Pages

Tuesday, September 27, 2011

உயிர்மை.காம்: மயான உடல்கள்

"குடும்பங்கள் மகிழ்ச்சிக்காக பிரிகின்றன. பிரிந்தவுடன் அதையே தேடி அலைகின்றன",போகிற போக்கில், எங்கோ ஓர் இடத்தில், குப்பைக்கு நடுவில் கண்டெடுத்த புத்தகம்! அதில் அந்த வாசகம். மற்ற எல்லா வார்த்தைகளும் மங்கலாய் தெரிய, இவை மட்டும் விழிகளைத் தாண்டி மூளையை அடைந்தன.

"எவ்வளவு உண்மை! தவறுகள் யதார்தமயமாக்கப் படும் காலம் இது. திருத்தங்கள் தேவை இல்லை; ஒப்புக் கொள்ளும்படியான காரணங்கள் போதும்!",மண் தோண்டிக் கொண்டிருந்த ஆதித்தன், சில நாட்களுக்கு முன்னால் படித்ததை அசை போட்டுப் பார்த்தார் "வயோதிகம் கொடியது தான். அதனால் என்ன? வாடுவதற்காக காத்துக் கொண்டிருக்கும் இலை, சில நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் உறங்கினால் உயிர் வாழாமலா போய்விடும்? எனக்கு என் எண்ணங்கள், தான் குளிர் சாதனம். என் வயதுக்கு மீறிய வேலைகளை செய்ய முடிகிறதென்றால், என் உயிரிலை வாடாமல் இருப்பது தானே காரணம்?" எப்போதும் வழக்குத் தமிழில் உழலும் அவர் நா, தன்னுடனே பேசிக் கொண்டிருப்பதால், சுந்தரத் தமிழில் வினா எழுப்பியது.

"நான் என்ன இலை, உயிர் என்று பேசிக் கொண்டிருக்கிறேன்? புரிகிறது! நாம் பகல் முழுவதும் என்ன நினைக்கிறோமோ, என்ன செய்கிறோமோ, அதன் நினைவுகளே கனவாய் இரவில் நம்முடன் பயணிக்கும் என்று படித்திருக்கிறேன். அதைப் போல், இப்போது செய்யும் வேலையை ஒட்டியே, என் நினைவுகள் உவமானம் தேடுகிறது", ஆதித்தன் மரக் கன்று நட்டுக் கொண்டிருந்தார். சில மாதங்கள் முன்பு,

"அப்பா, தனியா ஒரு வீடு பாத்திருக்கேன். வாங்கிடலாமா? எவ்வளவு நாள் தான் வாடகை வீட்டுல இருக்குறது?", என்று தன்னிடம் ஆலோசனை கேட்ட பிள்ளையை நினைத்து பெருமை பட்டுக் கொண்டார் ஆதித்தன்.

"எந்த பையன் இப்போ எல்லாம் அப்பா கிட்ட ஆலோசனை கேட்குறான்? என் மகன் அறிவாளி! எல்லா விவரமும் தெரிஞ்சிருந்தும், அப்பாவுக்கு மரியாதை குடுக்கணும்-னு ஒப்புக்காவது கேட்டானே. எவனுக்கு வரும் இந்த குணம்? ஆனா...", தன் எதிர்பார்ப்பு, தான் இருக்கும் நிலையில் அதிகமோ என்று பட்டது அவருக்கு.

"என்ன பா? தயக்கம் எதுக்கு? உங்களுக்கு ஏதாவது தோணுதா? தாராளமா சொல்லுங்க. நான் அதுக்காகத் தான் உங்க கிட்ட ஆலோசனை கேட்க வந்தேன்", அவர் தயக்கத்தை புரிந்து கொண்ட மகன், நிச்சயம் அறிவாளியாகத் தான் இருக்க முடியும். காக்கைக்கு மட்டும் அல்ல, நமக்கும் அவன் பொன் குஞ்சு தான்!

"வீடு வாங்குறது தான் வாங்குற. ஒரு கால் கிரவுண்டு காலி நிலம் சேத்து வாங்கிடேன். அந்த இடத்துல ஒரு தோட்டம் வைக்கலாம்", ஆதித்தனுக்கு ஒரே ஒரு கவலை தான்.

"இன்றைய தலைமுறை, பீசாவிற்கும், உடை அலங்காரத்திற்கும், கேளிக்கைகளுக்கும் பணத்தை இரைக்கும். ஆனால், ஒரு நல்ல காரியத்திற்கு கூடுதலாக செலவு செய்யச் சொன்னால், உலகப் பொருளாதாரம் முதல், வீட்டு நிதியறிக்கை வரை பல ஆவணங்களை ஆராய்ந்து தேடி எடுக்கும். இந்த நிலையில், ஒரு தோட்டம் அமைப்பதற்காக ஐந்து லட்சம் கூடுதல் செலவு செய்யச் சொன்னால் ஏற்பானா மகன்?"

"அதுக்கென்ன? பேங்க்- லோன் போடப் போறோம். கொஞ்ச வருஷம் இறுக்கிப் பிடிச்சு வாழ்ந்துட்டா போச்சு. செஞ்சிடலாம்", இந்தத் தலைமுறையினர் எல்லோரும் சுகவாசிகள் அல்ல என்பதை நிரூபித்தான், அவர் மகன்.

"ரொம்ப சந்தோசம் டா! என் பல வருஷக் கனவு, அருவதாங் கல்யாணம் முடிஞ்சதும் தான் நடக்கணும்-னு இருக்கு. எப்படியோ, இப்பவாவது நடக்குதே. உன்ன நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு",முகத்திற்கு முன்னால் சிரித்துவிட்டு, அவன் வேலைக்குச் சென்றதும், இந்த இரு வரிகளை மின்னஞ்சலில் அனுப்பினார்.

ஆதித்தன் கேட்டுக் கொண்டதைப் போலவே, சில மாதங்களில் ஒரு நிலம் வாங்கப் பட்டு வீடு கட்டும் பணி ஆரம்பித்தது.

"கட்டின வீடா வாங்கி இருக்கலாம். தேவை இல்லாம இப்போ கூட நின்னு கவனிக்க வேண்டியிருக்கு. வேலை எல்லாம் கெடுது", மருமகள், மகனின் காதுகளை கடித்தது ஆதித்தனின் மனதில் முள்ளாய்க் குத்தியது. தான் கேட்டுக் கொண்ட விருப்பத்தை மகன் நிறைவேற்றியிருக்கிறான். அவனுடைய துயரம் தீர தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருக்குப் பட்டது.

"நான் கொஞ்ச நாளைக்கு நம்ம புது வீடு கட்டுற இடத்துல போய் தங்கிக்கிறேன். எல்லா வேலையும் நானே பாத்துக்கறேன். நீங்க ரெண்டு பெரும் நிம்மதியா வேலைக்கு போங்க. கணக்கு வழக்கெல்லாம் ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து காமிச்சிட்டு போறேன். என்ன சரியா?"

"அதெல்லாம் வேணாம். உங்க உடம்பு சரியில்லை. தைராய்டு- இருந்து இப்போ தான் உடம்பு மீண்டு வந்திருக்கு. அம்மாவோட பிரிவில இருந்து இப்போ தான் மனசு மீண்டுட்டு இருக்கு. தேவை இல்லாம வருத்திக்காதீங்க. எல்லாம் நாங்க பாத்துக்குறோம்"

"எனக்கென்னப்பா கொறச்சல்? அங்க போய் நான் என்ன கொளுத்து வேலையா செய்யப் போறேன்? மேற்பார்வை பாக்கப் போறேன். வேண்டிய பொருள் வந்து இறங்க ஏற்பாடு செய்யப் போறேன். அதோட, ஒரு ஆளு அங்கேயே இருந்தா வேலை செய்யிறவங்களுக்கு ஒரு பயம் இருக்கும் இல்ல?"

"உங்க அப்பா சொல்றதும் சரி தான். போய் இருக்கட்டும். அதான் ஒரு ரூம் கட்டி வெச்சிருக்கீங்க இல்ல? அது அவருக்கு வசதியா தான் இருக்கும்", மருமகள்.

"எனக்கென்னவோ சரியா படலை. சரி செய்யுங்க"

அடுத்த மூன்று மாதங்கள், தொலைத்த செங்கோலை திரும்பப் பெற்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது ஆதித்தனாருக்கு. வயதாகி வீட்டில் முடங்கிக் கிடந்த போது, பேரன் முதற்கொண்டு எல்லோரும் தனக்கு ஆணை இடுவது, விழுங்க முடியாமல், பாகற்காய் போல் கசந்தது. தற்போது பெற்றிருக்கும் பொறுப்பு, நான்கு நபர்களை வேலை வாங்கும் அதிகாரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டுத்திருக்கிறது. முகம் சுளித்த மருமகளுக்கு ஒரு நன்றி!

"இந்த சுவரு என் கனவு நிறைவேறிடுச்சுன்னு உரக்கச் சொல்லுது. அந்த சுவரு, என் வயசுக்கு அர்த்தம் கொடுத்து வாய் விட்டுச் சிரிக்கிது. என் தலை மேல் கூரை! சந்தோஷத்தில் மிதக்க வைக்கிது. இந்த தரை, நான் சாகும் போது நிம்மதியக் கொடுக்கப் போகுது", எவரும் இல்லாத போது எல்லா பக்கமும் திரும்பித் திரும்பி அவர் சொல்லி மகிழ்வதேல்லாம் இதைத் தான். மூன்று மாத முடிவில், தன் வீட்டில் குடிபுகப் போவதை நினைத்து ஆதித்தன் மகிழ்ந்ததைப் போல, பணம் போட்டுக் கட்டிய அவர் மகன் கூட மகிழவில்லை. புதுமணை புகுவிழாவும் முடிந்தது. வழக்கம் போல, மற்றவர்கள் வாழ்வும் தொடர்ந்தது. ஆனால், ஆதித்தனுக்கு இனி இருக்கப் போகும் ஒரே வேலை, தோட்டப் பராமரிப்பு.

இன்று காலை தான் மரக்கன்றுகளை வாங்கி வந்தார். இரண்டு தென்னை, ஒரு மா மரம், கொய்யா, அவரைக் கோடி, முருங்கை மரம், வாழைக் கன்று மற்றும் பல பூச் செடிகள்.

"எல்லாத்தையும் ஒரே நாள்ளையா நடப் போறீங்க? அப்பா உங்க வயசு உங்களுக்கே மறந்து போச்சா?" வாய் பிளந்தான் ஆதித்தர் மகன்.

"மனசுல மகிழ்ச்சி குதிக்கும் போது வயசாவது வெங்காயமாவது", மண்வெட்டியை எடுத்து தோளில் செருகிக் கொண்டு, வேட்டியை தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு, சில நிமிடங்கள் முன்பு தான் களத்தில் குதித்தார். அதற்குள், மளமளவென இரண்டு மரங்களை நட்டு, சுற்றிலும் பள்ளம் தோண்டி பாத்தி செய்துவிட்டு, வாழையை நடுவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தார்.

"தத்தா..என்ன யோசிக்கிறீங்க?" பொழுது போகாத பேரன்.

"அதில்ல டா மவனே. இந்த தென்ன மரம் பெருசாகி மேல போகும் இல்ல? அப்போ பக்கத்துல நட்ட வாழைக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கும்? இத எங்க நடறதுன்னு யோசிக்கிறேன்"

"அதோ அங்க", என்று உத்தேசமாய் ஒரு இடத்தை பேரன் காண்பிக்க,

"அடுத்து அங்க தான் பாக்க இருந்தேன். நீயே சொல்லிட்ட! வெச்சிடலாம்", என்று வேகமாகச் சென்று குழி தோண்ட ஆரம்பித்தார்.

"இந்த மரத்துக்கு பேரென்ன தாத்தா?" குந்தி உட்கார்ந்தபடி பேரன் கேட்க,

"நீயே வைய்யேன். ஒரு நல்லா பேரா", மண் வெட்டும் அதிர்வு ஆதித்தர் குரலில் கேட்டது.

"ஆதித்தன். நல்லா இருக்கா?" என்று கை கொட்டிச் சிரித்தான். அவன் சொன்னதும் வேலையை நிறுத்திவிட்டு, வியர்வையில் நனைந்த மண் உடம்புடன், அவனை ணைத்து முத்தமிட்டார்.

"அய்ய! ஈரம்", என்று கன்னத்தை துடைத்துக் கொண்டான்.

"சரி அடுத்து உரம் போடணும்"

"உரம் நா?"

"மரம் நல்லா வளரனும் இல்ல? அதுக்கு, உப்பு, சாணம், சமச்சதுல தேவை இல்லாத தோல் எல்லாம் இருக்கும்- அதெல்லாம் சேத்து வேருக்கு போட்டு மண்ணு மூடனும்"

"சாணியா? அய்ய ஆய்!" என்றான் மழலை மணக்க.

"நமக்கு அது ஆய். அதுக்கு அது தான் டா தாய்!"

இப்படியாக பேசிக் கொண்டே, அன்றைய தோட்ட வேலை முடிந்தது. ஒன்றிரண்டு மாதங்களில், காட்டுச் செடியும், புல்லுமாக மண்டிக் கிடந்த தோட்டம், செடிகளும் கொடிகளுமாக தழைக்கத் தொடங்கியது. வெளிக் காற்று உள்ளே வரும்படி கட்டிய வீட்டினுள், தோட்டத்திலிருந்து சில்லென்று காற்று வீசியது.

"மாமா செஞ்ச உருப்படியான வேலை இது தான். நம்ம வீட்டுக்கு வர்றவங்க தோட்டத்தை பாக்காம போறதே இல்ல", எப்போதும் பாராட்டாத மருமகள், தன்னைப் பற்றிப் பேசிய வார்த்தைகள் ஒட்டுக் கேட்டதின் சுகத்துடன் சேர்ந்து கொண்டது. அன்று வரை இல்லாத ஒரு வெற்றி நிம்மதி, அறுபது வயதில் குருதியில் கலந்தது.

வருடங்கள் உருண்டோடின. கலப்படமும், செயற்கை உரமும் பேரனை வளர்த்த. சோப்பு நுரையும், பாத்திரம் கழுவிய நீரும் தோட்டத்தை வளர்த்த. பிணியும், ஷுகரும் குடும்பத்தில் நிறைந்தது.

"அப்பா. உங்க பேரனுக்கு கல்யாணம் பேசியிருக்கோம்", நேராகப் பேசமுடியவில்லை என்பதால் படத்துடன் பேசினான் ஆதித்தரின் மகன். அவர் காலமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டக் காரணத்தால்!

"நல்லா செய்யி டா மகனே. உன் கூடவே நான் இருக்கேன்", என்றது படத்தில் அவர் முகம் சிரித்த சிரிப்பும்; உன்னைத் தான் பார்க்கிறேன் என்று சொல்லும் கண்ணும்.

"உங்க ஆசீர்வாதம் எப்பவும் வேணும்", வேண்டி முடித்ததும்,

"ஏர் போர்டுக்கு டைம் ஆச்சு. சாப்பாடு போடு", தன் மகனை அழைத்து வரத் தயாரானார் ஆதித்தர் மகன்.

"அப்பா! எப்படி இருக்கீங்க?" அமரிக்காவிலிருந்து இறங்கிய செல்ல மகன் தன் அப்பாவை அணைத்து நலம் விசாரித்தான்.

"நல்லா இருக்கேன். வா, உனக்காக ஏற்பாடெல்லாம் காத்துட்டு இருக்கு. கல்யாணம் கட்டின கையோட திரும்ப போகாம, இங்கயே இருக்கணும்-னு முடிவெடுத்த பாத்தியா! சூப்பர் டா", வீட்டுக்குச் செல்லும் வழியில், ஆதித்தர் மகன்.

"என் கண்டிஷனை நிறைவேற்றித் தரணும்", புதிரை எதிர்பார்க்காத தந்தை,

"என்ன டா அது?" என்றார்.

"கல்யாணம் முடிஞ்சதும் நீங்களே பாப்பீங்க"

மண்டபமே மகிழ்ச்சியில் ஆழ்ந்து கொண்டிருக்க, ஆளில்லா வீடு, இருட்டில் மயானம் போல் இருந்தது. பின்னால் தோட்டம், மர்மக் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தது.

"எனக்கென்னவோ பயமா இருக்கு", மா மரம்.

"எத நெனச்சு?", தென்னை.

"நமக்கெல்லாம் எதோ ஆபத்து வரா மாதிரி தோணுது"

"அதெல்லாம் இருக்காது. பேசாம காபநீரொட்சைட்டு (கார்பன்-டை-ஆக்சைட்)- நேரம் கிடைக்கும் போது வெளிய விடு. இந்த மனிஷப் பயலுக தேவைக்கதிகமா அதை நம்மிடம் தள்றாங்க"

"சரி. வேற என்ன செய்ய முடியும்? நீ சொன்னதையே செய்யிறேன்", மா மரம் பயத்துடன் தன் வேலையைத் தொடர்ந்தது.

ஓரிரு நாட்கள் கழித்து...

"அம்மா!", ஒரு ஆண் அலறும் சத்தம் கேட்டு, எல்லா மரங்களும் எழுந்தன.

"நான் சொன்னேன்-ல? இப்போ பாரு", தென்னை மரத்திடம் மா மரம் கதற,

"கடைசி ஆசையைக் கேட்டுடுவோம். பாவம் சாகும் போது கொஞ்சம் தண்ணியாவது வேர் மூலமா அனுப்பலாம்", என்றது தென்னை.

"சாகுறத்துக்கு முன்னால உனக்கு என்ன ஆசை?"

"சாகக் கூடாது-ன்னு தான் ஆசை"

"அது நடக்காது. வேற கேளு"

"என்ன நட்டவரை பாக்கணும். அவர் பேரு ஆதித்தர். எனக்கும் அது தான் பேரு"

"ஆதித்தரே! இங்க வாரும். உங்க பிள்ளை உங்களை பாக்கணுமாம்", என்று கூவியது மா மரம்.

"ஆதித்தா. கொஞ்சம் இங்க வாயேன்", என்றாள் ஆதித்தரின் மருமகள்.

"என்ன?", என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது.

"இந்த மா மரத்தையும் வெட்டணுமா? இடம் போதும் இல்ல?"

"வெட்டிடு மா. அங்க ஒரு பைக் நிறுத்தலாம்", என்றது உள்ளிருந் அந்த குரல்.

"என்னது என்னையும் வெட்டப் போறாங்களா! ஆதித்தர் இறந்து அவர் பெயரை இவனுக்கா வைக்கணும்?", மா மரம் வேதனையில் இலைகளை அசைத்தது.

"நம்ம தாத்தா ஆசை ஆசையா வளத்த தோட்டம். தேவைக்கு அதிகமா ஒரு ரூம் கட்ட தோட்டத்தை அழிக்கணுமா?"

"அப்பா.ஒரு வீடு கட்டணும்-னா நாலு மரங்களை வெட்டித் தான் ஆகணும். இதெல்லாம் பாவம் இல்ல. யதார்த்தம்!", என்றான் இரண்டாம் ஆதித்தன்.

"ஹும்ம்", என்றார் அவன் தந்தை.

"தவறுகள் எல்லாம் யதார்தமயமாக்கப் படும் காலம் இது. திருத்தங்கள் தேவை இல்லை. ஒப்புக் கொள்ளும்படியான காரணங்கள் போதும்", காற்றில் வேதனை வார்த்தைகள் பறக்க, வெட்டப் பட்டு, மூச்சில்லாமல் மயானத்தில் கிடந்தன, தென்னை, வாழை மற்றும் மா மர உடல்கள்.


http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4835