"என்னம்மா? காலைலயே வந்து கிச்சு கிச்சு மூட்டுற?", அவன் கேள்வி கேட்டபோது லக்ஷ்மியின் விரல்கள் அவர் முக துவாரத்தை துன்புறுத்திக் கொண்டிருந்தன.
"அட சே! என்னா கப்பு டா சாமி. உங்க அப்பன மாதிரியே இருக்கியே. எழுந்திரி. போய் பணம் எடுத்துட்டு வா. வீட்டுல ஒத்த பைசா இல்ல. இந்த மாச மளிகை சாமான் வாங்கணும். நீ சாதாரணமா கூப்பிட்டா எழுந்துக்க மாட்டே. அதான் கிச்சு கிச்சு மூட்டினேன்", வேலைக்கு நடுவில் மகனுக்கு ஆரத்தி எடுத்தார் லக்ஷ்மி. தன் கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆயிருந்தும், அவர் அக்குள் நாற்றம் கூட இன்னமும் லக்ஷ்மியின் நினைவை விட்டு அகலவில்லை. திட்டிக் கொண்டே எழுப்பினாலும், அதே பாசம் தான் சொக்கலிங்கத்தின் மீதும். அதை அவனும் அறிந்திருந்தாதால், எதுவும் பேசாமல் எழுந்து, பல் துலக்கச் சென்றான். மனதினுள்,
"எல்லா மாசத்துலயும் இந்த நாள் மட்டும் தொல்ல புடிச்சதாவே இருக்கு". சொக்கனுக்கு இன்று சம்பள நாள். எல்லோரும் இந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பார். ஆனால் இவனுக்கு மட்டும் அந்த நாள் தொல்லையாகவே பட்டது.
"ஏ.டி.எம் கார்டு எங்கம்மா?" தன் தோற்பையினுள் தேடிவிட்டு முகச்சுளிப்புடன் அம்மாவின் உதவியை நாடினான்.
"நேத்து நீ தானே ஈ.பி பில் கட்டின? கம்பியூட்டர் டேபிள்-ல இருக்கும் பாரு", அம்மாவின் கணிப்பை சில நொடிகளில் சரியென்று அறிந்து கொண்டான். இணைய தளம் மூலம் மின்சாரக் கட்டணம் கட்ட வசதி செய்தது போல, வீட்டில் இருந்து கொண்டே பணம் பெரும் வசதியும் வந்தால் நன்றாக இருக்கும் என்று 'டெலிபதியில்' விஞ்ஞானிகளுக்கு யோசனை கூறிவிட்டு, தன் இரு வண்டிகளில் ஒன்றை தேர்வு செய்து வெளியில் எடுத்தான்.
சொக்கன் வாழும் பகுதியில் இரண்டே எ.டி.எம்-கள் தான். ஒன்று அவன் வீட்டின் அருகில்; மற்றொன்று சில மயில் தொலைவில். மாதா மாதம் வகை வகையாக கூத்து நடக்கும். அதை அனுபவிக்கும் வரை அழுது வடிவான். பின், அதை எண்ணி சிரித்துக் கொள்வான்.
"இன்னிக்கு மட்டும் அந்த ஏ.டி.எம்-ல பணம் இல்லன்னு வரட்டும். பாக்கெட்-ல வெச்சிருக்கேன் தீப்பெட்டி ரெடியா. கொளுத்திடுறேன்", வண்டியை ஓட்டிக் கொண்டே எச்சரிக்கை விடுத்தான்.
வங்கியின் கதவை நெருங்கும் போதே ஏ.டி.எம் உள்ளே இருக்கும் நபர், பணத்துடன் வெளியே வருகிறாரா என்று எட்டிப் பார்த்தான். வெளியே எவரும் இல்லை. ஆனால், உள்ளே ஒரு தலை தெரிந்தது.
"இப்போ தான் உள்ள போயிருக்கார் போல", அவர் வெளியே வரும் வரை படிக் கட்டில் நின்று 'பின்' நம்பரை அறிய முற்படலாம் என்ற உயர்ந்த எண்ணத்துடன், கதவின் பக்கத்தில் கை வைத்துக் காத்திருக்கத் தொடங்கினான். அடுத்த நிமிடம், மற்றொருவர் அவன் பின்னால் வந்து நின்று அவன் தோளின் வழியாக எட்டிப் பார்த்தார்.
"அட என்னய்யா இது. எங்க போனாலும் ஒரு பெருசு உள்ள நின்னு ரெசிப்ட் வாங்கி, வாங்கி கசக்கி போட்டுக்கிட்டு இருக்கு. பணம் எடுத்தோமா, வந்தோமான்னு இல்லாமா", கதவைத் தாண்டித் தன் குரல் உள்ளே போகாது என்று வந்தவருக்கு தெரிந்திருக்க வேண்டும். கொஞ்சம் அதிகப் படியான கோபமாகத் தான் பட்டது.
அவர் துடிப்பதை பார்த்து பரிதாபப் பட்டு,
"நீங்க வேணா எனக்கு முன்னாடி போங்க. ரொம்ப அவசரத்துல இருக்கீங்க போல", என்றான் சொக்கன்.
"அதெல்லாம் இல்ல சார். உள்ள நின்னா ஏ.சி காத்து வரும். வெளிய புழுங்குது", என்று இளித்தார் அவர்.
"அப்படி சொல்லு! இடுப்புல ஐ.டி கார்டு தொங்கும் போதே நெனச்சேன்", 'வைட் காலர்' மீதான பொதுவான கோபம், நேரம் கிடைத்தபோது மனதிற்குள் வெளிப் பட்டது. எதுவும் பேசாமல் சின்னதாக சிரித்துவிட்டு திரும்பி நின்றான். உள்ளே இருந்த பெரியவர் ஒருவழியாக வெளியே வரத் தயார் என்பதை அவர் செய்கைகள் உணர்த்தின. அவர் கதவை திறந்தவுடன் மூடாமல் தடுக்க, தன் கையை முட்டு கொடுத்துக் காத்திருந்தான் சொக்கன்.
"வழி உடுப்பா. என்ன அவசரம்? உள்ள இருக்குறவன் வெளிய வர்றதுக்குள்ள கைய வெச்சுகிட்டு நிக்கணுமா? இந்த காலத்து புள்ளைங்க..", புலம்பிக் கொண்டே வெளியேறினார் பெரியவர். சொக்கனுக்கு பிறரிடம் திட்டு வாங்கிப் பல நாள் ஆகியிருந்தது. இதயம் வேகமாக துடித்தாலும் வந்த வேலை, 'துடிப்பதற்கு இது நேரம் இல்லை' என்று அடக்கியது.
"இத இப்படி விடணுமா? திருப்பி விடணுமா?" ஒவ்வொரு மாதமும் தவறாமல் எழும் சந்தேகத்துடன் அட்டையை உள்ளே செலுத்தி, பின் நம்பர் அழுத்தி, பணத்தின் மதிப்பை இட்டு, பரிமாற்றத்திற்காக காத்திருந்தான். பணத்தை எண்ணும் ஒலி கேட்டுக் கொண்டிருக்கையில்,
"ரெண்டு ஐநூறு ரூபாயும், பத்து நூறு ரூபாயும் வந்தா நல்லா இருக்கும்", என்று ஒரு 'குட்டி' வேண்டுதலை கடவுளுக்கு அனுப்பினான். ஆனால், எ.டி.எம் இயந்திரத்திற்கு கடவுளின் ஆணை வருவதற்குள், சொக்கனின் கையினுள் அது பணத்தை துப்பிவிட்டது.
"இந்த வாட்டியும் எல்லா நோட்டும் ஆயிரம் ரூபாய். சே!" அச்சிறிய அறையின் கூரையை கடவுளாய் நினைத்து சில நொடிகள் திட்டிக் கொண்டிருக்க, ஏ.சியை அனுபவிக்கக் காத்துக் கொண்டிருந்த நபர், கண்ணாடிக் கதவில் சில கொட்டுகள் வைத்தார். செய்கையால் 'வரலாம்' என்று கூறிவிட்டு, அருகில் இருந்த மேஜையின் மேல் கை வைத்து, பத்து நோட்டுகள் இருக்கின்றனவா என்று சோதித்தான்.
"அடுத்து நேரா பெட்ரோல் பங்க்", இலக்கை நிர்ணயித்து உடம்பை இழுத்துக் கொண்டு கிளம்பியாது 11 பி.எச்.பி.
அவன் பெட்ரோல் பேழங்கினுள் நுழைந்த நேரம், 'ஜே ஜே' என்று கூட்டம். அன்று இரவு பெட்ரோல் விலை உயரப் போகிறதென்று காலை பத்திரிகையில் படித்த மக்கள், "தங்க நீர்" தீருவதற்குள் வண்டிகளை ரொப்ப வந்திருந்தனர். வேறு வழியில்லாமல் நான்கு வரிசைகளுக்குப் பின்னல் வண்டியை நிறுத்தி, தன் முறைக்காக காத்துக் கொண்டிருந்தான். கையில் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு, 'டேங்க்'-ன் மூடியை கழற்றி, பெட்ரோல் ஆவியாகாமல் தடுக்க மறுபடியும் வெறுமனே மூடி வைத்தான். தன் முறை வந்ததும்,
"நூறு ரூபாய்க்கு போடுங்க", என்று மூடியத் திறந்தான். தன் கையில் இருந்த பணத்தை கொடுத்தவுடன், பெட்ரோல் ஊற்றுபவர் மேலே தூக்கிப் பிடித்து 'முறைமை நிலையை' சோதித்தார். பின் கைப் பையினுள் அதை திணித்துவிட்டு, சில்லறையை எண்ணி திரும்பக் கொடுத்தார். ஒரு ஐநூறு ரூபாய் நோட்டும், நான்கு நூறு ரூபாய் நோட்டும் கிடைத்தது.
"இந்த ஐந்நூறுக்கு பதிலா, அஞ்சு நூறு ரூபாய் நோட்டு கொடுக்க முடியுமா?" சொக்கன் கேட்டதும்,
"பின்னால நெறைய பேருக்கு குடுக்க வேண்டியிருக்கு சார்", என்று கூறியபடி கையசைத்தார். 'கிளம்பு காத்து வரட்டும்' பழ மொழி நினைவுக்கு வந்தது.
"வீட்டுக்கு போய் அடுத்த வண்டிய எடுக்க வேண்டியது தான்", எரிபொருள் 'நாப்'-ஐ ரிசர்விலிருந்து மேலே திருப்பிவிட்டு, கிக்கரை உதைத்தான். வீட்டை அடைந்ததும்,
"அம்மா.சின்ன வண்டி சாவி குடு", செருப்பை அவிழ்க்கச் சோம்பேறித் தனம் பட்டுக் கொண்டு, வெளியிலிருந்தே கூவினான். கொக்கியிலிருந்து சாவியை அம்மா எடுக்கும் போது தான், முன்பு கொக்கியைப் பார்த்த 'கோபப் பார்வை' நினைவுக்கு வந்தது.
'ஆஹா! இந்த வண்டியில பெட்ரோல் இல்லன்னு தானே ரெண்டு நாள் முன்னாடி எடுக்காம விட்டோம்? பங்க் வரை போகுமான்னு தெரியலையே. ப்ரேக் பிடிக்காம ஓட்டனும்", முடிவு செய்து கொண்டு, வழியில் பள்ளம் மேடுகளை எல்லாம் அழகாகத் தாண்டி, சுயநல ஓட்டிகளை எல்லாம் சமாளித்துக் கடந்து, வேகத்தால் சீன் போடும் ஜொள்ளர்களுக்கு வழி விட்டு நகர்ந்து, ‘முழுமையான ஒட்டுரடா நீ!’ என்று பெருமை பட்டுக் கொண்ட வேளையில்,
பத்தடி தூரத்தில் இருக்கும் நிறுத்தத்தை அடைய தன்னை முந்திச் சென்று நின்ற பேருந்தினால் தடுக்கப் பட்டான். அந்த பெருந்திருக்குப் பின்னால் வந்த லாரியும், பிறருக்கு வழிவிடாமல் நடுவில் நின்றது.
தன் வண்டியை நிறுத்தி இருவரையும் திட்டிவிட்டு, இருந்த சின்ன வழியினுள் நுழைந்து, நெரிசலில் இருந்து வெளியேறினான்.
"இன்னும் ஓடிகிட்டு இருக்குன்னா பெட்ரோல் இருக்குன்னு தான் அர்த்தம்", என்ற நினைப்புடன், சில நிமிடங்களில் அதே பங்கினுள் நுழைந்தான்.அப்போது பங்க் காலியாக இருந்தது. இவன் மறுபடியும் வண்டியுடன் நிற்பதைப் பார்த்த பெட்ரோல் போடுபவர், சொக்கனின் எண்ணத்தை புரிந்து கொண்டார். அவன் முறை வந்த பொது,
"200 ரூபாய்க்கு. நாலு ஆயில்", என்றான்.
"சில்லறை இல்லன்னு சொன்னதும் வேற வண்டி எடுத்துட்டு வந்துடீங்களா?" என்று சிரிதவரிடம், அந்த நாளுக்கான முக்கிய செய்தியை தன்னை அறியாமலே உலகுக்குச் சொன்னான்.
"என்ன சார் செய்யிறது? வெளி நாட்ல எல்லாம் கொறஞ்ச மதிப்புள்ள பணம் தான் அதிகம் அச்சடிக்கப் படுது. இந்தியாவுல,பதுக்கலுக்கு வசதியா 60% பணம், ஐநூறு, ஆயிரம் ரூபா தாளாத் தான் வெளிய வருது. கஷ்டப் படுறது நம்மள மாதிரி நடுத்தர வர்க்கம் தான். அதிசயத்தைப் பாருங்க. பிரச்சனைன்னு பாத்தா சகிக்கக் கூடியது தான். ஆனா, ஊழல்ல முதல் இடம் இதனால தான் கிடைக்கிது"
"சரி தான். எங்களுக்கும் ஒரே தொல்லை தான்", கூறிக் கொண்டே பெட்ரோலை நிரப்பினார். ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு, மீதி சில்லறையை நூறு ரூபாயாக திரும்பக் கொடுத்தார்.
அவர் செய்த நன்மையை பார்த்த சொக்கன் முகத்தால் மலரவே," பைக்-ல வர்றவங்க சில்லறைக்காக சண்டை போட்டு தான் பாத்துருக்கேன். எங்க தொல்லையையும், உங்க தொல்லையோட இணைச்சி பெசுநீங்களே! அதுக்காகத் தான்", என்று பாராட்டு கிடைத்தது.
"சந்தோஷம் சந்தோஷத்தோட சேரும். துக்கம் துக்கத்தோட சேரும். அவ்ளோ தான் சார் மேட்டரு!", என்று கூறிவிட்டு பணத்தை பையில் போட்டுக் கொண்டு விலகினான்.
ஆனால், சொக்கனின் பிரச்சனையை இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை.
"ஒரு ரூபாய்; ரெண்டு ரூபாய் வேணும்",அடுத்த இலக்கு மூளைக்குள் பாய்ந்தது.
"போன மாசம் பெரியசாமி அண்ணாச்சி கிட்ட போயாச்சு. இந்த மாசம் நாகலிங்கம் கடை", சொக்கனின் எண்ணத்தை புரிந்து கொண்டு வேண்டிய இடங்களில் திரும்பியது வண்டி. பெட்ரோல் போட்ட தெம்பில், பஜாரினுள் நெரிசலைப் பற்றி யோசிக்காமல் நுழைந்தான். நாகலிங்கம் கடையை அடைந்தவுடன்,
"அண்ணாச்சி! சாப்டாச்சா?" திருநெல்வேலி தமிழில், 'ச' வை, 'ச்ச' வாக்கிப் பேசினான். சில்லறை வேண்டுமே!
"ஆச்சு தம்பி. நல்லா இருக்கீகளா? ஜாமான் வாங்க வந்தீகளா?"
"இல்லன்னே. ரெண்டே ரெண்டு பொருள் வாங்கிட்டு வர சொன்னாக"
"சொல்லுங்க. போற்றுவோம்"
"பான்டீன் ஷாம்பூ பெருசு", என்று சொக்கன் கூற, அவர்,
"வேற", என்றார்.
"க. பருப்பு அரை கிலோ"
"வேற"
"இவங்க ரெண்டு பொருள்-னு முன்னாடியே சொன்னாலும் 'வேற' சொல்லாம இருக்க மாட்டங்க போல", பழக்க தோஷத்தை மனதிற்குள் கிண்டலடித்துவிட்டு,
"அவ்ளோ தான் அண்ணாச்சி!" என்றான்.
"போன மாசம் லிஸ்ட்-ல இருந்து,ஷாம்பூ 117 ன்னும்,க.பருப்பு 24 ன்னும் பாத்து வெச்சிருந்தேன். மொத்தம், 141 ரூபாய். ஒன்பது ரூபாய் சில்லறை கிடைக்கும்", மனக்கணக்கு போட்டு ‘காலர்’ தூக்கி விட்ட நேரத்தில், அண்ணாச்சி பொருட்களுடன் வெளியே வந்தார்.
"மொத்தம் எவ்வளவு அண்ணாச்சி?" கச்சிதமாக நடித்தான். கணக்கு போட்டு முடித்தவர்,
"141 ஆகுது தம்பி", என்று சீட்டை நீட்டினார். அதை பெற்றுக் கொண்டு, ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டினான். தன் கணக்கு பலன் அளிக்கப் போகும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
"ஒரு ரூபா இருக்கா?" என்ற அண்ணாச்சியிடம்,
"ஐயோ இல்ல அண்ணாச்சி", என்று தேடுவதைப் போல் மேலும் நடித்தான். அவர் திரும்பவும் கல்லாவினுள் தலையை விட்டு, சில நொடிகளில், மீதியை கொடுத்தார். அதைப் பார்த்ததும் ஏமாற்றத்துடன்,
"என்ன அண்ணே! 360 ரூபாய் கொடுத்திருக்கீங்க?", வினவினான்.
"ஒரு ரூபா தானே! பொறவு வாங்கிக்கிறேன். என்ன கெட்டு போச்சு இப்ப? ஓடிரவாப் போறீக? மனிஷனுக்கு மனிஷன் இது கூட செய்யலேன்னா எப்படி தம்பி? என்ன நான் சொல்றது சரி தானே?",
"சரி தான். சரி தான்", என்று இளித்துவிட்டு,
"உன்ன எவன் யா எனக்கு உதவி செய்யச் சொன்னான்? வந்ததும் நலம் விசாரிச்சது தப்பா போச்சு. இன்னும் நல்லவங்க வாழ்ந்துட்டு இருக்குறதால எவ்வளவு கஷ்டம்!" சலிப்புடன் வண்டியின் இருக்கையில் குத்தினான்.
"சரி விடு. பத்து ரூபா தாளாவது கிடைச்சிதே. வீட்டுக்கு கெளம்பு", மூளை தெம்பூட்ட, அரை மனதுடன் வீட்டிற்குத் திரும்பினான்.
"என்ன டா இவ்வளவு நேரம்?", மாவுக் கையுடன் லட்சுமி.
"அதே சில்லறை தொல்லை தான்", தன் பையினுள் இருந்த சம்பளப் பணத்தை எடுத்து அம்மாவின் பையினுள் சொருகினான்.
"சரி டி.வி ஸ்டாண்ட் பக்கத்துல ஒம்போது ஒரு ரூவா காயின்ஸ் இருக்கு பாரு. எடுத்து பையில போடு. கையில மாவு", லட்சுமி அதை கூறியவுடன், சொக்கனுக்கு குதூகலம்.
"வீட்டுல ஒத்த பைசா இல்லன்னு சொன்ன. ஏது இது?”
"பெரியசாமி அண்ணாச்சி ஒரு ரூவா அதிகம் குடுத்தாருன்னு ரெண்டு நாளைக்கு முன்ன திரும்ப குடுத்தியாமே! நீ போன மாசம் ஒம்பது ரூவா விட்டுட்டு போனது நெனப்புக்கு வந்திச்சாம். அதான் வந்து குடுத்துட்டு போனாரு. அவ்ளோ விழிப்பா இருக்க நீ", லட்சுமி விவரத்தை சொல்ல,
"நல்லது செஞ்சா நேரத்துக்கு உதவும்-னு சொல்றது சரி தாண்டா! இன்னைக்கு நாங்களும் பஸ்-ல சில்லறை குடுக்காதவன பாத்து, கண்டக்டர் பாவம்யா-ன்னு அட்வைஸ் செய்வோம்ல?", தலை முடியை உதறிவிட்டு, பட்ஜெட் புத்தகத்தை எடுத்தான்.
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4809
0 comments:
Post a Comment