Pages

Tuesday, October 29, 2013

குட்டைக்குள் ஆட்டு மந்தை

இது ஏதோ வெளியில் திரியும் ஆட்டு மந்தையை விமர்சிக்கும் பதிவு என்று எண்ணிவிட வேண்டாம். இந்தப் பதிவு, என்னிலிருந்து தொடங்குகிறது. ஆம்..நானும் இந்த மந்தையில் கண்ணைக் கட்டி விட்டது போல் நுழைந்த ஓர் ஆடு தான்.
எந்த மந்தை? B.E என்ற மாயா பஜார் படிப்பைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் மந்தை.
நான் பொறியியல் படிப்பை முடித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. படித்து முடித்து வெளியே வந்த பிறகு தான் இந்த மர மண்டைக்கு விளங்கியது. இந்தக் கூட்டம் ஒரு கண்கட்டி வித்தையை நம்பி ஏமார்ந்து கிடக்கிறதென்று.
பலர், பலவாறாக இந்த படிப்பை பற்றி உயர்வாகவும் தாழ்வாகவும் பேசிக் கொண்டே தான் இருக்கின்றனர்.
உயர்வாகப் பேசுபவர்களின் பெரும்பாலானோர் முன்வைக்கும் வாதம், இந்தப் படிப்பை படித்தால் தான் உடனடி வேலை வாய்ப்பு என்பதாகும்.
தாழ்வாகப் பேசுவோரின் வாதம், படிக்கும் படிப்புக்கும், வேலைக்கும் சம்மந்தமே இருப்பதில்லை; மேலும், வேலை வாய்ப்பு குறித்த சந்தேகங்கள் பல இடங்களில் எழுப்பப் பட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதாகும்.
நான், இந்த ஆட்டு மந்தையின் தவறை வேறொரு கோணத்தில் பார்க்கின்றேன். இந்தக் கோணம் தான் எங்கள் தவறை பட்டவர்த்தனமாக பல் இளிக்க வைக்கிறது.
நம் நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் B.E படித்துவிட்டு வெளியே வரும் நபர்களின் எண்ணிக்கை, அமரிக்கா மற்றும் சீனாவின் எண்ணிக்கையின் கூட்டுத் தொகையை விட அதிகம்! இவர்களில் சொற்பமானவர்களே ஐ.டி மற்றும் உற்பத்தித் துறையில் ஓர் வேலையில் அமருகிறார்கள். மற்றவர்கள், தங்களுடைய படிப்பை ஒப்பிடும்போது, மிகக் குறைவான சம்பளத்தோடு கிடைக்கப் பெரும் ஒரு வேலையை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். (அதிக வேலை நேரம், தொழிலாளர்களின் நலன் கருத சங்கங்கள் இல்லாமை, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரம் போன்றவற்றை பார்க்கும் போது ஐ.டியில் கிடைக்கும் சம்பளமும் குறைவே).
இந்த வாதத்தை முன்வைக்கும் போது, பிள்ளைகளின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தீர்க்கதரிசிகளான பெற்றோர்கள், வேறு மாதிரியாக பேசுகின்றனர்.
அதாவது, முயல்பவன் பிழைத்துக் கொள்கிறான். முயலாதவன் கிடைத்ததை வெல்லக் கட்டியாய் நினைத்து தின்று விடுகிறான் என்பதாக!
இந்த 'முயற்சி' என்ற ஒரு வார்த்தையை தான் நான் மட மந்தையின் வார்த்தையாகப் பார்க்கிறேன்.
'முயற்சி' வெற்றி அடைய எத்தனை காரணிகள் தேவைப் படுகின்றன என்று யோசிக்கத் தோன்றுகிறது.
௧. பெற்றோர் எதிர்பார்ப்பது, 'வெறி'..'வெறி' ஒன்று மட்டுமே. படிப்பை ஒரு அனுபவமாக யாருமே அணுகக் கூடாது. அதை வெறியோடு படித்துக் கிழிக்க வேண்டும் என்பது இவர்கள் வாதம். சரி, போகட்டும்! ஒருவன் வெறித்தனமாக முயல்கிறான்..அது மட்டும் போதுமா??
௨. ஒவ்வொரு மூளைக்கும் ஓர் கொள்ளளவு இருக்கிறது. அதாவது, ஞாபக சக்தி. சரி..கஷ்டப்பட்டு அதையும் அதிகரித்துவிட்டோம். அடுத்து?
௩. முக்கியமான ஒன்று, யாருக்கு எது வரும் என்பது..
மரபு ரீதியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படிப்பினையில் ஆர்வமிருக்கும். அதை இனம் கண்டு கொண்டு, அந்த குறிப்பிட்ட படிப்பை ஊட்டி வளர்த்தால், வெறியாட்டமும், வல்லாரைக் கீரையும் தேவையே இல்லை என்று பிள்ளைகளின் வாழ்க்கையை முடிவெடுப்பவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டேன் என்கிறார்கள்.
இந்த வாதத்தை முன்வைக்கும் ஒவ்வொருவரையும்,
'முடியாத விஷயத்திற்கு காரணம் கற்பிக்காதே. என் பிள்ளையை கெடுக்காதே" என்று திட்டித் தீர்க்கின்றனர் பெற்றோர்.
இவர்கள், நம் பாடத் திட்டம் எந்த நோக்கத்தோடு வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்று உற்று கவனித்தால், இது கற்பிதம் அல்ல; அறிவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இது தான் உண்மை என்று புரியும்.
இந்த ஆட்டு மந்தை, எல்லா ஆடுகளையும் ஒரே குட்டையில் குளிக்க வைக்கத் தயார் படுத்துகிறது. அந்தக் குட்டையின் கொள்ளளவைக் காட்டிலும் கூடுதலான கால்கள் உள்ளே நுழையும் போது, சறுக்கி விழத் தான் செய்யும் என்ற உண்மையை புரிந்து கொள்ள மறுக்கிறது. அந்த சறுக்கல், இயலாமையின் காரணமாக அல்ல!
சுவர் மீது கால் வைத்து அழகாக மேயக் கற்றுக் கொண்ட ஒரு ஆட்டை பிடித்து, ஓட்டப் பந்தையத்தில் ஓட விட்டால் என்ன  விளைவு ஏற்படுமோ, அது போலவே இதுவும்.
மேலும், நல்ல சம்பளம் தரும் ஒரு வேலையை பிடிக்க விழுந்து விழுந்து படிப்பது மட்டுமே பொருளாதார ரீதியில் உயர்வைத் தரும் என்ற எண்ணம், அடிமட்ட முட்டாள் தனம் அன்றி வேறில்லை. நம் நாடு ஒரு காலத்தில் பல துறைகளில் வல்லுனர்களை பெற்றிருந்த போது, இப்போது இருந்ததை விடவும் அதிக பலத்தோடு திகழ்ந்த உண்மையை இவர்கள் உணர மறுக்கின்றனர்.
பி.ஈ படிப்பிற்கு கிராக்கி ஏற்பட்டது போல, பல துறைகளுக்கான மவுசு அதிகரிக்கும் போது, அத்துறைகளுக்கு இது வரை இல்லாத இடம் புதிதாக உருவாக வழி வகை ஏற்படும். புதிய துறைகளில் நம் நாடு சிறந்து விளங்கும் போது கிடைக்கப் பெரும், 'அறிவு வளம்' ஒட்டுமொத்த மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
இன்று நம்மிடம் ஓர் கணித மேதையில்லை!
பேர் க்ரில்ஸ்-ஐ போன்ற ஓர் அதி நவீன காட்டுவாசி இல்லை!
வாஸ்கோட காமாவை போன்ற ஊர் சுற்றி இல்லை!
உலகில் உள்ள பொருளாதார வல்லரசு நாடுகள் எல்லாம், தங்களிடம் உள்ள தொழில்நுட்பத்தை விற்றே பலவற்றை சாதிக்கின்றன. நாமோ, நம்மிடம் உள்ள அறிவு வளத்தை, வெளிநாட்டு கம்பெனிகளுக்கு காசுக்காக விற்றுக் கொண்டிருக்கிறோம். நம் பார்வை, பொறியியல் முடித்துவிட்டு ஓர் ஐ.டி வேலை என்ற குறுகிய வட்டத்தினுள் சுற்றிக் கொண்டிருக்கிறது. இது மாற வேண்டும். மாற்ற வேண்டும்..

Saturday, October 19, 2013

பின்னாலேயே தொடருமாம் பூதம்!

எனது அனுபவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்குக் காரணம், நான் சந்திக்கும் புதிய மனிதர்கள். முதலில் அவர்களுக்கு எனது வணக்கங்கள். நல்ல அனுபவமானாலும், கெட்டதானாலும் அது கிடைக்க வழி கிடைப்பது பெரும் பாடு. அதனால், கருத்தொற்றுமை இல்லாதவர்களுக்கும் வணக்கங்கள்.
இப்போதைய அனுபவம், ஒரு பூதத்தை பற்றியது. வேறொன்றுமில்லை. எனது ஜாதி தான். நகரத்தை ஒட்டிய ஓர் ஊரில் இருப்பதாலோ என்னவோ, மேல்தட்டு வர்க்கத்தினரைப் போல, "இப்போதெல்லாம் ஜாதிப் பிரிவினை இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் ஜாதிக் கலவரங்கள் நடக்கின்றன" என்ற கருத்தை நானும் கொண்டிருந்தேன்.
அப்பாவி மக்களின் வாழ்க்கை பற்றிய புரிதலை கொஞ்சமாக உள்வாங்கிவிட்ட இவ்வேளையில், வலிந்து போய் நானாக பிராண்டட் செருப்புகளின் ரேகைகளுக்குக் கீழே மண்ணோடு மண்ணாய் கலந்து  வாழ்ந்து கொண்டிருக்கும் அடித் தட்டு மக்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரு விவரத்தை முழுமையாய் உணர்ந்திருக்கிறேன்.
ஜாதி வெறியும், கலவரமும், பிரிவினையின் பிரதிநிதிகள் அல்ல. அவை மனிதனின் உள்ளிருக்கும் பிரிவினை எண்ணங்களின் வெளிப்பாடு மட்டுமே. தடுக்கப்பட வேண்டியது, எண்ணம் தானே தவிர, வெறியோ, கலவரமோ அல்ல. 
அவ்வாறே, அழியாமல், அழிக்க முடியாமல் இருக்கப்போகும் பிரிவினை எண்ணம், என்னைப் பின்தொடர்ந்து வரும் பூதமாய் தொடர்கிறது.
எங்கு போனாலும் எனது குணம் என்னவென்று கவனிக்க மனித எண்ணம் மறுக்கிறது. 
நீங்க 'யாரு'? 
உங்க கேஸ்ட் என்ன?
ராமஸ்வாமி-ன்னா, ஒண்ணு, ஐயரா இருக்கணும்; இல்ல, நாயுடுவா இருக்கணும்.
என்பன போன்ற சூசகக் கேள்விகளும், நேரடியான கேள்விகளும் என்னைப் பின் தொடர்கின்றன.
அதனால் என்ன? என்று கேட்கிறீர்களா? நிறைய பிரச்சனைகள். சொல்கிறேன்.
முதலில், என் முகத்தைப் பார்த்ததும், என்னால் எந்த ஒரு கடினமான வேலையும் செய்ய முடியாது என்று அவர்களாகவே முடிவு செய்து கொள்கின்றனர். ஆனால், தோட்டத்தில் குழி வெட்டுவது முதற்கொண்ட, கடினமான வேலைகலை செய்து எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த எண்ணத்தால், பல நேரங்களில் வேடிக்கை பார்த்தபடி நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறேன். எனக்குப் பிடிக்காத ஒன்று, தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது.
அடுத்து, ஆயிரமாண்டு ஆதிக்க புத்தி இவனுக்கும் இருக்கும் என்ற எண்ணம். ஒரு முறை, தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த ஒரு நபர், வழிந்து வரும் வியர்வை கண்ணுக்குள் விழுவதால் ஏற்படும் எரிச்சலைப் போக்க, கையால் துடைக்க முற்பட்டார். ஆனால், அவர் கை முழுவதும் கிரீஸ் கரையாக இருந்தது.  இதைப் பார்த்ததும், என் கைக்குட்டையை எடுத்து துடைத்து விடத் தோன்றியது எனக்கு. அவரைப் பார்த்து புன்னகைத்து நெருங்கினேன். உடனடியாக அவர் கேட்ட கேள்வி,
"என்ன சிரிக்கிரீங்க? எங்கள பார்த்தா நக்கலா இருக்கா?" என்பது தான்.
எனக்கு கோபம் வரவில்லை. மாறாக, அன்று மாலை கண்ணாடியில் என் முக வடிவத்தைக் கண்டதும் வருத்தம் தான் வந்தது. என் முகத்தில் அவனது நண்பன் முகம் தெரியவில்லை. காரணம், அவனுக்கு என் முக ஜாடையில் நண்பர்களே இல்லை! இதற்கு ஜாதி தானே காரணம்? நட்பில் கூட ஜாதி பார்த்துத் தான் கூடுகிறார்கள்; இன்றும்!
அடுத்து, இன்னொருவர், "நீங்க பிராமின்-ன்னு அப்பவே நெனச்சேன். ஏன்னா, மத்ததுங்க எல்லாம், திருட்டுக் கோட்டுங்க மாதிரியே இருக்கும்" என்றார். நான், "பொறப்புல என்ன இருக்கு? அவனவன் வளந்த விதம் தான்" என்றேன். உடனே அதற்கு அவர், "அய்யா, உங்களை எதுவும் சொல்லலை" என்றார். அதாவது, அடுத்த ஜாதிக் காரனுக்காக ஒரு பிராமணன் வக்காலத்து வாங்கிப் பேசியது அவர் காதுகளில் விழவே இல்லை! எப்போதும் போல, பிராமணன் தன்னையே உயர்வை நினைப்பான் என்ற எண்ணத்தில், உங்களை குறை சொல்லவில்லை என்கிறார். 
படிப்பவர்களுக்கு, நான் யாரைக் குறை சொல்கிறேன் என்று குழப்பமாக இருக்கலாம். தவறுகளை துடைக்க முற்படும் வரை இந்த இடர்பாடுகளை நான் சந்திக்கத் தான் வேண்டும் என்றே கூறுகிறேன். என் பின்னால் வரும் பூதத்தை கீழே இறக்கி வைத்து விட்டால் மட்டும் போதாது. அதை உலகறியச் செய்யவும் வேண்டும் என்றே கூறுகிறேன். 

Saturday, August 10, 2013

முன்னேற்றம் கேட்கும் விலை

ரயில்வே, S & T பயிற்சிப் பள்ளியின் FOUNDERS DAY விழாவில், நான் வாசித்து பரிசு பெற்ற கவிதை..

வணக்கம். நான் இங்கு வாசிக்கப் போகும் கவிதையின் தலைப்பு 'முன்னேற்றம் கேட்கும் விலை' என்பதாகும். பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பிந்தைய இந்தியாவில், இது வரை 1, 30, 000 ற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஓர் கருத்துக் கணிப்பு சொல்கிறது. என் கவிதையின் சிறப்பென்னவென்றால், வசன நடைப் பாடலின் வழியே ஓர் விவசாயியின் கதையை சொல்லப் போகிறேன். கவனம் செலுத்தி செவி சாய்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

                                                                                                             
படிப்பறிவில்லா பாண்டிப்புறம் என்னும் ஊரில்,
பட்டதாரியாகும் ஆசை ஒருத்தனுக்கு உதித்தது.
அதற்கொரு காரணமும் இருந்தது.

வயதான விவசாயியாம் அவன் தந்தை,
அனுதினமும், வெயிர்சூட்டால் வதைக்கப்பட்டு,
வியர்வை சிந்தி உழைப்பார்.

ஆனால், அடிப்படையில் வாய்க்க வேண்டிய
வசதிகளில் ஒன்று கூட,
அவர் வாழ்வில் எட்டிப் பார்க்க மாட்டேன் என்றது.

இந்நிலை தன்னோடு முற்றுப்பெற வேண்டுமே
என்ற வேட்கை தான், பிள்ளையின் மனதில்
அறிவுச் சூடேற்றி, தனல் சேர்க்க வழி செய்தது.

பத்தாம் வகுப்பில் முதலாக நின்றான்.
அடுத்த இரு ஆண்டுகளில் மாநிலத்தில்
சாதனை படைத்தான்.

மென்பொருள் நிறுவனம் ஒன்று
தட்டில் பூ வைத்து,
வலிந்து வேலை கொடுத்தது.

பூரிப்பின் உச்சம் தொட்டு,
உச்சி நுகர்ந்தார் விவசாயத் தந்தை.

ஒயிட் காலர் ஊதியத்தோடு,
ஊர் பேர் சொல்லும் பிள்ளையாக,
சென்னைக்குள் நுழையலானான்.

சூழலால் ஈர்க்கப்பட்டு,
நகரத்தோடு ஒன்றிப் போனான்.

மூன்றே ஆண்டுகளில் திருமணம் நடந்தது.
வெளிநாடு போகும் வாய்ப்பும் அமைந்தது.

இது தானடா முன்னேற்றம் என்று
மார் தட்டும் நேரத்திலே,
தந்தையிடமிருந்து மடல் ஒன்று கிடைத்தது.

பொருளாதார மண்டலம் அமைக்க
நில ஆர்ஜிதம் செய்யும் அரசு,
முதலாளியான என்னை,
கையேந்தி நிற்க வைக்கிதே!

இந்த அவல நிலையை என்னென்று கேட்க
என்னை வந்து பார்ப்பாயா?
வயல் வெளிகளை காப்பாயா?

தந்தையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
அழுகையோலமாக பிள்ளையின்
காதுகளை குடையவே,
உடனடியாகக் கிளம்பித் தாயகம் திரும்பினான்.

அதிகாரிகளின் கால் பிடித்தான்.
விவசாயத் தொழிலையேனும் விட்டுவையுங்கள்
என்று கெஞ்சிப் பார்த்தான்.
 நிலைமை பிடி கொடுத்துப் பேச மறுத்தது.

முடிவில், மனதை தேற்றிக் கொள்ளுங்கள்;
என்னோடு வந்து செருங்களென்று
தந்தையையும் உடனழைத்துச் சென்றான்.

இரண்டு மாதங்களில் கழித்து,
வெளி நாடு புளித்துப் போகவே,
தாயகம் திரும்பினார்,
அப்பாவி விவசாயத் தந்தை.

தனிமை அவரை வாட்டி வதைத்தது..
சேற்றில் கால் வைக்க தேகம் முழுவதும்
துடி துடித்தது.

வயலைத் தேடி நடந்து சென்றார்.
அங்கே,
ஜேசிபி எந்திரம் ஒன்று, மண் புழுவை,
துண்டு துண்டாக வெட்டக் கண்டார்!

துடி துடித்து நெளிந்த விவசாய நண்பனின் இறப்பு
அவரை தூங்க விடாமல் புரள வைத்தது.
வேலையில் மும்முரமாகும் முன்,
தன் பிள்ளைக்கு தகவலனுப்பினார்.

இம்முறை மடல் மடலெல்லாம் எழுதவில்லை.
என் தற்கொலையின் விவரம் சொல்லும்,
ஒரு வரித் தந்தியே போதும் என்றார்!

Wednesday, June 5, 2013

நேற்று ரயில்வே மேன்! இன்று ஹீரோ!!


மனோகர், ரயில்வே தொழிலாளிகளின் ஹீரோ ஆகியிருக்கிறார். கடந்த மே மாதம், கும்மிடிபூண்டியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த வண்டியின் ஓட்டுனர் தான் இவர். கும்மிடிபூண்டியை தாண்டியவுடன் மாரடைப்பு!
உடனடியாக வண்டியை நிறுத்திய அவர், அவசர உதவி விளக்கை இயக்கிவிட்டு, சரிவில் வண்டி ஓடாமல் இருக்க சக்கரத்திற்கும், தண்டவாளத்திற்கும் நடுவில் ஒரு கல்லை வைத்துவிட்டு, சரிந்து விட்டார்.
எதிரில் வந்து கொண்டிருந்த வண்டியில் இருந்த ஓட்டுனர், விளக்கை பார்த்ததும், தன்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு, கார்ட்-ஐ(Gaurd) காவலுக்கு வைத்துவிட்டு, ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொல்லிவிட்டு, அவசர உதவி கோரிய வண்டியை இயக்கி கவரைபேட்டை ரயில் நிலையம் வரை சென்று நிறுத்திவிட்டு, மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தார்.
பின், நான்கு கிலோ மீட்டர் திரும்ப நடந்து தன்னுடைய வண்டியை இயக்கி கும்மிடிபூண்டியை அடைந்திருக்கிறார்.
மனோகருக்கும், உதவிக்கு வந்த பாலச்சந்தருக்கும் விருது வழங்கவிருக்கிறது ரயில்வே துறை.
விமர்சனம்:
ஒன்று, மனோகர் இறந்துவிட்டார். அதற்கு முக்கிய காரணம், ஆம்புலன்ஸ் வர முக்கால் மணி நேரம் ஆனதாம்!
இரண்டு, நைட் டுட்டி அலவன்ஸ் பெறுவதற்காக தனக்கிருந்த ஜுரத்தையும் பொருட்படுத்தாமல் வேலைக்குச் சென்றதாலேயே மனோகருக்கு இந்த நிலைமை.
ரயில்வேயில் ஒரு வாக்கியத்தை அடிக்கடிச் சொல்வார்கள்.முதலில் நம் பாதுகாப்பு. பிறகு தான் ரயில் பாதுகாப்பென்று. அதை உணர்ந்து பிறர் செயல்பட வேண்டும்.
ஆயிரக் கணக்கான பயணிகளின் உயிரை காப்பாற்றி இறந்த மனோகருக்கு ஒரு சல்யூட்! நேரம் கருதி சமயோசிதமாக செயல்பட்ட பாலச்சந்தருக்கு ஒரு பாராட்டு!

Sunday, June 2, 2013

கவிதை: கருமை


கருமையை சிறப்பிக்க நம் கவிஞர்கள் 
கற்பித்த உவமைகள் பற்பல..
அடை மழை யெனத் தம் பிரஜைகட்கு 
அள்ளி வழங்கிய வள்ளல் கோமான்களை
கார்மேகத்தொடு ஒப்பிட்டார் ஒருவர்;

மாந்தர் குலத்திற்கு குவி மையமாய் விளங்கும்               
மங்கையர் கருவிழியை மீன் விழியென
வர்ணித்தார் இன்னொருவர்.

அவள் கருங் கூந்தலின் நறுமணத்திற்கு 
காரணம் அறியாமல், ‘சொக்கா’ ‘சொக்கா’ என்று 
அலைந்தவர் கதையை அறியாதவர் உண்டா?

அல்லது
தம் முன்னோரின் பசி தீர்க்க, 
காக்கைக்குச் சொறிட்டு,
புண்ணியம் தேடாதவர் தான்
இப்புவியில் உண்டா?

இங்ஙனம்,
கருமையின் பெருமையைச் சொல்ல
எத்தனை கதைகள் இருந்தும்,
மனித மனம் குரங்கென்பதற் கேற்ப 
தவறாமல் தலை கீழென இயங்கினோம் நாம்!

உடலியக்க உறுதிக்கு உணவிட்டு ஊட்டி வளர்க்கும் 
உன்னதப் படைப்பாளியின் மகிமையை உணராமல்
நித்தமும் அவரை நிந்தனை செய்தோம்.
தூய மனம் கொண்டவர் துன்பத்தால் துவண்டாலும்
துர்நாற்றம் பிடிக்காமல் தூரச் சென்றோம்!

விஷ வாயுவை உள்வாங்கி
வியாதியுடன் சரசம் பாடும்,
சாக்கடைத் தொழிலாளியின் நிலை தான் என்ன?
சூத்திரன், அரிசனன் என்று கண்டதையும்
கேட்டுக் கேட்டு அவர் காதுகள்
புழுத்தது தான் மிச்சம்!

இத்தகைய வன்முறையை அரங்கேற்றும்
நம் வெள்ளை நிறமா சமாதானத்தை குறிக்கும் சின்னம்?

கரை படிந்த சிந்தையதை
இக்காரிருள் கடப்பதற்குள் களைந்தெடுத்து
சலவை செய்ய வாருங்கள்!

வேற்றுமையை வேரறுக்கும்
தொழமைக்குத் தோள் கொடுக்க,
நம் கைகளை உயர்த்திடுவோம் வாருங்கள்!

இக்கவிதை, தென்னக ரயில்வே, சிக்னல் பயிற்சிக் கூடத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் வாசிக்கப் பட்டு, பரிசும் பெற்றது.

எண்ணம்-எழுத்து,
கண்ணன் ராமசாமி



Saturday, March 16, 2013

சுந்தர் பிச்சை Android-ன் புதிய தலைவர்!



ராமானுஜம் போன்ற அறிவியல் மேதைகளின் வரிசையில் நாம் தமிழ் மேதைகளை இனம் கண்டு கொள்ள மறுக்கிறோம். ஈ-மெயில்-ஐ கண்டு பிடித்தவர் சிவா..International Monetary Fund-ன் சீப் ஆக இருந்தவர் ரகுராம் ராஜன் (இவர் 2005 ஆம் ஆண்டு நடத்திய கருத்தரங்கம் ஒன்று 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நிகழவிடாமல் தடுக்க வழி சொல்லியது. ஆனால், அதை அமரிக்கா கண்டு கொள்ளாமல் விட்டது). தற்போது, Google Chrome-ஐ கண்டு பிடித்ததில் பெரும்பங்கு ஆற்றிய சுந்தர் பிச்சை அவர்கள், Android-ற்கு தலைமை ஏற்றுள்ளார். வாழ்த்துவோம்!

Friday, February 1, 2013

Criticisms On Kamal Hassan And Clarifications Regarding Viswaroopam Issue

Once the movie Viswaroopam’s issue took viswaroopam, almost everybody started to criticize every move of Kamal Hassan. Viswaroopam stood at seventh place in Twitter trends which is an example of how hot the plate was. I, simply as a story writer, supported Kamal Hassan. Though I am a fan of him, I looked for flaws in Kamal Hassan’s actions. I did get few in the beginning. But now after being aware of some details, I am sure that any honest celebrity would do the same in such circumstances. I compile some of the main criticisms and the clarifications for the same from my side.

1. Why did Kamal in first place screen the movie to Muslim groups?

Clarification: When Kamal announced the delay of his movie due to DTH plans, a media person asked whether he would screen the movie to muslim groups as per their request. Kamal replied that he would if he thought it is very important and asked media not to turn this into a sensation.
Now after screening the movie, Kamal Hassan said, “I screened it because they are my brothers. I thought they would understand”. At this juncture, everybody thought that Kamal was trying to appease muslims. But the reality came to light only few days ago officially.

Tamil Nadu’s chief minister revealed in her interview that Kamal Hassan screened the movie to muslim groups only after the government insisted to do so. So it was not Kamal who initiated. From the beginning he didn't blame anyone for anything.

2. Kamal Hassan was the sole reason for the delay in release. He delayed the screening meant for muslims- TN GOVERNMENT

Clarification: Should every creator screen a movie to a particular group before the release just because they are ready to create law and order problem? Isn't this a bad example for trouble makers?

3. Central Censor board didn’t follow norms while certifying viswaroopam

Clarification: This accusation needs proper research and proof. There is none till now from Advocate general. As far as we are concerned, there is proof to believe that this accusation is not true. Central Censor board did 14 cuts in the movie(1.8 minutes).

4. Movie portrays Quran as a tool for Terrorism 

Clarification from Kamal: You are trying to compile scene one and two to find a meaning. They are separate. Cinema is a language and one should watch enough number of movies to understand the artistry. But, I cannot ask Muslims to leave their practice (Muslims should not watch movies as per their religion). So please discuss with your brothers (fellow Muslims) who watch movies frequently.

Though Kamal feels so, He accepted to delete scenes regarding Quran as they feel offended. Kamal deleted a song in Manmadhan ambu when Hindus felt offended.

5. Talibans are made terrorists by America. Kamal Hassan has not shown their real face

Clarification from Kamal: I know that those terrorists are what they are due to another terrorist activity by America. But that is a different point of view. Why should I paint them white to appease fundamentalists?

6. Kamal Hassan never felt that he should leave the country when Indians were suffering. Now as he was personally affected, is it fair to give such a statement? Indian people are fair to him. Then why he has to leave the country?

Clarification: Kamal Hassan’s statement was not conceived as it should be like always. His speech was so clear. What he actually said was,

“The judge felt that an individual’s wealth is not important before India’s integrity. I am ready to lose my wealth if India can stay united. But Tamil Nadu should not think that I will go down. If I cannot live here, I will search for a secular state in India or Abroad. I don’t have any anger on the people. I will make only Tamil Movies wherever I stay”

In this statement Kamal clearly identifies Tamil Nadu to be non-secular as the judge felt that his personal right is not important. He was also angry that the government was only expecting Kamal Hassan to satisfy Muslim protesters and not his freedom of speech. So, it is clear that Kamal gave that statement only because his freedom of speech was challenged. He was only angry for not being allowed to express his opinion on behalf of the people who suffer. I repeat here what he said about the masses. He said in the same interview that he is not angry on the people.

7. This issue created a bad image on the government as for having a personal agenda against Kamal Hassan

Clarification: Kamal Hassan never said to the media that the government was determined to finish him. He said, “Actually Jaya Tv was not ready to buy our film due to technical issues and also due to criticisms from muslim community. There after there was no pressure”

While speaking about his comments in Chidambaram book release function he said,
Absolutely, I am not the one who decides a Prime Minister. I have different relations with all the politicians. I am A-political. She is political. We have our own differences.

8. Kamal looked for legal solutions first. But after Chief Minister clarified on this issue, he went down and said, “There is no need for appeal in Supreme court”. He actually played safe!

Clarification: This was the course of events that happened since the ban:

1. Kamal Hassan screened the movie to Protesters and he fled to Los Angeles for Hollywood Premiere.
2. TN government banned the movie when Kamal Hassan was half way through.
3. The first option: Kamal Hassan has to meet the concerned people in the government and ask for withdraw of ban. But this was not possible immediately as Kamal Hassan was away.
4. The second option: Chandra Hassan, on behalf of Kamal Hassan filed a writ petition In High court.
5. Individual judge revoked the ban. Government challenged the verdict and the ban was reiterated. Bench postponed the hearing till Monday.
6. Kamal sent a letter to CM asking to meet her. CM refused to meet as the case was in the court
7. Kamal gave an emotional speech as he had a financial crisis. The D-day for his loan amount was Feb -1. He was paying 5 lacks as interest every day. He was desperately in need of a release date.
8. He decided to meet five Muslim groups and accepted to delete the scenes with Quran. He says, “Now we (himself and Muslims) are settled”. Chandra Hassan said, “If bench court doesn't revoke the ban, we will think of moving to Supreme Court”
9. 24 Muslim organizations said, “We were not called. We have nothing to do with those five groups”
10. CM gave an interview asking Kamal Hassan to meet those who still oppose and cleared the air that her government has no issues if an amicable solution is reached.
11. Kamal Hassan and co decides to find a solution at the earliest as possible and leaves the idea of moving to the court.

Here, the only issue that stood before Kamal Hassan was his financial crisis and not pressure from government.  After the chief minister found mistakes in his actions, he just explained his stand and never apologized to anything. He thanked Chief Minister by saying, “At last she spoke out. I thank her for understanding”

I think this article clears all accusations on Kamal Hassan. I hope the movie releases soon and I am eager to watch it in Auro 3D sound.

NOTE: Compilation based on various interviews given by Kamal hassan in news channels. 

Tuesday, January 29, 2013

லஞ்சத்திற்கு எதிரியாக நான்


என் வாழ்வில், இந்த நேரத்தில், சொல்லிக் கொள்ளும் படியான ஒரு நிகழ்வு நடந்தேறி இருக்கிறது. இது வரை லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற கொள்கையை விடாப் பிடியாக கடை பிடிக்க வேண்டும் என்று பல முறை நான் முயற்சித்திருக்கிறேன். சில நேரங்களில் வென்றிருக்கிறேன். ஆனால், சிறு சிறு தவறுகள் நிகழ்ந்து, வெளியே சொல்லிக் கொள்ளும்படியாக அவை இல்லாமல் போயின. இப்போது, ஒரு வேலையை லஞ்சம் இல்லாமல் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளேன்.
என்ன வேலை அது? என்னை சேர்ந்த பலருக்குத் தெரியும். நான் தென்னக ரயில்வே துறையில் இணையப் போகும் விவரம். அந்த வேலையைப் பெற வாடிக்கையாக அரசு எதிர்பார்ப்பது, ஆர்.டி.ஒ அலுவலகத்தில் இருந்து ஒரு உறுதிச் சான்று(attestation).
“பூ மிதிக்கணும். அவ்வளவு தானே?” என்று கவுண்ட மணி பாணியில் ஆர்.டி.ஒ-அலுவலகத்திற்குப் போன எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக இதன் வீரியம் புரியத் தொடங்கியது.
“தம்பி, ஆர்.டி.ஒ அட்டச்டேஷன் வேணும்-னா முதல்-ல தாசில்தார் ஆபீஸ்-ல இருந்து ஒரு ரிபோர்ட் வரணும். அங்கே போ”, என்று சொல்லி என்னுடைய படிவத்தொடு ஒரு கடிதத்தை இணைத்து, அஞ்சல் கவரில் தபால் கொடுத்து அனுப்பினார்கள். இதைச் செய்வதற்கே மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டார்கள்.
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று நான் பார்த்த போது, விஷயம் இன்னும் பெரிதாகியது.
“தாசில்தார் சும்மா போட்டுற மாட்டார். நீ ரெவன்யு இன்ஸ்பெக்டரிடம் போய் ரிபோர்ட் வாங்கிட்டு வா” என்று சொல்லி தேதி சீல் அடித்துக் கொடுத்தார்கள்.
அதை எடுத்துக் கொண்டு வருவாய் ஆய்வாளரிடம் நான் சென்றேன். அங்கு இருந்த உதவியாளர், ‘இதுக்கு முதல்-ல வி.ஏ.ஒ கிட்ட இருந்து ஒரு ரிபோர்ட் வாங்கணும்’ என்றார். அவரையும் தேடித் பிடித்து கேட்டேன்.
“நாளைக்கு போட்டுத் தர்றேன். சீக்கிரம் போய் போலீஸ் வெரிஃபிகேஷேன் வாங்கிட்டு வா” என்றார். ஆக, லஞ்சம் வாங்கும் முக்கிய பிரமுகர்கள் எல்லோரிடமும் சென்று வர வேண்டிய நிலை எனக்கிருந்தது.
காவல் நிலையத்திற்குச் சென்றேன்.
வரவேற்பு அரையில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். விவரத்தை சொன்னவுடன் மற்றொருவரிடம் செல்லச் சொன்னார். அவர் என்னைப் பார்த்ததும் சைகையாலேயே உட்காரச் சொன்னார்.
“அடடே எப்போதும் இல்லாத மரியாதை இருக்கிறதே!” என்று எண்ணிக்கொண்டே உட்கார்ந்தேன். விவரத்தை அவரிடமும் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, நான் கொண்டு போயிருந்த காகிதங்களை புரட்டிப் பார்த்துவிட்டு,
“கடிதம் இருக்கிறது. படிவம் எங்கே?” என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. காரணம் என்னிடம் வேறு படிவங்கள் ஏதும் இல்லை. எங்கேயும் கேட்டு வாங்கிக் கொண்டும் வர முடியாது. இது நடக்குமா நடக்காதா என்ற பயம் மனதை கவ்விக் கொண்டது.
“நீங்கள் தான் படிவம் தரவேண்டும். என்னிடம் இதை மட்டும் தான் கொடுத்தார்கள்”, என்றேன்.
“எங்க கிட்ட படிவம் எல்லாம் இல்ல. நீங்க தான் கொண்டுட்டு வரணும்”, என்றார் அவர். அப்போது, தற்செயலாக ஒரு அதிகாரி உள்ளே வந்து என் பிரச்சனையை கேட்டு அறிந்தார். என்னிடம் பேசிக் கொண்டிருந்த அதிகாரியிடம்,
“நம்ம கிட்ட ஃபாரம் இருக்கு சார். இருங்க நான் தேடி எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
“என்ன படிவம் இருக்கிறது? என்ன இல்லை?” என்று கூட தெரியாத ஒருவர் அங்கே உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் நான் மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறேன். தலை எழுத்து என்று மனக் கைகளால் அடித்துக் கொண்டேன். சில நிமிடங்கள் கழித்து படிவம் வந்தது. நானே நிரப்பினேன். துணை ஆய்வாளர் வந்து கை எழுத்திட்டார். போகும் போது,
“சார் நான் கிளம்புறேன். கோர்ட் பக்கத்துல போய் நாலு வண்டியை மடக்கனும். இன்ஸ்பெக்டர் வர்றதுக்குள்ள எஸ்கேப் ஆயிடுறேன். இல்லாட்டி அவர் வந்து ஏதாவது வேலை கொடுத்திடுவார்”, என்று கூறிவிட்டுச் சென்றார் அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்.
படிவத்தில் சீல் இட்டு, நகல் எடுத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு, அசல் படிவத்திற்காக காத்திருந்தேன். அப்போது,
“கொடு ஒரு ஆயிரம் ரூபாய்! நல்லா சம்பாதிப்ப இல்ல?” என்றார் அந்த அதிகாரி. நான் சிரித்தபடி நின்றேன்.
“என்ன? காசு கொண்டு வரலையா? இந்த வெரிஃபிகேஷேன் சர்டிஃபிகேட்-ஐ கொடுக்குறதுக்கு முன்னாடி உன் மேல கேஸ் இருக்கா-ன்னு செக் பண்ணிட்டு ஒரு வாரம் கழிச்சுத் தான் கொடுக்கணும். ஏதோ கவர்மென்ட் வேலையில சேரப் போறியே; உதவி பண்லாம்-னு சீக்கிரம் தர்றோம். கொடு”, என்றார்கள் இரண்டு பெரும்.
அது ஒரு நாளில் முடியக் கூடிய வேலையாக தான் எனக்குத் தெரிந்தது. வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கும் அந்த இருவரும் நினைத்திருந்தால் அப்போதே என்னுடைய நன்னடத்தை பற்றி ஆய்வு செய்திருக்கலாம். தன்னுடைய கடமையை செய்துவிட்டு எனக்கு உதவி செய்ததாய் அவர்கள் சொன்னது கோபத்தை ஏற்படுத்தியது. அசிங்கப் படுத்த வேண்டும் போல் இருந்தது.
“இந்தாங்க. என் கிட்ட இவ்வளவு தான் இருக்கு”, என்று கூறி இரண்டு இருபது ரூபாய் தாள்களையும், ஒரு பத்து ரூபாய் தாளையும் நீட்டினேன்.
“அம்பது ரூபாயா?! என்னப்பா நீ?” என்று ஆச்சர்யமாக கேட்டார் புதிதாக வந்த அதிகாரி.
“உண்மையாவே என் கிட்ட பணம் இல்லை”, என்று காலி பாக்கெட்டை திறந்து காண்பித்தேன். உடனே அவர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு,
“இதை வாங்கினா எங்களுக்கு அசிங்கம். உனக்கே தோணிச்சுன்னா, இந்த பக்கம் போகும் போது ஒரு 200 ரூபாய் கொடுத்துட்டுப் போ”, என்று கூறி படிவத்தை கொடுத்து அனுப்பினார்கள். முதல் வேலை லஞ்சம் தராமல் முடிந்தது. இருந்தாலும் என் மனதில் நிம்மதி இல்லை.
“அந்த ஐம்பது ரூபாயை கூட வாங்கிப் பையில் போட்டுக் கொள்ளும் கேடு கெட்டப் பிறவிகள் இருக்கிறார்கள். இனி அதைக் கூட கொடுக்கக் கூடாது”, என்று தோன்றியது.
அடுத்த முதலையிடம் சென்றேன். அதாவது கிராம நிர்வாக அலுவலர். அவர் அசல் போலீஸ் ரிகார்ட்-ஐயும், அசல் குடும்ப அட்டையையும் பார்த்துவிட்டு, ஆர்.டி.ஒ-விடம் இருந்து நான் பெற்ற கடிதத்தை படித்துப் பார்த்தார். அதில்,
“விண்ணப்பித்தவரின் பள்ளிக்குச் சென்று, அவர் அங்கே படித்தது உண்மை தானா என்றும், அவர் தலைமை ஆசிரியரிடம் பெற்றுள்ள உறுதிச் சான்று உண்மையில் அவரால் தான் போடப் பட்டதா என்றும் கிராம நிர்வாக அலுவலர் உறுதி செய்து நன்னடத்தை சான்று அளிக்க வேண்டும்’ என்று எழுதப் பட்டிருந்தது.
“போச்சு! வெறும் கை எழுத்துக்கே இருநூறு ரூபாய் கேட்டங்க. இங்கே பள்ளி வரை கூட்டிக்கிட்டு போனா எவ்வளவு கேட்பாங்களோ?” என்று யோசித்துக் கொண்டே கிராம நிர்வாக அலுவலர் முன்பு நின்றேன். கடிதத்தை முழுவதுமாக படித்து முடித்த அவர்,
“வந்து பார்க்குறேன். ஆனா, அதுக்கு முன்னாடி உங்க தலைமை ஆசிரியர் ஸ்கூல்-ல இருக்காரா-ன்னு பார்த்துட்டு வா” என்றார். பொதுவாக என்னுடைய தலைமை ஆசிரியர் மதிய நேரங்களில் சந்திப்புக்கு தயாராக இருப்பார் என்று எனக்குத் முன்னதாகவே தெரியும். இருந்தாலும் ஒரு முறை கேட்டுவிடலாம் என்று நினைத்து பள்ளிக்குச் சென்று விசாரித்தேன். அங்கே அவர் இருந்தார். இதை சொன்னவுடன், என்னோடு மிதிவண்டியின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு கிராம நிர்வாக அலுவலர் பள்ளிக்கு வந்தார்.
என்னை நன்றாகத் தெரியும் என்று தலைமை ஆசிரியர் கூறி கை எழுத்திட, மறுபடியும் அதே மிதிவண்டியில் என்னுடன் திரும்பினார் அலுவலர்.
“சைக்கிள்-ல வந்ததுக்கு இன்னும் நூறு ரூபாய் அதிகம் கேட்பானோ?” என்ற கேள்வி எனக்குள் சங்கடத்தை ஏற்படுத்த, அவருடைய இருக்கைக்கு முன்பு அமைதியாக உட்கார்ந்திருந்தேன். ஒரு ஏ.ஃபோர் சீட்-ஐ எடுத்து எழுத ஆரம்பித்தார் அவர்.
நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன். அது சட்ட விரோதம். உங்களை திருத்த நூறு அண்ணா ஹஜாரே வந்தாலும் முடியாது. என்றெல்லாம் மனதிற்குள்ளேயே வசனம் பேசுவது போல் யோசித்துக் கொண்டிருந்தேன்.
மனுதாரர் மீது எந்த வழக்கும் இல்லை; கிராம விசாரணையில் எந்த வில்லங்கமும் இல்லை என்று புலனாகிறது; என்றெல்லாம் அவர் எழுதிக் கொண்டிருந்ததை படித்தேன். நடுவில் பலர் வந்து குறுக்கிட்டுக் கொண்டே இருக்க, அந்த ஒரு காகிதத்தை எழுதி முடிக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.
பின்னர், தன்னுடைய கை எழுத்தை இட்டு, சீல் போட்டுவிட்டு, என்னிடம் கொடுக்கும் போது,
“நீ உங்க தெருவுல சண்டை போட்டிருக்கியா?” என்று கேட்டார். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இருந்தாலும், அடக்கி வாசித்து,
“இல்லை சார். வேணும்-னா எங்க தெருவுல வசிக்கிறவங்க கிட்ட இருந்து எழுத்துப் பூர்வமா ஒரு உறுதிக் கடிதம் வாங்கிட்டு வர்றேன்” என்றேன்.
“அதெல்லாம் வேணாம். உன்னை விசாரிக்கணும்-னு மட்டும் தான் இங்கே எழுதி இருக்காங்க. விசாரிச்சாச்சு. இந்தா”, என்று ரிப்போர்ட்-ஐ கொடுத்தார். பின், ‘பெற்றுக் கொண்டேன்’ என்று எழுதி என்னுடைய கை எழுத்தை ஒரு நோட்டுப் புத்தகத்தில் போடச் சொன்னார்.
“இனிமேல் தான் கச்சேரி இருக்கிறது”, என்ற எண்ணத்துடன் கை எழுத்து போட்டுவிட்டு, அவருடைய அறிக்கையை வாங்கி கையில் வைத்துக் கொண்டே, ‘நன்றி. வரேன் சார்’ என்றேன். அவரும், ‘வாங்க’ என்று சொல்லிவிட்டு வேறு வேலையை பார்க்க முகத்தை திருப்பிக் கொண்டார்.
ஒரு பைசா கேட்கவில்லை! வழ வழா குழ குழா என்று பேசவில்லை.
“உன் கூட சைக்கிள்-ல அவ்வளவு தூரம் வந்தேன்-ல? அதுக்கு ஏதாவது செய்” என்று முறையிடவில்லை. ‘முறையா பார்த்தா இதை ஒரு வாரம் கழிச்சுத் தான் கொடுக்கணும். நான் ரெண்டு நாள்-லையே கொடுத்துட்டேன்” என்று போலியாக ரூல்ஸ் பேசவில்லை. ஒரு நியாயமான அதிகாரியை முதல் முறையாக நான் அன்று சந்தித்தேன்.
இந்தச் சம்பவம் என் மனதிற்குள் ஒரு குற்ற உணர்வை உருவாக்கியது. எல்லா அரசு அலுவலகத்திற்குள்ளேயும் நரிகள் நமக்காக காத்திருக்கின்றன என்ற பயத்தோடு செல்வது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தேன். ‘கெட்டவர்கள் எல்லா இடங்களிலும் எதிர்பார்ப்பது போலவே, நல்லவர்களையும் எதிர்பார்க்க வேண்டும்’ என்று தோன்றியது. அதே எண்ணத்துடன் அடுத்து வருவாய் ஆய்வாளரின் அறைக்குச் சென்றேன். அங்கேயும் விவரத்தை கூறி விளக்கினேன்.
“நாளை காலை வா”, என்றார் உதவியாளர். அடுத்த நாள் சென்றேன்.
“இன்று மாலை வா”, என்றார் உதவியாளர். மாலை போய் நின்றேன்.
“இன்னும் அவர் வரவில்லை. பூண்டி போயிருக்கிறார். நாளை வா”, என்றார் மறுபடியும்.
“நாளை சனிக்கிழமை”, என்றேன்.
“சரி. திங்கட் கிழமை வா”, என்று சொல்லி அனுப்பி விட்டார். பொறுமை இழந்த நான் வீட்டிற்கு வந்து இரவு யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது, என் தந்தை இறப்பதற்கு முன்பு ஒரு முறை சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது:
“இந்த மாதிரியான இடங்களில் பொறுமை தான் அவசியம். எத்தனை முறை திருப்பி அனுப்பினாலும் கோபத்தை காட்டக் கூடாது. அது அவர்களை எரிச்சலடையச் செய்யும். அரசு, பணிச்சுமைக்கு ஏற்றார் போல் அதிக அதிகாரிகளை நியமிக்கவில்லை”
ஆம் இது உண்மை தான்! சமீபத்தில் கூட புதிதாக நியமிக்கப்பட்ட 1900 வி.ஏ.ஒ-க்கள் பணிச்சுமை தாங்க முடியாமல் வேறு அரசுத் துறைக்கு தாவிவிட்டதாக டிசம்பர் முப்பதாம் தேதி செய்தி வந்தது. இதை என் தந்தை சொன்ன போது நான் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், அந்த அறிவுரை எனக்கு இப்போது உதவியது. அமைதியாக இருந்தேன். திங்கள் அன்று சென்றேன்.
“ஏதாவது வேலை இருந்தா முடிச்சிட்டு வா. இன்னும் ஆர்.ஐ வரலை”, என்றார் உதவியாளர்.
“எனக்கு எந்த வேலையும் இல்ல”, என்றேன்.
“இங்கேயே உட்கார்ந்திருக்க கூடாது. வெளியே எங்காவது போய் சுத்திட்டு வா”, என்று சொல்லி அனுப்பிவிட்டார். போக இடம் தெரியாமல், எதிரில் இருந்த டீ கடையில் ஒரு பட்டர் பிஸ்கட் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே ஹெட் லைன்ஸ் படித்தேன். வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே ஒருவர் சுக்கு காப்பி விற்றுக் கொண்டிருந்தார். அதையும் வாங்கிக் குடித்தேன். நோட்டம விட்டுக் கொண்டே இருந்ததில் அரை மணி நேரம் கழிந்தது.
ஆர்.ஐ வந்து விட்டாரா என்று பார்க்க அலுவலகத்திற்குச் சென்றேன். நேரம் பதினொன்று ஆகியும் வரவில்லை. மறுபடியும், அவர் நேரம் தவறி வருவதை பற்றி புகார் அளித்து, அவரை கேள்வி கேட்க அதிகாரிகள் வரும் போது தயங்கித் தயங்கி வருவாய் ஆய்வாளர் பதில் சொல்வது போன்ற கற்பனை. ஆனால், எங்கேயும் புகார் அளிக்கவில்லை.
பதினொன்றரை மணிக்கு ஆர்.ஐ-ன் தரிசனம் கிடைத்தது. முதல் ஆளாக நான் போய் அலுவலக வாசலில் நின்றேன். பாத் ரூம் போய்விட்டு பொறுமையாக வந்து உட்கார்ந்த அவர், என்னை உள்ளே அனுமதித்து, நான் கொண்டு சென்ற ரிப்போர்ட்-ஐ வாங்கிப் படித்தார்.
“சாயங்காலம் வாங்க. பார்த்து செஞ்சுக் கொடுத்துடுறேன்”, என்றார்.
“அடடே! இங்கு கால் கடுக்க நிற்க வேண்டாம் போலிருக்கிறதே!” என்று சந்தோஷப் பட்டுக் கொண்டே வீட்டிற்குச் சென்றேன். மாலை வரை நிம்மதியாக இருந்தது. ஐந்து மணிக்கு வரச் சொல்லி இருந்தார்கள். நாலரை மணிக்கே சென்றுவிட்டேன். கூட்டமாக இருந்த அலுவலகம் அப்போது காலியாக இருந்தது. அதிகாரி என்னை பார்க்க,
“காலையில நன்னடத்தை சான்று வாங்க வந்தேனே சார்”, என்று கூறி உள்ளே சென்றேன் தயக்கத்துடன்.
“ஆமா தம்பி! சொல்லுங்க”, என்றார். என்னத்த சொல்றது? நீங்க தான் சொல்லணும் என்று தோன்றினாலும்,
“வாங்கிட்டு போகலாம்-னு வந்தேன்”, என்றேன்.
“அது வந்து, எழுதுற பையன் லீவ் இன்னைக்கு. நாளைக்கு வாங்க கண்டிப்பா முடிச்சுத் தந்துடுறேன்” என்றார் கால் ஆட்டிக் கொண்டே.
“கால் ஆட்டுற நேரத்துல நீங்களே எழுதிக் கொடுக்கக் கூடாதா?” என்று கேட்கத் தோன்றியது. கேட்கவில்லை. வீட்டிற்குத் திரும்பி வந்து அடுத்த நாள் காலைக்காக காத்திருந்தேன்.
ரயில்வேயில் சொன்ன தேதி புதன் கிழமை தான். அன்று வரை வி.ஏ.ஒ வேலை மட்டும் தான் முடிந்திருந்தது. வருவாய் ஆய்வாளரிடம் ரிப்போர்ட் வாங்கிவிட்டால் தாசில்தாரிடம் ஒரு கை எழுத்து, ஆர்.டி.ஒ-விடம் ஒரு கை எழுத்து என்று சுலபமாக முடிந்துவிடும். ஒரு நாள் தள்ளி வியாழக் கிழமை அன்று சென்று விடலாம் என்று மனக் கணக்கு போட்டுக் கொண்டேன்.
ஆனால், எதிர்பார்த்ததை போலவே அடுத்த நாளும் அந்த பையன் வரவில்லை. என் மனதில் இருந்ததை சொல்லிவிட்டேன்.
“சார் எனக்கு இன்னைக்கு அப்பாயின்ட்மென்ட் ஆக வேண்டி இருந்தது. நீங்களே மூணு நாள் டிலே பண்ணிட்டீங்க”
“சரி..சரி..இன்னைக்கு கண்டிப்பா கொடுத்துடுறேன். வெளியே வேலை இருந்தா பார்த்துட்டு வா”, அதே வசனம்; வேறு வாயிலிருந்து.
“இவன் ‘அதுக்கு’ சரி பட்டு வரமாட்டான்”, என்று மனதிற்குள் சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றினேன். சரியாக ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்தேன். மனதிற்கு உற்சாகமூட்டும் வகையில் வி.ஏ.ஒ-வின் அறிக்கையை பார்த்து காப்பி அடித்துக் கொண்டிருந்தார் ஆர்.ஐ.
அரசு அலுவலகத்தில் நம்முடைய காகிதத்தை அலுவலர் கையில் வைத்திருக்கும் நேரம் மிகவும் நிம்மதியானது. கூடிய விரைவில் வந்த வேலை முடியப் போகிறது என்ற நிம்மதி அலாதியானது. இது ஒரு தொல்லை புடிச்ச இடம்; தாலுகா ஆபீஸ்-ஐ பார்த்தாலே எனக்கு அலர்ஜி என்ற பொதுவான எண்ணங்களைத் தாண்டி, அந்த இடத்தை விட்டு வெளியேறும் போது நம் கையில் தைக்கப்பட்ட காகிதங்கள் கத்தையாக இருந்தால், சம்பள நாள் அன்று கிடைக்கும் சந்தோசம் நிச்சயம் இருக்கும்.
அப்படி ஒரு சந்தோசம் தான் அன்று எனக்கு கிடைத்தது.
தன் கைப்பட எழுதிய அறிக்கையை படிவத்தொடு சேர்த்து தைத்துவிட்டு, கை எழுத்திட்ட ஆர்.ஐ, சீல் போட்டுத் தரும்படிச் சொல்லி உதவியாளரிடம் கொடுத்தார். அவர் சீல் போட்டுவிட்டு ஒவ்வொரு காகிதமாக பிரித்துப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
இரண்டு மூன்று முறை திருப்பித் திருப்பி விரல் ஈரத்தால் காகிதம் நனையும் அளவிற்கு பார்த்தார். என் கையில் அதை கொடுக்க அவருக்கு மனமில்லாதது போல் தெரிந்தது.
“ஓ! இவர் நம்ம கிட்ட மேட்டர் எதிர்பார்க்குறார் போல”, விவேக் வசனம் நினைவுக்கு வந்தது. நான் எதுவும் பேசாமல் கையை நீட்டிக் கொண்டு நின்றேன். கடைசியாக நான் பேச மாட்டேன் என்று தெரிந்து கொண்ட அந்த உதவியாளர், என்னிடம் அதை கொடுத்துவிட்டு முணு முனுத்தார்.
“இதுக்கு காசு கொடு”
“எதுக்கு? வி.ஏ.ஒ எதுவும் வாங்கலையே!”
“யாரு?” என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தார்.
“உனக்கு சீக்கிரம் முடிச்சுக் கொடுத்தார் இல்ல? காசு கொடு” என்றார் முகத்தை சுளித்தபடி.
“என்னால கொடுக்க முடியாது”, என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன். அவரும் எதுவும் கூறாமல் உள்ளே சென்று விட்டார்.
முதல் முறையாக யுக்திகளை பயன்படுத்தாமல் நேரடியாக லஞ்சத்தை எதிர்த்தேன். மனதிற்குள் ஒரு தைரிய உணர்வு ஏற்பட்டது.  எப்போதெல்லாம் குடும்பங்களும், நண்பர்களும் கூடும் இடத்தில், அரசியல்வாதிகளின் ஊழல் விவகாரம் பற்றி பேச்சு எழுகிறதோ, அப்போதெல்லாம் நான் விவாதத்திற்குள் நுழையாமல் இருந்திருக்கிறேன். காரணம், ஊழலுக்குத் துணை போய் விட்டு பிறரை விமர்சிக்க எனக்கு எந்த அருகதையும் இல்லை என்ற குற்ற உணர்வு தான். இனி அந்த குற்ற உணர்வு என்னிடம் இருக்கத் தேவை இல்லை!
எந்தச் சட்டத்திலும், ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்தால் தான் தவறு; நூறு ரூபாய் வாங்கினாலோ/கொடுத்தாலோ தவறில்லை என்று எழுதவில்லை. ஆனால், இந்தச் சமூகம் அதை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
‘காசு கொடுத்தா தான் வேலை நடக்கும். இல்லாட்டி இழுத்தடிப்பானுங்க’ என்ற வாதம் வசதியாக எல்லோருடைய தவறையும் மறைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது, ஒரு தவறு, இன்னொரு தவறை மறைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் பேச்சுக்களை கேட்கும் போது இனி நான் தள்ளி நிற்கலாம். இந்த எண்ணம் பிறந்த நேரத்தில் தான் இந்த அனுபவத்தை எழுத வேண்டும் என்று தோன்றியது. அந்த யோசனையை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, தாசில்தார் அலுவலகத்தை சென்றடைந்தேன். மனுவை கவுண்டரில் கொடுத்துவிட்டு, எப்போது வர வேண்டும் என்று கேட்டேன். ஒரு சீட்டு கொடுத்தார்கள். அதில், 21. 01. 2013 என்று இருந்தது! மறுபடியும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
“கிட்டத் தட்ட ஒரு மாசமா? ஒரு சைன் போட இவ்வளவு நாளா?” என்றேன்.
“ஆமா! அவர் இந்த சைன் போடுற வேலையை கடைசியாத் தான் செய்வார். அவருக்கு வேற அவசர வேலைகள் நிறைய இருக்கு” என்றார் கவுண்டர் முன்பு இருந்தவர். இதைக் கேட்டவுடன் என் மனதில் முதலில் எழுந்த எண்ணம் என்ன என்பதை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்லக் கடமை பட்டிருக்கிறேன்.
“பேசாம காசு கொடுத்து வேலையை முடிச்சுக்கலாமா? அப்புறம் காசே கொடுக்கலை-ன்னு கட்டுரையில எழுதிக்கிட்டா போச்சு! யாரால கண்டு பிடிக்க முடியும்?”
இதை நான் தயக்கம் இல்லாமல் ஒப்புக் கொள்வதற்கு ஒரு காரணம் உண்டு. பலர், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை மிக மிகத் தூய்மையானவர்கள் போல எண்ணிக் கொண்டு, அவர்களுக்கு தவறான சிந்தனையே வராது என்பது போல கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆனால், இது போன்ற நினைப்புகள் ‘சீக்கிரம் வேலை முடிய வேண்டும்’ என்ற எதிர்பார்ப்போடு போகும் எல்லோருக்கும் வரத் தான் செய்யும் என்பது யதார்த்தம். இந்த நினைப்பை வெளியே சொன்னால், தன்னுடைய கொள்கையில் குறை கண்டு பிடிப்பார்களோ என்று பலர் அச்சப் படுவது தான் இந்தக் கற்பனை உருவாவதற்கு முதல் காரணம்.
ஆம்! இது ஒரு கரும் புள்ளியாகத் தான் பார்க்கப் படும். ஆனால், அதைப் பார்த்து நான் பயப்படப் போவதில்லை. காரணம், மனித வாழ்க்கையே, மிருக குணங்களை களைய முற்படும் ஒரு போராட்டத்தின் வெளிப்பாடாக தான் இருக்கிறது. ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும் முதல் தருணத்தில் அவள் மேல் காமம் கொள்வது ஆணின் இயல்பு. ஆனால், எல்லோரும் பெண்ணை கற்பழித்து தூக்கி எறிவதில்லை. அந்த இயல்பை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறோம். அந்த கட்டுப்பாடு தான் முக்கியம்.
அது போல ஊழலை இயல்பு நிலையாக ஏற்றுக் கொண்டு விட்ட ஒரு சமூகத்தால் சூழப்பட்ட என்னிடம் இது போன்ற எண்ணங்கள் உருவாவதில் வியப்பில்லை.
சரி, கொடுத்தீர்களா? இல்லையா? எங்களால் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும் உண்மையை சொல்லுங்கள் என்ற கேள்விக்கு என்னிடம் உள்ள பதில், ‘இல்லை’. ஒரு மாதமானாலும், இரண்டு மாதமானாலும், பொறுத்திருக்க முடிவு செய்தேன்.
இடையில் பல்வேறு தரப்புகளில் இருந்து பல்வேறு அறிவுரைகள். ஒருவர்,
“யாராவது தெரிஞ்ச ஆளை புடிச்சு சீக்கிரம் வாங்கினா, சீக்கிரம் வேலைக்குப் போகலாம் இல்ல?” என்று கேட்டார். அதாவது எனக்கு முன்னால் காத்திருப்பவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு நான் முதலில் வேலையை வாங்கிக் கொள்ள வேண்டுமாம். இன்னொருவர்,
“அப்படித் தான் கேட்பாங்க. கொடுத்தா தான் வேலை முடியும். அவ்வளவு ஏன்? நீயே நாளைக்கு வாங்குவ பாரு! ஜமாய்..”, என்று தோளில் தட்டிக் கொடுத்து, பிற்காலத்தில் ஊழல்வாதியாக வாழ்த்துக்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனார். இதெல்லாம் எனக்கு சிரிப்பை வர வழைத்த போது, நான் மிகவும் மதிக்கும் ஒரு நபர் கொடுத்த அறிவுரை என்னை கோபம் கொள்ளச் செய்தது.
“டிசம்பருக்குள் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வாங்கிட்டா, உன்னுடைய சர்வீஸ்-ல 2012-ஆவது வருஷத்தையும் சேர்த்துக்குவாங்க. அதனால அம்பதோ, நூறோ கொடுத்து சீக்கிரம் வாங்கப் பாரு” என்றார் அவர். நான் அந்த நேரத்தில் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை. அவரை நான் மதிப்பதால் எதிர்த்துப் பேச எனக்கு விருப்பம் இல்லை. பேசினாலும் அவர் மனம் மாறப் போவதில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். மேலும், ஒரு தவறான கருத்தை யாரேனும் சொன்னால், அந்தக் கருத்தை நான் எதிர்க்கிறேன் என்று எழுதலாம்; தவறில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் அவரை விமர்சித்து காயப்படுத்துவது எந்த வகையிலும் ஆரோக்கியமில்லை என்று நினைத்ததால், ‘சரி’ என்று மட்டும் கூறிவிட்டு பேச்சை மாற்றினேன்.
அவர் சொல்வதில் என்ன தவறு? உன்னுடைய ஆதாயத்தை நீ பார்த்தால் உனக்குத் தானே நல்லது? உன்னுடைய நல்லதுக்கு அவர் அட்வைஸ் செய்வது சரி தானே? என்ற கேள்வி எழலாம்.
இப்படி தவறான முறையில் அந்த ஓராண்டு கால சர்வீஸ்-ஐ வாங்குவதால் கிடைக்கப் போகும் ஆதாயம், என்னுடைய வாழ்வில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வந்துவிடும்? குறைந்த பட்சம் பிரமோஷன் கிடைப்பதில் உதவலாம். அல்லது உதவாமலும் போகலாம். அதிக பட்சம் என்னுடைய சம்பளத்தில் ஒரு சிறு மாற்றம் ஏற்படலாம்; அல்லது ஏற்படாமலும் போகலாம். இல்லை என்றால் எனக்குத் தெரியாத, நான் பிற்காலத்தில் நினைத்து வருந்தப் போகும் ஒரு வாய்ப்பு என்னை விட்டு நழுவிச் செல்லலாம்.
எது எப்படி இருந்தாலும், இந்த உத்திரவாதம் இல்லாத ஒரு எதிர்கால நன்மைக்காக ஒரு ஆயிரம் ரூபாயை கறுப்புப் பண அகவுன்ட்-ல் டெபாசிட் செய்ய வேண்டும் என்று என்னிடம் அறிவுரை கூறுவது எவ்வாறு சரியாகும்?
அடுத்தவர் பொருளுக்கு ஆசை படக் கூடாது; நேர்மையாக வாழ வேண்டும்; என்ற போதனையை ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஒரு கதையின் மூலம் படித்ததாக ஞாபகம். அஞ்சாங் கிளாஸ் பாடத்தையே பின்பற்றாத இந்த சமூகம் எவ்வாறு வல்லரசாக மாறப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. சமூகம் என்பது ஒரு எந்திரமா? இல்லையே! மனிதர்களால் ஆனது தான் ஒரு சமூகம்? ஒவ்வொரு மனிதனும் பாலில் தண்ணீர் கலக்காமல் விற்றால் தானே இந்தச் சமூகம் ஆரோக்யமாக வாழ முடியும்? இரண்டு சொட்டு கலந்தால் கூட அதற்கேற்றார் போல சத்து குறையத் தானே செய்யும்?
இது போல எத்தனை விவாதங்களை முன்வைத்தாலும் இந்த சமூகம் திருந்தப் போவதில்லை. மாறாக என்னைத் தான் மடையன் என்பார்கள். பிழைக்கத் தெரியாதவன் என்பார்கள். இது போன்ற நேர்மையான நடைமுறைகளை பின்பற்றுவதால் நம் பிழைப்பு ஒன்றும் பாழாகிவிடுவதில்லை. உயிர் பயம் கொள்ளும் அளவிற்கு நேர்மை ஒன்றும் கொடியதும் இல்லை. எனக்குக் கிடைக்கப் போவது அடிமட்ட சம்பளமும் இல்லை!
ஒரு கூட்டத்தில் கூச்சல் எழ வேண்டும் என்றால், முதலில் ஒருவன் கத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதைக் கூட ஞாயம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், செவுட்டு மெஷினை கழற்றிவிட்டு, யாருமே கத்தவில்லையே என்று வாதாடுபவர்களிடம் எதைச் சொல்லியும் விவாதத்தை வெல்ல முடியாது. வெல்ல வேண்டும் என்ற விருப்பமும் என்னிடம் இல்லை.
ஒரு வழியாக தாசில்தாரிடம் கை எழுத்து வாங்கி விட்டேன். ஆர்.டி.ஒ-விடம் படிவத்தை கொடுத்திருந்த எனக்கு இன்று ஒரு பெரிய அடியாக ஒரு செய்தி வந்திருக்கிறது. தாசில்தார் தனியாக ஒரு ரிப்போர்ட் தர வேண்டுமாம். அதை கேட்க நாளை செல்ல வேண்டும். இது எவ்வளவு இழுத்தடித்தாலும், ஒரு பைசா செலவு செய்யாமல் ஒரு ரவுண்ட் வந்துவிட முடிவு செய்திருக்கிறேன். அடுத்த முறை இதே போன்று ஒரு நிலைமை வந்தாலும் இதைத் தான் செய்வேன். மற்றவர்களிடம் இருந்து நான் பிந்தங்குவது நாள் கணக்கில் தான். இதே வேலையை மற்றவர்கள் காசு கொடுத்து ஐந்து நாட்களில் முடித்திருக்கலாம். அவர்கள் மிச்சம் பிடித்த அந்த இருபத்தி ஐந்து நாட்களில் ‘சாதனை’, ‘சாதனை’ என்ற கூச்சல் மட்டுமே வெளிப்பட்டு நிற்கும். ஆனால், கூச்சலை தாண்டி, மிச்சம் பிடித்த நேரத்தில் அவர்கள் உருப்படியாக என்ன செய்தார்கள் என்பது தான் என்னுடைய கேள்வியாக இருக்கும்! ஒரு புத்தகத்தையாவது படித்து முடித்தீர்களா?