில் ஒரு முத்தமிட்டு வெட்கத்துடன் வெளியே ஓடினாள் காதலி.

"இன்னிக்கு என்ன பாசத்தைப் புழியிறா? என்னோட பிறந்த நாளும் இல்ல; அவளோட பிறந்த நாளும் இல்ல. ஜூலை பத்து என்ன விசேஷம்?" யோசித்துக் கொண்டே பல் தேய்த்தான். குளித்து, உடை மாற்றிக் கொண்டு குளிர்சாதனப் பெட்டியை திறந்தான்.

"ப்ரெட் இருக்கு. பசிக்கவே இல்ல!" என்ற யோசனைக்கு,

"காலைலயே கிஸ் வாங்கினா எப்படி பசிக்கும்?" என்று கேள்வி எழுப்பியது ஹார்மோன். அதற்கு புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு வீட்டை பூட்டி, வண்டியில் ஏறினான்.

திரும்பவும் லூயிசா...

"டேட் ஆஃப் மேரேஜ்: 10, ஜூலை, 2006! அதாவது எட்டு மாசம் முன்னாடி", புதிரை புகையவிட்டது அடுத்து கண்டெடுத்த திருமணப் பதிவு ஆவணம். புதிரைத் தீர்த்து உண்மையை தெரிந்து கொள்ள இன்னமும் சில ஆவணங்கள் பின்னால் இருந்தன. அடுத்த பக்கத்தை புரட்டினாள். அதைப் பார்த்ததும், நாற்காலியில் சாய்ந்திருந்த அவள் முதுகு ஆச்சர்யத்தில் நிமிர்ந்து நின்றது.

"அப்பல்லோ மருத்துவமணை, ஆயிரம் விளக்குப் பகுதி. ஜூலை 10 , 2005 -அன்று, இவருடைய இரு கைகளும் விபத்தின் காரணமாக துண்டிக்கப் பட்டது", இதை படித்ததும் லூயிசாவிற்கு ஏற்பட்ட வியப்பிற்குக் காரணம்,

"ராகவனுக்கு இரண்டு கைகளும் இல்லையா?" என்ற கேள்வி அல்ல. தன் கண் முன்னால் கைகள் அற்றுக் கிடக்கும் ஒருவன், தன் திருமண நாளன்று கைகளை இழந்திருக்கிறான் என்ற உண்மையை கண்டவுடன் லூயிசாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே, ஆச்சர்யக் குறியாய் நிமிர்ந்து நின்றது.

அடுத்த காகிதத்தை புரட்டலாமா வேண்டாமா என்று யோசிக்கத் தொடங்கினாள் லூயிசா. அது வைத்திருக்கப் போகும் பூகம்பம் என்னவோ என்று வருந்தியது அவள் மனது. கோப்பினை மேஜை மீது வைத்துவிட்டு சிற்றுண்டிச் சாலையை நோக்கி பயணமானாள். அவள் மனம் முழுவதும் ராகவனின் வாழ்க்கையை சுற்றியே இருந்தது. அவள் கால்கள், பின்னோக்கி நடக்கத் துடித்தன. ஆனால், அவன் படுத்திருக்கும் வார்டிலிருந்து வெகுதூரம் சென்றால் ஒழிய ஆர்வம் குறையாதென எண்ணி நடையை நிறுத்தாமல் தொடர்ந்தாள்.

பத்து நிமிடங்கள் கழித்து..

"கூ..கூ...கூ..", என்று கூவியது அவள் பேஜர். ராகவனுக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்து அவன் அறையை நோக்கி ஓடினாள்.

"என்ன ஆச்சு?"

"பயப்படும் படியா ண்ணும் இல்ல. இவருக்கு செஞ்ச ட்ரீட்மென்ட்-கு பில் பே செய்யணும். அதுக்கு உங்க சொந்தக் காரங்க யாராவது இருக்காங்களா-ன்னு கேட்டு பாத்தோம். தலைய தலைய ஆட்டுறாரே தவிர வேற எதுவும் சொல்ல மாட்டேங்கிறாரு. உங்கள அட்மிட் செய்யச் சொல்லி யாரு கால் செஞ்சாங்கன்னு கேட்டா கூட பதில் சொல்ல மாட்டேங்கிறாரு", என்றாள் ஒரு நர்ஸ்.

"அப்பா, அம்மா இல்ல. ஆனா வைஃப் இருக்காங்க. பேரு கூட மார்குரைட். என்ன சரியா?" லூயிசா, ராகவனின் அருகில் சென்று வினவினாள். பதில் ஏதும் வரவில்லை.

"ஏன் பதில் சொல்ல மாட்டேங்கிறீங்க? உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு தெரியுது. ஆனா அத சொன்னா தானே எங்களுக்கு புரியும்?", பதில் இல்லை.

"சொல்லுங்க. ஏன் பேசாம இருக்கீங்க ஊமை மாதிரி?" லூயிசா அதைக் கேட்டதும் ராகவனிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. மாறாக லூயிசா, எதையோ கண்டு பிடித்ததைப் போல யோசித்தாள். மேலும் எதுவும் கேட்காமல் தன் அறையை நோக்கி ஓடினாள். மேஜை மீதிருந்த கோப்பினை எடுத்து வேகமாக புரட்டினாள். அவள் பார்க்க விரும்பாத அடுத்த காகிதம் கிடைத்தது.

அது, ராகவனின் பிறப்புச் சான்றிதழ். அதில்,

"இக்குழந்தை பிறவி ஊமையாகப் பிறந்தது..", என்ற வரியை படித்தவுடன் நிற்கமுடியாமல் நாற்காலியின் மேல் சாய்ந்தது லூயிசாவின் உடல். அவள் சில நொடிகள் தன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தாள்.

"இருந்த ஒரே தொடர்பும் கை தான். அதுவும் இல்லேன்னா இவன் எப்படி மனசுல நெனச்சத வெளிய சொல்லுவான்?" அவன் நிலையை நினைத்து மனம் குழம்பியது. மெதுவாக எழுந்து, அவன் அறைக்குள் சென்று,

"நீ ஊமைன்னு இதுல போட்டிருக்கு. அப்புறம் எப்படி அடுத்தவங்க கூட பேசுவ? காலால எழுத வருமா?" லூயிசா கேட்ட கேள்விக்கு பதிலாக, ராகவன் தன் தலையை ட்டிக் கொண்டே கண்ணீர் சொரிந்தான்.

"உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு-? உன்னோட மனைவி எங்கே?", திடீர் என்று 'ஆம்' 'இல்லை' கேள்விகளாக கேட்க லூயிசாவால் பழகிக் கொள்ள முடியவில்லை. அந்த கேள்விக்கு எந்த விடையும் வராததை அறிந்தவுடன்,

"உன்ன விட்டுட்டு போயிட்டாளா?"

"இல்லை", என்று தலை அசைந்தது.

"செத்துப் போய்டாளா? "

"இல்லை"

"அப்போ அவ எங்கே?" அவள் கேட்ட கேள்விக்கு தலை ஆட்டி பதில் சொல்ல முடியாமல் சிலை போல் நின்றான். அப்போது லூயிசாவின் தோளில் கை வைத்தாள் ரேவதி.

"இந்தா, உன்னோட ஸ்டெத்-ஐ(Stethescope) கேண்டீன்-லையே விட்டுட்டு வந்துட்ட. மறதி பேஷண்டுங்க கிட்ட இது தான் தொல்லை!" என்று அவள் கூற, "எனக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் இருந்தது உனக்கு தெரியும்-னு புரியுது. அதுக்காக இவ்ளோ ஷார்ட்- எல்லாம் மறதி இருக்காது. நீ தூங்கி வழிஞ்சப்போ கர்சீப்- கீழ போட்டுட்ட. அத எடுத்து உன்னோட பர்சுக்குள்ள சொருகினேன். அதே போல தான் இதுவும். போ!" என்று சொல்லிவிட்டு, ராகவனிடம் திரும்பி கேட்ட கேள்வியை திரும்பவும் கேட்டாள்.

"அப்போ அவ எங்கே இருக்கா?" கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது. அப்படி என்ன காரணத்திற்காகத் தான் அவன் அழுகிறான் என்றறிய அவன் நினைவுகளை கவனித்தோம்.

"என்ன கிஸ் பண்ணு..என்ன கிஸ் பண்ணு..தயவு செஞ்சு என்ன கிஸ் பண்ணு..", என்று கெஞ்சிக் கொண்டிருந்தது அவன் மனக்குரல்.

திரும்பவும் 'வார்டு பாய்' மனோகரன்...

“இந்தக் கதையை உயிரோசை வாரத் தொகுப்புல எவனோ கண்ணன் ராமசாமின்னு ஒரு வெட்டிப் பய எழுதியிருக்கான்னு கேள்விப் பட்டேன். படிச்சு முடிச்சதும் ஒரு டவுட்டு வந்திச்சு. ஒடனே லூயிசா மேடத்தோட வீட்டுக்கு போய் ராகவன் வீட்டுல எடுத்தா மாதிரியே அவங்க ஃபைல்-ஐயும் எடுத்து பாத்தேன். அவங்க பிறப்புச் சான்றிதழ்- என்ன பேரு இருந்திச்சு தெரியுமா?" மனோகரன் கேட்க,

"என்ன பேரு?" என்றாள் ரேவதி; ஆர்வத்துடன்.

"அவங்க நிஜப் பேரு லூயிசா மார்குரைட். டாக்டர் படிப்பு சேந்த போது தன்னோட பேரை லூயிசா-ன்னு சுருக்கிட்டாங்க. டாக்டர் சான்றிதழை மட்டும் பாத்துட்டு, தன்னோட முழு பேர் லூயிசா தான்னு முடிவெடுத்துட்டாங்க"

"ராகவனும் அவளும் கல்யாணம் செஞ்சிகிட்ட போது ஏன் லூயிசா மார்குரைட்-னு பதிவு செய்யல? ஏன் மார்குரைட்-னு மட்டும் இருந்திச்சு? லாஜிக் இடிக்கிதே"

"கதைக்காக லூயிசா மேடம் பாக்காத மேரேஜ் சான்றிதழை பாத்தா மாதிரி எழுதியிருப்பான் அந்த ரைடர். சஸ்பென்ஸ்-காக எதையும் செய்வானுங்க மொள்ள மாறிப் பசங்க"

"இருக்கும்! வா லூயிசா கிட்ட சொல்லலாம்.." ,என்ற ரேவதியை நிறுத்தி,

"ஒரு நூத்தியம்பது ரூவா இருந்தா..", என்று சொல்லிக் கொண்டே தலை சொரிந்தான் மனோகரன் (முழுப் பெயர், வருண் மனோகரன்!).

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4866