Pages

Tuesday, October 29, 2013

குட்டைக்குள் ஆட்டு மந்தை

இது ஏதோ வெளியில் திரியும் ஆட்டு மந்தையை விமர்சிக்கும் பதிவு என்று எண்ணிவிட வேண்டாம். இந்தப் பதிவு, என்னிலிருந்து தொடங்குகிறது. ஆம்..நானும் இந்த மந்தையில் கண்ணைக் கட்டி விட்டது போல் நுழைந்த ஓர் ஆடு தான்.
எந்த மந்தை? B.E என்ற மாயா பஜார் படிப்பைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் மந்தை.
நான் பொறியியல் படிப்பை முடித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. படித்து முடித்து வெளியே வந்த பிறகு தான் இந்த மர மண்டைக்கு விளங்கியது. இந்தக் கூட்டம் ஒரு கண்கட்டி வித்தையை நம்பி ஏமார்ந்து கிடக்கிறதென்று.
பலர், பலவாறாக இந்த படிப்பை பற்றி உயர்வாகவும் தாழ்வாகவும் பேசிக் கொண்டே தான் இருக்கின்றனர்.
உயர்வாகப் பேசுபவர்களின் பெரும்பாலானோர் முன்வைக்கும் வாதம், இந்தப் படிப்பை படித்தால் தான் உடனடி வேலை வாய்ப்பு என்பதாகும்.
தாழ்வாகப் பேசுவோரின் வாதம், படிக்கும் படிப்புக்கும், வேலைக்கும் சம்மந்தமே இருப்பதில்லை; மேலும், வேலை வாய்ப்பு குறித்த சந்தேகங்கள் பல இடங்களில் எழுப்பப் பட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதாகும்.
நான், இந்த ஆட்டு மந்தையின் தவறை வேறொரு கோணத்தில் பார்க்கின்றேன். இந்தக் கோணம் தான் எங்கள் தவறை பட்டவர்த்தனமாக பல் இளிக்க வைக்கிறது.
நம் நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் B.E படித்துவிட்டு வெளியே வரும் நபர்களின் எண்ணிக்கை, அமரிக்கா மற்றும் சீனாவின் எண்ணிக்கையின் கூட்டுத் தொகையை விட அதிகம்! இவர்களில் சொற்பமானவர்களே ஐ.டி மற்றும் உற்பத்தித் துறையில் ஓர் வேலையில் அமருகிறார்கள். மற்றவர்கள், தங்களுடைய படிப்பை ஒப்பிடும்போது, மிகக் குறைவான சம்பளத்தோடு கிடைக்கப் பெரும் ஒரு வேலையை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். (அதிக வேலை நேரம், தொழிலாளர்களின் நலன் கருத சங்கங்கள் இல்லாமை, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரம் போன்றவற்றை பார்க்கும் போது ஐ.டியில் கிடைக்கும் சம்பளமும் குறைவே).
இந்த வாதத்தை முன்வைக்கும் போது, பிள்ளைகளின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தீர்க்கதரிசிகளான பெற்றோர்கள், வேறு மாதிரியாக பேசுகின்றனர்.
அதாவது, முயல்பவன் பிழைத்துக் கொள்கிறான். முயலாதவன் கிடைத்ததை வெல்லக் கட்டியாய் நினைத்து தின்று விடுகிறான் என்பதாக!
இந்த 'முயற்சி' என்ற ஒரு வார்த்தையை தான் நான் மட மந்தையின் வார்த்தையாகப் பார்க்கிறேன்.
'முயற்சி' வெற்றி அடைய எத்தனை காரணிகள் தேவைப் படுகின்றன என்று யோசிக்கத் தோன்றுகிறது.
௧. பெற்றோர் எதிர்பார்ப்பது, 'வெறி'..'வெறி' ஒன்று மட்டுமே. படிப்பை ஒரு அனுபவமாக யாருமே அணுகக் கூடாது. அதை வெறியோடு படித்துக் கிழிக்க வேண்டும் என்பது இவர்கள் வாதம். சரி, போகட்டும்! ஒருவன் வெறித்தனமாக முயல்கிறான்..அது மட்டும் போதுமா??
௨. ஒவ்வொரு மூளைக்கும் ஓர் கொள்ளளவு இருக்கிறது. அதாவது, ஞாபக சக்தி. சரி..கஷ்டப்பட்டு அதையும் அதிகரித்துவிட்டோம். அடுத்து?
௩. முக்கியமான ஒன்று, யாருக்கு எது வரும் என்பது..
மரபு ரீதியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படிப்பினையில் ஆர்வமிருக்கும். அதை இனம் கண்டு கொண்டு, அந்த குறிப்பிட்ட படிப்பை ஊட்டி வளர்த்தால், வெறியாட்டமும், வல்லாரைக் கீரையும் தேவையே இல்லை என்று பிள்ளைகளின் வாழ்க்கையை முடிவெடுப்பவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டேன் என்கிறார்கள்.
இந்த வாதத்தை முன்வைக்கும் ஒவ்வொருவரையும்,
'முடியாத விஷயத்திற்கு காரணம் கற்பிக்காதே. என் பிள்ளையை கெடுக்காதே" என்று திட்டித் தீர்க்கின்றனர் பெற்றோர்.
இவர்கள், நம் பாடத் திட்டம் எந்த நோக்கத்தோடு வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்று உற்று கவனித்தால், இது கற்பிதம் அல்ல; அறிவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இது தான் உண்மை என்று புரியும்.
இந்த ஆட்டு மந்தை, எல்லா ஆடுகளையும் ஒரே குட்டையில் குளிக்க வைக்கத் தயார் படுத்துகிறது. அந்தக் குட்டையின் கொள்ளளவைக் காட்டிலும் கூடுதலான கால்கள் உள்ளே நுழையும் போது, சறுக்கி விழத் தான் செய்யும் என்ற உண்மையை புரிந்து கொள்ள மறுக்கிறது. அந்த சறுக்கல், இயலாமையின் காரணமாக அல்ல!
சுவர் மீது கால் வைத்து அழகாக மேயக் கற்றுக் கொண்ட ஒரு ஆட்டை பிடித்து, ஓட்டப் பந்தையத்தில் ஓட விட்டால் என்ன  விளைவு ஏற்படுமோ, அது போலவே இதுவும்.
மேலும், நல்ல சம்பளம் தரும் ஒரு வேலையை பிடிக்க விழுந்து விழுந்து படிப்பது மட்டுமே பொருளாதார ரீதியில் உயர்வைத் தரும் என்ற எண்ணம், அடிமட்ட முட்டாள் தனம் அன்றி வேறில்லை. நம் நாடு ஒரு காலத்தில் பல துறைகளில் வல்லுனர்களை பெற்றிருந்த போது, இப்போது இருந்ததை விடவும் அதிக பலத்தோடு திகழ்ந்த உண்மையை இவர்கள் உணர மறுக்கின்றனர்.
பி.ஈ படிப்பிற்கு கிராக்கி ஏற்பட்டது போல, பல துறைகளுக்கான மவுசு அதிகரிக்கும் போது, அத்துறைகளுக்கு இது வரை இல்லாத இடம் புதிதாக உருவாக வழி வகை ஏற்படும். புதிய துறைகளில் நம் நாடு சிறந்து விளங்கும் போது கிடைக்கப் பெரும், 'அறிவு வளம்' ஒட்டுமொத்த மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
இன்று நம்மிடம் ஓர் கணித மேதையில்லை!
பேர் க்ரில்ஸ்-ஐ போன்ற ஓர் அதி நவீன காட்டுவாசி இல்லை!
வாஸ்கோட காமாவை போன்ற ஊர் சுற்றி இல்லை!
உலகில் உள்ள பொருளாதார வல்லரசு நாடுகள் எல்லாம், தங்களிடம் உள்ள தொழில்நுட்பத்தை விற்றே பலவற்றை சாதிக்கின்றன. நாமோ, நம்மிடம் உள்ள அறிவு வளத்தை, வெளிநாட்டு கம்பெனிகளுக்கு காசுக்காக விற்றுக் கொண்டிருக்கிறோம். நம் பார்வை, பொறியியல் முடித்துவிட்டு ஓர் ஐ.டி வேலை என்ற குறுகிய வட்டத்தினுள் சுற்றிக் கொண்டிருக்கிறது. இது மாற வேண்டும். மாற்ற வேண்டும்..

Saturday, October 19, 2013

பின்னாலேயே தொடருமாம் பூதம்!

எனது அனுபவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்குக் காரணம், நான் சந்திக்கும் புதிய மனிதர்கள். முதலில் அவர்களுக்கு எனது வணக்கங்கள். நல்ல அனுபவமானாலும், கெட்டதானாலும் அது கிடைக்க வழி கிடைப்பது பெரும் பாடு. அதனால், கருத்தொற்றுமை இல்லாதவர்களுக்கும் வணக்கங்கள்.
இப்போதைய அனுபவம், ஒரு பூதத்தை பற்றியது. வேறொன்றுமில்லை. எனது ஜாதி தான். நகரத்தை ஒட்டிய ஓர் ஊரில் இருப்பதாலோ என்னவோ, மேல்தட்டு வர்க்கத்தினரைப் போல, "இப்போதெல்லாம் ஜாதிப் பிரிவினை இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் ஜாதிக் கலவரங்கள் நடக்கின்றன" என்ற கருத்தை நானும் கொண்டிருந்தேன்.
அப்பாவி மக்களின் வாழ்க்கை பற்றிய புரிதலை கொஞ்சமாக உள்வாங்கிவிட்ட இவ்வேளையில், வலிந்து போய் நானாக பிராண்டட் செருப்புகளின் ரேகைகளுக்குக் கீழே மண்ணோடு மண்ணாய் கலந்து  வாழ்ந்து கொண்டிருக்கும் அடித் தட்டு மக்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரு விவரத்தை முழுமையாய் உணர்ந்திருக்கிறேன்.
ஜாதி வெறியும், கலவரமும், பிரிவினையின் பிரதிநிதிகள் அல்ல. அவை மனிதனின் உள்ளிருக்கும் பிரிவினை எண்ணங்களின் வெளிப்பாடு மட்டுமே. தடுக்கப்பட வேண்டியது, எண்ணம் தானே தவிர, வெறியோ, கலவரமோ அல்ல. 
அவ்வாறே, அழியாமல், அழிக்க முடியாமல் இருக்கப்போகும் பிரிவினை எண்ணம், என்னைப் பின்தொடர்ந்து வரும் பூதமாய் தொடர்கிறது.
எங்கு போனாலும் எனது குணம் என்னவென்று கவனிக்க மனித எண்ணம் மறுக்கிறது. 
நீங்க 'யாரு'? 
உங்க கேஸ்ட் என்ன?
ராமஸ்வாமி-ன்னா, ஒண்ணு, ஐயரா இருக்கணும்; இல்ல, நாயுடுவா இருக்கணும்.
என்பன போன்ற சூசகக் கேள்விகளும், நேரடியான கேள்விகளும் என்னைப் பின் தொடர்கின்றன.
அதனால் என்ன? என்று கேட்கிறீர்களா? நிறைய பிரச்சனைகள். சொல்கிறேன்.
முதலில், என் முகத்தைப் பார்த்ததும், என்னால் எந்த ஒரு கடினமான வேலையும் செய்ய முடியாது என்று அவர்களாகவே முடிவு செய்து கொள்கின்றனர். ஆனால், தோட்டத்தில் குழி வெட்டுவது முதற்கொண்ட, கடினமான வேலைகலை செய்து எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த எண்ணத்தால், பல நேரங்களில் வேடிக்கை பார்த்தபடி நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறேன். எனக்குப் பிடிக்காத ஒன்று, தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது.
அடுத்து, ஆயிரமாண்டு ஆதிக்க புத்தி இவனுக்கும் இருக்கும் என்ற எண்ணம். ஒரு முறை, தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த ஒரு நபர், வழிந்து வரும் வியர்வை கண்ணுக்குள் விழுவதால் ஏற்படும் எரிச்சலைப் போக்க, கையால் துடைக்க முற்பட்டார். ஆனால், அவர் கை முழுவதும் கிரீஸ் கரையாக இருந்தது.  இதைப் பார்த்ததும், என் கைக்குட்டையை எடுத்து துடைத்து விடத் தோன்றியது எனக்கு. அவரைப் பார்த்து புன்னகைத்து நெருங்கினேன். உடனடியாக அவர் கேட்ட கேள்வி,
"என்ன சிரிக்கிரீங்க? எங்கள பார்த்தா நக்கலா இருக்கா?" என்பது தான்.
எனக்கு கோபம் வரவில்லை. மாறாக, அன்று மாலை கண்ணாடியில் என் முக வடிவத்தைக் கண்டதும் வருத்தம் தான் வந்தது. என் முகத்தில் அவனது நண்பன் முகம் தெரியவில்லை. காரணம், அவனுக்கு என் முக ஜாடையில் நண்பர்களே இல்லை! இதற்கு ஜாதி தானே காரணம்? நட்பில் கூட ஜாதி பார்த்துத் தான் கூடுகிறார்கள்; இன்றும்!
அடுத்து, இன்னொருவர், "நீங்க பிராமின்-ன்னு அப்பவே நெனச்சேன். ஏன்னா, மத்ததுங்க எல்லாம், திருட்டுக் கோட்டுங்க மாதிரியே இருக்கும்" என்றார். நான், "பொறப்புல என்ன இருக்கு? அவனவன் வளந்த விதம் தான்" என்றேன். உடனே அதற்கு அவர், "அய்யா, உங்களை எதுவும் சொல்லலை" என்றார். அதாவது, அடுத்த ஜாதிக் காரனுக்காக ஒரு பிராமணன் வக்காலத்து வாங்கிப் பேசியது அவர் காதுகளில் விழவே இல்லை! எப்போதும் போல, பிராமணன் தன்னையே உயர்வை நினைப்பான் என்ற எண்ணத்தில், உங்களை குறை சொல்லவில்லை என்கிறார். 
படிப்பவர்களுக்கு, நான் யாரைக் குறை சொல்கிறேன் என்று குழப்பமாக இருக்கலாம். தவறுகளை துடைக்க முற்படும் வரை இந்த இடர்பாடுகளை நான் சந்திக்கத் தான் வேண்டும் என்றே கூறுகிறேன். என் பின்னால் வரும் பூதத்தை கீழே இறக்கி வைத்து விட்டால் மட்டும் போதாது. அதை உலகறியச் செய்யவும் வேண்டும் என்றே கூறுகிறேன்.