Pages

Sunday, July 20, 2014

VIP: வேலையில்லா பட்டதாரி விமர்சனம்

வேலையில்லா பட்டதாரியின் கதைச் சுருக்கம், படம் வெளியான மூன்றாவது நாளே வெளிவருவது சரியென்று படவில்லை. பல நாட்களுக்குப் பிறகு அரசியல் பேசும் படமாக இருப்பதால் விமர்சனம் தேவைப்படுகிறது.
சமகாலச் சூழலை வைத்து பல கதைகள் வந்திருக்கின்றன. இப்போதெல்லாம் ஐ.டி துறையை தூக்கிப் பிடிப்பதற்கு பல இயக்குனர்கள் கியூவில் நிற்கின்றனர். யாரோ ஒருவர் முத்தாய்ப்பாக அந்தத் துறை தொடர்பான எதிர்மறைக் கருத்தை பதிவு செய்யும் போது, படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.
நண்பன் வெளிவந்த போது இதே ஆவல் மேலெழுந்தது. அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தையாவது இந்தப் படம் ஈடு செய்யுமா?
வேலையில்லா பட்டதாரி எதையெல்லாம் ஆதரிக்கிறார், எதையெல்லாம் விமர்சிக்கிறார், எதையெல்லாம் பற்றி பேச மறுக்கிறார் என்பதைச் சொல்வதே இந்த விமர்சனத்தின் நோக்கம்.
எதை ஆதரிக்கிறார்?
அந்தந்த துறை சார்ந்த வேலையில் எஞ்சினியர்கள் உட்கார வேண்டும் என்கிறார். அவ்வாறு உட்காரும் போது, நேர்மையை எந்தச் சூழலிலும் கடை பிடிக்க வேண்டும் என்கிறார். சமகால இளைஞர்களால் ஒதுக்கவே முடியாத குடியையும், கூத்தையும் நல்லவனின், தியாகியின் அடையாளமாகக் காட்டுகிறார். அம்மாவையும், காதலியையும் தனித்தனியாக இரு பெண்களிடம் காண முடியும் என்கிறார். சென்ட் ஜோசப் பள்ளியின் ஆங்கிலம் கிடைக்கவில்லை என்று ஏங்குகிறார்.
இது போன்ற கதைகளில் பொதுவாக ஹீரோ கேமராவுடன் திரிவார். அல்லது படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப் படுவார். இங்கு ஹீரோ சிவில் எஞ்சினியர் என்பது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது. ஆனால், அந்தப் படங்கள் செய்த எல்லா தவறுகளையும் இந்தப் படமும் செய்கிறது. வே.இ.ப சமகால இளைஞர்களுக்கு திறமை இருந்தும், படைப்பாற்றல் இருந்தும், வேலை கிடைப்பதில்லை என்று கூறுகிறது. நிதர்சனம் என்னவென்றால், எந்த எஞ்சினியரிங் கல்லூரியும், படைப்பாற்றல் மிகுந்த ஒரு என்ஜினியரை உருவாக்குவதில்லை என்பது தான். இவரைப் போன்று ஆறே மாதங்களில் ஒரு பெரிய ப்ராஜெக்ட்-ஐ எடுத்துச் செய்யும் அளவிற்கு திறமை யாரிடமும் இல்லை என்பது தான் உண்மை.
ஐ.டி துறையில் நேர்மை என்பது ரெண்டாம் பட்சம் தான் என்பது உண்மை. அதே நேரம், வெளியில் நேர்மை இருக்கிறதா என்றால், யோசிக்கத் தான் வேண்டும். அப்படிப் பட்ட சூழலில் நேர்மையை ஒரு அளவுகோலாக வைப்பது பாராட்டத் தக்க முயற்சி. இடையில் மவுலிவாக்கம் பற்றிய வசனத்தை சேர்த்தது சாதுர்யம். ஆனால், நேர்மையைக் கடைபிடிக்கும் ஹீரோ எப்போதும் போல எல்லோரையும் ஒரே ஆளாக சந்திக்கிறார். சாத்தியமே இல்லாத ஹீரோயிசச் செயல்களைச் செய்கிறார் (க்ளைமாக்சில் போலீஸ் வருவது போல, உண்மையைச் சொல்லும் போது கேமராவில் பதிவு செய்வது இப்போதுள்ள எல்லாப் படங்களிலும் வருகிறது). 
தனுஷின் தம்பி ஐ.டி துறையில் வேலை பார்க்கிறார். அப்பா, அம்மாவுக்குப் பிடித்த பிள்ளை. குடியை கூட கோக் பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தால் தான் ஒப்புக்கொள்வார். தனக்கான நல்ல பெயரை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டார். பயந்தவர். அழுக்குத் துணிகளோடு ஒன்று கூட மாட்டார்.
அண்ணனோ, இதற்கு அப்படியே எதிர் துருவம். ஆனால் இருவருக்கும் பொதுவாக உள்ளது குடி. குடித்துவிட்டு ஆடுவதை இந்தக் காலத்தில் ஒரு தகுதியாகப் பார்க்கத் தொடங்கிவிட்ட பிறகு தனுஷ் குழுமத்தை மட்டும் திட்டிப் பயனில்லை.
அம்மாவின் நுரையீரலை சிகரெட் பிடித்ததால் நுரையீரல் கெட்டுப் போன ஒரு பெண்ணுக்கு வைத்தவுடன், அவளிடம் தன் தாயைப் பார்க்கிறார். தனுஷ். ஆடியன்ஸிடம் கொஞ்சம் நல்ல புத்தியோடு வாருங்கள் என்ற அறிவுரையை மறைமுகமாக வைக்கிறார் டைரக்டர். அதே இயக்குனர், வில்லனை பொட்டை பொட்டை என்று பல முறை திட்ட வைக்கிகிறார்! (என்ன தான் சொல்ல வர்றீங்க?!) ரகுவரனை ஹீரோவாக்கும் போது ஹீரோயிசத்திற்கு துணையாக ஒரு சிகரட்டையும் கொடுக்கிறார்.
அடுத்து வே.இ.பட்டதாரி எதையெல்லாம் எதிர்கிறார்?
தந்தையின் நிழலில் வாழும் பணக்காரனை. மகனை விட்டுக் கொடுக்காத தொழில் அதிபரை. ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியின் தமிழ் வழிக் கல்வியை. டெண்டரில் விளையாடும் எம்.எல்.ஏவை. புதியவர்களை அனுபவம் அற்றவர்கள் என்று கூறி மட்டப் படுத்தும் எஞ்சினரை.
எதைப் பற்றி பேச மறுக்கிறார்?
தன்னுடைய கூட்டத்தை அடித்து நொறுக்கிய குண்டர்களை.
கார்பரேட்களின் லீலைகளை அனுமதிப்பது அரசு தான் என்பதையும், அவர்களுக்கு அரசின் தரப்பில் அளிக்கப் படும் சலுகைகளையும் பற்றி ஒன்றுமே அறியாதவர் இயக்குனர் என்பது இந்தக் கதையின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. எப்போதும் போல, தொழில் அதிபரின் வில்லத் தனம் மட்டுமே இதற்கு முழு முதற் காரணம் என்று வேற வசனம் பேசும் படமாக வே.இ.பட்டதாரி இருக்கிறது. மவுலிவாக்கத்தில் அரசு தரப்பில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்கிறீரா மிஸ்டர். இயக்குனர்?
தனுஷ் வாயிலாக மிகப் பெரியதொரு வசனம் பேசும் இயக்குனர், பி.ஈ படிப்புக்குப் பிறகும், முன்பும், வாழ்க்கைக்குத் தேவையான பொதுக் கல்வியை அறவே பெற மறுக்கும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகவே தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார். தன் தோல்விக்குக் காரணம் ஆங்கில அறிவு இல்லாமல் போனது தான் என்று கூறும் வேலை இல்லா பட்டதாரி, சமீபத்தில் தமிழ் வழிக் கல்வியின் மூலம் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆகியிருக்கும் வி.பி. ஜெயசீலனை நேரில் சந்தித்து குட்டு பெறும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார். 
எதற்கெடுத்தாலும் கை நீட்டும் பழக்கம் கொண்ட வேலையில்லா பட்டதாரி, தவறுக்கு முக்கிய காரணமான அரசை பற்றி எந்த விமர்சனத்தையும் வைக்காமல் போவதும், மீடியாவின் முன்பு பம்புவதும் அவர்கள் மொழியில் பொட்டை தனமாகவும், என்னுடைய மொழியில் தொடை நடுங்கித் தனமாகவும் படுகிறது.

பொல்லாதவன், படிக்காதவன், திருவிளையாடல் ஆரம்பம், படையப்பா போன்ற படங்களின் கலவையாக திரைக்கதை அமைந்திருக்கிறது. இந்தக் கதையின் நோக்கம் மக்களை சிரிக்க வைப்பது. அதை சரியாகச் செய்திருக்கிறார்கள். இயக்குனரின் கூற்றுப் படியே, நாற்பதாயிரம் பேர் போக மிச்சமிருக்கும் 4,60,000 வேலையில்லா பட்டதாரிகள் தியேட்டருக்கு வந்தால் கூட கலக்ஷனை அள்ளிவிடலாம் என்ற கணக்குப் படி எஞ்சினியர்களின் குமுறல் கதைக் காளமாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. தங்களோடு சேர்ந்து குடிக்க ஆளில்லாமல் திரியும் படிப்பறிவே இல்லாத சோ கால்ட் என்ஜினியர்ஸ், இந்தக் கதையை தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடலாம். மற்றபடி படத்தில் பில்டிங் ஸ்ட்ராங் (Entertainment)..பட் பேஸ்மென்ட்(Story) வீக்!       

Rating: 2.5/5

2 comments:

J.Jeyaseelan said...

விமர்சனம் அருமை ! ஆனால் நீங்கள் கூறுவது போல குடியும் புகையும் கதையின் பெரும்பாலான இடங்களில் முன்னிலைப்படுத்தப்படுவதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் .தனுஸ் நடிப்பும் சமுத்திர கனியின் நடிப்பும், சரண்யா அம்மாவின் நடிப்பும் மிக அருமை.

J.Jeyaseelan said...

உங்கள் கமெண்ட்டில் உள்ள வோர்டு வெரிஃபிகேசனை நீக்கி விடுங்கள் ! அது தான் கருத்திட மற்றவர்களுக்கு எளிது. உங்கள் பதிவு குறித்து கமெண்ட் செய்ய விரும்புவர்களுக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும். 2 முறை முயறசித்துவிட்டு கமெண்ட் அளிக்காமலேயே சென்றுவிடுவர். நானே 4 முறை முயன்ற பிறகுதான் அளிக்க முடிந்தது.