Pages

Sunday, September 4, 2011

திண்ணை.காம்: மத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி

"அண்ணா சாரே உண்ணாவிரதம் வெற்றியாமே?!" டீ கடை பெஞ்சு முதல் பீசா கார்னர் வரை எல்லா இடங்களிலும் விவாதிக்கப் படும் முக்கிய விஷையங்களில் இது தலையாயது. ஊழலுக்கு எதிராக யாரேனும் போர் புரிய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தது, இந்த ஊழல் ஒழிப்பு போராட்டத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளது. முதலாம் சுதந்திரப் போர், இன்றைய தலைமுறைக்கு மறக்க முடியாத, பார்க்கத் தவறிய ஒரு த்ரில்லர் படம் போன்றது. இன்றைய இளைஞர்கள், பெரும்பாலும் பழைய படங்களை கிண்டல் செய்வது வழக்கமாக இருந்தாலும், நூற்றுக்கு நூறு போன்ற படங்களைப் பார்த்தால், வியப்படைவார்கள். இந்த படத்தை திரையில் காண ஒரு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டதே என்று கவலை கொள்வார்கள். அப்படிப் பட்ட படம், மறுபடியும் ரீமேக் செய்யப்பட்டால்?! அதை மீடியாவும் வரவேற்று பிரபலப் படுத்தினால்? கூட்டம் கூடுவதில் விசித்திரம் இல்லை தானே? அது போலத் தான் இன்றைய போராட்டமும். இரண்டாம் சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப் படும் ஒரு த்ரில்லர் படம்.

ஆனால்,படத்தின் தயாரிப்பாளர், இன்றைய காலக் கட்டத்தில் தேவைப்படும் சமரசங்களை சேர்த்து அந்த படத்தின் பெருமையை குறைத்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். பழைய படத்தை பார்க்கும் வாய்ப்பு இந்த சந்ததியினருக்கு முன்பும், பின்பும் இனி கிடைக்காது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில், தயாரிப்பாளர், அந்த படம் கொண்ட பெருமையை தொலைத்து விட்டிருந்தாலும், தான் எதிர்பார்த்த வியாபார வெற்றியை மட்டும் மக்களுக்கு சொல்லி கொண்டாடினால் எப்படி இருக்குமோ அப்படித் தான் இந்த ஊழல் ஒழிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இவனும் குறை சொல்ல ஆரம்பித்துவிட்டான். ஊழலை ஒழிக்கப் போராடினால் தெரியும் என்று சிலர் நினைக்கலாம். ஊழல் ஒழிப்பிற்கு முதல்படியாக இதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற கோணத்தில் இந்த முகச் சுளிப்பு ஏற்றுக் கொள்ளப் படவேண்டியது. அதே சமயம், இரண்டாம் படியை அடையும் தகுதி, இந்த குறைகளை அறிந்தால் ஒழிய நமக்கு கிட்டப் போவதில்லை.அப்படி என்ன குறை?

பிரதமர் முதலில் கொடுத்த அறிக்கையிலிருந்து ஆரம்பிக்கிறது. ஜன் லோக்பால் விதிமுறைகளைப் பற்றிய மத்திய அரசின் கருத்தை, ஸ்டாண்டிங் கமிட்டி-இடம் சமர்பிப்போம் என்று அவர் கூறியபோது, இந்த அரசு மக்களைப் பற்றி கவலைப் படுவதாய் தெரியவில்லை என்ற எண்ணத்தோடு அன்னா சாரேவும், அவர் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அவர்கள் கோரிக்கை, வலுவான ஜன் லோக் பால் பில்லை சட்டமாக்கவேண்டும் என்பது. ஆனால், இன்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் இந்தியா பார்க்க மறந்த அதிர்ச்சியான செய்தி, பிரணாப் முகர்ஜியின் வாயிலிருந்து முத்தாய் உதிர்ந்திருக்கிறது.

ஊழல் ஒழிப்பு மசோதாவைப் பற்றிய எங்கள் 'உணர்வை' ஸ்டாண்டிங் கமிட்டியிடம் சமர்பிப்போம் என்று அரசு அறிவித்துள்ளதாய் அறிவிக்க, பரிசீலனை முடிந்துவிட்டது; சட்டம் இயற்றப் போகிறார்கள் என்ற கர்ஜனையுடன் போராட்டம் வெற்றி பெற்றதாய் அறிவித்துவிட்டனர். மக்களும், வெற்றி என்ற ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு பட்டாசு வெடிக்கின்றனர். உணர்வுக்கும் கருத்துக்கும் வித்யாசம் உள்ளதென்று எனக்கு தோன்றவில்லை!

மூன்று கோரிக்கைகள் என்று நடுவில் சுருங்கிய லோக்பால் போராட்டம், மூன்றையும் அரசு ஏற்கும் வரையாவது தொடர்ந்ததா என்றால் இல்லை! அரசு, அந்த கோரிக்கைகளை பரிசீலித்து, நடைமுறைக்கு ஒத்துவருமா என்று விவாதிக்கும்படி ஸ்டாண்டிங் கமிட்டியிடம் அனுப்புமாம்.

அதாவது, "உனக்கு இந்த லட்டு வேண்டாம்ல? நானே தின்னுடவா?" என்று தம்பியிடம் அண்ணன் கேட்பது போல், "ஒத்துவருமா? வராதில்ல?" என்று ஸ்டாண்டிங் கமிட்டியிடம் அரசு கேட்க, வேறுவழியில்லாமல் ஒத்துவராது என்று கூறப் போகிறது கமிட்டி. அதுதான் வெற்றி!

தவறுகளை சுட்டிக் காட்டும் அருந்ததி ராய் போன்றோரை 'துரோகிகள்' என்று சித்தரிக்கும் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கொடுத்து வைத்தவர்கள். காரணம், மீடியாவை 'உணர்வு ரீதியாக' மறைமுகமாக மிரட்ட, அருந்ததி ராய் போன்ற 'திறந்த புத்தகங்கள்' சிக்குகின்றனர். தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள் துரோகிகள் என்றால், நாம் அவற்றை மறைத்துவிடுவோம் என்று மீடியா முடிவெடுத்தது, அவர்களை வேண்டுமானால் காப்பாற்றலாம். ஆனால், மக்களுக்கு இது ஒரு பெரும் சிக்கல்.என்னைப் பொறுத்தவரை தகவல் அறிந்து கொள்ளும் உரிமை நம் நாட்டில் 'இருக்கு..ஆனால் இல்லை!"

இது ஒரு புறம் இருக்க, மாநிலத்தில் சமச்சீர் புரட்சி. இந்த வரிவரை சமூகத்தின் பார்வையில் செல்லும் இக்கட்டுரை 'திமுக எதிர்ப்பு', 'அதிமுக ஆதரவு' என்ற பார்வையில் செல்லப் போவதில்லை. சமூகமே பிரதானம்!

எந்த ஒரு சித்தாந்தமும், சட்டமும், மசோதாவும், திட்டமும் உபயோகத்தில் பயன் அளிக்கும் போது தான் வெற்றி பெரும். அமல்படுத்தப் படும்போது அல்ல! சமச்சீர் விவகாரத்தில் இக்கட்டுரை இரு கட்சிகளையும் ஆதிரிக்கப் போவதில்லை. காரணம் இருவரும், சமூகத்திற்கு மாபெரும் தீங்கு இழைத்துள்ளனர்.

இந்த பாடத் திட்டம் அமல் ஆனதற்கு முன்னால் நடந்தவற்றை ஒதுக்கி வைப்போம். அமலுக்கு பின்னால் நடந்தவை தான் முக்கியம். சமச்சீர் கல்வியை குறை கூறியவர்கள் எல்லோரும் ஆதிமுகவினர் என்று சொன்னவர்களே சில நாட்கள் முன்பு சட்டசபையில் பல மாற்றங்களை முன்வைத்தனர். பல விவரங்கள் தவறானவை என்றும், அதை சரி செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். அதாவது பட்டுத் திருந்துகிறோம் என்ற ரீதியில். அதற்கு முதல்வர், முதலில் வேண்டும் என்று சொல்லிவிட்டு இப்போது அங்கலாய்த்தால் எப்படி என்று கேட்கிறார். அதாவது தவறு செய்தவர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில்! இது ஒரு புறம் இருக்க,

சமச்சீர் கல்வி உண்மையிலேயே சமத்துவத்தை கொண்டு வந்துவிடுமா? சீருடை போலவா மாணாக்கர் கல்வி? சீருடை அணிவது, ஏழை-பணக்காரன் வித்யாசம் களைய. அதாவது, ஒரு மாணாக்கன் சீருடை அணியாத பொது, தன்னை விட எழையானவனை கிண்டல் செய்துவிடக் கூடாது. அதை விட முக்கியமானது, பணக்கார உடையை பார்த்து ஏழை மாணவன் ஏக்கம் கொள்ளக் கூடாது; தாழ்வு மனப்பான்மை கொள்ளக் கூடாது என்பதற்காக. இது எண்ண ரீதியான முடிவு; மாற்றமும் நேர்ந்தது.

ஆனால், சமச்சீர் கல்வி ஒரு வண்டியின் மைலேஜ் கணக்கைப் போன்றது. ஒரு வண்டி 100 கிலோ மீட்டர் கொடுக்க வேண்டுமானால், இவை எல்லாம் இருக்க வேண்டும் என்று பொடிப் பொடியான எழுத்துகளில் விளம்பரம் செய்வதைப் போன்றது. ரோட்டில் பள்ளம் இருக்கக் கூடாது; ஆக்சிலேடரை முறுக்கக் கூடாது; ப்ரேக் மற்றும் க்ளட்ச் குறைவாக உபயோகிக்க வேண்டும். இதெல்லாம் முடிந்தால் சீராக நூறு கிலோமீட்டர் சாத்தியம்.

சமச்சீர் கல்வியும் இப்படிப் பட்ட கோரிக்கைகளை முதலில் மக்கிளிடம் வைக்கிறது. சமச்சீர் பாடத்தை முறையாக, சீராக எல்லா ஆசிரியர்களும் நடத்த வேண்டும்; அரசு பள்ளிகளிலும், கிராம ஆலமரத்தடி கல்வியிடங்களிலும், தனியார் பள்ளிகளைப் போலவே 'திறந்த நிலை' [ஆங்கிலத்தில் : exposure ] இருக்க வேண்டும்; ஐந்தாம் வகுப்பு வரை ஹிந்தி போன்ற மொழிக் கல்வியை பயின்ற மாணவர்கள், ஆறாம் வகுப்பில் நுழையும் போது திடீர் என்று தங்கள் மூளைக்குள் திணிக்கப் படும் தமிழை புரிந்து கொள்ளும் அளவிற்கு ஆற்றல் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பன போன்ற பல 'சிம்ம சொப்பன' எதிர்பார்ப்புகளை சமச்சீர் கல்வி விதித்துள்ளது. இதெல்லாம் கிடைக்கப் போவதில்லை என்று எல்லோருக்கும் தெரியும். தெரிந்தும், ஊழல் ஒழிப்பு என்ற வார்த்தைக்கு மயங்கியதைப் போல, சமச்சீர் என்ற வார்த்தைக்கு மயங்கிவிட்டனர்.

பெற்றோர்கள், தங்கள் குழந்தை இரண்டு மாதங்களாக வீட்டிலேயே இருக்கின்றதே என்று யோசித்தனர். நியாயமான யோசனை. ஆனால், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, சமச்சீர் படப் புத்தகம் கைக்கு வந்ததும், சி.பி.எஸ். பாடத் திட்டத்தின் படி இணை வகுப்புகள் நடத்த அரசிடம் கோரிக்கை மனு வைத்துள்ளது எதைக் காட்டுகிறது? பாடத்திட்டம் சர்வதேச தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் இல்லை என்பதைத் தான்!

பல மெட்ரிக் பள்ளிகளில், ஹிந்தி போன்ற வேற்று மொழியை கற்றுக் கொண்டிருந்த மாணவர்கள், இந்த ஆண்டும் அதையே தொடர்ந்து படித்து வருகின்றனர். அவர்களுக்கு தனியாக ஹிந்தியில் தேர்வு நடக்குமா? இல்லை, இன்று வரை தமிழ் எழுத்தைக் கூட படிக்க இயலாத மாணவர்கள், தமிழ்க் குறள்களை தேர்வில் எழுதவேண்டுமா என்பது வியக்கத் தகுந்த கேள்வி!

தோல்வியில் துவண்ட திமுகவிற்கு இந்த சமச்சீர் கல்வி குளறுபிடி, பூஸ்ட் போன்று கிட்டியது. இரண்டு மாதங்கள் குழந்தைகள் தவித்த காரணத்தால், அவர்கள் நியாயத்திற்கு போராடுவதாய் எண்ணிக் கொண்டு, சமச்சீர் அபிமானிகள் அவர்களது பல மாத படிப்பை கெடுத்துவிட்டனர் என்பது வருந்தத் தகுந்த உண்மை!

அதே சமயம்,தவிற் முடியாத குறைகளை மக்களுக்கு விளக்காத, சமச்சீர் புத்தகங்களில் உள்ள குறைகளை மட்டுமாவது 'டெலிட் போர்ஷன்' என்று எப்போதும் போல் அறிவிக்காத, குறைகளை சரி செய்யுங்கள் என்று கோரும்போது கோபத்தை உமிழும் முதல்வர், இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்பதே நிதர்சனம்!

சமூகம் இன்னமும் 'ஊழல் ஒழிப்பு', 'சமச்சீர் கல்வி' என்ற வண்ண வார்த்தைகளுக்குத் தான் மயங்குகின்றன என்பதும், பொருளை முழுமையாய் அறிய முற்பட்டால், இதை விட மேண்மையான திட்டங்கள் கிட்டும் என்று அறிவதில்லை என்பதும், நம் பகுத்தறியும் திறனுக்கு சவால் விடுகின்றன.

http://puthu.thinnai.com/?p=3866

0 comments: