ஏழாண்டுப் போர் என்பது 1756-1763 இடைவெளியில், அன்றைய காலத்தின் பெரும் சக்திகளாக கருதப் பட்ட நாடுகளுக்குள் நடந்த போர். இது இந்தியா உட்பட பல நாடுகளை பாதித்தது. முக்கியமாக, ப்ரித்தானியர்களுக்கும், பௌர்பன்ஸ் (bourbans) என்று கூறப் படும் பிரெஞ்சு மற்றும் ஸ்பெயின் நாட்டவர்களுக்கும் வானிபத்தலங்களை பற்றிய கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு இந்த போர் தான் காரணம். இதன் தாக்கமாக 1757 இல், நம் நாட்டில் மூன்றாம் கர்நாடகப் போர் மூண்டது. இதை பற்றிக் கூறுவதற்கு முன், முதல் மற்றும் இரண்டாம் கர்நாடகப் போர்களை பற்றிப் பார்க்கலாம்.
மெட்ராஸ் சண்டை ( Battle of Madras/Fall of Madras/Battle of Adyar ) :
1746 ஆம் ஆண்டு, கிங் ஜார்ஜ் வார் என்று அழைக்கப் பட்ட 'ஆச்ட்ரியன் சக்சஷன்' போரின் (War of Austrian succession) ஒரு அங்கமாக, இந்தியாவில் உள்ள மதராசின் நடந்த போர் தான் இது. இந்த போரில், பிரித்தானியர்களின் காவற் படை தளமாக இருந்த மெட்ராஸை பிரெஞ்சு படையினர் கைப்பற்றினர்.
இதன் பின்னணி என்னவென்று பார்த்தால், 1720 ஆம் ஆண்டு முதலே ப்ரித்தானியர்களுக்கும் பிரெஞ்சு காரர்களுக்கும் போட்டி மனப்பான்மை இருந்து வந்திருக்கிறது. இந்த போட்டி, பிரெஞ்ச் காரர்கள் ஆஸ்ட்ரியன் சக்சஷன் போரில் தங்களை இணைத்துக் கொண்ட போது முற்றியது. இதன் காரணமாக பிரித்தானியர்கள் பிரெஞ்சு குடியிருப்பு பகுதிகளில் தங்கள் படைகளை அனுப்பி நாசம் செய்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரெஞ்சு படையினரும் போரிட்டனர். போரின் முடிவில் பிரித்தானியர்கள் தங்கள் சேதத்தை சரிசெய்ய பின் வாங்கிச் சிலோன் பகுதிக்குச் சென்றனர். பிரெஞ்சு படைகள் தங்கள் தளமான பாண்டிச்சேரியை அடைந்தனர். இந்த போரின் தாக்கத்தால், வங்காளக் கரையோரப் பகுதியை பிரித்தானியர்கள் காவலில்லாமல் கைவிட நேர்ந்தது.
இந்த போரில் ஆதிக்கம் செலுத்தியதோடு நிற்காமல், ஜோசப் பிரான்கோயிஸ் டுப்லிக்ஸ் என்ற பிரெஞ்சு கவர்னர், மதராசில் பிரித்தானியர்களுக்கு எதிராக ஒரு போரினை நடத்த முடிவு செய்தார். அப்போது இருந்த நவாப்கள் அதற்கு தடையாக இருக்கக் கூடாதென, பிரித்தானியர்களை வென்ற பிறகு மெட்ராசை அவர்களிடமே ஒப்படைப்பதாக உறுதியளித்தார்.
செப்டம்பர் 7, 1746 , மெட்ராஸ் மக்கள் விழித்தவுடன் கடலோரமாக பலம் பொருந்திய பிரெஞ்சு படையினர் முன்னேறி வருவது தெரிந்தது. முதலில் பிரெஞ்சு காரர்கள் தாக்குதலை துல்லியமாக வகுக்கவில்லை. இருந்தாலும், இந்த திடீர் தாக்குதலை பிரித்தானியர்கள் சுதாரித்துக் கொள்வதற்கு முன் பிரெஞ்சு படையினர் தாக்குதலை துரிதப் படுத்தினர். மதராசின் அரண்கள் வலுவில்லாமல் கட்டப்பட்டவை ஆதலால், பிரித்தானியர்களின் மறுதாக்குதல் எடுபடவில்லை.
இந்த போரில் தெளிவாக பிரெஞ்சுகாரர்கள் வேன்றுவிட்டாலும், பிரித்தானியர்களுக்கு பிரெஞ்சு கடற்படை அதிகாரியான லா பௌர்டான்னைஸ் (la bourdannais ) கொடுத்த சலுகை ஜோசப் பிரான்கோயிஸ் டுப்லிக்ஸ்-இற்கு அதிர்ச்சி அளித்தது. கோட்டையையும், பண்டக சாலையையும் மட்டும் எங்களுக்கு கொடுத்துவிட்டு ஆளுமையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று la bourdannais கூறினார். பிரித்தானியர்களுடன் அமைதியான நல்லுறவு வேண்டும் என்று அவர் கருதினார்.
ஆனால், அக்டோபர் மாதத்தில் ஒரு புயல் வலுத்ததால், கடற்படையை பாதுகாக்கும் நோக்கத்தில் la bourdannais பாண்டிச்சேரி புறப்பட்டார். டுப்லிக்ஸ்-இற்கு ஆளுமை கூடியது. அவர், கொடுக்கப் பட்ட சலுகைகளை களைந்துவிட்டு பிரித்தானியர்களின் படைகளையும், பாமரர்களையும் தாக்கினார். பலரை சிறை வைத்தார். இது மட்டும் இல்லாமல் இன்று நம் தலைமை செயலகமாக இருக்கும் போர்ட் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் தகர்க்க முனைந்தார்.
ஆனால், ராபர்ட் கிளைவ் என்ற பிரித்தானிய அதிகாரியுடன் சேர்ந்து சில கைதிகள், சிறையிலிருந்து தப்பித்தனர். இவர்களை நம் மக்கள் பார்த்து, அவர்களுக்கு புரியாத தமிழில் கேள்வி கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் முடிவு செய்தபடி, ஐம்பது மயில் தூரத்தில் உள்ள போர்ட் செயின்ட் டேவிட் என்ற கோட்டையை அடைய அவர்களிடமிருந்தும் தப்பித்தனர். இந்த கதை தான் முதலில் ராபர்ட் கிளைவ் என்பவற்றின் பெயரை பிரபலப் படுத்தியது.
இந்த போர் முடிந்த பிறகு, மெட்ராசை கைபற்றிய பிரெஞ்சு அரசு நவாப்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. நவாப்கள் பெரும் படையுடன் வந்து இவர்களை தாக்கினாலும், பிரெஞ்சு படையின் குண்டுகளுக்கு அவை ஈடு கொடுக்க முடியவில்லை.
முதல் கர்நாடகப் போர்: (1746-48)
முதல் கர்நாடகப் போரின் ஒரு அங்கம் தான் மெட்ராஸ் சண்டை. இந்த பகுதியில் மேலும் சில செய்திகளை தருகிறேன். 1707 ஆம் ஆண்டு அவுரங்கசீப் இறந்தார். அவர் ஆட்சிக் காலத்திலேயே நவாப்களின் பலம் குறைய ஆரம்பித்தது. அந்த நேரத்தில் ஆற்காடு நவாபாக இருந்தவர் தோஸ்த் அலி. அவரும் ஒரு கட்டத்தில் இறக்கவே, அடுத்த நவாப் யார் என்ற சர்ச்சை எழுந்தது. தோஸ்த் அலி நவாபாக இருந்தாலும், ஆற்காடு, ஹைதராபாத் நிஜாமின் மேற்பார்வையில் இருந்தது. ஆகையால், தோஸ்த் அலியின் மருமகனான சந்தா சாஹிப் என்பவருக்கும், நிஜாமின் பிரதிநிதியான அன்வர் உதீன் என்பவருக்கும் போட்டி நிலவியது. இந்த நேரத்தில் தான் ஜோசப் பிரான்கோயிஸ் டுப்லிக்ஸ்-ஐயும், பிரெஞ்சையும் மெட்ராசிலிருந்து வெளியேற்ற பிரித்தானியர்கள் அன்வர் உதீனுக்கு உதவினர். இது ஏன் என்று உங்களுக்கு காரணம் புரிய வேண்டும் அல்லவா? அதற்குத் தான் மெட்ராஸ் போரை முதலில் கூறினேன்.
இதன் தொடர்ச்சியாகத் தான் சண்டையும், மதராசின் பிரெஞ்சு கையப்பற்றுதலும் நடந்தது. ஆனால், War of Austrian Succession முடிவடைந்த பொது, இந்த முதலாம் கர்நாடகப் போரும் முடிவடைந்தது. மெட்ராசை ப்ரித்தானியர்களிடமே கொடுத்து அதற்கு பதிலாக லூயிஸ்பார்க் என்ற வடக்கு அமெரிக்க இடத்தை வாங்கிக் கொள்ள பிரெஞ்சு காரர்கள் முன்வந்தனர்.
இரண்டாம் கர்நாடகப் போர்: (1749-54)
முதல் போரில் அன்வர் உத்தீன் என்பவரை நவாப் ஆக்க முனைந்த ஹைதராபாத் நிஜாம் 1748 இல் இறந்ததால் அவருடைய மகனுக்கும், பேரனுக்கும் இரண்டாம் கர்நாடகப் போர் மூண்டது.
1. நிஜாமின் மகன் பெயர் - நசிர் ஜங்
2. நிஜாமின் பேரன் பெயர் - முசாபர் ஜங்
இவ்விருவரின் சண்டையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள, முதல் போரில் ஒதுக்கப் பட்ட தோஸ்த் அலியின் மருமகனான சந்தா சாஹிப், முசாபர் ஜிங்-உடன் சேந்து ஆற்காடு நவாபுக்கு எதிராக குழிபறிக்க ஆரம்பித்தார். இவர்களுக்கு பிரெஞ்சு காரர்களும் கை கொடுத்தனர். இதை தெரிந்து கொண்ட பிரித்தானியர்கள் நசிர் ஜிங்கையும், ஆற்காடு நவாபின் மகனான மொகமது அலி கான் வாலாஜாவையும் (ஐந்தாம் பாகத்தில் இவரை பற்றிக் கூறியுள்ளேன்) அரவணைத்தனர். ஆனால், 1749 இல் பிரெஞ்சு படையினர் வென்று, முசாபர் ஜிங்கையும், சந்தா சாகிப்-ஐயும் நவாபாக நியமித்தனர்.
இது இரண்டு ஆண்டு காலம் தான் நீடித்தது. காரணம், முதல் போரில் தப்பித்து ஓடிய ராபர்ட் கிளைவ், தன்னுடன் ஒரு படையை அழைத்து வந்து ஆற்காடு பகுதியை கைப்பற்றினார். இவர் தலைமையில் பிரித்தானியர்கள் பல பகுதிகளை கைப்பற்றினர். இந்த போர், 1754 இல் பாண்டிச்சேரி ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது. முகமது அலி கான் வாலாஜா நவாப் ஆனது இந்த ஒப்பந்தத்தின் படி தான். அதோடு, பிரெஞ்சு படையின் தோல்விக்கு காரணமான ஜோசெப் பிரான்கோயிஸ் டுப்லிக்ஸ்-ஐ பிரான்சுக்கு திரும்பும்படி அரசு ஆணையிட்டது. பிரெஞ்சு அரசிற்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியவர் என்பதால், அரசு டுப்லிக்ஸ் மீது வெறுப்பு கொண்டது.
மூன்றாம் கர்நாடகப் போர் (1757-63) :
இந்த காலக் கட்டத்தில் ப்ரிதானியர்களுக்கும் பிரெஞ்சு நாட்டவர்க்கும் இருந்த பகை மறுபடியும் உயிர்பெற்றது. இதற்கு காரணம், நான் முதலில் கூறிய ஏழாண்டுப் போர். 1757 -இல் பிரெஞ்சு அரசுடன் இணைந்திருந்த சந்திரநாகூர் என்ற இடத்தை பிரித்தானியர்கள் கைப்பற்றினார். இருந்தாலும், இந்த போரின் முடிவை நிர்ணயித்தது, தென்னகத்தில் நடந்த வந்தவாசி போர் தான்.
வந்தவாசி போர் / வேண்டிவேஷ் போர் (1760):
இந்த போரில், பிரெஞ்சு படைக்கு தலைமை வகித்தவர் கவுன்ட் டீ லேல்லி என்ற பிரெஞ்சு ஜெனரல். இவரை எதிர்த்து பிரித்தானிய ஜெனரல் சர் எய்ரே கூட் என்பவற்றின் படைகள் பாண்டிச்சேரியின் அருகில் உள்ள வந்தவாசியில் கூடின. வங்காளம், ஹைதராபாத் போன்ற இடங்களில் தங்கள் செல்வத்தை கூட்டிக் கொண்ட பிரித்தானியர்கள், வந்தவாசி போரில் சுலபமாக பிரெஞ்சு படையினரை வீழ்த்தினர்.
இந்த போரில் பிரெஞ்சு அரசு 300 குதிரைப் படைகளையும், 2500 எண்ணிக்கை கொண்ட காலாட்படையையும், 1300 சிப்பாய்களையும், 3000 மராத்தா வீரர்களையும், 16 குண்டு துளைக்கும் கருவிகளையும் உபயோகித்தனர். அதே போல், முறையே ஆங்கிலேயர்களும் ( 80 250 1900 2100 26) உபயோகித்தனர். இந்த போரில், செங்கல்பட்டு, திண்டிவனம், திருவண்ணாமலை போன்ற இடங்கள் ஆங்கிலேயர்களின் பிடிக்குச் சென்றன.
இதற்குப் பின், 1761 இல் பாண்டிச்சேரி ஆங்கிலேயர்களின் பிரதேசமானது. ஆனால், மூன்றாம் கர்நாடகப் போரின் முடிவில், அதாவது 1763 இல், பாரிஸ் ஒப்பந்ததத்தின் படி, பாண்டிச்சேரி பிரெஞ்சு அரசின் வாணிபத் தளமாக உபயோப் பட ஆங்கிலேயர்களின் அரசு ஒத்துக் கொண்டது. பிரெஞ்சு அரசும் ஆங்கிலேயர்களுக்கு உறுதுணையாக இருக்கப் பணிந்தது. பிரெஞ்சு நாட்டவர்க்கும், ஆங்கிலேயர்களுக்குமான போரின் முடிவும், இந்தியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்குமான போரின் தொடக்கமுமாக இந்த மூன்றாம் கர்நாடகப் போர் இருந்தது.
இந்தியாவின் சிப்பாய் கிளர்ச்சியும், விடுதலை இயக்கமும் மேற் கூறப் பட்ட எந்த போருக்கும் நிகராகாது. அதை பற்றிக் கூற எத்தனை பாகங்கள் எடுத்தாலும் பத்தாது. அதை பற்றி நீங்கள் அறிந்திருக்கக் கூடும். ஆனால் முடிக்கும் தருவாயில் சில விஷயங்களை கூற விரும்புகிறேன்.
எல்லா போர்களிலும், எல்லா கையப் பற்றுதல்களிலும் சில விஷயங்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
1. தமிழ் நாடு என்று எடுத்துக் கொண்டால் அது ஒன்று தான். ஆனால், அதற்குள்ளாகவே பல ராஜ்ஜியங்களும் பகைமையும் இருந்திருக்கிறது. சேர, சோழ, பாண்டியர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்திருந்தால் நவாப்களை உள்ளே விட்டிருக்கவேண்டாம்; ஆங்கிலேயர்களும் உள்ளே வந்திருக்க மாட்டார்கள். பிரெஞ்சு நாட்டவரும், ஆங்கிலேயர்களும் சண்டையிட்டுக் கொண்டாலும், இறுதியில் அவர்கள் இணைந்தனர். நம்மிடம் ஒத்துமை இல்லாதது முதல் குறை.
2. பெண் ஆசை, பொன் ஆசை, துரோகம், குழிப் பறித்தல், பதவி ஆசை இவை எல்லாம் தான் ஒரு சாம்ராஜ்ஜியம் தோற்பதற்கு முக்கிய காரணமாய் இருந்திருக்கின்றன.
“ஆசைகளையும் உணர்சிகளையும் கட்டுப் படுத்த முடியுமா? இவை எல்லாம் மனிதர்களுள் சகஜமாக இருப்பவை தானே?” என்று கேட்பவர்கள், இந்த வரலாற்றுப் பதிவுகளிலிருந்து பெரும் செய்தி,
"பிடிக்காதவற்றை விலக்குவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், பிடிக்காதவை நல்லதாக இருந்தால், அவற்றை விலக்குவதால் உங்களுக்கு தான் கேடு விளையும். எதை எதிர்க்க வேண்டும், எதை ஆதரிக்க வேண்டும் என்று அறிந்து செயல் படவேண்டும்".
இந்தியர்கள், தங்களுடைய அடையாளமான கலாசாரத்தில் தவறு கண்டு பிடித்து மேற்கத்திய கலாசாரத்தை பின் பற்ற ஆரம்பிக்கின்றனர். எந்த ஒரு கலாச்சாரமும் 'அப்டேட்' செய்யப் படவேண்டுமே தவிர விலக்கப் படக் கூடாது. வந்தவாசி என்று நம் ஊரை அழைப்பது எப்படி இருக்கிறது? வான்டிவாஷ் என்று அழைப்பது எப்படி இருக்கிறது? நம்மிடமிருந்து 'காப்பி' அடித்துத் தான் அவர்கள் தங்கள் கலாச்சாரத்தை உருவாக்கினர் என்பது வரலாறு.
அவர்களிடம் குறைகள் அதிகம். 'இக்கரைக்கு அக்கறை பச்சை' என்ற ரீதியில் தான் நம் கலாசாரம் அவர்களிடம் தோற்கிறது. உண்மையில், எந்த கலாச்சாரமும் முழுமையானது கிடையாது. இதை அறிந்து கொண்டு அவர்கள் தங்கள் கலாசாரத்திலிருந்து பிரிந்து வருவதில்லை. நம்மிடம் உள்ள குறைகளை விமர்சித்துவிட்டு, நிறைகளை பாராட்டிவிட்டு சென்று விடுகிட்றனர். நாம் தான் அவர்கள் குறைகளை மறைத்து, நிறைகளை பின்பற்ற நினைக்கிறோம். உங்கள் அடையாளத்தின் மீது நீங்கள் கர்வம் கொள்ளுங்கள். உலகம் நம்மை மதிக்கும்!
இந்த தொடரை படித்த உங்களுக்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம், பல்லாவரம், வந்தவாசி, சென்னை போன்ற இடங்களை போருடன் தொடர்பு படுத்தி காட்டியது, வரலாற்றின் மீது ஒரு ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த தொடர் பிடித்திருந்தால், தயவு செய்து மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். என் முயற்சிக்கு சன்மானமாக என்னை பின்தொடருங்கள். நன்றி.
1 comments:
Super...... Pleasssssssssssse CONTINUE it
Post a Comment