மழைக் காலம். எப்போதும் போல ஏழைகளுக்கு இது வேண்டிய-வேண்டாத காலம். ஏழைகள் என்று நான் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் உண்டு. அவர்கள் தான் மழையின் நிஜமான சீற்றத்தை எதிர் நோக்குபவர்கள்.
வெளியே வந்து தொழில் செய்பவர்கள், விவசாயிகள், என்று அனைத்து தரப்பு ஏழைகளுக்கும் மழை நன்மையையும் செய்கிறது; கெடுதலும் செய்கிறது.
இதில் தப்பிப் பிழைத்துக் கொள்பவர்கள் பணம் படைத்தவர்கள். எப்போதும் போல மேல்தட்டு இரண்டு பர்சன்ட்.
அவர்களுக்காகவே உருவாகும் நகரங்களின் முன்னேற்றத்தை ஸ்லோ மோஷன் கேமராவை கண்ணில் பொருத்தியது போல மெதுவாக, நிதானமாக, எதிர்கேள்வி கேட்காமல் நாம் தினமும் காண்கிறோம். எது வேண்டுமானாலும் தன்னைத் தேடி வர வழைக்கும் திமிர் பிடித்த நகரங்களாக இவை உருவாகிக் கொண்டிருக்கின்றன. மனிதனின் ஆசைகளில் ஒன்றைக் கூட விட்டு வைப்பதில்லை இந்த சோ கால்ட் சொர்க்க பூமிகள். ஒரு புதிய மாடல் செல் போன் அறிமுகமானால் முண்டி அடித்துக் கொண்டு ஃப்லிப் கார்ட்-ல் குவியும் இணைய விட்டில் பூச்சிகளைப் போல தன்னைத் தேடி வந்து நுகர இந்நகரங்கள் மனிதர்களை சுண்டி இழுக்கின்றன.
இது எங்கு செல்லும் என்று அறிந்த உலகம் ஒன்று உண்டு. அந்த உலகமும் நகரத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த உலகம் பல நல்ல விஷயங்களைச் செய்கிறது. அதுவும் நகர வாசிகளின் நன்மையையே கருத்தில் கொள்கிறது. நகரமயமாதலை எதிர்ப்பவர்களுக்கும் தேவைப்படும் நகரம், சென்ற நூற்றாண்டின் தேசிய நெடுஞ்சாலை மரங்களின் திடத்தோடு நக்கலாக சிரித்து வளர்கிறது.
என்னுடைய பரமபதத்தை பொதுத் தளத்திடம் கொண்டு சேர்க்கவும் நான் நகரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. நேரத்தை மிச்சம் பிடிக்க, மொப்பெட்-ஐ எடுத்துக் கொண்டு கிளம்பினேன். என் வசிப்பிடமும் நகரமயமாதலின் பிடியில் மெதுவாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியாக பல உயர்ரக வியாபார ஸ்தலங்களையும், வாகனங்களையும், உடையலங்காரங்களையும், மாறி வரும் வானிலையும் கண்டேன்.
நகரத்தை நெருங்க, நெருங்க வீசிக் கொண்டிருந்த காற்று கூட குளிர்ச்சியை விட்டு சூட்டை உறுஞ்சிக் கொண்டது. ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு விமான நிலையம் அருகில் மழைத்துளிகள் என் ஹெல்மெட்-ஐ நனைக்கத் தொடங்கின.
இந்தக் காலத்தில் மழை விட்டு விட்டுப் பெய்வது மட்டுமல்லாமல் ஒரே தெருவின் தொடக்கத்திலும், முடிவிலும் கூட பாரபட்சம் காண்பித்துப் பெய்கிறது என்று தோன்றியது. எது வரை போக முடியுமோ அது வரை பயணத்தை நீட்டலாம் என்று மெதுவாக முன்னேறினேன். மழைத்துளிகளின் சட, சட சத்தத்துடன் என் வாகனம் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் தள்ளாடியது. என்னைத் தாண்டி அசுர வேகத்தில் நீரை பீய்ச்சி அடித்தபடி பணக்கார வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன.
என்னால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முயலவில்லை. ஒதுங்க இடம் தேடிக் கொண்டே இருந்தேன்.
ஒரு பீட்சா கார்னர் போனது, ஹுண்டாய் ஷோரூம் வந்தது, பிறகு ஒரு கம்பெனி, நகை மாளிகை, ஐ கேர் ஹாஸ்பிடல்...இப்படியாக பெரிய பெரிய கட்டிடங்கள்; பார்கிங் ஓடு கூடிய விஸ்தாலமான இடங்கள்.
ஆனால் எனக்கு ஒதுங்க ஓர் இடம் கிடைக்கவில்லை. நான் தனி ஆள் அல்ல. என்னோடு இடம் தேடியவர்களில், இளைஞர்கள், ஒரு முசுலிம் தம்பதி, முக மூடிக் காதலர்கள் (அ) சகோதர சகோதிரிகள் ஆகியோரும் அடக்கம்.
பின் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நனைத்த பிறகு ஒரு பரோட்டா கடையின் வாசலில் நிற்க இடம் கிடைத்தது. நாங்கள் எல்லோரும் அந்த சிறிய இடத்திற்குள் நனைந்தபடி நின்று கொண்டிருக்கும் போது ஒரு நாய் ஓடி வந்து இடம் தேடியது.
பொதுவாக அந்த இடங்களில் உண்ணத் தயாராக இல்லாதவர்கள் இன்று அங்கு மழைக்கு ஒதுங்கி நிற்கிறார்கள். பொதுவாக நாயைத் துரத்த நினைப்பவர்கள் இன்று இடம் கொடுத்தார்கள். ஆனால், பொதுவாக அடிவாங்கியே பழக்கப் பட்ட அந்த நாய் அவர்கள் கொடுத்த இடத்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு மானம் கெட்ட நாயாகத் தெறியவில்லை. எங்களைத் தாண்டிச் சென்று விட்டது.
எங்களை எதிரில் இருந்த ஒரு கார் ஷோரூம் காவலாளி கண்ணாடி கதவிற்குப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவன் அங்கு வேலை செய்கிறான். இல்லை என்றால் அவனும் எங்களோடு நின்றிருப்பான் என்றே தோன்றியது.
யோசித்தேன். மழைக்கு உண்டோ இந்தச் சொர்க்க பூமியில் ஓர் இடம்? நேற்று வேலை நிமித்தமாக ஒரு கிராமத்தில் மாட்டிக் கொண்டேன். மதிய சாப்பாடே ஒரு வீட்டின் திண்ணையில் தான் முடிந்தது. இடம் ரொம்பவே குறைவு தான். ஆனால் மனம் சற்று பெரியது.
Sunday, August 3, 2014
மழைக்கு உண்டோ ஒதுங்க ஓர் இடம்?
Labels:
bike,
car,
chennai,
chennai airport,
poor get poorer,
rain,
rich get richer,
road,
scooter,
மழை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment