Pages

Wednesday, July 6, 2011

அதீதம்.காம்: நாய் படும் பாடு!

"ஹேய், ஹேய்! பாத்து. அதுக்கு கழுத்து வலிக்கப் போகுது. புடிச்சு இழுக்காத டா." ஆனந்த, தான் ஆசையாய் வாங்கிய நாய் குட்டியை பிடித்து ஓடி விளையாடுவதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் சீதா. அவ்விருவரும், தன் வீட்டில் திடீர் என புகுந்த இலவம்பஞ்சுச் செடியின் விடயத்தை கேட்டறிந்து சில நிமிடங்கள் தான் ஆயிருந்தது.

பல நாட்களாக மகிழ்ச்சியின் வருகையை வேண்டிக்கொண்டிருந்த சுதாகருக்கு, அவ்விருவரின் அகண்டக் கண்களும், புன்னகை உதடுகளும் ஒன்று சேர்ந்து, இது தான் மகிழ்ச்சி என்று எழுதிக் காண்பித்தன. சுதாகரின் வீட்டை காண்போருக்கு,

"பூபாளத்தின் அழகினை சிதறலாய் தூவிவிட்டுச் சென்றாரோ தேவர்!" என்ற ஆச்சர்யம் ஏற்படத் தான் செய்யும். அத்தகைய அம்சங்கள் பொருந்தியது அவ்வீடு. எங்கு பார்த்தாலும் பூச் செடிகளும், படர் கொடிகளும், புல் தரையுமாய், அழகை தாரைவார்த்து கொண்டு வந்ததைப் போன்ற உணர்வு ஏற்படும்.

அத்தகைய வீட்டில் இன்று, மழலைக் குரலில், குறைவில்லாமல் குரைத்துக் கொண்டிருந்தது, கிக்கு. ஆம்! ஆனாத் தன் நாய்குட்டிக்கு காது குத்தாமலே பெயர் சூட்டிவிட்டான்.

தன் கிக்குவை குளிப்பாட்ட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. சீதாவின் சுடிதாரை வாயில் கடித்தபடி, அவளை வாசலுக்கு அழைத்து வந்து,

"அம்மா, கிக்குவை குளிப்பாட்டனும். எனக்கு தண்ணி பக்கெட் எடுத்துட்டு வா. சோப்பு-உம் கொண்டு வா", என்று மூக்கால் முனகினான்.

"அம்மா சமையல் செய்யணும் இல்ல? உங்க அப்பா கிட்ட கேளு டா", அவன் தாடையை தொட்டுக் கொஞ்சினாள் சீதா.

"போம்மா. அப்பா வாங்கி குடுத்ததொட சரி. கண்டுக்கவே மாடேங்கிறாரு. கேட்டா வேலை இருக்கு-ன்னு சொல்றாரு. நான் சின்ன பையன் தானே? என்ன பக்கெட் தூக்கச் சொன்ன எப்படி? கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் படம் ஓட்டுறாரு", என்று தலை குனிந்து தரையைப் பார்த்தான். அவன் செய்கையும், சொற்களும் அன்னையை அடிமை படுத்த, அவன் கேட்டபடி ஒரு வாளி தண்ணீரும், ஒரு சொம்பும், குளித்து முடித்தவுடன் துடைக்க துணியும் கொண்டு வந்து வைக்கப் பட்டது.

"இதோ பாரு. நல்லா கேட்டுக்கோ. இந்த சோப்பை உன்னோட சோப்போட சேக்க கூடாது. தனியா வெக்கணும். அப்புறம், குளிப்பாட்டும் போது கழுத்துக்கு கீழ தான் தண்ணி ஊத்தணும். பாத்து செய். சரியா?" தன் அம்மாவின் கட்டளைகளை காது கொடுத்து கேட்டுவிட்டு,

"சரி. நான் பாத்துக்கறேன்", என்று கூறிவிட்டு ஓடினான். கிக்குவின் அருகில் சென்றதும் உதட்டில் கை வைத்து ஏதோ யோசித்தான். சில நொடிகளில் மறுபடியும் வீட்டினுள் ஓடிச் சென்று,

"அம்மா, எனக்கு பலகா வேணும்" என்றான்.

"எதுக்கு டா பலகா?", அவன் உயரத்திற்கு இறங்கி வந்தாள் சீதா.

"குடுன்னா குடு. பெரியவங்க கிட்ட கேள்வி கேட்கக் கூடாது", என்று தன் அம்மா வீட்டுப் பாட புத்தகத்தை கேட்கும் போது கூறும் வசனத்தை சீதாவுக்கே திரும்பக் கொடுத்தான்.

"பார் டா. ஹ்ம்ம். இந்தா", என்று சீதா அவனிடம் பலகையை கொடுக்க, அதை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு திரும்பி ஓடினான். அவன் செய்யப் போகும் சேட்டைகள் என்னவாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், சீதா தன் கணவனிடம் சென்றாள்.

"சுதா. இங்க வாயேன். அவன் என்ன செய்யப் போறான்னு பாக்கலாம் வா", கணினியில் மூழ்கியிருந்த சுதாகரை அருங்காட்சி ஒன்றை காண்பிக்க அழைத்துச் சென்றாள். அவ்விருவரும் எதிர்பார்த்தபடியே, வாசலை அடைந்ததும் கண்ட காட்சி, சுதாகரின் நெற்றியில் சுருக்கங்களைக் கலைத்தது.

சீதா, தன் வாயில் கை வைத்துக் கொண்டு சத்தம் செய்யாமல் சிரித்தாள். அவள் வாயை போத்திவிட்டு, சுதாகர் காட்சியை ரசிக்கலானான்.

அங்கு, சீதா கொடுத்த பலகையை கீழே வைத்து, அதன் மேல் உட்கார்ந்து கால்களை நீட்டி, கிக்குவை தன் கால் மேல் மல்லாந்து படுக்க வைத்து, குழந்தையை குளிப்பட்டுவதைப் போல மசாஜ் கொண்டிருந்தான் ஆனந்த்.

சத்தமிடாமல் அவனை நெருங்கிச் சென்று இருவரும் பார்த்த பொது, கண்களை மூடிக் கொண்டு, சுகமாக 'மசாஜ்'- அனுபவித்துக் கொண்டிருந்தது கிக்கு. அதை பார்த்தவுடன் சிரிப்பை அடக்க முடியாமல் 'குபீர்' என்று வெடித்துவிட்டாள் சீதா.

"என்ன? நான் ஒழுங்க குளிப்பாட்டுறேனா-ன்னு பாக்குறீங்களா? இங்க பாருங்களேன். தூங்கிடுச்சு" என்று சிணுங்கிச் சிரித்தான் ஆனந்த. அவன் ஆனந்தத்தை பெற்றோருடன் அருகில் இருந்த வீட்டுக்காரியும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனந்த்,

"அம்மா இங்க பாரு. கிக்கு-ன்னு பேர் வெச்சோம் இல்ல? காலால ஒரு கிக் விடுத்தது பாரு", என்று கூறியதும், சீதா தெருவுக்கே கேட்கும் படி சிரித்தாள். அதை பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு வேதாவிற்கு, மூளையில் கடுகு வெடித்தது.

"செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு, எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க பாரேன்", தன் அருகில் நின்றிருந்த கணவர் நாராயணனிடம் பல்லை கடித்தாள்.

"விடு விடு. ஒரு நாள் நமக்கு செஞ்சதுக்கு அனுபவிக்கும் அந்த குடும்பம்"

"அப்படி விட முடியாதுங்க. நம்மை பார்த்தும் அதுங்க போறாம படனும்"

"என்ன செய்யணும்-னு சொல்ல வர?"

"நீங்களும் ஒரு நாய் குட்டி வாங்கிட்டு வாங்க. அவங்க முன்னாடி சந்தோஷமா இருந்து காமிப்போம்", என்று உழைப்பளியைப் போல் கையை உயர்த்தினாள்.

"ஏய். என்ன விளையாடுறியா? நாய் வளக்குறது சும்மா இல்ல. தொல்ல புடிச்ச வேலை. நமக்கு அவங்கள மாதிரி குழந்தையும் இல்ல. என்னால உன் பாவாடை, ஜாக்கெட் மட்டும் தான் தோய்க்க முடியும். கூடுதலா அதோட ஆய் அள்ள முடியாது"

"ஆமா. எப்ப பாத்தாலும் தூங்கிகிட்டே இருந்தா எப்படி கொழந்த பொறக்கும்? பேசாம வாங்கிட்டு வாங்க. மத்ததை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்", தன் 'வீக் பாயின்ட்'-இல் கை வைத்துவிட்ட பின், நாராயணனுக்கு வேறு வழி இல்லை. நாய் வாங்கக் கிளம்பினார்.

"நல்ல நாயா பாத்து வாங்கிட்டு வாங்க. கருப்பு கலரா பாத்து வாங்குங்க. அப்போ தான் ஆய்- படுத்து பிரண்டாலும் வெளியே தெரியாது" என்று அவர் பயில் பணம் வைத்தாள் வேதா. அதை எடுத்து எண்ணிவிட்டு,

"என்னது? 500 ரூபாய்க்கு எங்க நாய் தருவான்?"

"பேரம் பேசுங்க. முடியலேன்னா காரண்டி இல்லாத பீசா பாத்து புடிங்க"

"ஏய் என்ன நீ? ஏதோ எலக்ட்ரானிக் ஐடம் வாங்குறதைப் போல பேசுற"

"ஆமா. உங்களுக்கு தான் சமத்து பத்தாது. சொல்லி அனுப்பணும் இல்ல?"

"நல்லா சொன்ன போ", கொடுத்த பணத்தை பயில் திணித்துவிட்டு, 'பெட் ஷாப்' என்ற பெயர் கொண்ட கடையை நோக்கி நடந்தார். அதற்குள்,

"பிரேமா.பிரேமா..விஷயம் தெரியுமா? என் புருஷன்; சிங்கக் குட்டி; ஒரு நாய் குட்டி வாங்கப் போயிருக்காரு டீ", என்று காற்றில் செய்தியை பரப்பினாள் வேதா. அது பிரேமாவின் காதையும்,தன் வீட்டில் ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த சுதாகரின் காதையும் கடித்தது.

"சீதா. பக்கத்துக்கு வீட்டு பிரேமாவுக்கு சொல்றா மாதிரி நமக்கும் சொல்றாளாம்" என்றார் திரையை பார்த்தபடி.

"என்னவாம்?"

"அவ புருஷன் நாய்க்குட்டி, சிங்கக் குட்டிய வாங்க போயிருகாராம்", என்று மாற்றிச் சொல்லி சிரித்தார்.

"வீம்புக்கு செய்ராளா. அந்த நாய் என்ன பாடு படப் போகுதோ! புருஷனையே இந்த மொத்து மொத்தறா"

"பாக்கலாம்", நடப்பவைக்காக காத்துக்கொண்டிருந்தனர் இருவரும். சில மணி நேரங்களில், நாராயணம் வீட்டிற்கு வந்தார். அவர் கையில் எலும்புக் கூடைப் போன்ற ஒரு கருப்பு 'நாட்டு' நாய் இருந்தது.

"என்னதிது?", கரண்டியுடன் வேதா.

"நாய் குட்டி"

"அது தெரியுது. பக்கத்து வீட்டுலையும் நாட்டு நாய் தான் வெச்சிருக்காங்க. ஆனா எவ்வளவு சுட்டியா இருக்கு? எவ்வளவு பளபளப்பா இருக்கு? இது சூம்பிப் போன சுண்ணாம்புக் கட்டி மாதிரி இல்ல இருக்கு?"

"நீ குடுத்த காசுக்கு இது தான் கெடச்சுது"

"யோவ்! உன்ன பத்தி எனக்கு தெரியாது? குடுத்த பணத்தை பாக்கெட்- போட்டுக்கிட்டு, தெருவுல கிடந்த நாய தூக்கிட்டு வந்திருப்ப"

"ஐயோ இல்ல! உண்மையிலேயே வாங்கிகிட்டு தான் வந்தேன். வேணா ரசீது இருக்கு. பாரு" என்று காகிதத்தை நீட்டினார்.

"சரி அப்படி மூலைல கட்டு. சாம்பார் கொதிக்க வெச்சிட்டு வந்து வெளையாடுவோம்", என்று உள்ளே சென்றாள்.

நாராயணன், வாசலில் இருந்த ஒரு தூணில் கையிற்றை கட்டி வைத்துவிட்டு உள்ளே சென்றார். அது வரை நடுங்கிக் கொண்டிருந்த நாய் குட்டி, சற்று நிம்மதி அடைந்தது. சில நிமிடங்கள் கடந்தன.

"என்னங்க. வந்து பாருங்க. நாய் குட்டி வந்திடுச்சு"

"சரி வா. அடுத்தவன் பிரச்சனையை தான் முதல்ல முக்கியம்" என்று சத்தமில்லாமல் சுவற்றை அடைந்தார் சுதாகர்.

"திறந்திடு சீசேம்!" என்று கீச்சிட்டாள். சுதாகர் அவள் வாயை போத்திவிட்டு, சுவற்றில் தான் வைத்திருந்த 'செங்கல்' கதவை உருவி எடுத்தார். அந்த ஓட்டையின் வழியாக இருவரும் நாய் குட்டியை பார்த்தனர்.

அது வரை மலர்ந்திருந்த இருவரின் உதடுகளும், கண் முன்னால் தெரியும் காட்சியைப் பார்த்ததும் வாடி வெந்தது.

"என்ன டீ இது! இதுங்களுக்கு மனசாட்சியே இல்லையா? பாரு, நாய் குட்டிய கட்டெறும்பு கடிக்கிது. அத கூட கவனிக்காம கட்டிட்டு போயிட்டான் பாரு பரதேசி"

"பாவமா இருக்கு. சொல்லலாமா?"

"சொன்னா கேக்குங்களா?"

"சொல்லிப் பாப்போம்", ஓட்டையை திரும்பவும் மூடிவிட்டு, இருவரும் எழுந்து சுவரோரமாக நடந்தனர். சமையல் அறையில் வேதா சாம்பார் கொத்திக்க வைத்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா. நாய் குட்டிய எறும்பு கடிக்கிது. வேற எடத்துல கட்டுங்க", என்றாள் சீதா.

"எங்களுக்கு தெரியும். உங்க வேலைய பாருங்க" என்று முகத்தை திருப்பிவிட்டு,

"யோவ்! கண்டவங்க கிட்ட எல்லாம் எதுக்கு பேச்சு வாங்க வெக்கிற? அந்த சனியனை இழுத்து வேற எடத்துல கட்டு", என்று பாத்திரத்தை தூக்கி அடித்தாள்.

"பாரு. இப்போவே நாய சனியன்-ன்னு சொல்றா. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போறாளோ!" என்று தலையில் அடித்துக் கொண்டாள் சீதா.

அடுத்த சில நாட்களில், கூச்சலிலும், கும்மாளத்திலும் சுதாகரின் வீடு களித்தது. புது வரவுக்கு போட்டி போட்டுக் கொண்டு பசி ஆற்றுவதும், அதன் பால் வாசனையை நுகர்வதும், தூங்கி வழிவதை ரசிப்பதுமாக குதூகலித்தது.

"நமக்கு இவன் மகன். அவன் மேல படுத்திருக்கே ஒரு வாண்டு,அது அவன் மகன். ரெண்டு பெரும் ஒரே நேரத்துல கொழந்தையா படுத்து தூங்குறாங்க பாரேன்",என்ற நினைப்புடன், யாருக்குமே கிடைக்காத ஒரு பாக்கியத்தை பெற்றுவிட்டோம் என்ற நிம்மதியையும் நனைத்து, காதலில் கைகள் இணைத்தனர் பெற்றோர் இருவரும். தங்கள் கண்முன் நடக்கும் அதிசயத்தை படமாக பிடித்து, அதை பார்த்துக் கொண்டே கண் அயர்ந்தனர் சில மணித்துளிகளில்.

ஒருவரின் தோளில் மற்றொருவர் சாய துயில் கொண்டிருந்த இருவரின் நினைவும், ஒரே நேரத்தில் எழுந்தது, இடியாய் முழங்கிய இரு குரல்களில் ஓசை கேட்டு.

"என்ன ஆச்சு? யார் கத்துறது?", கண்களை கசக்கி விட்டு இருவரும் வெளியே சென்று பார்த்தனர். அங்கு வேதாவும்,நாராயணனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை விக்க பிரேமா போராடிக் கொண்டிருந்தாள்.

"ஏன் அடிச்சிக்குறாங்க?", ஒரே நேரத்தில் இருவருக்கும் எழுத கேள்வி, நெரிசலை உண்டாக்க,

"பிரேமா. பிரேமா..என்ன ஆச்சு?" கேள்வியை, விடயம் அறிந்தவளிடம் சேர்பித்தனர்.

"அதை ஏன் கேட்குற! கொஞ்ச நாளா நீங்க உங்க வீட்டுக்குள்ளயே இருந்துட்டீங்களா. உங்களை வெறுப்பேத்த தான் அந்த நாயையே வாங்கிச்சு இந்த பொம்பள. உங்க தலையை பாக்க முடியலேன்னு தெரிஞ்ச உடனே, அந்த நாய கண்டுக்கவே இல்ல. அது பசியில வீல் வீல்-னு கத்திக்கிட்டே இருந்திச்சு"

"அய்யயோ! எங்களுக்கு கேக்கவே இல்லையே. வெயில்-னு கதவை எல்லாம் மூடி ஏசியில இருந்தோம்"

"கேளு. கொஞ்ச நேரம் அதட்டிப் பாத்தா. அந்த நாய் கேக்குறா மாதிரி தெரியல. உடனே கரண்டிய எடுத்து ஒரு விடு விட்டா. '',''-ன்னு கத்திக்கிட்டே, சணல் கயிறை அறுத்துகிட்டு ஓடிப் போச்சு குக்கி"

"குக்கி ?", விவரமாக பேசிக் கொண்டிருந்தவள் எதோ உளறுகின்றாளே என்று கேள்விக் குறி வைத்தார் சுதாகர்.

"ஆமா. நீங்க கிக்கு-ன்னு பேரு வெச்சீங்க இல்லையா? அவங்க கிக்குவ திருப்பி, குக்கி-னு பேரு வெச்சாங்க"

"அல்ப அலமேலுவா இருப்பா போலயே! அப்புறம்?"

"அப்புறம் என்ன. ஐநூறு ரூபா போச்சேன்னு திரும்பவும் அந்த அப்பாவி மனிஷன அடிச்சிட்டு இருக்கு அந்த பொம்பள"

"சே! பஜாரி பா", என்று கூறிவிட்டு திரும்பிய சீதாவை நிறுத்தி,

"ஆமா, அப்படி உங்களுக்குள்ள என்ன தான் பிரச்சனையை? உன்னை வெறுப்பேத்த ஒரு வாயில்லா ஜீவனை போட்டு ஹிம்சிக்கிற அளவுக்கு நீங்க என்ன தான் செஞ்சீங்க?", என்று வினா எழுப்பினாள் பிரேமா.

"அதுவா! நீ இங்க குடி வந்ததுக்கு முன்னாடி, ஒரு நாள், எங்க வீட்டு குப்பை தொட்டியிலிருந்து ஒரு பால் கவர் பறந்து போய் அவங்க சமையல் அறைக்குள்ள விழுந்துடுச்சு. அது தான் காரணம்"

"அட சீ! இந்த காரணத்துக்காகவா இவ இவ்வளவு பிகு செய்றா? என்ன மாதிரி மனிஷி இவ!!"

"எனக்கும் அது தான் புரியவே இல்லை. எல்லா பணக்காரங்களும் திமிரா இருப்பாங்க-ன்னு ஒரு நினைப்பு அவளுக்கு. ஆனா, இவ இப்படி செய்யிறதால, நான் ஏழைகளுக்கு செய்யும் உதவி இல்லேன்னு ஆயிடுமா? என் வேலையே, நம்ம விவசாயிங்களுக்காக வெளி நாட்டு பணக்காரங்க கிட்ட இருந்து டொனேஷன் வாங்குறது தான்", என்றார் சுதாகர்.

"! நீங்க எப்ப பாத்தாலும் கம்பியூட்டர் முன்னாடி உக்காந்துட்டு இருக்குறதுக்கு காரணம் அது தானா?"

"ஹ்ம்ம். சரி சீதா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் வெளியே போயிட்டு வரேன்", தன் வண்டியை வெளியில் எடுத்து கிளம்பினார். சீதா, ஆனந்த்- எழுப்ப, பிரேமாவுக்கு விடை கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

வேதாவும், நாராயணனும் சண்டையை நிறுத்துவதாய் தெரியவில்லை. எக்கேடு கேட்டு போகட்டும் என்று கை கழுவிவிட்டு, பாத்திரம் துலக்க மண்ணையும், நாரையும் எடுத்தாள் பிரேமா.

வெளியே சென்ற சுதாகர், சில நூறு அடி தூரம் சென்றதும் விநோதமாக ஒன்றைப் பார்த்தார். தன்னை அறியாமல் அவர் இடது கை, க்ளட்சிலிருந்து விடுபட்டது. இருபது கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த வண்டி, தடால் என்று இருந்த இடத்திலேயே நின்றது.

அதை சற்றும் எதிர்பாராமல் வண்டியின் மேல் உட்கார்ந்திருந்த சுதாகர், பிடி தளர்ந்து கீழே விழுந்தார். அவர் கைகளில் கொஞ்சமாக சிராய்த்து. ஆனால், அதை கண்டு கொள்ளாமல், தான் பார்த்த விநோதத்தை விளங்க அறிய, விரைவாக அவ்விடம் நோக்கி நடந்து சென்றார்.

அதை நெருங்க நெருங்க, உண்மையும் விளங்கியது. அவருக்கும், மற்றவர்களுக்கும் தெரியாத ஒன்று, நடந்து முடிந்தபின் புரிந்தது. சில மணி நேரம் முன்பு நிகழ்ந்தவை, கற்பனையாய் அவர் கண்களில் தெரிந்தது.

"ஏய் சனியனே! சும்மா இருக்க மாட்ட? இரு வரேன்",வழக்கம் போல்,கொதிக்க வைத்துக் கொண்டிருந்த சாம்பாரிலிருந்து எடுத்த கரண்டியை வாசல் வரை எடுத்துச் சென்று, வீல் வீல் என்று குறைத்துக் கொண்டிருந்த நாயின் மேல் தூக்கி எறிந்தாள் வேதா. அது, சூடும், வலியும் தாளாமல்,

"....." என்று கத்திக் கொண்டே சணல் கயிறை அறுத்துக் கொண்டு வெளியே ஓடியது.

"யோவ்! ஓடுது பாரு யா. புடி புடி" என்று கத்திய கதறலில், லுங்கியை தூக்கிக் கட்டிக் கொண்டு பின்னால் ஓடினார் நாராயணன்.

"ஏய் நில்லு. ஓடாதே! எனக்கு இடுப்பு வலி", என்று கூவியபடி பிடிக்க முற்பட்டார் அவர்.

"என்னை யாரோ துரத்துகின்றார்கள். தப்பிக்க வேண்டும்", என்று நினைத்ததோ என்னவோ, ஒரு போந்தை தேடியபடி கால்களின் வேகத்தை அதிகரித்தது குக்கி.

"அங்கே போகாதே. என் கிட்ட வந்துடு. அங்கே போகாதே", என்று சொன்னவரின் பேச்சை கேளாமல்,

"அதோ ஒரு பெரிய பொந்து இருக்கு. அதுல குதிச்சிற வேண்டியது தான்", என்று எகிறி குதித்தது அப்பாவி குக்கி. அதன் செய்கையை நினைத்து தலையில் கை வைத்து தெருவில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு,

"இவ இன்னைக்கு சாமி ஆடப் போறா. அனுபவிச்சு தான் ஆகணும். ஹ்ம்ம். வேற வழி இல்லை" என்று கயிலியை உருவி கக்கத்தில் வைத்துக் கொண்டு திரும்பி நடந்தார் நாராயணன்.

சுதாகர், அங்கு பார்த்ததை கையில் எடுத்து ஆராய்வதர்க்குள், அவர் கண்களில் இருந்து கண்ணீர் தரதரவென கொட்டியது. அதற்கான காரணம்,

"கருப்பான ஒரு பொம்மை தார் ட்ரம்மினுள் கிடக்கிறதே. என்னவாக இருக்கும்?" என்ற சந்தேகத்துடன் விழுந்த அவர் பார்வை, அருகில் சென்று அதை எடுத்ததும்,

"இது பக்கத்து வீட்டு குக்கியாச்சே!" என்று துடிப்பின்றி நின்றது.

"என்ன சார் இதை கையில வெச்சிட்டு. கொஞ்ச நேரம் முன்னாடி ஒருத்தர் துரத்திகிட்டு வந்தாரு. இது ஓடிப் போய் தார் டின்- போய் சிக்கிடுச்சு. வெளிய வர முடியாம ரொம்ப நேரம் கதறிட்டு இருந்துது. உடம்பு இருக்கிருக்கும் போல. தொ பாருங்க, இறுகிப் போய்; ரத்தம் எல்லாம் வந்து; பாக்கவே அருவெறுப்பா இல்ல?", என்று ஆராச்சி செய்து 'ரெசல்ட்' சொன்னார் ஒருவர்.

"ஏய்யா? பாத்துட்டு தானே இருந்த? தூக்கி வெளிய போட்டிருக்கலாம் இல்ல?"

"யாரும் கண்டுக்கல. என்ன செய்யிறது"

"நீ என்னய்யா புடுங்கிட்டு இருந்த?"

"நான் டீ குடிச்சிட்டு இருந்தேன் சார். கை அழுக்கயிடுமால்லியா? இப்படி எல்லாம் தரக் குறைவா பேசாதீங்க. மனிஷனுக்கு மனிஷன் மரியாதை குடுக்க கத்துக்குங்க", என்று குரல் உயர்த்திவிட்டு நகர்ந்தான். போகிற போக்கில்,

"அவன் அவன் நாய் படாத பாடு பட்டுகிட்டு இருக்கான். இதுல நாய வேற காப்பாத்தணுமாம். நல்லா இருக்கு இவங்க ஞாயம்!" என்று முனகிக் கொண்டே போனான்.

கண்ணீரில் நனைந்து கிடந்தவர், அவன் கூறிய இறப்பின் வர்ணனையால் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்திருந்தார். அவன் புலம்பியதை கேட்டவுடன், தழுவி தழுத்த குரலில்,

"நாய் படாத பாடு என்னய்யா நீ பட்டுட்ட?தார்- விழுந்து எழுந்தா வீட்டுக்கு போயிட்டு இருக்க? இந்த அநாதை ஜீவனைப் போல சோத்துக்கு தொண்டை கிழிய கத்தவா போற? வீட்டுக்கு போய் பேன் காத்துல தூங்கத் தானேய்யா போற? பாரு யா. வலி- கத்துறது வாய திறந்து மூடுறதுக்குள்ள, தார் உள்ள போய் மூச்சு அடைச்சிருக்கு இந்த பச்சக் குழந்தைக்கு. அது துடிச்ச துடிப்பை அனுபவிச்சு பாருய்யா. நாய் படுற பாடு தெரியும்! பேசுறான் பேச்சு" என்று குழந்தையைப் போல கூச்சலிட்டார் சுதாகர்.

"நாடு ரோட்டுல வண்டிய சாச்சிட்டு என்னய்யா செஞ்சிட்டு இருக்க அங்க? லூசா நீ? உனக்கு தான் வேலையில்ல. எங்களையாவது போக விடலாம் இல்ல? எடுய்யா வண்டிய", என்று 'சொகுசு'ந்தியின் கதவைத் திறந்து குறைத்தது ஒரு நாய்.

"நீங்க வேலை செஞ்சு கிழிச்சீங்க", என்று காரி உமிழ்ந்துவிட்டு, தன் வண்டியை தெருவோரம் நகர்த்தினார் சுதாகர்.

"மனசுல அன்னை தெரேசா-ன்னு நெனப்பு", என்று பதிலுக்கு துப்பி விட்டு, நகர்ந்து சென்றது மனிதாபிமானம்!

1 comments:

kannan ramaswamy said...

http://atheetham.com/story/நாய்-பட்ட-பாடு

story link