Pages

Monday, December 17, 2012

சென்னையில் சிறப்பு முத்திரைத் தாள்(special adhesive stamp) வாங்க வேண்டுமா?


ரயில்வே துறையில் இணையப் போகும் நான் Indemnity Bond-ல் ஓட்டுவதற்கு சிறப்பு முத்திரைத் தாள் வாங்க வேண்டி இருந்தது. அரசு பணியாளர்கள் விவரங்களை விளக்காமாக கூற மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த முத்திரைத் தாளை எங்கு வாங்க வேண்டும் என்ற ஒரு குழப்பத்திற்குள் நான் அகப்பட்டேன்.
தமிழ் நாடு அரசின் கருவூல இணைய தளத்தில் இந்த முத்திரைத் தாள் கீழ் கண்ட இடங்களில் கிடைக்கும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது:

 The Special Adhesive Stamps can be had from the following places in Chennai District 
 1. O/o. Assistant Superintendent of Stamps,  Collectorate Campus, Chennai-1 
  2. Egmore-Nungambakkam Sub Treasury,
 3. Perambur – Purasawalkam Sub Treasury,
 4. Fort – Tondiarpet Sub Treasury
 5. Mylapore – Triplicane Sub Treasury
 6. Mambalam – Guindy Sub Treasury   
 7. All District/Sub Registrar`s Office

நான் வசிப்பது திருவள்ளூர் மாவட்டத்தில். ஆகவே, எங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று இதை பற்றி விசாரித்துப் பார்த்தேன். இங்கு அது போன்ற எந்த தாளும் இல்லை என்றார்கள்.


அவசரமாக தேவைப்பட்டதால் உடனே சென்னை பீச் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றேன் (Collectorate campus). அங்கு விசாரித்த போது, எட்டாவது மாடியில், assistant superintendent of stamps என்ற பலகை கொண்ட ஒரு அறையில் கிடைக்கும் என்றார்கள்.
மேலே சென்று போது மணி மதியம் இரண்டு. பத்து மணி முதல் ஒன்றரை மணி வரை தான் கொடுப்போம். நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.
மறுபடியும் அடுத்த நாள் காலை பத்து மணிக்கே போய் நின்றேன். கீழே ஒரு பெரியவர் மனு எழுதிக் கொடுப்பார். வாங்கி வாருங்கள் என்றார்கள். கீழ் தளத்திற்கு வந்த போது, மரத்தடியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். விவரத்தை கூறியவுடன் முன்னதாகவே எழுதி வைத்திருந்த மனுவில்(கோர்ட் ஸ்டாம்ப் ஓட்டப்பட்டிருந்தது) என்னுடைய விவரத்தையும், எத்தனை ரூபாய்க்கு முத்திரைத் தாள் வேண்டும் என்ற விவரத்தையும் எழுதிக் என்னிடம் இருந்த Indemnity Bond-ஐ சேர்த்து பின் செய்து கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டு அலுவலகத்தில் கொடுத்தேன். ஒரு சலான் கொடுத்தார்கள். அதில் என்னுடைய விலாசம், முத்திரைத் தாள் மதிப்பு(எண்ணாகவும், எழுத்தாகவும்), கை எழுத்து ஆகியவற்றை நிரப்பி ஒரு அலுவலரிடம் கை எழுத்து வாங்கிக் கொண்டு SBI main branch வங்கிக்கு போகச் சொன்னார்கள்.
SBI வங்கி அந்த ரோட்டிலேயே சிறிது தூரத்தில் இருக்கிறது. இந்தியன் வங்கி, HSBC வங்கி ஆகியவற்றை கடந்து சென்றால் ஒரு பழைய காலத்து சிகப்பு கட்டிடத்தில் முதல் மாடியில் ஒன்பதாவது கவுண்டரில் அந்தச் சலானை கட்டலாம். முன்னதாகவே மற்றொரு SBI இருக்கிறது. அதில் நுழைந்துவிடாதீர்கள்.
அந்தச் சலானில் ­remitter’s copy என்ற பகுதியை கிழித்து வங்கி அலுவலர் என்னிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு மறுபடியும் எட்டாவது மாடிக்குச் சென்றேன். அங்கு அந்த தாளை வாங்கிக் கொண்டு ஸ்டாம்ப் எடுத்து வர சென்றார்கள். வந்தவுடன் என்னுடைய பெயரை கூப்பிட்டு சீல் அடித்துக் கொடுத்தார்கள்.
இந்த முறை முடிய ஒன்றரை மணி நேரம் ஆனது. ஸ்டாம்ப் தானே! போனால் ஒட்டிக் கொடுத்து விடுவார்கள் என்று நினைத்து கொட்டுவாயில் கிளம்பினால் அடுத்த நாளுக்கு உங்களை அலைய விடலாம். கவனமாக இருங்கள்.
இந்த தாள், ரூபாய் 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 1000, 2000 ஆகிய பிரிவுகளில் கிடைக்கிறது.  

Monday, December 10, 2012

லைஃப் ஆஃப் பை விமர்சனம்


                                                                                                       

டிசம்பர் ஒன்பதன்று அபிராமி ரோபோ தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன். இது Cast Away மாதிரி இருக்கும் என்று சிலர் சொன்னார்கள். ஆனாலும் இந்தியாவில், அதிலும் பாண்டிச்சேரியில் எடுத்த படம் என்பதால் போய் பார்த்தேன். அந்த நினைப்பு பொய் என்று தெரிந்தது. இது ஒரு மனிதனுக்கும், விலங்குமான தொடர்பு சம்மந்தப் பட்ட படம்.


எங்கள் வீட்டில் ஓர் நாட்டு நாய் உள்ளது. நாயுக்கும் எனக்குமான தொடர்பு மனிதத் தொடர்பை விட மேலானது. நான் என்ன பேசுகிறேன் என்று அதற்குப் புரியும். அது என்ன சொல்கிறது என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியும். ஆச்சர்யப் படும் விஷயம் என்னவென்றால், நான் தினமும் குளித்து, புதிய ஆடை அணியும் போது, என்னை நுகர்ந்து பார்த்து வாலாட்டும். தினமும் காலையில் என் மேல் கால் வைத்து எழுப்பும். 

அதே நேரம், இரண்டு முறை கடித்திருக்கிறது. முதல் முறை கடித்த போது அது சிறிய குட்டி. என்னை விளையாட அழைக்கும் நோக்கில் தொடையில் வாயை வைத்தது. புதிதாக வளர்ந்த கூர்மையான பல் அறியாமலே உள்ளே இறங்கி விட்டது. இரண்டாவது முறை கடித்த போது மூன்று வயது. அதனுடைய காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தேன். வலி தாங்காமல் கவ்வியது. பல முறை விளையாடும் போது தெரியாமல் நகம் படும். ஆனால் ஒரு முறை கூட என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு எதையும் செய்ததில்லை. எதிர்ப்பை தெரிவிக்க வாயைத் திறந்தாலும், பற்களை உள்ளே செலுத்தியதில்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், படத்தின் நாயகன், அவன் அப்பா நடத்தி வந்த சூவை(zoo) மூடிவிட்டு கனடாவுக்கு விலங்குகளை எடுத்துச் செல்லும் போது தனியாக மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து ஓர் சிறிய படகில் ஏறிக் கொள்கிறான். அப்பா, அம்மா, சகோதரன் எல்லோரும் மூழ்கி விடுகிறார்கள். நான்கு மிருகங்கள் மட்டும் தப்பிக்கின்றன. அவை இவனுடைய படகில் ஏறிக் கொள்கின்றன. அந்த நாயகன், எப்படி ஒரு பெங்கால் புலியுடன் பயணித்து கடலில் இருந்து தப்பிக்கிறான் என்பது தான் கதை. புலியுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதை படத்தில் அற்புதமாக காட்டி இருக்கிறார்கள்.


புலியும் நாயும் ஒன்றல்ல. ஆனால் புலியுடைய பல்வேறு செய்கைகளை நான் என் நாயிடம் பார்த்திருக்கிறேன். கம்பை எடுத்தால் ஒரு காலால் அதை தடுப்பது, சோம்பல் முறிப்பது, உட்காருவது இது எல்லாமே தத்ரூபமாக இருக்கிறது.

தொடக்கத்தில் ஒரு தமிழ் பாடல்! விலங்குகளை காண்பிக்கும் போது பின்னணியில் அந்த இசை காதுக்கு இனிமையாக இருந்தது. ஒரு ஓரங்குடன் குரங்கின் தாய்ப் பாசத்தை காட்டியது, நரியை சமாளிக்க முடியாமல் அந்த குரங்கும் ஜீப்ராவும் இறப்பது மனதை கனக்கச் செய்தது. வில்லனாக சித்தரிக்கப் பட்டுள்ள அந்த நரியை வேட்டை ஆட ‘come on’ என்று நாயகன் சொல்லும் போது, நரியை கொல்ல புலி பாய்ந்து வந்தது தான் படத்தின் ஹை லைட்! அந்த புலிக்கு அது ஒரு ‘introduction scene’ என்றே சொல்லலாம்.

பசிக்காத வரை தான் மிருகம் நல்லபடியாக இருக்கும் என்று யதார்த்தத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர். அது உண்மை தான். அதே நேரம், மனிதனும், மிருகமும் மனதளவில் இணக்கமாக வாழ வழி உள்ளது என்பதையும் உணர்த்தி இருக்கிறார்.

படம் முழுவதும் உள்ளோட்டமாக கடவுள் நம்பிக்கை வருகிறது. நாயகன், இந்தியாவின் முக்கிய மூன்று மதங்களை ஒரே நேரத்தில் பழகுகிறான். கடலில் தத்தளிக்கும் போது கடவுள் நம்பிக்கை அவனுக்கு உதவுகிறது. முடிவில், கப்பல் ஏன் மூழ்கியது என்று கேட்டு வரும் ஜப்பானிய அதிகாரிகளிடம் தன் கதையை சொல்கிறான். ஆனால் அவர்கள் ஒரு தவறை கண்டு பிடித்து அந்தக் கதையை நம்ப மறுக்கிறார்கள். அதனால்,
மிருகங்களுக்கு பதில் மனிதர்களை கதாபாத்திரங்களாக மாற்றி அதே கதையை வேறு விதமாக சொல்கிறான். இரண்டில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று கதை கேட்கும் நம்மிடம்(நம் பிரதிநிதியாக படத்தில் ஒருவர் இருக்கிறார்) கேட்கிறான். நம்மைப் போலவே அவரும் டைகர் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார். அப்படியானால் நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்று சொல்கிறான்.


ஒரு தீவில் பகல் முழவதும் நிம்மதியாக வாழும் உயிரினங்களுக்கு இரவில் அத்தீவே எதிரியாகிறது. அங்கு உள்ள நீரில் ஒருவகையான ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இதை என்னால் நிரூபிக்க முடியவில்லை. ஓரங்குடன் குரங்கு கடலில் மிதக்கிறது என்று நான் சொன்னேன். அதை அவர்கள் நம்பவில்லை. ஆனால் இதெல்லாம் உண்மை. நான் பார்த்தேன்- என்று கூறி கடவுள் நம்பிக்கையை நியாயப் படுத்துகிறான்.

இந்த வாதத்திற்கு கண்டிப்பாக விஞ்ஞானத்திடம் பதில் உள்ளது. ஆனால் உணர்வு சம்மந்தமான படத்தில் அந்தக் கேள்விகள் தேவை அற்றவை. ஒரு நம்பிக்கை நன்மை செய்தவரையில் நாம் எந்த கேள்வியை எழுப்பப் போவதில்லை. எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் ஒருவனிடம் கடவுள் நம்பிக்கை இருந்து விட்டுத் தான் போகட்டுமே!   

Sunday, December 9, 2012

DTH தொழில் நுட்பம் பற்றி கமலின் பேச்சு!



DTH ஒரு புதிய பரிணாமம்:

புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும்கூட உலக வழக்கம்.

உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம் மனப்பாங்கு நீடிக்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்’ என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.

ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – ‘இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்… உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்க வைக்கும் முயற்சி’ என்று என்னைப் பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை.

ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.
இந்த DTH என்பது என்ன? எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.

சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH. இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று. என் படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு வி.ரூ வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?
DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தியேகக் காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.

விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.

DTH வசதி தமிழக ஜனத்தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.

7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரி கொண்டு போவதைத் தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள DVDக் காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.

திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.

இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம் கெடும் என்று எதிர்த்துத் தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது. பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ள ஒரு பக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திர்கும் வீட்டில் மின் விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?

முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

-கமல் ஹாசன்

Saturday, December 8, 2012

கமல் ஹாசனின் DTH முயற்சி திரை அரங்கு உரிமையாளர்களை பாதிக்காது- சில காரணங்கள்

                                                       

விஸ்வரூபத்தை DTH ல் வெளியிட முதல் முறையாக கமல் முயற்சி எடுத்துள்ளார். இதைப் பற்றி தயாரிப்பாளர்களுடனும், திரை அரங்கு உரிமையாளர்களுடனும் கலந்து ஆலோசித்திருக்கிறார்.

இந்த முடிவு தியேட்டர் உரிமையாளர்களை நஷ்டப் படுத்தாது என்பது தான் கமலின் வாதம். விளம்பரம் அதிகமாகும்; இதன் மூலம் மக்கள் திரையரங்கிற்கு அதிகமாக வருவார்கள் என்று அவர் சொல்கிறார்.

ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் இருக்குமாம். இதை எல்லோரும் ஏற்க மாட்டார்கள். தனியாக படம் பார்க்கச் செல்பவர்கள் எல்லோரும் அரங்கத்திர்க்கே வருவார்கள். திருட்டு விசிடியில் படம் பார்க்க விருப்பம் இல்லாதவர்களால் தான் இப்போது படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இதை எதிர்த்து அபிராமி ராமநாதன் விடுத்துள்ள எச்சரிக்கையில், கிரிகெட்-ஐயும் திரை அரங்கையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

அவர் சொல்வது போல கிரிகெட்-ஐ டிவியில் ஒளிபரப்பிய பொது ஏற்பட்ட மாற்றத்தை போல இங்கு நிகழாது. காரணம்,

கிரிகெட்-ஐ மைதானத்தில் பார்ப்பதை விட டிவியில் தான் சிறப்பாக பார்க்க முடியும். ஆனால் படத்தை திரையரங்கில் பார்க்கும் போது கிடைக்கும் பார்வை அனுபவத்தை டிவியில் பெற முடியாது.

வீரர்களை அருகில் காண்பது மைதானத்தில் அரிது. டிக்கெட் வாங்க கால் கடுக்க நிக்க வேண்டும். ஆனால் திரையரங்கில் அவ்வாறு இல்லை.

இதனால் ஒரு வேளை டிவியில் பார்க்க முடியாவிட்டால் திரை அரங்கிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்றே எல்லோரும் யோசிப்பார்கள். ஓரிடத்தில் நான்காயிரம் பேர் கூடி நின்று பார்க்க நினைக்க மாட்டார்கள்.


திரை அரங்கு உரிமையாளர்களின் பயம் நியாயமானதே. அவர்களுக்கு இதை எல்லாம் சொல்லி புரிய வைக்க நேரமாகும் என்று அறிந்தே ஒரு மாதம் முன்பே இந்த முடிவை கமல் எடுத்திருக்கிறார். அவர் அறிமுகம் செய்த தொழில்நுட்பங்கள் எல்லாம் அவரை தவிர திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் பயனளித்து வந்திருக்கின்றன. இன்று டி.டி.எஸ். இல்லாத திரையரங்கை காண முடிகிறதா?

Sunday, May 27, 2012

தன்யாவின் பகிர்வும், தமிழக மக்களின் எதிர்ப்பும்


இராக் மீது எண்ணைக்காக அமெரிக்கா தொடுத்த போரைதீவிரவாத தடுப்புப் போர்” என்று பொய் சொன்னது அமெரிக்க அரசு. அதை அம்மக்களும் நம்பினார்.Britney spears என்ற புகழ் பெற்றப் இசைக் கலைஞரிடம் இது பற்றிக் கேட்ட போது நாம் நம்முடைய President - நம்ப வேண்டும் என்றார். அரசின் சூழ்ச்சியை மக்கள் எவ்வளவு கண்மூடித் தனமாக நம்புகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இங்கு நம் பக்கத்து மாநிலமான கர்நாடக நமக்கு தண்ணீர் தர மறுக்கிறது. நம் உரிமையை நாம் பெறுவதற்குப் போராடினால் அதை பிச்சை என்ற வகையில் சித்தரிக்கிறது கர்நாடக அரசு. இதையும் அம்மக்கள் நம்பி நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வில்லாமல் தமிழகத்தவரை கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கு ஒரு உதாரணம், சமீபத்தில் Facebook- கலக்கிய ஒரு
Controversy. தன்யா என்ற நடிகை, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி Play
off சுற்றுக்குள் நுழைந்ததை அடுத்து ஒரு status போட்டுள்ளார். அதில் நாம் தண்ணீருக்காகமின்சாரத்திற்காக பிச்சை எடுப்பதாகவும், இந்த play off சுற்று வாய்ப்பையும் அப்படியே வாங்கியுள்ளதாகவும் எழுதியுள்ளார். இதை எதிர்த்து பல சென்னை வாசிகள் அக்னியை கக்கியுள்ளனர்.”We hate Dhanya” போன்ற பக்கங்களை தொடங்கி ஆபாச வார்த்தையில் திட்டி தங்கள் எதிர்ப்பை தெரவித்துள்ளனர். இதை அடுத்து தன்யாவின் அபிமானிகளும், தண்ணீர் பிரச்சனையில் தங்கள் மாநிலத்தை நம்பும் மக்களும், ‘We love dhanya’ என்ற பக்கத்தை தொடங்கி அந்த நடிகைக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க சென்னை வாசிகளை ஆபாசமாக திட்டியும், எதிர்த்தும் எழுதியுள்ளனர்.



இதையெல்லாம் எதிர்பார்க்காத தன்யா, தன்னுடைய ட்விட்டர் வலை தளத்தில் "இனி சென்னை பக்கம் வரவே மாட்டேன். தமிழக திரை உலகையும் விட்டுப் பிரிகிறேன். நான் ஒரு நடுத்தர குடும்பத்துப் பெண். சினிமாவில் பெரிதாக சாதிக்கவும் இல்லை. நண்பர்களுடன் Room எடுத்து தங்கித் தான் வாய்ப்புகளை பெற்றேன். இந்த விவகாரம் என்னையும் என் குடும்பத்தையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனக்கு எதிரான பேச்சுக்கள் உயிர்பயத்தை கொடுத்துள்ளதால் இங்கிருந்து கிளம்புகிறேன்" என்று மே 26 ஆம் தேதி சொல்லிவிட்டுக் கிளம்பினார். இதை ஒரு புரட்சிப் போராட்ட வெற்றியாக கருதிய அனைத்து எதிர்ப்பாளர்களும் "தமிழ் வாழ்க!", "தமிழன் நா சும்மாவா?" என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அந்த நடிகை பொதுத் தளத்தில் எல்லோரையும் போல் உண்மை நிலவரங்களை அறியாமல் அந்த status எழுதியது தவறு. அதே சமயம், இந்த விவகாரத்தை ஒரு புரட்சியாக கையில் எடுத்துப் போராடிய 'தமிழ் திலகங்களை' பற்றி யோசிக்கும் போது ஒரு கேள்வி எழுகிறது. அந்த நடிகையை ஆபாசமாக திட்டி பணிய வைத்தது ஒரு வகையில் வெற்றி தான் என்றாலும், அந்த நடிகையோ, கர்நாடக மக்களோ தங்கள் தவறை உணரவில்லை. உங்கள் மனதை புண் படுத்தியதற்கு மன்னிக்கவும் என்று தான் அந்த நடிகை எழுதியுள்ளாரே தவிர, உண்மை தெரியாமல் பேசிவிட்டேன் என்று அவர் சொல்லவில்லைஅவர் பேசிய வார்த்தைகளில் உண்மை இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் எந்த பகிர்வும் எதிர்ப்பாளர்களின்  தளங்களில் இல்லை. உண்மையை அறியாத கர்நாடக மக்கள் இவர்களது எதிர்ப்புக் குரலை அடுத்து உண்மையை அறிய முற்பட்டார்களா என்றால் அதுவும் இல்லை. ஏட்டிக்குப் போட்டியாக அந்த நடிகையை ஆதரித்தனர். இதற்கும் அவர்களுக்கு உண்மையை புரிய வைக்கும் முயற்சியில் இப்போராளிகள் இறங்காதது முக்கிய காரணம்.

இப்போது இந்த சண்டையால் உருவான ஒரு விளைவு, இரு பக்கத்திலும் "தமிழர்கள் என்றாலே பிச்சைக் காரர்கள்" என்ற நினைப்பும், "கர்நாடகத்தவர்கள் என்றாலே நம் உரிமைகளை பறிப்பவர்கள்" என்ற நினைப்பும் வலுவாக பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. உண்மையை அறியவும், அறிவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. இது இரு பக்கத்தில் உள்ள இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்களின் மனதில் சகோதரத்துவத்தை மேலும் சீரழிக்கும் ஒரு புரட்சியாகவே முடிவுக்கு வந்துள்ளது. இனி கர்நாடகம் நமக்குத் தண்ணீர் தராமல் போகும் போது, "இவர்கள் செய்த காரியத்திற்கு இந்த தண்டனை கொடுக்க வேண்டியது தான்" என்ற எண்ணமே அவர்கள் மனதில் இருக்கும். தங்கள் அரசு தவறு செய்கிறது என்ற உண்மையை அறியும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப் பட்டிருக்கிறது. இதுவே இந்த போராட்டத்தால் கிட்டிய வெற்றி! வாழ்க உங்கள் புரட்சி!

ஒரு மாநிலத்தின் மக்கள் தவறு செய்கிறார்கள் என்றால் அதற்கு சுயநலம் ஒரு முக்கிய காரணம். இதற்கு கர்நாடகமும் விதிவிலக்கல்ல. தமிழகமும் விதிவிலக்கல்ல.
 கூடங்குளம் என்ற இடம் தமிழகத்தின் உள்ளே தான் இருக்கிறது. இங்கு அணுக் கழிவுகளை ஆபத்தில்லாத முறையில் எப்படி வெளியேற்றப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு இன்று வரை புதைத்து வைப்போம் என்ற பதில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கும்  நிலையில், போராட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் முடக்கியதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் இந்த தமிழக புரட்சியாளர்கள். இதற்கு முக்கிய காரணம், அரசும், விஞ்ஞானிகளும் சொன்னதை அப்படியே நம்பும் பழக்கம் தான்.

கர்நாடகத்தைப் போல் நம் அரசு இதே தவறை செய்துவிட்டு அதற்கு ஒரு காரணம் சொன்னாலும், இந்த மக்களும் நம்பிக் கொண்டு தான் இருப்பார்கள். இன்று மின்சாரம் வேண்டும் என்பதற்காக எதிர்காலத்தில் அணுக் கழிவுகளால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை பற்றி யோசிக்கக் கூட மறுப்பவர்கள் இதை செய்ய மாட்டார்கள் என்பதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை


தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும். உண்மையை பரப்பும் புரட்சியே நிரந்தத் தீர்வை கொண்டு வரும். இதை என்று இவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. தற்காலிக, கட்டாயப் பணிதல், அவர்கள் மனதினுள் புகையை கிளப்பி விடும். அது என்று வேண்டுமானாலும் நெருப்பாக மாறலாம். அப்போது இந்த புரட்சியாளர்களின் முயற்சி BACK FIRE ஆகி நம்மை
யும், கர்நாடகத்தை நம்பியிருக்கும் டெல்டா விவசாயிகளையும் அழித்தால் இந்த பக்குவமில்லா போராட்டமே அதற்கு காரணமாய் அமையும். அப்போது இறங்கி வந்து போராட்டம் நடத்தை இந்த சிகாமணிகளுக்கு நேரம் இருக்குமா?