பல்லவ ஆட்சிக் காலம்:
நம் இடத்தின் வரலாறு, பல்லவ ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்குகிறது. நான்காம் நூற்றாண்டு வரை, பல்லவர்களின் ஆட்சி சுணக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைத்து, பல்லவர்களின் பெருமையை மறுபடியும் மீட்டுக் கொண்டு வந்தவர், சிம்மவர்மன் என்ற அரசராகும். இவர், 436 CE - இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவருக்கு முன்னால் ஸ்கந்த வர்மன் ஆண்டு வந்தார். மூன்றாவது நூற்றாண்டிலேயே பல்லவர்கள் முன்னேற ஆரம்பித்திருந்தாலும்,இரண்டாவது சிம்மவர்மன் தான் பல்லவர்களுக்கான உண்மையான தொடக்கத்திற்கு காரணமானார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஸ்கந்தவர்மன் அஸ்வமேத யாகத்திற்கு புகழ்பெற்றவர் என்று கேள்விப் பட்டேன்.
சிம்மவர்மன், 460 ஆம் ஆண்டு வரை ஆட்சி நடத்தினார். அதன் பின்னர், நான்காம் ஸ்கந்தவர்மன் இருபது ஆடுகாலம் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அது வரை, பல்லவர்கள் இன்றைய விஜயகாந்தை போல மெல்ல முன்னேறி வந்தாலும், அடுத்து வந்த நந்திவர்மனின் ஆட்சியில் (460-480) பல்லவ குடும்பம் மறுபடியும் வீழ்ச்சியை சந்தித்தது.
அதற்கு காரணம், பல்லவர்களை எதிர்த்க்கும் கிளர்ச்சியாளர்களையும், ஆட்சிக்கு ஆலோசனை கொடுக்கும் முக்கியஸ்தர்களையும் கடம்பர்கள் தன் வசப் படுத்திக் கொண்டனர். இதற்கிடையில், ஆந்திரக் கடலோரப் பகுதிகளை விஷ்ணுகுந்தின ராஜவம்சம் கைய்பற்றியது. விஷ்ணுகுந்தின ராஜவம்சம், 514 ஆம் ஆண்டில் இன்றைய தெலுங்கானா பகுதியை மட்டும் ஆட்சி செய்து கொண்டிருந்தது என்பது ஒரு செய்தி. அவர்களும் இன்றைய அமைச்சர்களைப் போல,தனித் தெலுங்கானா கேட்டாலும் கேட்டிருப்பார்கள்!
அப்போது இருந்த பல்லவர்களின் கீழ், தொண்டை மண்டலம் மட்டுமே இருந்தது. நான் கூறிய அறிமுகத்தை சப்பை கட்டென எண்ணுவோர், தொண்டை மண்டலத்தை பற்றி அறிந்தால் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள். அன்றைய தொண்டை நாட்டின் கீழ் இருந்த இடங்கள், காஞ்சிபுரம் , திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி மற்றும் சென்னை! ஆக, கடம்பர்களின் வலையில் விழாத மக்களாய் நாம் ஒரு காலத்தில் இருந்து வந்திருக்கிறோம்!
அடுத்து வந்த குமாரவிஷ்ணு, புத்தவர்மன் மற்றும் இரண்டாம் குமாரவிஷ்ணு ஆகியோரின் ஆட்சிக்காலத்திலும் பல்லவர்களால் விட்ட இடத்தை பிடிக்க முடியவில்லை.
480 CE-ஆண்டிலிருந்து எண்பது ஆண்டு காலம், தங்கள் பொற்காலத்தை எதிர் நோக்கிக் பொறுமையாக காத்திருந்த பல்லவர்களுக்கு சரியான ஒரு அரசன் கிட்டவில்லை. அவர்களில் வேண்டுதல் நிறைவேற, சிம்மவிஷ்ணு என்ற அரசரின் பிறப்பிற்காக அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. சிம்மவிஷ்ணு (555-590 CE) ஆட்சிக்கு வந்த பிறகு, பல்லவர்களின் ஆளுமையில் உள்ள சிக்கல்களையும், களப்பர்களின் (பெரும்பாலும் இவர்கள் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் என்று அறிந்தேன்) ஊடுருவலையும் உடைத்தெறிந்தார். இவரின் முக்கியமான படைப்பு, மகேந்திரவர்மனின் பிறப்பு!
சிம்மவிஷ்ணுவிர்க்கு பிறகே, பல்லவர்களின் பொற்காலம் என்று கூறப்படுகிறது. பல்லவர்கள், தங்கள் எல்லையை விரிவாக்கம் செய்வதிலும், கலையை வளர்ப்பதிலும் முக்கியமான பங்கை அளித்தனர். இவரின் மகனும், பேரனும் தான் பல்லவர்களின் பெருமையை இன்று வரை நிலை நாட்டியுள்ளனர். மகேந்திரவர்மனின் காலத்தில் தான், விழுப்புரத்தின் அருகில் உள்ள மண்டகப்பட்டு கோயில் கல்லைக் குடைந்து கட்டப் பட்டது. அது மட்டும் இல்லாமல், சென்னை வாசிகளுக்கு ஒரு முக்கிமான வியப்பை விட்டுச் சென்றிருக்கிறார் இவர். கிரோம்பெட்டையின் அருகில் உள்ள பல்லாவரத்தில், ஐந்து அறைகள் கொண்ட ஒரு குகை கோயிலையும் இவர் காலத்தில் கட்டியுள்ளார். இந்த குகை கோயில், 'பஞ்சபாண்டவர்கள் குகை' என்று அழைக்கப் பட்டிருந்தது. ஆனால் பின்னர், இந்த குகையை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துக் கொண்டு, இப்போது அது மௌலா கா பஹாத் என்று அழைக்கப் படுகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால், இந்த இடம் இருக்கும் தெருவுக்கு கூட பல்லவர்கள் பெயர் இல்லை. ஜி.எஸ்.டி சாலையில் இணையும் இந்த சாலைக்கு, தர்கா சாலை என்று தான் பெயர்!
மகேந்திரவர்மனின் காலத்தில் இத்தகைய கலைப் பணி நடந்த நேரத்தில், மறுபடியும் இரண்டாம் புலிகேசியினால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. பல்லவர்களின் படையின் மேல் சாளுக்யர்கள் படை எடுக்க, மகேந்திரவர்மனின் படை படு தோல்வி அடைந்தது. மகேந்திரவர்மனால், தன் தலைநகரமான காஞ்சிபுரத்தை மட்டும் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.
வரலாற்றிலிருந்து நாம் கற்கும் ஒரே விஷயம், வெற்றிக்கு வித்திடுவது தான் தோல்வி! மகேந்திரவர்மனின் ஆட்சித் திறனை மிஞ்சும் ஒருவர் அவருக்கு மகனாய் பிறந்து, நரசிம்மவர்மன் என்ற பெயரைப் பெற்றார்! அவரே மாமல்லனும் ஆவார்! மாமல்லரைப் பற்றி உங்களுக்கு கூறத் தேவையில்லை. இன்று வரை நம் தமிழ் நாட்டின் பெருமைகளாக கருதப் படும் கலைப் பொக்கிஷங்களில், மாமல்லபுரம் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. நரசிம்மவர்மர், தன் தந்தையார் தொடங்கிய மகாபலிபுரத்தின் கட்டுமானத்தை தொடர்ந்து நடத்தி முடித்தது மட்டுமல்லாமல், சாளுக்யர்களிடம் தோற்ற இடங்களையும் 642 CE ஆண்டில் மீட்டு, தந்தைக்கு பெருமை சேர்த்தார். இதே ஆண்டில் தான் சீன பயணி, சூஅன்சாங், காஞ்சிபுரத்திற்கு வந்து, நம் மக்களின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைத்தார்.
இதற்குபின் பல மன்னர்கள், பல்லவ ஆட்சியை விஸ்தரித்தனர். அதில் முக்கியமானவர்கள், பரமேஸ்வரவர்மன், ராஜ சிம்மன் என்று அழைக்கப் பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன் மற்றும் பதின்மூன்று வயதிலேயே அரசு பதவியை ஏற்றுக் கொண்டு பல்லவர்களின் வீரத்திற்கு இலக்கணமான இரண்டாம் நந்திவர்மன்.
ராஜ சிம்மர், காஞ்சிபுரத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான கைலாசநாதர் கோயிலையும், வைகுண்ட பெருமாள் கோயிலையும் கட்டியவர். அதே சமயம், மாமல்லபுரத்தில் உள்ள 'ஷோர் டெம்பிள்' ஐயும் இவர் தான் கட்டினார்.
ராஜசிம்மர் இலக்கியத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளார். அவர் படைப்பான கூடியாட்டம் இன்றும் கேரளாவில் ஆடப் படும் சமுஸ்கிருத நாடக ஆட்டமாகத் திகழ்கிறது. அது மட்டும் இல்லாமல், தன்னுடைய தூதர்களை சீன அரசுடன் பகிர்ந்துகொண்டு, அரேபியர்களுக்கு எதிரான போரில், தன்னுடைய யுத்த திறனை கொடுத்து உதவியவர் என்ற பெருமையும் இவரைச் சாரும். ஹ்ம்ம். அப்போது நாம் ஆலோசித்தோம்; இப்போது அவர்கள் ஆலோசிக்கின்றனர்! தலை எழுத்து!
அது ஒரு புறம் இருக்கட்டும். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு காலம், பல்லவர்களின் கீழ் வாழ்ந்த நம் மக்கள், அபரஞ்சித வர்மனோடு முடிவுக்கு வந்தது. பல்லவர்களின் ஆட்சியின் முடிவு, பத்தாம் நூற்றாண்டு!
0 comments:
Post a Comment