"ஒன்..டூ...த்ரீ....",ராகவனின் உடலுக்கடியில் வைத்த துணியின் நான்கு முனைகளைப் பிடித்து எடுப்புப் படுக்கையின் மீது வைத்தனர் ஊழியர்கள்.
சில நிமிடங்களில், அபல்லோ மருத்துவமணை.
"எங்க அப்பா எப்பவும் குடும்பத்த பத்தியே யோசிச்சிட்டு இருப்பாரு. ஸ்ட்ரெஸ் காரணமா எங்க அப்பா உயிர் போயிருக்க வாய்ப்பிருக்கா?" அந்த வருடம் முழுவதும் எந்த பண்டிகையும் கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளப் பட்ட ஒரு அப்பாவின் மகன்.
"ஸ்ட்ரெஸ் மூலமா இதயக் கோளாறு வந்து உயிர் போக கண்டிப்பா வாய்ப்பிருக்கு", லூயிசா என்ற மருத்துவர். ஒருவர் இறந்த பின் அவரை குணப் படுத்த முயற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர், இறந்தவரின் உறவினருடன் பேசும் நிமிடங்கள் மிகக் கடினமானவை. அவர்களிடமிருந்து விடுபடும் நேரத்தை நோக்கிக் காத்துக் கொண்டிருந்த லூயிசா, விரைந்து வரும் எடுப்புப் படுக்கையை பார்த்ததும் மனதளவில் மகிழ்ச்சி கொண்டாள்.
"டாக்டர், எமர்ஜென்சி! பல்ஸ் ட்ராப்பிங்", என்றாள் நர்ஸ். 'அரை பிணமாய்' உள்ளே வந்த ராகவனை சோதித்துவிட்டு,
"ஹீ ஈஸ் இன் வி ஃபிப் (V Fib)! பாடில்ஸ் (Paddles) எடுங்க", என்ற படி ஐ.சி.யு-வினுள் எடுத்துச் சென்றாள் லூயிசா. மின்சாரம் மூலமாக இதயத்தை மறுபடியும் இயங்கச் செய்த முயற்சி வெற்றி பெற்றது; பதட்ட நிலையை ராகவனின் இதையத் துடிப்பு இயல்பு நிலைக்கு மாற்றியமைத்தது. இதையம் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் லூயிசா சில சோதனைகளை மேற்கொண்டாள்.
"அட்ரினலின் லெவல் அதிகமா இருக்கு. மோஸ்ட் ப்ராபப்லி ஸ்ட்ரெஸ் தான் காரணம். இன்னைக்கு நல்ல நாள். இதே காரணத்தால, ரெண்டு மணி நேரம் முன்னாடி ஒரு உயிர் போச்சு. அத நெனச்சு வருத்தப் பட்டுகிட்டு இருந்ததுக்குள்ள மனசுக்கு ஆறுதலா இந்த கேஸ்!" தன் அறைக்குச் சென்றதும் சக மருத்துவரான ரேவதியிடம் சொல்லி பேரு மூச்சு விட்டாள் லூயிசா.
"ஹும்..எனக்கு இன்னும் மனச தேத்திக்க சான்ஸ் கிடைக்கல",ரேவதி.
"நீ யார சாவடிச்ச?", குறும்புச் சிரிப்புடன் லூயிசா.
"அடி செருப்பால! நீ காப்பாத்தின உயிருக்கும் தவற விட்ட உயிருக்கும் ஒரே வித்யாசம், ட்ராபிக் ஜாம் தான் நெனப்புல இருக்கட்டும்"
"ஓகே! ஓகே! கூல்", லூயிசா அதைச் சொன்ன போது ரேவதி, கண்ணாடியின் வழியாக ஐ.சி.யுவினுள்ளே வினோதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன ஆச்சு?"
"ராகவன் தானே அந்த பையன் பேரு?"
"ஆமா. அவனுக்கு என்ன?" தான் கை தூக்கி விட்ட உயிரின் தலை தொங்கிவிட்டதா என்ற ஐயத்துடன் கண்ணாடியின் வழியாக பார்த்தாள் லூயிசா. சில நிமிட அவதானிப்புக்குப் பின்,
"அவன் அழுகுறான்!", என்றது லூயிசாவின் குரல்.
ஒரு மணி நேரம் கழித்து..
"நீங்க சொன்னா மாதிரி அவன் வீட்டுக்கு போய் செக் செஞ்சேன். இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சுது", லூயிசா அனுப்பிய 'வார்டு பாய்' மனோகரன். அவனிடம் ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு,
"இன்னைக்கு மதியம் பிரியாணி தான்!" என்று சிரித்தாள்.
"பதினஞ்சு ரூபா அதிகம் இருந்தா..", என்று தலையை சொரிந்தான்.
"இந்தா இருபது. அஞ்சு ரூபாய்க்கு மோர் குடி", என்று சொல்லிவிட்டு தன் அறையினுள் நுழைந்தாள்.
"என்ன அது?", ரேவதி.
"ராகவனோட ஃபைல்ஸ்"
"கமான்! உனக்கே உடம்பு சரியில்ல. டைம் கிடைக்கிற நேரத்துல ரெஸ்ட் எடுக்காம அவன் பர்சனல் பத்தியெல்லாம் ஏன் நோண்டுற?"
"அவன் அழுதான். ஒரு டாக்டரா என் கடமை முடிஞ்சிடுச்சு. ஒரு சக மனிஷியா அவனுக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு பாக்குறேன்"
"உன்ன திருத்தவே முடியாது!" சொல்லிவிட்டு தன் முகத்தின் மீது கைக் குட்டையை போர்த்தி தூங்கத் தொடங்கினாள் ரேவதி.
ராகவனின் கோப்புக்களை ஒவ்வொன்றாகப் புரட்டிக் கொண்டிருந்தாள் லூயிசா. முதலில் கண்டெடுத்த வீட்டுப் பத்திரம் அவன் அப்பா பெயரில் இருந்தது. அடுத்த ஆவணம், அவன் அப்பாவின் இறப்புச் சான்றிதழ்! அதற்குப் பின் வந்த வாரிசுச் சான்றிதழில் ராகவன் என்ற பெயருக்கு முன்னால் நிரோஷா-வயது ஐம்பது என்று இருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே அடுத்த ஆவணம், அவன் அம்மாவின் (நிரோஷா) இறப்புச் சான்றிதழ். இருவரும் இதயம் நின்று போய் தான் இறந்திருக்கின்றனர்.
"குடும்பமே மாரடைப்பால உயிரை விடப் பாத்தாங்க. நம்ம நாள் நல்ல நாள் தான்!" என்று தோன்றியது லூயிசாவுக்கு. அடுத்த சில நொடிகள், பொறுமையாய் திரும்பிக் கொண்டிருந்த காகிதங்கள், ஓர் இடத்தில் அப்படி உறைந்து நின்றன.
சென்ற ஆண்டு பனிக் காலம்..
"ஹேய்! என்ன காலங்காத்தால வந்துட்டேன்னு பாக்குறியா?", காதலுடன் ராகவனின் காதலி கொஞ்ச,
"ஆமாம்", தலையாட்டினான் ராகவன். அப்போது தான் தூங்கி எழுந்திருக்க வேண்டும்.
"காரணம் இருக்கு. இப்போ சொல்ல முடியாது. நீ எழுந்து, குளிச்சு நேரு பார்க்குக்கு வந்துடு. அங்க சொல்றேன்", என்று அவசரமாகத் திரும்பியவளின் கையை பிடித்தான் ராகவன். அவன் அடுத்த வார்த்தை உதிர்ப்பதற்குள் நொடிப் பொழுது அவகாசம் கூடத் தராமல், அவன் உதட்டில் ஒரு முத்தமிட்டு வெட்கத்துடன் வெளியே ஓடினாள் காதலி.
"இன்னிக்கு என்ன பாசத்தைப் புழியிறா? என்னோட பிறந்த நாளும் இல்ல; அவளோட பிறந்த நாளும் இல்ல. ஜூலை பத்து என்ன விசேஷம்?" யோசித்துக் கொண்டே பல் தேய்த்தான். குளித்து, உடை மாற்றிக் கொண்டு குளிர்சாதனப் பெட்டியை திறந்தான்.
"ப்ரெட் இருக்கு. பசிக்கவே இல்ல!" என்ற யோசனைக்கு,
"காலைலயே கிஸ் வாங்கினா எப்படி பசிக்கும்?" என்று கேள்வி எழுப்பியது ஹார்மோன். அதற்கு புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு வீட்டை பூட்டி, வண்டியில் ஏறினான்.
திரும்பவும் லூயிசா...
"டேட் ஆஃப் மேரேஜ்: 10, ஜூலை, 2006! அதாவது எட்டு மாசம் முன்னாடி", புதிரை புகையவிட்டது அடுத்து கண்டெடுத்த திருமணப் பதிவு ஆவணம். புதிரைத் தீர்த்து உண்மையை தெரிந்து கொள்ள இன்னமும் சில ஆவணங்கள் பின்னால் இருந்தன. அடுத்த பக்கத்தை புரட்டினாள். அதைப் பார்த்ததும், நாற்காலியில் சாய்ந்திருந்த அவள் முதுகு ஆச்சர்யத்தில் நிமிர்ந்து நின்றது.
"அப்பல்லோ மருத்துவமணை, ஆயிரம் விளக்குப் பகுதி. ஜூலை 10 , 2005 -அன்று, இவருடைய இரு கைகளும் விபத்தின் காரணமாக துண்டிக்கப் பட்டது", இதை படித்ததும் லூயிசாவிற்கு ஏற்பட்ட வியப்பிற்குக் காரணம்,
"ராகவனுக்கு இரண்டு கைகளும் இல்லையா?" என்ற கேள்வி அல்ல. தன் கண் முன்னால் கைகள் அற்றுக் கிடக்கும் ஒருவன், தன் திருமண நாளன்று கைகளை இழந்திருக்கிறான் என்ற உண்மையை கண்டவுடன் லூயிசாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே, ஆச்சர்யக் குறியாய் நிமிர்ந்து நின்றது.
அடுத்த காகிதத்தை புரட்டலாமா வேண்டாமா என்று யோசிக்கத் தொடங்கினாள் லூயிசா. அது வைத்திருக்கப் போகும் பூகம்பம் என்னவோ என்று வருந்தியது அவள் மனது. கோப்பினை மேஜை மீது வைத்துவிட்டு சிற்றுண்டிச் சாலையை நோக்கி பயணமானாள். அவள் மனம் முழுவதும் ராகவனின் வாழ்க்கையை சுற்றியே இருந்தது. அவள் கால்கள், பின்னோக்கி நடக்கத் துடித்தன. ஆனால், அவன் படுத்திருக்கும் வார்டிலிருந்து வெகுதூரம் சென்றால் ஒழிய ஆர்வம் குறையாதென எண்ணி நடையை நிறுத்தாமல் தொடர்ந்தாள்.
பத்து நிமிடங்கள் கழித்து..
"கூ..கூ...கூ..", என்று கூவியது அவள் பேஜர். ராகவனுக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்து அவன் அறையை நோக்கி ஓடினாள்.
"என்ன ஆச்சு?"
"பயப்படும் படியா ஒண்ணும் இல்ல. இவருக்கு செஞ்ச ட்ரீட்மென்ட்-கு பில் பே செய்யணும். அதுக்கு உங்க சொந்தக் காரங்க யாராவது இருக்காங்களா-ன்னு கேட்டு பாத்தோம். தலைய தலைய ஆட்டுறாரே தவிர வேற எதுவும் சொல்ல மாட்டேங்கிறாரு. உங்கள அட்மிட் செய்யச் சொல்லி யாரு கால் செஞ்சாங்கன்னு கேட்டா கூட பதில் சொல்ல மாட்டேங்கிறாரு", என்றாள் ஒரு நர்ஸ்.
"அப்பா, அம்மா இல்ல. ஆனா வைஃப் இருக்காங்க. பேரு கூட மார்குரைட். என்ன சரியா?" லூயிசா, ராகவனின் அருகில் சென்று வினவினாள். பதில் ஏதும் வரவில்லை.
"ஏன் பதில் சொல்ல மாட்டேங்கிறீங்க? உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு தெரியுது. ஆனா அத சொன்னா தானே எங்களுக்கு புரியும்?", பதில் இல்லை.
"சொல்லுங்க. ஏன் பேசாம இருக்கீங்க ஊமை மாதிரி?" லூயிசா அதைக் கேட்டதும் ராகவனிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. மாறாக லூயிசா, எதையோ கண்டு பிடித்ததைப் போல யோசித்தாள். மேலும் எதுவும் கேட்காமல் தன் அறையை நோக்கி ஓடினாள். மேஜை மீதிருந்த கோப்பினை எடுத்து வேகமாக புரட்டினாள். அவள் பார்க்க விரும்பாத அடுத்த காகிதம் கிடைத்தது.
அது, ராகவனின் பிறப்புச் சான்றிதழ். அதில்,
"இக்குழந்தை பிறவி ஊமையாகப் பிறந்தது..", என்ற வரியை படித்தவுடன் நிற்கமுடியாமல் நாற்காலியின் மேல் சாய்ந்தது லூயிசாவின் உடல். அவள் சில நொடிகள் தன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தாள்.
"இருந்த ஒரே தொடர்பும் கை தான். அதுவும் இல்லேன்னா இவன் எப்படி மனசுல நெனச்சத வெளிய சொல்லுவான்?" அவன் நிலையை நினைத்து மனம் குழம்பியது. மெதுவாக எழுந்து, அவன் அறைக்குள் சென்று,
"நீ ஊமைன்னு இதுல போட்டிருக்கு. அப்புறம் எப்படி அடுத்தவங்க கூட பேசுவ? காலால எழுத வருமா?" லூயிசா கேட்ட கேள்விக்கு பதிலாக, ராகவன் தன் தலையை ஆட்டிக் கொண்டே கண்ணீர் சொரிந்தான்.
"உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு-ல? உன்னோட மனைவி எங்கே?", திடீர் என்று 'ஆம்' 'இல்லை' கேள்விகளாக கேட்க லூயிசாவால் பழகிக் கொள்ள முடியவில்லை. அந்த கேள்விக்கு எந்த விடையும் வராததை அறிந்தவுடன்,
"உன்ன விட்டுட்டு போயிட்டாளா?"
"இல்லை", என்று தலை அசைந்தது.
"செத்துப் போய்டாளா? "
"இல்லை"
"அப்போ அவ எங்கே?" அவள் கேட்ட கேள்விக்கு தலை ஆட்டி பதில் சொல்ல முடியாமல் சிலை போல் நின்றான். அப்போது லூயிசாவின் தோளில் கை வைத்தாள் ரேவதி.
"இந்தா, உன்னோட ஸ்டெத்-ஐ(Stethescope) கேண்டீன்-லையே விட்டுட்டு வந்துட்ட. மறதி பேஷண்டுங்க கிட்ட இது தான் தொல்லை!" என்று அவள் கூற, "எனக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் இருந்தது உனக்கு தெரியும்-னு புரியுது. அதுக்காக இவ்ளோ ஷார்ட்-ஆ எல்லாம் மறதி இருக்காது. நீ தூங்கி வழிஞ்சப்போ கர்சீப்-ஐ கீழ போட்டுட்ட. அத எடுத்து உன்னோட பர்சுக்குள்ள சொருகினேன். அதே போல தான் இதுவும். போ!" என்று சொல்லிவிட்டு, ராகவனிடம் திரும்பி கேட்ட கேள்வியை திரும்பவும் கேட்டாள்.
"அப்போ அவ எங்கே இருக்கா?" கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது. அப்படி என்ன காரணத்திற்காகத் தான் அவன் அழுகிறான் என்றறிய அவன் நினைவுகளை கவனித்தோம்.
"என்ன கிஸ் பண்ணு..என்ன கிஸ் பண்ணு..தயவு செஞ்சு என்ன கிஸ் பண்ணு..", என்று கெஞ்சிக் கொண்டிருந்தது அவன் மனக்குரல்.
திரும்பவும் 'வார்டு பாய்' மனோகரன்...
“இந்தக் கதையை உயிரோசை வாரத் தொகுப்புல எவனோ கண்ணன் ராமசாமின்னு ஒரு வெட்டிப் பய எழுதியிருக்கான்னு கேள்விப் பட்டேன். படிச்சு முடிச்சதும் ஒரு டவுட்டு வந்திச்சு. ஒடனே லூயிசா மேடத்தோட வீட்டுக்கு போய் ராகவன் வீட்டுல எடுத்தா மாதிரியே அவங்க ஃபைல்-ஐயும் எடுத்து பாத்தேன். அவங்க பிறப்புச் சான்றிதழ்-ல என்ன பேரு இருந்திச்சு தெரியுமா?" மனோகரன் கேட்க,
"என்ன பேரு?" என்றாள் ரேவதி; ஆர்வத்துடன்.
"அவங்க நிஜப் பேரு லூயிசா மார்குரைட். டாக்டர் படிப்பு சேந்த போது தன்னோட பேரை லூயிசா-ன்னு சுருக்கிட்டாங்க. டாக்டர் சான்றிதழை மட்டும் பாத்துட்டு, தன்னோட முழு பேர் லூயிசா தான்னு முடிவெடுத்துட்டாங்க"
"ராகவனும் அவளும் கல்யாணம் செஞ்சிகிட்ட போது ஏன் லூயிசா மார்குரைட்-னு பதிவு செய்யல? ஏன் மார்குரைட்-னு மட்டும் இருந்திச்சு? லாஜிக் இடிக்கிதே"
"கதைக்காக லூயிசா மேடம் பாக்காத மேரேஜ் சான்றிதழை பாத்தா மாதிரி எழுதியிருப்பான் அந்த ரைடர். சஸ்பென்ஸ்-காக எதையும் செய்வானுங்க மொள்ள மாறிப் பசங்க"
"இருக்கும்! வா லூயிசா கிட்ட சொல்லலாம்.." ,என்ற ரேவதியை நிறுத்தி,
"ஒரு நூத்தியம்பது ரூவா இருந்தா..", என்று சொல்லிக் கொண்டே தலை சொரிந்தான் மனோகரன் (முழுப் பெயர், வருண் மனோகரன்!).
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4866
2 comments:
nice start... keep gng anna!!!!
thanks.. :)
Post a Comment