Pages

Saturday, August 10, 2013

முன்னேற்றம் கேட்கும் விலை

ரயில்வே, S & T பயிற்சிப் பள்ளியின் FOUNDERS DAY விழாவில், நான் வாசித்து பரிசு பெற்ற கவிதை..

வணக்கம். நான் இங்கு வாசிக்கப் போகும் கவிதையின் தலைப்பு 'முன்னேற்றம் கேட்கும் விலை' என்பதாகும். பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பிந்தைய இந்தியாவில், இது வரை 1, 30, 000 ற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஓர் கருத்துக் கணிப்பு சொல்கிறது. என் கவிதையின் சிறப்பென்னவென்றால், வசன நடைப் பாடலின் வழியே ஓர் விவசாயியின் கதையை சொல்லப் போகிறேன். கவனம் செலுத்தி செவி சாய்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

                                                                                                             
படிப்பறிவில்லா பாண்டிப்புறம் என்னும் ஊரில்,
பட்டதாரியாகும் ஆசை ஒருத்தனுக்கு உதித்தது.
அதற்கொரு காரணமும் இருந்தது.

வயதான விவசாயியாம் அவன் தந்தை,
அனுதினமும், வெயிர்சூட்டால் வதைக்கப்பட்டு,
வியர்வை சிந்தி உழைப்பார்.

ஆனால், அடிப்படையில் வாய்க்க வேண்டிய
வசதிகளில் ஒன்று கூட,
அவர் வாழ்வில் எட்டிப் பார்க்க மாட்டேன் என்றது.

இந்நிலை தன்னோடு முற்றுப்பெற வேண்டுமே
என்ற வேட்கை தான், பிள்ளையின் மனதில்
அறிவுச் சூடேற்றி, தனல் சேர்க்க வழி செய்தது.

பத்தாம் வகுப்பில் முதலாக நின்றான்.
அடுத்த இரு ஆண்டுகளில் மாநிலத்தில்
சாதனை படைத்தான்.

மென்பொருள் நிறுவனம் ஒன்று
தட்டில் பூ வைத்து,
வலிந்து வேலை கொடுத்தது.

பூரிப்பின் உச்சம் தொட்டு,
உச்சி நுகர்ந்தார் விவசாயத் தந்தை.

ஒயிட் காலர் ஊதியத்தோடு,
ஊர் பேர் சொல்லும் பிள்ளையாக,
சென்னைக்குள் நுழையலானான்.

சூழலால் ஈர்க்கப்பட்டு,
நகரத்தோடு ஒன்றிப் போனான்.

மூன்றே ஆண்டுகளில் திருமணம் நடந்தது.
வெளிநாடு போகும் வாய்ப்பும் அமைந்தது.

இது தானடா முன்னேற்றம் என்று
மார் தட்டும் நேரத்திலே,
தந்தையிடமிருந்து மடல் ஒன்று கிடைத்தது.

பொருளாதார மண்டலம் அமைக்க
நில ஆர்ஜிதம் செய்யும் அரசு,
முதலாளியான என்னை,
கையேந்தி நிற்க வைக்கிதே!

இந்த அவல நிலையை என்னென்று கேட்க
என்னை வந்து பார்ப்பாயா?
வயல் வெளிகளை காப்பாயா?

தந்தையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
அழுகையோலமாக பிள்ளையின்
காதுகளை குடையவே,
உடனடியாகக் கிளம்பித் தாயகம் திரும்பினான்.

அதிகாரிகளின் கால் பிடித்தான்.
விவசாயத் தொழிலையேனும் விட்டுவையுங்கள்
என்று கெஞ்சிப் பார்த்தான்.
 நிலைமை பிடி கொடுத்துப் பேச மறுத்தது.

முடிவில், மனதை தேற்றிக் கொள்ளுங்கள்;
என்னோடு வந்து செருங்களென்று
தந்தையையும் உடனழைத்துச் சென்றான்.

இரண்டு மாதங்களில் கழித்து,
வெளி நாடு புளித்துப் போகவே,
தாயகம் திரும்பினார்,
அப்பாவி விவசாயத் தந்தை.

தனிமை அவரை வாட்டி வதைத்தது..
சேற்றில் கால் வைக்க தேகம் முழுவதும்
துடி துடித்தது.

வயலைத் தேடி நடந்து சென்றார்.
அங்கே,
ஜேசிபி எந்திரம் ஒன்று, மண் புழுவை,
துண்டு துண்டாக வெட்டக் கண்டார்!

துடி துடித்து நெளிந்த விவசாய நண்பனின் இறப்பு
அவரை தூங்க விடாமல் புரள வைத்தது.
வேலையில் மும்முரமாகும் முன்,
தன் பிள்ளைக்கு தகவலனுப்பினார்.

இம்முறை மடல் மடலெல்லாம் எழுதவில்லை.
என் தற்கொலையின் விவரம் சொல்லும்,
ஒரு வரித் தந்தியே போதும் என்றார்!

0 comments: