Pages

Sunday, September 25, 2011

திண்ணை.காம்: இறப்பு முதல், இறப்பு வரை- பாகம் 2

பாகம் ஒன்றின் தொடர்ச்சி.

"ஐயோ தேவி! கதவை தொரயேன். என்னங்க! இங்க பாருங்க. தேவி தூக்கு போட்டுக்கப் போறா", என்று கதறினாள் பத்மா. உடனே, தன்னை அறியாமல் கண்மூடிய மணியும், லட்சுமியும், ஓடிப் போய், கதவை உடைத்து,

"என்ன காரியம் செய்ற நீ! முட்டாளா?" என்று திட்டினர்.

"அவள எங்கயும் நகராம பாத்துக்கத் தானே சொன்னேன்? என்ன தூக்கம் வேண்டிய கெடக்கு", என்று தன் மனைவியை உதைத்தார் மணி.

"தப்பு தான். தப்பு தான்! இந்த சிறுக்கி இப்படி செய்வான்னு நெனைக்கலையே", என்று தலையில் அடித்துக் கொண்டாள் பத்மா.

"இல்ல..என்னால எம் மகன் இல்லாம வாழ முடியாது. என்ன சாக விடுங்க", என்று மறுபடியும் நாற்காலியின் மேல் ஏற முற்பட்ட தேவியை இறக்கி ஓரிடத்தில் தள்ளி,

"உனக்கு என்ன வேணும்? கொழந்த தானே? எம்மகன் இருக்கான். இளவரசன்! உனக்கு தாரை வாத்துக் குடுக்கறேன். சும்மா இல்ல. உன் தலையில அடிச்சு சொல்றேன். இந்த எடுத்துக்கோ", என்று அவசரமாக தூங்கிக் கொண்டிருந்த பிள்ளையை எடுத்து அவள் கையில் வைத்தார் மணி. அந்த நேரம் பார்த்து,

"டேய் குசுத் தலையா! உன் குண்டில சூடு வெச்சேன் பாத்தியா?" என்று தூக்கத்தில் உளறினான் இளவரசன். அதைக் கேட்டதும் அழுது கொண்டிருந்த தேவி, கடினமாக சிரிப்பை வரவழைத்து, அவனை அணைத்து ஒரு முத்தமிட்டாள்.

அதைப் பார்த்ததும் லட்சுமி நாராயணனுக்கு ஆச்சர்யம். இனி இவளை வைத்துக் கொண்டு எப்படி காலம் தள்ளப் போகிறேனோ என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு, மணி சொன்ன சில வார்த்தைகள் எத்தனை மாற்றத்தை, எத்தனை சீக்கிரம் ஏற்படுத்திவிட்டது என்ற வியப்பு. ஆனால் உடனே, மணி செய்த சத்தியத்தின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், பலத்த எதிர்பார்ப்புடன்,

"நீங்க உண்மையா தான் சொன்னீங்களா? இளவரசனை எங்க கிட்ட குடுப்பீங்களா?" என்று கேட்டார். தன் மனைவியிடம் கேட்கவில்லையே, அவசரப் பட்டு விட்டேனோ என்று யோசித்துக் கொண்டிருந்த மணிக்கு, சரியான வாய்ப்பாய் அந்த கேள்வி அமைந்தது.

"என்ன டீ? நீ என்ன சொல்ற?" என்று வினவினார். பத்மா,

"இவ செத்து போறத விட இளவரசனை குடுக்குறதே நல்லது? என் அண்ணன் கிட்ட தானே வளரப் போறான்? எனக்கு எந்த கவலையும் இல்ல", என்றாள்.

"அப்புறம் என்ன மச்சான்? எடுத்துக்குங்க", என்றார் மணி; வீரமாக!

"சாமி எங்க குல தெய்வமே நீங்க தான்", என்று காலில் விழுந்தார் லட்சுமி. முட்டியை நெருங்கும் போதே அவரை நிறுத்தித் தூக்கி,

"நமக்குள்ள என்னய்யா! புள்ளைய நல்லா பாத்துக்க. அது போதும்", என்றார். சுற்றி இருந்த அனைவரும் மணியின் பெருந்தன்மையை மெச்சிப் பேசிக் கொண்டிருக்க,

"பத்து வயசான பையன். இவ, இவன தொட்டு தூக்குறது இது தான் ரெண்டாவது மொற. எங்க கூட இருப்பானா?" என்று அடுத்த சந்தேகத்தை முன்வைத்தார் லட்சுமி.

"அதுவும் சரி தான். ஒண்ணு செய்றோம். நாங்க ரெண்டு பேரும் இவன் முழிக்கிதுக்குள்ள கிளம்பிடறோம். ரெண்டு நாள் அடம் பிடிப்பான். அப்புறம் நாங்க வர மாட்டோம்-னு தெரிஞ்சதும், அவனா பொழங்கிடுவான். அப்புறம் வந்து விஷயத்தை சொல்லி சரி பண்ணிட்டு போயிடுறேன். என்ன சொல்றீங்க?"

"உங்களுக்கு பெரிய மனசு!", லட்சுமி நாராயணன் கட்டி அணைத்தார்.

சில வருடங்கள் கழித்து...இளவரசனின் 22 -ஆம் வயதில்.

"இளவரசு...உங்க அப்பா வந்துருக்காரு. வந்து பாரு", தேவி, முரத்தில் அரிசி புடைந்துக் கொண்டே பிள்ளையை அழைத்தாள்.

"இதோ வரேன்", வெளியே வந்ததும், இளவரசன் எதிர்பார்த்த அப்பா அங்கு இல்லை. பழைய அப்பா வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் எந்த ஒரு செய்கையும் செய்யாமல்,

"வாங்க. நல்லா இருக்கீங்களா?", என்று கேட்டான்.

"இருக்கேன். நீ நல்லா இருக்கியா பா?", கையில் இருந்த பையை அழுத்தித் தன் சங்கடத்தை வெளிப்படுத்திவிட்டு, வார்த்தைகளில் யதார்த்தமாய் கேட்பதாய் நடிக்க முயன்றார்.

"நல்லா தான் இருப்பேன். எங்க அப்பா, அம்மாவுக்கு என்ன கொறச்ச?" என்றான் வேறிடம் பார்த்து.

"நீ எம்மேல கோவமா இருப்பன்னு எனக்கு தெரியும். ஆனா, நான் வராததுக்கு காரணம் இருக்கு. உன்ன விட்டுட்டு போ பிறகு நீ ரொம்ப அழுதன்னு கேள்விப் பட்டு, திரும்ப வந்தா எங்க கூட வரணும்-னு அடம்பிடிப்பியோன்னு தான் சமாதானம் செய்ய வரலைய்யா", தன் நிலை விளக்கம் அளித்தார்.

"நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க. எனக்கு உங்க மேல இந்த காரணத்துக்காக கோவம் இல்ல", அவன் சொன்னது மணிக்கு மட்டும் இல்லாமல், தேவிக்கும் கூட விநோதமாய் இருந்தது. அரிசி புதைப்பதை நிறுத்திவிட்டு,

"வேற என்ன காரணம் டா?" என்றாள் தேவி.

"இப்போ இவரு எதுக்காக இங்க வந்துருக்காரு?"

"உன்ன கொஞ்ச நாளைக்கு அவங்க கூட வெச்சுக்க. அதுல என்ன தப்பிருக்கு?", தேவிக்கு புத்திர சோகம் தீர்ந்ததாய்த் தோன்றியது.

"போன மாசம் வரை ஏன் வரல?"

"உன் மேல பாசம் இல்லாம இல்ல டா. எங்களுக்கு-ன்னு இருக்குறது நீ ஒருத்தன் தான். அதனால தொல்ல செய்யக் கூடாது-ன்னு வராம இருந்திருப்பாரு"

"இப்போ வந்திருக்காரே. அப்போ தொல்லை; இப்போ மட்டும் என்னவாம்?" இருவரும் பதில் சொல்ல முடியாமல் நின்றனர்.

"சரி, நீ சொல்லு மா. இப்போ இவரு வந்து, கொஞ்ச நாளைக்கு இளவரசனை வெச்சுக்கவா-ன்னு கேட்ட மாதிரி, அசோக் செத்துப் போன ரெண்டாவது மாசம் வந்து கேட்டிருந்தா,இதே மாறி அனுப்ப தயாரா இருப்பியா?"

"கண்டிப்பா டா!"

"பொய் சொல்லாத. என்ன டா, தார வாத்துக் குடுத்துட்டு, திடீர்னு வந்து கேக்குறாரே-னு உனக்கு தோணாம இருக்க வாய்ப்பே இல்ல"

"ஆமா டா.ஆனா, அதுக்கும் இவரு மேல இருக்குற கோவத்துக்கும் என்ன சம்பந்தம்?"

"போன வருஷம் வரைக்கும் எனக்கு எந்த கோவமும் இல்லாம தான் இருந்துது. ஆனா, அந்த சம்பவம் நடந்த பிறகு தான், என்னோட ரெண்டு அப்பா, அம்மாவும், தங்களோட சோகத்தை தீத்துக்க என்ன பொம்மையா உபயோகிச்சிட்டீங்கன்னு புரிய வந்துது"

"டேய் என்ன டா பேசுற நீ? உனக்கு நாங்க என்ன கொற வெச்சோம்?"

"நான் பால் காரன் ஆகலையே! கேவலம் எஞ்சினியர் தான் ஆயிருக்கேன்"

"என்னடா அப்படியே உல்டாவா சொல்ற?"

"ஆமா! எனக்கு புடிச்ச வேலை பால் கரக்குறது தான். அத விட எவ்வளவு பெரிய வேலையை என் முன்னாடி வெச்சாலும், எனக்கு அது கேவலம் தான்."

"எல்லாரும் அவங்களுக்கு புடிச்சா மாதிரி வாழ்ந்திட முடியாது"

"ஏன் நீங்க வாழலையா? உங்களுக்கு புடிச்ச நேரத்துல என்னை பந்தாடலையா?"

"இப்போ என்ன சொல்ல வற? எங்க யாரையும் உனக்கு புடிக்கலேன்னா, நாங்க உங்க அப்பா அம்மா இல்லைன்னு ஆயிடுமா?"

"ஆகாது. ஆனா, நீங்க உங்க சுயநலத்துக்காக என்னை கைப்பொருளா உபயோகிக்கிறத இனி நான் அனுமதிக்க மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் தான் என்னோட அப்பா அம்மா. நான் திரும்பவும் இவர் கூட போக முடியாது. தாரை வாத்தது வாத்ததாவே இருக்கட்டும்"

"நீ...", என்று வாதத்தை தொடர நினைத்த தேவியை நிறுத்தி,

"விடு. அவன் சொல்றது சரி தான். என் பெருமைக்காகவும், உங்க துக்கத்துக்காகவும் இவனை பலியாடு ஆக்கினதுக்கு தண்டணையா இத நான் நெனச்சுக்கறேன். நான் வரேன்", என்று கூறிவிட்டு திரும்பினார் மணி. அவரை வார்த்தைகளால் காயப் படுத்தினாலும், உள்ளே இருந்த பாசம், அவனை சில துளிக் கண்ணீர் சிந்த வைத்தது.

மனம் நொந்துத் திரும்பிச் செல்லும் அப்பாவை ஓடிச் சென்று கட்டிப் பிடிக்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால், பாசத்தை சுயநல விருப்பு வெறுப்புகளுக்காக பங்கு போட்டு, தன் புதிய அப்பா அம்மாவிற்கு ஏமாற்றத்தைக் கொடுக்கக் கூடாதென்று, தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டான்.

கடைசியாக தன் மகனை கொண்டு வந்து விட்ட அதே பேருந்தில், தான் மட்டும் தனியாக பயணிப்பது தொண்டையில் முள்ளாய் அடைத்தது மணிக்கு. அவன் சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவர் மனதில் முட்டி மோதின. அது வரை என்றும் உதிக்காத ஒரு கேள்வி, அன்று அவர் மனதில் ரணத்தை உருவாக்கியது.

"தத்து கொடுக்கணும்-னு முடிவெடுத்ததும், நீ ஏன் மகாராஜனை தத்து குடுக்கல? உன் புள்ளைங்க ரெண்டு பேருல யாரு ரொம்ப புடிக்குமோ அவனை கூட வெச்சிட்டு, அடுத்தவனை நெருப்புல எரிஞ்ச பாவி தானே நீ?"

நடந்தவற்றை எப்படியாவது திருத்தி எழுதிவிட உள்ளம் துடித்தது. ஆனால், முடியுமா?

பிறந்து ஓராண்டு காலம் நிறைவான குழந்தை, பிறந்த நாள் அன்றே சாகும் விசித்திரம், தற்செயலாய் நடந்த ஒன்றா?

இறந்த சொந்தத்தை நினைத்து வாழ்நாள் முழுதும் வருந்திக் காலம் கழிக்கும் பலர் இருக்க, இறந்த பிள்ளைக்காக தன் உயிரையே தியாகம் செய்யத் துணிந்த தேவி, பாசம் என்பது மூளையின் இயக்கத்தால் ஏற்படும் வெளிப்பாடு தான் என்ற உண்மையை ஒப்புக் கொள்வாளா?

பாசத்தை பங்கு போட்ட மணி, பெருமைக்காக செய்த தவறு, தியாகமாக அன்று பெரும்பான்மையால் போற்றப் பட்டது என்றால், மக்கள் பொதுவாக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரி என்ற முடிவு சரியா?

மணி செய்த தவறை அவர் மகனின் வாயிலாகவே புரிய வைக்க, மகாராஜனை விபத்தில் கொன்று, தனிமையை ருசிக்க வைத்த இயற்கை, தன்னைக் கண்காணித்துக் கொண்டிருப்பதாய் மணிக்கொரு பயம் எழுந்தால், அதுவும் மூட நம்பிக்கையா?

ஆம்!

மணி கொண்டிருந்த நிம்மதியின் ஆயுட்காலம்,

அசோக் இறப்பு முதல், மகாராஜன் இறப்பு வரை!

அவர் அனுபவிக்கப் போகும் குற்ற உணர்ச்சியின் ஆயுட்காலம்,

மகாராஜன் இறப்பு முதல், மணி இறப்பு வரை!

http://puthu.thinnai.com/?p=4444

2 comments:

nivetha said...

short and good but i excepted few more parts........

kannan ramaswamy said...

'Ten pages itself is big..'

This is the view of many..

Thanks for ur comment