Pages

Saturday, July 16, 2011

திண்ணை.காம் : 'அது' வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே

"ஓடு! மேல ஓடு! நிக்காதே", நந்தினியின் தோளைப் பற்றித் தள்ளினார் வாசுதேவன்.

"நீங்களும் வாங்க. கிட்ட வந்திடுச்சு. வாங்க சீக்கிரம்", படபடப்போடு அழுகையை கலந்தது ஒரு காரமான ரசத்துடன் வெளிவந்தது நந்தினியின் குரலில். தன் கணவர் கட்டளையை மீறாமல் கையில் இரு தலையணை மற்றும் ஒரு பாயுடன் மாடிக்கு ஓடினாள். இரண்டு ஆறறிவு ஜீவன்களையும், ஒரு ஐந்தறிவு ஜீவனையும் காப்பாற்றிவிட்டு அஃறினைகளை அடைகாக்க வீட்டின் உள்ளே ஓடினார். எல்லா திசையிலும் பரபரப்புடன் ஓடித் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை.

"நில்லு. நில்லு. யோசி! இந்த நேரத்துல தான் உன்னோட மன திடத்த ப்ரூவ் செய்யணும். யோசி", அவர் கால்களுக்கு விலங்கிட்டது அனுபவம். அவருக்கு யோசிக்க சில நொடிகளே இருந்தது. அடுத்த சில நிமிடங்களுக்குள் 'அது' உள்ளே நுழைந்து விடும். தன் உடமைகளுள் முதன்மையானவற்றை மூளைக்குள் ஏற்றினார்.

"மொதல்ல, பாஸ் புக், பிக்சட் டெபாசிட் ரெகார்டு", தன் படுக்கை அறையினுள் நுழைந்து, ஆவணப் பெட்டியினுள் தலையை சொருகினார். இரண்டு காகிதத்தை விலக்கியதும் கிடைத்தது.

"அடுத்து, எல்..சி பாலிசி", யோசனைக்கு கை கொடுத்தன கால்கள். மற்றொரு அறையினுள் நுழைந்து அதையும் எடுத்தார்.

"நாலு தட்டு, ரெண்டு பாத்திரம், மூணு டம்ளர், ரெண்டு தலகாணி, ஒரு பாய், சில துணி மணி எல்லாம் போயாச்சு. அப்புறம், ! வண்டி ஆர்.சி-யும், இன்சூரன்ஸ்-உம் வேணும். அதோடு, மண்ணெண்ணெய், ரேடியோ", அவர் யோசனைகளை தடுத்து 'ஜுஜுஜு' என்று கதவை முட்டியது 'அது'.

அதைக் கண்டதும் கண்கள் விரித்து பயத்தை வெளிப்படுத்திவிட்டு தேடுதலை விரைவு படுத்தி பையை நிறைத்தார். வெளியேறும் வழியில் கிடைத்தவற்றை எல்லாம் பையினுள் போட்டுக் கொண்டு தட்டுத் தடுமாறி படியேறினார்.

மேலிருந்து கீழே பார்த்துக் கொண்டிருந்த நந்தினி, அவர் தடுமாறுவதை பார்த்ததும்,

"பாத்து! சீக்கிரம் வாங்க", என்று கூச்சலிட்டாள்.

"அங்க பாருங்களேன்!", மாடியை அடைந்த வாசுதேவருக்கு, நிலைமையின் தீவிரத்தை புரிய வைத்தாள் நந்தினி.

"அப்பா எனக்கு பயமா இருக்கு", இரண்டு வதுவை நிறைவுற்ற வானதி; அவர் குழந்தை!

அவள் உடல் நடுங்குவதைக் கண்டதும், அவள் உட்கார்ந்திருந்த மூலைக்குச் சென்று,

"இதோ பார்! அப்பா இருக்கேன்-? எல்லாத்தையும் யோசிச்சு தான் அப்பா வீடு கட்டியிருக்கேன். இங்க அது வரவே முடியாது. சரியா? பயப்படக் கூடாது", என்று தோளில் சூடு பறக்க தேய்த்துவிட்டார். "சரி", என்று தலையை ஆட்டிவிட்டு நடுக்கத்தில் நாட்டத்தை செலுத்தினாள் வானதி. அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு எழுந்த வாசுதேவனின் முகத்தில், கனக்கச்சிதமாக விழுந்தது ஓர் 'பளார்'.

அதை சற்றும் எதிர்பாராத அவர், மூலையில் இருந்த தன் மகளையும் இழுத்துக் கொண்டு சில அடிகள் தள்ளிச் சென்று நின்றார். அதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியிடம்,

"என்னால நம்பவே முடியல! காட் டேம் இட்! இட்ஸ் சிக்ஸ்டி பீட்!" என்று மறுபடியும் நந்தினி பார்த்த திசையில் பார்வையை செலுத்தினார். அவர் கண் முன்னாள் ஒரு கலவரம் கட்டவிழ்கப் பட்டிருந்தது! ஆக்கமும்,இயக்கமும், அன்புடன், இயற்கை!

அவர் அத்தனை நாட்களாக நடந்து வரும் பாதையில், சில நூறு கிலோமீட்டர் வேகத்தில் உட்புகுந்தது வெள்ளம். குடிசைகளை கலங்கடித்துவிட்டு, குடிநீரை களங்கம் செய்துவிட்டு, கோட்டைகளை நோக்கிப் படை எடுத்தன அலைகள்! நீர் தானே என்று நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தவர்களின் முதுகில், பல ஆயிரம் கத்திகள் குடைந்ததைப் போல 'பேய்' அடி அடித்தன, நீருடன் கலந்த மணல் துகழ்கள்! அதைக் கண்ட மற்றவர்கள் தெறித்து ஓட, அலறல் ஒலியை கேட்ட படி மாடியில், வாசு தேவன்.

"சென்னைக்கு இந்த நிலைமையா? அதுவும் இவ்வளவு பெருசா", தன் முகத்தில் அடித்த நீர் துளிகளை வழித்து எடுத்து விட்டு, சட்டையை பிழிந்த படி நிலைமையை நொந்தார் வாசுதேவன். சில நிமிடங்களில், அழைப்பு.

"மாப்ள! சுனாமியாமே! நீங்க எப்படி இருக்கீங்க?", பதறலுடன் மாமியார்; லண்டனில் இருந்து.

"மாடியில இருக்கோம். இப்போவே கால் வாசி வீடு நாசமாயாச்சு. அலை கொஞ்சம் ஓவரா இருக்கு. மத்தபடி எங்க உயிர் இன்னமும் இருக்கு", என்றார் விரக்தியுடன். பல வருடங்கள் உழைத்துக் கட்டிய வீடும், சேர்த்த சொத்தும், என்ன ஆனதென்ற கவலை.

"ஐயோ! உங்களுக்கு ஏதாவது ஆயிருக்குமோ-ன்னு பதறிப் போய் கூப்பிட்டேன். ஏதாவது ஒண்ணு-னா சொல்லுங்க. நாங்க இருக்கோம்", என்றார் பாதியில் வாங்கிப் பேச ஆரம்பித்த மாமனார்.

"ம்ம்ம். அப்புறம் பேசுறேன். போன்- சார்ஜ் ரொம்ப முக்கியம்", என்று கட் செய்தார். தன் பையில் இருந்த செல் போனை நீர் புகாமல் காத்துக் கொள்ள, ஒரு 'பிளாஸ்டிக்' பையினுள் போட்டது எவ்வளவு சரியாகப் போனதென்று நினைத்தது மனம்.

தன் கவனத்தை எல்லாம் மக்களின் மீது செலுத்திக் கொண்டிருந்த நந்தினிக்கு விடாமல் குரைத்துக் கொண்டிருந்த 'சான்ட்ரா'வின் குரல் எரிச்சலூட்டியது.

"ஏய். சும்மா இருக்க மாட்ட?", என்று அதட்டினாள்.

"விடு. அது மட்டும் வெளிய ஒடலேன்னா நமக்கு முன் கூட்டியே தெரிஞ்சிருக்குமா? நல்ல வேளை! முக்கியமான டாக்குமன்ட் எல்லாத்தையும் காப்பாத்திட்டேன்", என்றார் அமைதியாக. உடனே முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் நந்தினி.

"ஏய் என்ன? நீ இப்படி அழுதா குழந்தை பயந்துராது? பாரு அவ சான்ட்ராவை சமாதானம் செஞ்சிட்டு இருக்கா. அவளுக்கு இருக்குற தைரியம் கூட உனக்கு இல்லேன்னா எப்படி?"

"அது இல்லீங்க. நீங்க வெச்சது வெச்ச இடத்துல இல்லேன்னா திட்டுவீங்க. அப்போ எல்லாம் எங்க அப்பா அம்மா தப்பா கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டாங்க-னு மனசுக்குள்ள புலம்பியிருக்கேன். இப்போ அந்த திட்டு தான் நமக்கு உதவியிருக்கு. என்ன மன்னிச்சிடுங்க", என்று அவர் தோளில் சாய்ந்தாள்.

"இதுக்கு தான் அழுதியா? சீ! உனக்கு இது புரிய சுனாமி வரவேண்டியிருக்கு. ஹும்ம்", என்று கண் அடித்தார். அவளும் கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைத்து, மெல்ல சிரித்தாள்.

சில மணி நேரங்களில் தண்ணீர் வரத்து குறைந்தது. ஆனால் எல்லா வீடுகளும் இடுப்பளவு நீருடன் மிதந்து கொண்டிருந்தன.

வாசுதேவன் வீடு கட்டியது சில வருடங்கள் முன்பு தான். அவர் கட்டுமானத்தை ஆரம்பிப்பதற்கு சில மாதங்கள் முன்பு தான் சென்னையை மிதமான சுனாமி தாக்கியது. இதை மனதில் வைத்துக் கொண்டு, வீட்டின் தரை மட்டத்தை சில அடிகள் உயர்த்திக் கட்டியிருந்தார். அதனால் அவர் இறங்கி வந்தபோது தொடை அளவு தண்ணீர் மட்டும் உள்ளே இருந்தது.

சேதத்தை நோட்டமிட ஆரம்பித்த வாசுதேவன், சிறிது தூரத்தில் தன் வண்டி, ஒரு ஆலமரத்தில் தடுக்கப் பட்டு ஒட்டிக் கொண்டிருந்ததை கவனித்தார். அவர் வீட்டின் மதில் சுவரை இடித்து, வண்டி இழுத்துச் செல்லப் பட்டிருக்க வேண்டும்.

உடனே வாசல் கதவின் மேல் ஏறி, தெருவில் ஓடும் தண்ணீரில் குதித்து, கழுத்தளவு நீரில் நீந்தித் தன் வண்டியை அடைய முற்பட்டார். அவருக்கு எதுவும் ஆகக் கூடாதென துடித்துக் கொண்டிருந்தனர் நந்தினியும், வானதியும்.

அவர் நீந்தித் தன் வண்டியை அடைந்து அதை தன்னுடன் இழுக்க முற்பட்டார். மரத்திலிருந்து விடுபட்ட வண்டி நீரின் உள்ளே மூழ்க ஆரம்பித்தது. புவியீர்ப்பை ஈடு செய்யும் பலம் அவரிடம் இல்லை. அவர் படும் பாட்டை பார்த்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு நண்பர்,

"இருங்க. நான் வரேன்", என்று தானும் நீரில் குதித்தார்.

"நீங்க ஏன் அங்க போறேங்க? எதுக்கு வம்பு. வாங்க", என்று அவர் மனைவி அழைக்க,

"சும்மா இரு டீ! நமக்கு தான் ஒரு வண்டி வாங்க வக்கில்ல. இருக்கிறவனுக்காவது உதவுவோம்", என்று கூறியபடி நீந்தினார். அவர் கூறியதை பார்த்து சிலை போல் நின்ற வாசு தேவன், தன்னை அவர் நெருங்கிவிட்டார் என்பதைக் கூட உணரவில்லை.

"சார். முன் வீலை புடிங்க. நான் பின்னால் கை கொடுக்கறேன்", என்றவரின் வார்த்தைகள் அவர் காதில் விழ, தன் வண்டியை தூக்கும் முயற்சியின் ஈடுபட்டார்.

"ம்ம். பாத்து. ஒய்ய்!" வண்டியின் கனத்தால் மூக்கிலிருந்து மூச்சுடன் பேச்சும் வந்தது. சில நிமிட போராட்டத்திற்கு பின் வாசுதேவனின் வீட்டின் உள்ளே வண்டி நிறுத்தப் பட்டது.

"கார்புரேடர் உள்ள தண்ணி போயிருக்கும். வண்டி ஸ்டார்ட் ஆனா உங்க அதிர்ஷ்டம். இப்போ எதுவும் செய்யாதீங்க. தண்ணி வடியட்டும்", என்றார்.

"சரி சார். அப்புறம்..", என்று தயங்கினார் வாசுதேவன்.

"என்ன சொல்லுங்க"

"இல்ல. அந்த மரத்தை முனிசிபாலிட்டி வெட்டிப் போட நெனச்சப்போ அதை தடுத்து சண்டை போட்டீங்க. ஒரு மரத்துக்கு போய் ஏன் இவ்வளவு போராட்டம்-னு அப்போ உங்களை நான் கேலி செஞ்சேன். இப்போ... சாரி சார்", என்று அவர் கையை பிடித்தார்.

"அட இதுக்குப் போய் எதுக்கு சார் சாரி? நீங்க மனசு மாறி என் கிட்ட வந்து உங்க ஈகோ-வை விட்டு மன்னிப்பு கேட்டது எவ்வளவு பெரிய விஷயம்! பரவால்ல விடுங்க", என்று கூறிவிட்டு தெருவில் குதித்தார். அவர் வீட்டை அடையும் வரை பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவனுக்கு திடீர் என்று தன் வீடு நினைப்பு வந்தது. உடனே உள்ளே சென்று மீதம் இருக்கும் பொருட்களை சேகரிக்க சென்றார்.

அவர் தன் வேலையை கவனித்துக் கொண்டிருக்க, மீட்புப் பணிகளில் அரசு ஈடு பட ஆரம்பித்தது. சில நாட்கள் மாடியிலேயே குடும்பம் நடத்தினர் மக்கள். மாடி இல்லாதவர்கள் கோயில்களிலும், சத்திரங்களிலும் தஞ்சம் புகுந்தனர். சில நாள் வேலைக்குப் பிறகு, எல்லோரின் வீட்டிலும் தரை தெரிந்தது.

அது வரை வெளியே சுற்றிக் கொண்டிருந்தவர் எல்லோரும் தங்கள் வீட்டிற்குத் திரும்பினர். பணம் ஈட்டும் தொழிலை விடுத்து, எல்லோரும் தங்கள் இருப்பிடத்தை சரிசெய்யும் முனைப்பில் இருந்தனர். வாசு தேவனும், நந்தினியும் கூட வேலைக் காரியை எதிர்பார்க்காமல் கையில் விளக்குமாறு எடுத்தனர்.

உள்ளே இருந்த சேறு சகதியை முழுவதுமாக சுத்தம் செய்ய ஒரு முழு நாள் பிடித்தது. அன்று இரவு உணவு உண்பதற்கு கூட உடம்பில் வலுவிலாமல், கட்டை போல் உறங்கினர் மூவரும். அடுத்த நாள் காலை,

"வெளிய இருந்து வாங்கிய தண்ணி தீந்து போகப் போகுதுங்க", நந்தினி தன் கவலையை தெரிவித்தாள்.

"ஹ்ம்ம். கையில காசு கம்மி ஆயிட்டே போகுது. பேங்குக்கு போய் பணம் எடுத்தா தான் நாளைக்கு தாகம் தீரும். முன்ன 25 ரூபா வித்துட்டு இருந்த பேரல், இப்போ 200 ரூபா!"

"என்ன செய்யிறது. வாங்கித் தானே ஆகணும்? போயிட்டு வாங்க", என்றாள்.

"சரி நீ பின்னாடி போய் விறகு பொறுக்கி மேல காய வை. மண்ணெண்ணையும் ஒரு வாரம் தான் வரும். நான் கொஞ்சம் வீட்டு சாமானும் வாங்கிட்டு வரேன்", என்று கூறிய படி வெளியேறினார்.

வீட்டிலிருந்து சில மயில் தூரம் நடந்தால் தான் வங்கியை அடைய முடியும். வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து, ஆட்டோக்கள் யாவும் பழுது பார்க்கப் பட்டு தெருவுக்கு வர ஒரு மாதமாவது ஆகும். அவர் வண்டியும் கம்மியர் கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் நடக்க ஆரம்பித்தார் வாசுதேவன். பயணத்தின் பொது தன் நண்பருடன் விவாதித்தது நினைவுக்கு வந்தது.

"ஏன் டா! பத்து பர்சன்ட் வட்டி தரும் பேங்க்கை விட்டுட்டு, ஏழு பர்சன்ட் வட்டிக்கு இந்த பேங்க்- போய் பணம் போட்டிருக்க? நீ என்ன லூசா?"

"மாசா மாசம் ஏத்தி எறக்கிட்டு தான் இருப்பான். அதுக்காக பணத்தை கையில வெச்சிட்டு பேங்க் பேங்க்- அலைய முடியுமா? நம்ம வீட்டு பக்கத்துல இருக்கு. அது தான் வசதி"

"அவனை கிண்டல் அடிச்சிட்டு இப்போ நான் அவஸ்தை படுறேன்", என்று முனகிக் கொண்டே நடந்தார் வாசுதேவன்.

ஒரு மணி நேரத்தில் வங்கியை அடைந்தார். அதற்கு முன், அதே இடத்திற்கு சில நிமிடங்களில் உற்சாகத்துடன் வந்திறங்கியிருக்கிறார். ஆனால் அன்று, வேர்த்து விறுவிறுத்து முட்டி வலிக்க வந்து சேர்ந்தார்.

"டாக்டர் டெய்லி சைக்கிள் ஓட்டச் சொன்ன போது கேக்கல. இப்போ மூச்சு இறைக்கிது. உள்ளே .சி இருக்குமா?" என்ற கேள்வியுடன் கதவை திறந்தார்.

அங்கு அவர் பார்த்த நிகழ்ச்சி அதிர்ச்சி அளித்தது. எப்போதும் 'ஜே ஜே' என்று புழங்கும் கூட்டம் இல்லை; ஒரு பாமரன் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாததால் அவனை திட்டிக் கொண்டிருக்கும் அதிகாரிகள் இல்லை; பெரிய மனிதர்கள் செய்யும் மாபெரும் தவறுக்கு நாற்காலி போட்டு உட்காரவைத்து முகஸ்துதியுடன் வழி சொல்லும் மேலாளர் இருக்கையிலும் ஆள் இல்லை.

"கஸ்டமர் ஈஸ் தி மோஸ்ட் இம்பார்டன்ட் விசிட்டர் ஆன் அவர் பிரமிசஸ், ஹி ஈஸ் நாட் டிபெண்டன்ட் ஆன் அஸ். வி ஆர் டிபெண்டன்ட் ஆன் ஹிம்..." என்ற ஆரம்பிக்கும் காந்தியின் வாசகம் மட்டும் அங்கு கோணலாகக் கிடந்தது.

உள்ளே சென்றவுடன், ஒரு மூலையில் இரு ஆண்கள் மட்டும் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று,

"என்ன சார்? யாரையும் காணோம்? எனக்கு பணம் எடுக்கணுமே!" என்றார் வாசுதேவன். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு,

"என்ன சார் ஊருக்கு புதுசா?" என்றனர்.

"இல்லையே. இதே ஊரு தான்"

"உங்க வீடு தண்ணியில மூழ்கி எல்லா பொருளும் தண்ணில அடிச்சிட்டு போயிருக்குமே!"

"ஆமா"

"அப்போ இந்த பேங்க்- மட்டும் எப்படி சார் பணம் இருக்கும்?"

"என்னது? பணம் இல்லையா?"

"என்ன சார் புதுசா ஆச்சர்யப் படுறீங்க?"

"நீங்க எப்படி இத சொல்லலாம்? மக்களோட பணத்தை பாதுகாக்குறது உங்க கடமை இல்லையா?"

"கடமை தான் சார். ஆனா, இது பேங்க்-னு சுனாமிக்கு தெரியுமா? இல்ல, பேங்க்- சுனாமி தண்ணி உள்ள வராம தடுக்க சுவர் கட்ட முடியுமா? எல்லாருக்கும் பிரச்சனை தான் சார்"

அவர் சொன்ன பதிலுக்கு கோபத்தை மட்டும் தான் திருப்பித் தர முடிந்தது. ஒப்புக் கொள்ள முடியாத பதில்களில் ஒன்றை கூறிவிட்டார் அவர்; வசதியாக. அமைதியாக திரும்புவதை விட்டால் வேறு வழி இல்லை. பல மயில் தூரம் மறுபடியும் நடக்க வேண்டும். பணம் கிடைத்திருந்தால் கூட சந்தோஷமாக வெற்றி நடை போட்டிருக்கலாம். ஆனால், கிடைக்காததை நினைத்து வருந்திக் கொண்டே ஒரு மணி நேரம் கடக்க வேண்டுமே என்ற விரக்தி வாட்டியது.

ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பியவரிடம்,

"என்ன ஆச்சு?", என்றாள் நந்தினி.

"பேங்க்- பணம் இல்ல. நகை எடுக்க படிவம் இல்ல. எல்லா காகிதமும் நாசமாயிடுச்சு. எடுத்தாலும் விக்க வழி இல்ல. எல்லா கடையும் மூடி இருக்கு. சாப்பாட்டு சாமான் மட்டும் வித்துட்டு இருக்காங்க. ஆனா, வாங்க காசில்ல. அரசு உதவி எல்லாம் பாமர மக்களுக்கு போயிட்டு இருக்கு. அங்க போய் நிக்க கூச்சமா இருக்கு. என்ன செய்யிறதுன்னே தெரியல", தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

"நம்ம வீட்டுல கொஞ்சம் நகை இருக்கு. அத கொடுத்து வாங்கிட்டு வாங்க", வாசுதேவன் அந்த ஆலோசனையை எதிர்பார்த்தார். அவர் தாமாக கேட்க முடியாத நிலைமை. ஒவ்வொரு வருடமும், நந்தினியின் பிறந்த நாள் பரிசாக கொடுத்தவை அவை. எந்த நேரத்திலும் திரும்ப கேட்க மாட்டேன் என்று சூளுரைத்ததால் உருவான வைப்பு நிதி அவை. அவர் அமைதியாக இருந்தது ஏன் என்று புரிந்து கொண்டு, அவளாக எடுத்து வந்து கொடுத்தாள்.

"போய் யார் கிட்டயாவது வித்து, வீட்டு சாமான் வாங்கிட்டு வாங்க", என்று நீட்டினாள்.

அதை எடுத்துக் கொண்டு, தன் நண்பரின் வீட்டிற்குச் சென்றார் வாசுதேவன். அங்கு,

"நானும் உன் நெலமைல தான் இருக்கேன். சாரி டா!", என்று நகை திருப்பி அனுப்பப் பட்டது. மேலும் சில வீட்டு வாசல்களில் இதே வாசகம் தான் ஒலித்தது. வேறு வழியின்றி,

"சார், இந்த தங்கத்தை எடை போட்டு, எவ்வளவு மதிப்புன்னு கணக்கிட்டு, இந்த பொருளுக்கு தேவையானது போக மீதம் பணம் கொடுங்க", என்றார் கடைக் காரரிடம். அவர் நிலைமையை புரிந்து கொண்டு,

"ஒரு கிராம் தங்கம் நூறு ரூபாய்க்கு வாங்கிக்க சொல்லி ஓணர் சொல்லியிருக்காரு. மார்கெட் நிலைமை அது தான். பரவாயில்லையா?", என்று புளுகினான் கடைக் காரன். ஓணர் சொல்ல வில்லை, நடுத்தெருவில் நிற்கும் அவன் குடும்பம் சொன்னது. இது சரியா என்று கேட்ட கடைக் காரனின் மனசாட்சிக்கு,

"சூழ்நிலைக்கு ஏற்பத் தான் நியாயமும் தர்மமும்", என்று சொல்லியிருக்கிறது அவன் மூளை. வாசுதேவன் திகைத்துப் போய் நின்றார்.

"தங்கத்துக்கு கூட மதிப்பில்லையா? இவன் சொல்வது உண்மையா? அதை தெரிந்து கொள்ளக் கூட வழியில்லையே!", திகைப்பிற்கு இதுவே காரணம்.

ஆசை ஆசையாய் வாங்கிய நகையை பிச்சை காசுக்கு கொடுக்க மனமில்லாததால், வேறு கடைக்குச் சென்றார். அங்கும் பட்டினியே பேசியது.

"எந்த சூழ்நிலையிலும் மனித நேயம் அழியாது-ன்னு சொன்னவங்க, இப்போ எங்க போய் தன்னோட மூஞ்சிய வெச்சுப்பாங்க?" அவர் கேள்விக்கு நின்று பதில் சொல்லும் அளவிற்கு யாருக்கும் நேரமில்லை. தலையை தொங்கவிட்டு தெருவில் நடந்து கொண்டிருந்தார். அப்போது தினமும் பார்க்கும் ஒரு முகம் நினைவுக்கு வந்தது. ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தார். எல்லோரும் எதிர்பார்ப்பது போல், தெய்வம் இல்லை; சிநேகிதன். கவலை தோய்ந்த முகங்களுக்கு நடுவில், அவன் மட்டும் புன்னகையுடன் இருந்தான். அதற்குக் காரணம் புரிந்தது. சில மாதங்கள் முன்பு அவனுடன் பேசியவை நினைவுக்கு வந்தன.

"டேய் ஜப்பான் ரிலீப் பண்டுக்கு காசு கேட்டா குடுக்க மாட்டேன்-ன்னு சொன்னியாமே!", சிரித்த முகம்.

"அதான் சம்பளத்துல இருந்து புடிசிகிட்டாங்க இல்ல?"

"ஆனா அங்க எவ்ளோ கொடுத்தாலும் பத்தாது டா"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஜப்பான் காரங்க பணக்காரங்க தான். இல்லேன்னா ஹிரோஷிமா, நாகசாகி, பூகம்பம்-னு எல்லாத்தையும் சமாளிப்பாங்களா?"

"பணமும், பலமும் அழிவுக்கு முன்னாடி துச்சம்"

"நம்ம சேமிக்கிறத பணத்தை பொருத்து தான் அழிவு. நீ ஒரு நாள் புரிஞ்சிப்ப"

"இப்போ யார் புரிஞ்சிகிட்டா?" வாசுதேவன் மறுபடியும் அந்த முகத்தை பார்த்த போது, சிரிப்பு ஏளனமாக மாறியிருந்தது. அந்த ஏளனம் தொடர்ந்த போது, மற்றொரு சம்பாஷனை நினைவுக்கு வந்தது.

"நேத்து அந்த காந்திய வாத்தியப் பத்தி போட்டாங்களே பாத்தியா?"

"பாத்தேன். பாத்தேன்"

"என்ன டா இவ்வளவு சலிச்சிக்கற?"

"அவன் என்னவோ பெரிய இவனாட்டும் காசு இருக்குறவனை எல்லாம் திட்டுறான்"

"என்ன தப்பிருக்கு? அளவா இருங்க-ன்னு சொன்னா ஏன் கோவம் வருது?"

"எதுக்கு அளவா இருக்கணும்? இனிக்கு நாம வாழறோம். நாளைக்கு செத்தாலும் செத்துடுவோம். ஒவ்வொரு நாளும் எப்படி சந்தோஷமா இருக்கோம்-னு தான் பாக்கணும். நாளைக்கு வரப் போறதை நெனச்சு இன்னிக்கு கஷ்டப் படுறவன் தான் முட்டாள். நோ ரூல்ஸ்; நோ தாட்ஸ் அபவுட் பியூச்சர்.நான் சம்பாதிக்கறேன்; சந்தோஷமா இருக்கேன்! வாட்ஸ் ராங் இன் திஸ்?"

"எளிமையான வாழ்க்கையோட பலம் இப்போ புரியுதா? சுனாமிக்கு முன்னாடியும் அவன் இந்த சொத்தை தான் திண்ணான். சுனாமிக்கு அப்புறமும் இதையே தான் திங்கிறான். சொகுசா வாழுற நீங்க பொந்துல தண்ணி புகுந்தா வெளிய வர்ற பாம்பு மாதிரி", அந்த சிரிப்பின் தாக்கம் தாளாமல், வாசுதேவன் வேகமாக நடக்க ஆரம்பித்தார். அவருடைய தலை திரும்பவில்லை. ஆனால், சிந்தை தெளிந்துவிட்டது! எண்ணங்கள் எழுப்பப் பட்டன.

"எனக்கு இது புரிய ஒரு சுனாமி வர வேண்டியிருக்கு!"

http://puthu.thinnai.com/?p=2425

0 comments: