Pages

Tuesday, September 20, 2011

எங்கேயும் எப்போதும் விமர்சனம்

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்ற கருத்தை பெரும்பாலானோர் கொண்டிருப்பதால், மாற்றுக் கருத்தை முன்வைக்க நான் முனைவதில்லை. ஆனால், மிகச் சிலப் படங்கள் மீதான மக்களின் பொழுதுபோக்குப் பார்வை திசை திரும்பிவிடுவதால், அச்சிற்சில படங்களுக்கு மட்டும், தேவை இருந்தால் விமர்சனம் எழுதுவேன். அதில் ஒன்று தான் இப்போது வெளியாகி ஓடிக் கொடிருக்கும் எங்கேயும் எப்போதும். சுருக்கமாக கதை மற்றும் நிறை குறைகள்.

கதை:

இரு காதல் ஜோடிகள்; அனன்யா, புதுவரவு (அபாஸ் நினைவுக்கு வந்தது. ஏன் என்று புரியவில்லை!). ஜெய், அஞ்சலி. இருவரின் காதலை மாற்றி மாற்றிக் காட்டிவிட்டு, பல சிறிய கதாபாத்திரங்களின் வாழ்க்கையையும், அவர்களின் சுக துக்கங்களையும் கூறிவிட்டு, இவர்கள் எல்லோரும் காரணமே இல்லாமல், எவரோ ஒருவர் செய்த தவறுக்காக பலியாவது முறையா? சாலை விதியை மதியுங்கள் என்று கூறும்படியாக படம் முடிகிறது. இந்த கதையின் சிறப்பு: புதிதாக எதுவும் இல்லை ஆனால், புதியது. சஸ்பென்ஸ் என்று எதுவும் இல்லை. ஆனால், போர் அடிக்கிறது என்று எவரும் கூற முடியாது. அழுகையாய் முடிகிறது; ஆனால், பெயர் வாங்கிக் கொள்ள இயக்குனர் அதை செய்ய வில்லை.

நிறை:

1. அஞ்சலி-ஜெய் கதாபாத்திரங்கள்; அவர்கள் இடையிலான காதல்.

2. இயக்குனர் கவனித்துள்ள சிறு சிறு விடயங்கள். உதாரணம்: ஒரு கண்டெக்டர் கை கழுவ உதவியில்லாமல், அக்குளில் பாட்டிலை வைத்து தானே கழுவுதல்; ஜெய் அவருக்கு உதவுதல்

3. சாலை பாது காப்பு, உடல் தானம், காதலில் தேவையான மாற்றம், பெண் விடுதலை போன்ற புரட்சிகர எண்ணங்களை, ஒப்புக் கொள்ளும் இடத்தில் சரியாக அளித்துள்ள விதம்.

4. இயற்கையாக படம் பிடிக்கப் பட்ட விபத்துக் காட்சிகள்.

5. அவர் இப்போது தான் போனார்; அதனால் தான் அவர் இங்கு இல்லை என்பன போன்ற தேவை இல்லாத விளக்கங்கள் படத்தில் இல்லை. அதாவது, கதை சொல்லும் விதத்தை பார்த்தாலே, இக்கால இயக்குனர்களுக்கு இந்த தலைமுறைக்கு parallel narration புரியும் என்ற நம்பிக்கையுடன் படம் எடுப்பது தெளிவாகத் தெரிகிறது.

குறை:

1. தமிழ் சினிமாவில் பல காலமாக இருக்கும் சில சிறுபிள்ளைத் தனம் இவரிடமும் உள்ளது. உதாரணம்: அனன்யாவிடம் பேசிவிட்டு புதுவரவு வெளியேறும் நேரத்தில் அண்ணலின் கையை, அவள் தொடுவது. எவ்வளவு முறை பாக்குறது சார்?

2. விபத்துக் காட்சிகள் நீளமாக உள்ள. இரண்டாவது முறையாக பார்க்க வந்தவர்கள் எழுந்து வெளியேறுவதை பார்க்க முடிந்தது. முடிவில், அஞ்சலியின் துயரத்தை விளக்க ஒரு அமைதி, பின் பெரிய அழுகை என்ற ஃபார்முலா இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்.

3.அஞ்சலி அழும்போது, அவர் பேசும் வசனங்கள் புரியவில்லை. எவரேனும் அவரிடம் சொல்லுங்கள்!

விமர்சனம் முடிந்துவிட்டதே! இன்னும் சொல்ல என்ன இருக்கிறது என்று நினைக்கவேண்டாம். இந்த படத்தை நான் முதலில் பார்க்க நினைத்ததற்கு காரணம், முருகதாஸ் பானர் மற்றும் படத்தின் முன்னோட்டம் தான். ஆனால், சில நாட்களுக்கு முன், சிலர் பேச்சை கேட்டு படம் சரியில்லை என்று முடிவு கட்டினேன். ஆனால், காலம் என்னை அதனிடம் இட்டுச் சென்றது. இப்போது பார்த்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி என்ன சொல்லி தடுத்தார்கள்? அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டார்கள்?

இப்போதெல்லாம் ஒரு படத்தைஹாலிவுட் காப்பி’ என்று கூறிவிட்டால், அவர்கள் தான் பெரிய மூளைக் காரர்கள் என்ற நினைப்பு இருக்கிறது. இந்த படத்திலும் தமிழ் படங்கள் மற்றும் ஆங்கிலப் படங்களை பார்த்து காப்பி அடித்திருக்கிறார்கள் என்று குறை கண்டுபிடிக்கப் படுகிறது. குறைகள் கண்டுபிடிக்கப் படுவது தவறல்ல. ஆனால், அவை உண்மையில் குறைகளா?

இரு வண்டிகள் இடித்துக் கொண்டால், அதில் இரு முன்பின் காணாத பாத்திரங்கள் இணைந்தால், உடனே ரிதம், வானம் படங்களின் சாயல் என்று கூறுகின்றனர். அதே சமயம், விபத்து நடந்ததற்கான காரணம் பார்த்தால், ஆங்கிலப் படமான 'ஃபைனல் டெஸ்டிநேஷன்' மாதிரியே இருக்கிறது. ஆனால், அவை காப்பியா என்று ஆராய்ந்தால், இல்லை என்பதே விடை. விளக்கங்கள் வருமாறு.

1. இந்த படம் சில நாட்கள் முன்பு நடந்த வேலூர் சாலை விபத்தை சாயலாகக் கொண்டிருக்கிறது. அதோடு, பெரும்பாலான சாலை விபத்துக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வண்டிகள் மோதினால் தான் நடக்கும் (போஸ்ட் கம்பம்? என்று கேட்காதீர்கள்; கடுப்பாகிவிடுவேன்). அதில் பயணம் செய்யும் எல்லோரும் ஒருவருக்கொருவர் அறியாதவர்களாய் தான் இருப்பர். சாலை விபத்து என்றவுடன் வித்யாசமாக எதையாவது காட்டவேண்டும் என்று யோசித்து, நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்றை இயக்குனர் காண்பிக்க விரும்ப மாட்டார்கள். எப்போதும் நடக்கும் ஒரு சம்பவத்தை வேறு கோணத்தில் எப்படிப் பார்ப்பது என்பதிலே தான் அவர்கள் கதை புனையும் திறன் வெளிப்படும்.

அந்த வகையில், இந்த விபத்து, பல வழிகளில், ரிதம் மற்றும் வானம் படங்களிலிருந்து வேறுபடுகிறது. உதாரணம்: ரிதம், ஒரு ரயில் விபத்தில் உயிரிழந்த இருவரின் துணைகள் எப்படி ஒருவருக்கொருவர் துணை ஆகின்றனர் என்பதைப் பற்றியது. இந்த கதையில், இரு காதல் ஜோடிகளும், பார்ப்போர் மனதை அள்ளுகின்றன. இவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்று எல்லோரும் விரும்பும் படியான சுவாரஸ்யம் அவர்கள் காதலில் இருக்கிறது. அப்படிப் பட்ட ஜோடி, அற்ப காரணத்திற்காக பிரிந்தால்? என்ற கேள்விக் குறி இருக்கிறது. ஆக, முதல் படம் காண்பிக்க நினைத்தது உறவுகளில் தேவையான புரட்சி. எங்கேயும் எப்போதும் சொல்வது, உறவுகளில் பிரிவு ஏற்படக் காரண கர்த்தாவாக இருக்கும் ஒழுங்கீனத்தை சரி செய் என்ற அறிவுரை. வானம், பல சமூகப் பிரச்சனைகளை ஒரே இடத்தில் அலசி, முடிவு சொல்கிறது; எங்கேயும் எப்போதும், ஒரே ஒரு பிரச்சனையின் தீவிரத்தை, மனதை கொள்ளை கொள்ளும் காதலின் வழியாகச் சொல்கிறது.

2. இந்த கதையின் Narration style, ஆங்கில பாணி என்று சொல்லப் படும் Parallel Narration யுக்தியை பயன்படுத்துகிறது. அதாவது, ஒரே கதையில் இரு வேறு கதைகளை ஒரே நேரத்தில் சொல்வது. இந்த(ஹாலிவுட் காப்பி) பொதுவான, தவறான கருத்திற்கு காரணம், நம் படங்கள், இந்த பாணியை அதிகம் உபயோகிக்காதது தான். துவக்கம், இடைவெளி, முடிவு என்ற நேர் பாணிக்கு linear narration என்றும், இவை மூன்றும் கலந்து/தலைகீழாக வருவதற்கு Non-linear narration என்றும், ஒரே கதையில் இரு கதைகள் ஒழுங்காகவோ, தலைகீழாகவோ, கலந்தோ வந்தால், அந்த பாணிக்கு Parallel narration என்றும் ஆங்கிலத்தில் பெயர் கொடுத்துள்ளனர். இந்த மூன்று பாணிகளில், எல்லா படங்களும் அடங்கும். ஒரு படம், மற்றொரு படத்திலிருந்து காப்பி செய்யப் பட்டிருக்கிறது என்று கூற, ஒரு காட்சியோ, கதையோ, கதையின் நிகழ்ச்சிக் கூறோ (PLOT), ஒரே மாதிரியாக, இருக்க வேண்டும். இந்த கதையில் அப்படி எதுவும் இல்லை! இருந்தாலும், அது நடைமுறையில் எப்போதும் நடப்பவை தான் என்பதால், படத்திலிருந்து தான் சுடப்பட்டது என்று கூற காரணம் போதவில்லை. (இரண்டு படங்களில், ஒரு ஹீரோ ஆபத்தில் இருந்தால், ஒன்று வில்லன் ஜெயிப்பான்; அல்லது ஹீரோ பிழைப்பார். இந்த இரண்டு முடிவும் கொண்ட எல்லா படங்களும் காப்பி என்று கூரமுடியாதல்லவா? அது போலத் தான் இதுவும்)

அடுத்த தவறான பார்வை: இந்த இரு கதைகள் குழப்பமாக இருக்கிறது. காதல் படம் என்று பார்த்தால், முழுவதும் காதலும் இல்லை; மெசேஜ் படம் என்று பார்த்தால், முழுவதுமாக மெசேஜும் இல்லை என்று சொல்லக் கேட்டேன். இதுவும் ஒரு குறையா? அல்ல!

1. இயக்குனரும் ஒரு புது வரவு என்பதால், இந்த படம் வியாபார ரீதியாக வெற்றி பெற, அதிகம் பயன்படுத்தாத இரு காதல் கதைகளை சொல்லி, அதன் மூலமாக சில கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, இறக்கும் நிலைக்குத் தள்ளப் படும் கதாபாத்திரங்கள், ரொம்பவும் விரும்பத் தக்க ஒன்றாக இருந்தால், விபரீதத்தின் வீச்சு புரியும் என்று யோசித்திருக்கிறார். இதனால் தான் காதலும், மெசேஜ்-உம் இணைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஜெய் போன்ற ஒரு பால் மணம் மாறாப் பிள்ளையும், சிட்டி வாசனையே இல்லாத அனன்யா போன்ற அப்பாவியும் இறந்தால்(முடிவு இதுவல்ல)? அவர்கள் இறப்பிற்கு ஒரு மண் லாரியின் மெத்தனப் போக்கு தான் காரணம் என்றால்? அப்போதாவது க்கப் பட்டு திருந்துமா சமுதாயம்? காதல் தான் எல்லோருக்கும் பிடிக்கும். அதுவே இங்கு அடிபடுகிறதென்றால்?

2. இந்த படத்தில், Parallel Narration இற்கான மரபு சரியாக கடைபிடிக்கப் பட்டிருக்கிறது. படம் பார்க்கவில்லை என்றால், இதை கவனியுங்கள். இரு காதல் கதை; இரண்டும் முடியும் இடம், ஒரு விபத்து. முதலில், விபத்தை பற்றிய அறிமுகம்; பின் 1 -ஆவது காதல் கதைக்கான அறிமுகம்; பின் 2 -ஆவது கதைக்கான அறிமுகம். இது முடிந்ததும், Alternate order (1-2-1-2) பாணியில் இரண்டு கதைகளையும் முடிவுக்கு அருகில் கொண்டு வந்துவிட்டு, கடைசியாக விபத்தின் மீதி காட்சிகளை காண்பிப்பது. இரு கதைகளை மட்டும் உபையோகிப்பதாய் இருந்தால், கதை மாறும் இடத்தில் ஒரு link இருப்பது அழகாக இருக்கும். இதற்கு விபத்துக் காட்சிகளை உபயோகித்திருக்கின்றனர். இது இப்படி கவனிக்கப் பட்டால், குழப்பமே இல்லை. இந்த மாதிரியான கதை பாணி, தமிழ் சினிமாவுக்குப் புதியது என்பதால் தான் சிலர் குழம்புகின்றனர். தவறில்லை! ஆனால்,ஒன்று புரியாவிட்டால் படம் சரியில்லை என்று கூறுவதை விடுத்து, புரிந்து கொள்ள முற்பட்டால், முன்பு கிடைத்ததை விடவும் அழகான பொழுதுபோக்கு உங்களுக்கு கிடைக்கும். நல்ல படங்கள் மக்களை அடையும். இந்த மாதிரியான படங்களில், இயக்குனர் விளக்க நினைப்பது சமுதாயப் பிரச்சனையைத் தான்.தன் கதை சொல்லும் புத்தி சாலித் தனத்தை அல்ல! அதனால், எதை எங்கு எதிர்பார்க்க வேண்டுமோ, அதை அங்கு எதிர்பார்க்கும் பக்குவம் பெறவேண்டும். எனினும், புத்திசாலித் தனமே இல்லை என்றும் சொல்ல முடியாது.

1. படம் முடியும் நேரத்தில், ஆம்புலன்ஸ் கதவு மூடும் போது, சாலை விதிகளை மதியுங்கள் என்ற வாசகத்தை காண்பித்தது அழகோ அழகு.

2. உடல் தானம் பற்றி சமுதாயத்தின் பார்வையைப் பற்றி தனக்கு இருக்கும் கோபத்தை, அஞ்சலி போன்ற அழகான பெண்ணின் வாயிலாக, இன்றைய வாலிபர்களின் பிரதிநிதி போல் இருக்கும் ஜெய்-இன் முகத்தில் அறைந்தார் போல் இயக்குனர் சொல்வது, கோபத்தை வெளிப்படுத்தும் பக்குவம் எனக்கிருக்கிறது என்று உலகிற்கு காண்பித்ததைப் போல் இருந்தது.

3.எல்லோரும், சாலை விபத்தேன்றாலே முதலில் ஓட்டுநரைத் தான் குறை சொல்வார்கள். ஆனால், இந்த படத்தில், ஓட்டுனர் தவறு செய்யும் போது விபத்து நேராது; அவர் கவனக் குறைவாக இருக்கும் போது கூட நேரலாம் என்று கூறுவது, என்னைப் பொறுத்தவரை ஓவர் தி டாப்!

4.அசம்பாவிதத்தைப் பற்றி எல்லோருக்கும் புரியவைக்க வேண்டும் என்று ஆர்வத்தில் கோளாறாக எதையும் செய்யாமல், பார்வையாளருக்கு நிம்மைதி அளிக்கவும் எதையோ முயன்றது (முடிவை திரையில் பாருங்கள்) பாராட்டிற்குரியது.

இது போன்று மேலும் பல. ஆக மொத்தம், படம், பார்க்க வேண்டிய படம். என் ரேடிங், ஐந்துக்கு...
0 comments: