Pages

Sunday, August 28, 2011

திண்ணை.காம்: உங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்!

"இது ஒரு புது யுகத்தின் தொடக்கம். வேலியே பயிரை மேய்ந்த காலம் கரைந்து விட்டது. உங்கள் பயிரை நீங்களே அறுவடை செய்யும் யுகம் தொடங்கிவிட்டது! திருமணம், குலம், குடும்பம், என்று பல்வேறு பிணைப்புகளால் கட்டுண்டு கிடந்த உங்கள் வாழ்க்கை, இன்று முதல் அன்பிற்கும் கட்டுப் படட்டும். சமுதாயம், ஒழுக்கம் இவற்றிற்கு பயந்து சிறை பட்டிருந்த அன்பு, இன்று முதல் உங்களுக்கு நெருக்கமானவரிடம் அடிமையாகட்டும். அடக்குமுறைக்கும், சுதந்திரத்திற்குமான போரில் வெற்றி பெற்று, உங்களுக்கெல்லாம் புதிய வாழ்க்கை அளித்த என்னை நீங்கள் புகழ வேண்டாம். இது ஒரு கூட்டு முயற்சி...", புரட்சி வரலாற்றில் ஒரு வினோத அவதாரம் என்ற தலைப்பில், 'கண்ணுக்குத் தெரிந்த கடவுள்' என்ற பட்டப் பெயருடன் உலா வந்து கொண்டிருந்த, 'லயன் ஹார்ட்' இளஞ்சிங்கம், தமிழ் ரேடியோ என்ற இணைய தள வானொலி நிலையத்திற்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்ததை, கன்னத்தில் கை வைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் வாசவன்.

தனக்குப்
பின்னால் அரசாணை நிறைவேறிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு கணினியின் பக்கம் திரும்பியவரிடம்,


"
என்னங்க உங்க பாட்டுக்கு மூஞ்சிய திருப்பிக்கறீங்க?" என்று வினவினார் ஜெயந்தி; அவர் துணைவியார்.


"
அவன் வீடு காலி செய்யிறதை கண் கொட்டாம பாத்துட்டு இருக்கக் கூடாதம். அது அவங்களுக்கு சங்கடத்தை கொடுக்குமாம். இப்போ தான் டி.வி- வந்த பொண்ணு சொல்லிச்சு", என்று கணினியின் திரையைத் தன் மனைவிக்கு காண்பித்தார்.


"
கட்டைல போறவன். நம்ம பையனை நம்ம கிட்ட இருந்து பிரிக்கிறானே", ஜெயந்தியின் கைகள் ஒன்றோடொன்று பிணைந்து சாபம் கொடுத்தன.


"
கட்டையில தான் போவான். சந்தனக் கட்டையில", என்று கூறிவிட்டு ஞ்சிங்கத்தின் பேச்சினை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார்.


"
உங்க அரசாணையின் முக்கிய அம்சங்கள் என்ன-ன்னு எங்க நேயர்களுக்கு சொல்ல முடியுமா?"


"
கண்டிப்பா! முதல் அம்சம், இனி,ஒரு குடும்பம் என்றால் வயோதிகர்கள், நடுத்தர வயதினர், இளைஞர்கள் என்று கலவையாக இருக்கத் தேவையில்லை. குழந்தை பருவம் முதல் ஒரு வேலைக்குச் செல்லும் வயது வரை பெற்றோருடன் இருக்கும் இளைஞர்கள், தாங்கள் விரும்பும் நேரத்தில் தனியே வாழச் செல்லலாம். அவர்களுடைய கனவுகள் நிறைவேறும் போது பெற்றோரின் இடையூறு இருந்தால், கடுமையான தண்டணை அளிக்கப் படும். அதே போல், தங்கள் உழைப்பை செலவிட்டு படிக்க வைத்த பெற்றோருக்கு மாதா மாதம் ஒரு தொகையை பிள்ளைகள் கொடுக்க வேண்டும். மீறினால், அவர்களுக்கும் தண்டனை உண்டு"


"
நான் என் கனவை எல்லாம் தொலைச்சிட்டு எம்மகனை படிக்க வெச்சேனே! இப்போ அவனை என் கூட வெச்சுக்கணும்-னு ஒரே கனவு தான் எனக்கு. அதை உன்னோட அரசாணை தடுக்குதே. உனக்கு என்ன தண்டணை?", வாசவனின் வெறுப்பு, வேறு வார்த்தைகளில் புன்னகையுடன் ஞ்சிங்கத்தின் முன் வைக்கப் பட்டது.


"
ஒரு நல்லது நடந்தா ஒரு கெட்டது நடக்கத் தான் செய்யும். பெற்றோருக்கு மனப் பக்குவம் இருக்கும். அவர்களின் கனவு தொலஞ்சு போறது என்ன புதுசா? இது ஒரு பெரிய விஷயமா என்ன? ஆனா பசங்களுக்கு அப்படி இல்லை. அவங்க ஒடிஞ்சு போறது நம்ம நாட்டுக்கு நல்லதில்ல. அது மட்டும் இல்லாமல், பெற்றோரையும் இந்த அரசு கைவிடவில்லை. அவர்களுக்கு பண உதவி செய்வது மட்டும் இல்லாமல், எந்த ஒரு பிரச்சனை ஆனாலும், ஒரு ஃபோன் கால் செய்தால் போதும். அவர்கள் வீட்டு வாசற்படிக்கு வந்து உதவ ஒரு தனி துறை காத்துக் கொண்டிருக்கிறது. அது தான் அடுத்த அம்சம்"


"
தட்ஸ் கிரேட் இல்லையா பெற்றோர்களே!", என்று சுந்தரக் குரலில் ஆர்.ஜே மங்கை கேட்க,


"
ஆமா பெரிய துறை. என் மகனோட மடியில சாகுறதா இருந்தா, உதவியே கெடைக்கலேன்னாலும் சந்தோஷமா சாவேன் டா. பெருசா பேச வந்துட்டான்", ஜெயந்தி கோபத்தில் கண்ணீர் சிந்தினார். பெண்களுக்கே உரித்தான தனித்துவம்.


"
இரு அவன் சொல்றது என்ன-ன்னு கேப்போம்", தன் மனைவியின் தோளைப் பற்றி ஆசுவாசம் செய்தார் வாசவன். சாதனைகளை அறிவிக்கும் பெருமிதத்தோடு இளஞ்சிங்கம் தொடர்ந்தார்.


"
மூன்றாவது அம்சம் என்னன்னா, ஒரு ஜோடி மனதால் இணைந்துவிட்டால், அவர்கள் ஒரு குடும்பமாக வாழ எந்த ஒரு சக்தியும் எதிர்க்கக் கூடாது. மேலும், திருமணம் என்பது ஒரு முறை மட்டுமே சாத்தியம். ஒரு வருட காலம் வாழ்ந்து, இனி நாங்கள் பிரிய மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து, தங்கள் இணைப்பை பதிவு செய்ய முன் வரும் மக்களுக்கு மட்டும் தான் திருமணம்.


அப்படி
முன்வரும் பெண்கள், இந்த ஒரு வருட காலத்தில் தாய்மை அடைந்தால், அவர்களுக்கு திருமணம் கட்டாயம் ஆக்கப் படும். இது விவாகரத்துக்களை குறைக்க உதவும்."


"
அப்போ பாதுகாப்பா செக்ஸ் வெச்சிகிட்டு பிரியிறவங்க? தன் துணை தனக்குத் தான் சொந்தம்-னு யாருக்காவது தோணுமா?! அப்படியே தோன்றினாலும், அது நிலைக்குமா? சரி, ஒரு வருட காலத்தில் உண்மையான முகம் தெரியாம போயிட்டா? திருமணத்துக்கு அப்புறம் தெரியவந்தா?", தன் மனைவியை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு வாசவன் பொறுமை இழந்தார். ஆனால், அது இளஞ்சிங்கத்தின் கர்ஜனைக்கு கடிவாளம் போடவில்லை. அவர் பேச்சு தொடர்ந்தது.


"
நான்காவது அம்சம்: வேலைக்குப் போகும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை, தாயன்புடன் வளர்க்கும் அரசு காப்பகங்களில் விட்டுச் செல்லலாம். அங்கு பாட்டி வைத்தியம் முதற்கொண்டு எல்லாம் கிடைக்கும்", என்று 'லயன் ஹார்ட்' கூற,


"
ஹா.ஹா!" என்று சிரித்தது வானொலி நிலையம்; அவர் சொன்னது 'ஜோக்' என்ற நினைப்பில்.


"
வாட்ஸ் சோ ஃபன்னி அபவுட் திஸ்?" வாசவன் ஏன் கோபப் படுகிறார் என்று நமக்கும், இளஞ்சிங்கத்துக்கும் தெரியாமல் இல்லை.


"
போலிகள் அழகாக இருந்தாலும், நிஜம் தான் என்றும் நிலைக்கும்" என்பதை மறைத்து,தற்காலிகமான புகழைத் தேடிக் கொள்ள 'லயன் ஹார்ட்' ஆசைப் படுகிறதென்று எல்லோருக்கும் புரிந்தது. ஆனால், வெளியே சொல்லவில்லை. புதிதாக பிறந்த குழந்தை அழகாக இல்லை என்றாலும், "சோ கியூட்" என்று தானே கூறத் தோன்றும்?


"
அப்பா நான் கிளம்பறேன்", மகன் விடைகொடுக்க,வாசவன் கவனம் தடை பட்டது.


"
எங்கள விட்டு போகாத டா. இந்த அம்மா வேணுமா? யாரோ ஒரு முட்டாள் போட்ட சட்டம் வேணுமா?", ‘அவுட் டேடட்’ என்று ஒதுக்கப் பட்ட 'அனுதாப' ஆயுதத்தை கையாள முயற்சித்தார் ஜெயந்தி.


"
கெஞ்சாதே ஜெயா. சட்டத்தை மீறத் தயாரா இருக்கும் உண்மையான அன்புக்கு முன்னாடி, இவன மாதிரி சந்தர்ப்பவாதிகள் தான் தலை குனியனும். நீ தலை குனிய வேண்டிய அவசியம் இல்ல. போகட்டும்", வாசவனின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் அமைதியாக நின்றாள் ஜெயந்தி. தன் பொருட்களை வண்டியில் ஏற்றி விட்டு வெளியேறினான் அவள் ஆசை மகன்.


"
ஐந்தாவது அம்சம்: இந்த அரசாணையை அறிவிக்கும் முன்னதாகவே, அரசு நிதியிலிருந்து கணிசமான தொகையை ஒதுக்கி வீடுகளை கட்டியுள்ளோம் என்பது எல்லோருக்கும் தெரியும். அவற்றை சுதந்திரப் பறவைகள் உபயோகிக்கலாம்! உங்கள் கனவுகளை நனவாக்கலாம்! நீங்கள் வசிக்கும் வீட்டின் மதிப்பை உங்கள் வாடகைப் பணம் ஈடு செய்யும் நாளில், அந்த வீடு உங்களுக்கே சொந்தமாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.முக்கியமாக, வட்டியில்லா கடனாகத் தான் அந்த வீடு வழங்கப் படும்"

"வாவ்! லவ் திஸ்" என்று ஆர்.ஜே குதித்தெழ,

"ஊர்- எவன் செத்தாலும் பரவாயில்ல. நான் சொல்ல வந்ததை சொல்லிக்கிட்டு தான் இருப்பேன்-ன்னு நினைக்கிறாங்களோ!" என்ற நினைப்புடன், வாசவனின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அளவு கடந்த துயரத்தை அவர் வயது தாங்கவில்லை.

வாசவனைப் பொறுத்தவரை, நியாயங்களை விட பாசத்தால் உந்தப் பட்ட உணர்வுகள் தான் அந்த அரசாணையை எதிர்க்க வைத்தது. "நல்லது நடந்தால் ஒன்றை இழக்கலாம் என்று கூறும் இளஞ்சிங்கம், பெரும்பாலான பெற்றோரின் அன்பும், கட்டுப்பாடும் தான் பிள்ளைகளின் பிற்கால நன்மைக்கு வித்திடுகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ள ஏன் தவறி விட்டான்" என்று வாசவனுக்கு புரியவில்லை.

"சரி விடுங்க. இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். நீங்க டென்ஷன் ஆவாதீங்க. பீ.பி ஏறிடும். பீ.பி ஏறி, உங்களுக்கு ஏதாவது ஆனா தூக்கிட்டு போக கூட ஆள் இல்ல. பக்கத்து வீட்டு கெழவனால உங்கள மாதிரி இன்னொரு கெழவனை தூக்க முடியுமா?", தன் கணவனின் உடல் நடுங்குவதை பார்த்து ஆறுதல் கூறினார் ஜெயந்தி. இருவரும் ஒருவருக் கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, புதியதொரு யுகத்திற்கு, 'கண்ணுக்கு தெரிந்த கடவுளின்' தயவில் எதிர்காலச் சந்ததியினர் குடிபுகுந்தனர்.

ஒவ்வொருவருக்கும், அவரவர் வசதிக்குத் தகுந்தாற்போல் வீடு ஒதுக்கப் பட்டிருந்தது. உள்ளே நுழைந்தவர்கள் 'இன்டீரியர்' அலங்காரங்கள் ரசித்தபடியே தங்கள் பொருட்களை வைக்க சரியான இடத்தை நிர்ணயித்துக் கொண்டிருந்தனர்.

வாசவனின் மகன் பெயர் சதுர். தனக்கு பிறக்கப் போகும் குழந்தை இப்படி இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பிறந்தவுடன் 'ரோஸ்'ஆகா இருக்கும் குழந்தை, பிற்காலத்தில் கறுத்து விடக் கூடாது. என்னைப் போல் குள்ளமாக இல்லாமல் உயரமாக இருக்க வேண்டும். பல்வரிசை சரியாகவும், கரை ஏதும் இல்லாமல் மணக்க வேண்டும். இப்படி எல்லோருக்கும் ஒரு ஆசை இருப்பது இயல்பு. ஆனால், வாசவன் கொண்ட ஒரே ஆசை, தன் மகன் அறிவாளியாக இருக்க வேண்டும் என்பது தான். அதனால் தான் சதுர் என்று பெயரிட்டார்.

ஆனால், அவன் இன்று தற்காலிகக் கட்டுப் பாடுகளை வெறுத்து, தன் பெற்றோரைத் துறந்து, புதுமணத் துணைவியான அகிலாவுடன் மாயவுலகத்திற்குள் பிரவேசித்துள்ளான். அவனுடைய முடிவுக்கு சில காரணங்கள் இருந்தன. உதாரணத்திற்கு ஒரு நாள்,

"எங்க அப்பா சின்ன வயசுல எப்படி அடிப்பார் தெரியுமா? கேவலம் ஒரு பொம்மை திருடினதுக்கு போட்டு அடி அடின்னு அடிச்சிட்டார்", என்று ஈழப் போரிலிருந்து தப்பி வந்தவர் தன் சோகக் கதையைக் மனைவியிடம் கூறுவதைப் போலத் அகிலாவிடம் சதுர் கூறுவதும், அவள், தன் கணவன் 'ரொம்ப பாவம்' என்று முடியைக் கோதி விடுவதுமாக ஒரே அளப்பறையாக இருந்தது. ஆனால் இன்றோ,

"கொஞ்சம் வந்து புடிங்களேன். நானே எப்படி தூக்கி வைக்க முடியும்?", என்று சினத்தை உமிழ்ந்தாள் அகிலா.

பல திண்டாட்டங்களுக்குப் பிறகு, இருவரும் சேர்ந்து எல்லா பொருட்களையும் அந்தந்த இடத்தில் வைத்துவிட்டு வியர்வை விடியக் கட்டிலில் சாய்ந்தனர். சில நொடிகள் கண்களை மூடிக் கொண்டு மூச்சு வாங்கிய இருவருக்கும் ஒரே எண்ணம். மின்விசிறி இயக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ஒரு கட்டத்தில் திரும்பிக் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அக்கண்களில்,

"அந்த வீடு ஷிஃப்டு செய்யும் போது எவ்வளவு சுலபமா இருந்திச்சு? இப்போ...", என்ற கேள்வி ஒருமனதாகத் தெரிந்தது. எண்ணத்தை வார்த்தைகளால் தெரிவிக்காமல் ஓய்வைத் தொடர்ந்தனர். அடுத்தவர் தவறை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு, தங்கள் தவறை மூடி மறைக்கும் சாதாரணம் மனிதர்களாய் படுத்திருந்தனர்.

அன்று இரவு, வாசவனும், ஜெயந்தியும் ஒன்றாகப் படுத்தவாறு தங்கள் தனிமையை நினைத்து வருந்திக் கொண்டிருந்தனர்.

"நம்ம பையன் என்ன செஞ்சிட்டு இருப்பான்?" வேறு விடயங்களைப் பற்றி யோசிக்க முடிவெடுத்து கட்டிலில் கிடந்தாலும், ஜெயந்தியின் கேள்வி மகனைச் சுற்றியே இருந்தது.

" எடுத்த முடிவை நெனச்சு வருந்திட்டு இருப்பான்", என்ற பதிலை கூறிவிட்டுத் தன் யோசனையை நீட்டித்தார். அன்று வரை இல்லறத்தால் திளைத்திருந்த அவர்கள் படுக்கை, அன்று முதல் இன்னலை அனுபவிக்கத் தயாரானது.

வாசவன் சொன்னது சரியா என்று புது யுகத்திற்குச் சென்று பார்த்தோம். அங்கும் படுக்கையில் பிரிவினை. அன்று வரை ஒத்த மின்மங்களாக இருந்த இருவரும்,இன்று காந்தத்தின் எதிர் திசைகளாக மாறிப் படுத்திருந்தனர். நடுநிசியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த கடிகாரத்தைப் போல, அவர்கள் எண்ணங்களும் மாற்றத்தை நோக்கி இயங்கிக் கொண்டிருந்தன. உடலால் பிரிந்திருந்தாலும், மனத்தால் ஒத்திருந்தனர்.

"இந்த சின்ன விஷயத்துலையே சண்டை வருதே, இனி தனியா எப்படி வாழ்க்கைய ஓட்டுறது?" இருவரும் ஓய்வுக்குப் பின் நடந்தவற்றை நினைவுபடுத்தினர்.

"சதுர். இங்க கொஞ்சம் வாங்களேன்", சமையல் அறையிலிருந்து அகிலா.

"இப்போ என்ன?" நாள் முழுவதும் பிரச்சனைகளுக்கு விடை சொல்லிச் சொல்லி அலுத்துப் போனவனாய் சதுர்.

"என்ன அலுத்துக்குற? கல்யாணத்துக்கு முன்னாடி எப்போ ஃபோன் செஞ்சாலும் செல்லம்-னு சொல்லுவ. இப்போ என்ன?" வேண்டிய சமயத்தில் 'என்னங்க', 'என்ன' என்று கூட மாறும்.

"அம்மா தாயே. விஷயத்த சொல்லு", வேண்டாம் என்ற நேரத்தில், மனைவி கூட அம்மாவாகத் தெரிவாள்.

"இந்த காஸ் சிலிண்டர் மூடி தொறக்க முடியல. கை எரியிது. நீ தான் ஜிம்முக்கு எல்லாம் போறல்ல? தொறந்து குடு பாக்கலாம்", இடுப்பில் கைவைத்துக் கொண்டு மல்லுக்கு நின்றாள் மனைவி.

"எதை எது கூட இணைக்கிற?" என்ற பொருளுடன் பெருமூச்சு ஒன்று விட்டுவிட்டு, தன் பலத்தை நிரூபிக்கக் குச்திக்குத் தயாரானான் அகிலாவின் அகமுடையான்.

முதலில் மூடியை பிடித்து தூக்கிப் பார்த்தான்; 'சிலின்டர்' கையுடன் எழுந்தது. கையிற்றை பிடித்து இழுத்துப் பார்த்தான்; அவனுடன் சேர்ந்து அதுவும் முக்கியது. இரண்டையும் சேர்ந்து இழுத்தான்; அசைய மாட்டேன் என்றது.

"இரு. இதை தொறக்க ஒரு டெக்னிக் இருக்கும். இன்டர்நெட்- பார்த்துட்டு வரேன்", தன் மனைவியின் முன் மானம் பறிபோகக் கூடாதென இணையதளத்தில் உதவியை தேடினான்.

"ஹ்ம்ம். இதோ இருக்கு. இப்போ தொறக்கும் பாரு", என்று அறைக்குத் திரும்பி,

"மூடியை கீழ் நோக்கி அழுத்தி, கயிற இழுத்து, இழுத்த வாக்குலையே தொறக்கணும்", என்று கூறிக் கொண்டே கோட்பாட்டை காரியமாக் முயன்றான்.

"ஊஹும்", என்றனர், மூடியும் மனைவியும்.

"நீ வேஸ்ட். ஒரு மூடியக் கூட தொறக்க முடியாத நீ, எப்படி??" என்று அகிலா இரட்டை வசனத்தில் கிண்டல் அடித்துச் சிரிக்க, மணாளன் மானம் பறிபோனது.

"மூடி சரியில்ல. என்ன வெறுப்பேத்தாத", என்றான் சிவந்த முகத்துடன்.

"ஆடத் தெரியாதவன், 'ஸ்ட்ரீட்' சரியில்லை என்றானாம்", 'அப்டேடட்' வார்ஷன் பழமொழியைக் கூறி மேலும் வெறுப்பேற்றினாள் அகிலா.

"போதும்", தழுதழுத்த குரல்.

"யு ஆர் லூசர்", என்று சிரித்தாள்.

"போதும்ம்", குரல் கனத்தது.

"லூசர். லூசர். லூசர். அப்படி தான் டா சொல்லுவேன். என்ன செய்வ?" எப்போதும் போல விளையாடியவளை,

"நிருதிடிங்கறேன்", என்று சிலிண்டரை தூக்கி வெளியே எரிந்து பேரொலியுடன் அடக்கினான்.

அதை சற்றும் எதிர்பாராமல் பயத்தில் அடங்கிய அகிலா, தாரை தாரையாய்க் கண்ணீருடன் படுக்கைக்குச் சென்றாள். அந்த நொடி முதல் அங்கிருந்து நகரவில்லை. சண்டையின் நினைவுகள் கடந்து செல்ல, சதுர், தன் அப்பாவின் பொன்மொழியை மறுபடியும் அசைபோட்டுப் பார்த்தான்.

"எல்லா கேள்விகளுக்கும் வெளியே விடை இருக்காது. சில கேள்விகளுக்கு உள்ளிருக்கும் அனுபவம் தான் பதில் சொல்லும்", அவன் அடுத்த எண்ணம்,

"நான் எடுத்த முடிவை நெனச்சு வருந்தறேன்"

அடுத்த நாள் காலை..

தந்தை, மகன், இருவரின் வீடுகளும் சோகத்தில் சோர்ந்து கிடக்க, தமிழ் வானொலியில் 'லயன் ஹார்ட்' இளஞ்சிங்கம் வெளியிட்ட அறிவிப்பு வாசிக்கப் பட்டது.

"புதிய அரசாணையை முழுமையாக ஏற்று, மக்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். எல்லோருடைய முகத்திலும் சந்தோஷத்தை பார்க்கும் போது, இவர்கள் சொல்வது(கண்ணுக்குத் தெரிந்த கடவுள்) உண்மை தானோ என்று நினைக்கத் தோன்றுவதாய் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. உங்கள் மகிழ்ச்சி. என் பாக்கியம்!"

http://puthu.thinnai.com/?p=3635

0 comments: