Pages

Friday, October 14, 2016

யாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு!

யாவரும்.காமில்  படிக்க :

எங்கள் ஊரில் தனது திருவடிகளை பதிக்க வரும் அண்ணன் ராஜேந்திரன் அவர்களை இரு கரம் கூப்பி வணங்கும் அன்பு நெஞ்சங்கள் என்று எழுதியிருந்த வாசகத்தின் கீழ் கை கூப்பியபடியும், கறுப்பு மூக்குக்கண்ணாடியை ஒரு கையால் பிடித்தபடியும், பாக்கெட்டில் மினிஸ்டர் ஒயிர் துணியின் பின்னால் தெரியும் ராஜேந்திரனின் புகைப்படத்தை கேமராவின் முன் காட்டியும் போஸ் கொடுத்து சிரித்துக் கொண்டிருந்த மூன்று அல்லக் கைகளின் முகத்திலும் கழுவி ஊற்றினான் ராஜேஷ்.
கடைக்கு வந்திருந்த இரண்டு வறண்ட நாக்குகளுக்கு சாத்துக்குடி ஜூசும், எலுமிச்சை சோடாவும் போட்டுக் கொடுத்து விட்டு ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைத்திருந்த கலங்கிய நீரில் எச்சில் கிளாஸ்களை முக்கி எடுத்தான். மறுபடியும் அதன் மேல் நல்ல நீரை குடத்திலிருந்து எடுத்து ஊற்றி, இரு விரல்களை விட்டு தேய்த்துக் கழுவினான். ஒரு கிளாசில் ஊற்றிய நீரையே அடுத்த க்ளாசிலும் ஊற்றிக் கழுவி கீழே ஊற்றினான். அது ராஜேந்திரனின் வலக்கை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கை கூப்பி அல்லக் கையிடம் இருந்து பெற்ற பழைய அரசியல் பேனரின் மிருதுவான மேற்பரப்பில் தேங்கி வழிந்தோடியது.
வழிந்தது போக தேங்கியிருந்த நீரை கையால் தள்ளு வண்டியின் ஒரு ஓரத்தில் இருந்த துளையின் பக்கமாக ஒதுக்கி விட, அது அடியில் சொருகப் பட்டிருந்த வாஷிங் மெஷின் குழாய் வழியாக பாதாள சாக்கடை கால்வாய்க்குள் ஓடிக் கலந்தது. ஜூஸ் வண்டியின் அடியில் வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த நாய் வாஷிங் குழாயில் இருந்த ஓட்டை வழியாக ரோட்டில் கசியும் நீரை நாக்கை வைத்து நக்கிக் குடித்து, ஈரத்தின் சுகம் காணப் படுத்துக் கொண்டிருந்தது.
ராஜேஷ், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் தோல்வி கண்டத்தில் இருந்து அவன் அப்பாவுக்கு தான் செய்து கொண்டிருக்கும் சிறு தொழிலுக்கு கிளை அமைக்க யோசனை பிறந்துவிட்டது.
இனி இவனை படிக்க வைத்து, இருக்கும் பணத்தையும் வீணடிப்பதை விட, சிறு தள்ளு வண்டிக் கடையை வைத்துக் கொடுத்து விட்டால், ஒரு வருமானமாவது கிடைக்கும் என்று சிந்தித்தார். அவர் இப்படி யோசிக்க இதை விட முக்கியமான ஒரு காரணமும் இருந்தது.
முந்தையை நாள் அதிகாலை பழங்கள் வாங்கி வர ரயில் ஏறி வெண்டர்ஸ் பெட்டியில் உட்கார்ந்தவுடன், வேலூரில் இருந்து பால் குடங்களை ஏற்றிச் செல்லும் பல நாள் நண்பர் சேகரை சந்தித்தார். அப்போது இருவரின் ஊரிலும் நடக்கும் சிறு வியாபாரங்களைப் பற்றிய பேச்சு எழுந்தது.
வேலூரில் வெயில் அதிகம். அங்கே ஜூஸ் கடை திறக்கலாம் என்றார் சேகர்.
நீயும் தான் இதை எல்லா நேரமும் சொல்லிக் கிட்டே வர்ற. அங்கே உள்ள நிலைமை எப்படி-ன்னு தெரியலையே!
அட என்னப்பா இப்படி பயந்துக்கிட்டு! கரையை தாண்டாமலே ஆழம் எவ்வளவு இருக்கும்-னு கணக்குப் போட்டுகிட்டு இருந்தா எப்படி? துணிஞ்சு இறங்கு. கால் வைக்க கல் கிடைக்கும்
கல்லு கிடச்சா பரவாயில்லையே பா! பொத குழியில மாட்டிக்காம இருக்கணுமே. உங்க ஊர் வியாபாரிங்களோட நமக்கு ஒத்துப் போகணும். மாமூல் அது இது-ன்னு நிறைய தலை வலி இருக்கு. பால் குடம் சுமக்குற கதையில்ல இது
என் மகனும் சீசனுக்கு ஏத்தபடி வாழைப்பழம், மாதுளை, கொய்யா, வேர் கடலை, ஆரஞ்சுன்னு கூவி கூவி விக்கிறவன் தான் அப்பு! நீயாவது ஒரு இடத்துல நின்னு விக்கிறே. அவன் தினமும் ரயில் ஏறி வித்துட்டு வர்றான். எவ்வளவு பேரை பாத்திருப்பான்?
யோவ்! வண்டியில விக்கிறவனை பத்தி எனக்குத் தெரியாது? பெரும்பாலும் ஒருத்தன் வித்தான்-ன்னா இன்னொருத்தனை தொழில் கத்துக் கொடுத்து கை தூக்கி விடுவான். ஒரு ஊர் காரப் பயலுங்களுக்குள்ள என்ன சண்டை சச்சரவு வந்துடப் போகுது? நான் ஏறின பெட்டியில நீ ஏன்டா ஏறின-ன்னு கேக்குறதோட சரி என்று கிண்டலாகச் சொல்லி விட்டு, சேகரின் காதுக்கருகே சென்று,
உன் மகனுக்கு தொழில் கத்துக் கொடுத்ததும் உன் சாதிக் காரப் பய தானே? என்று சொல்லி சிரித்தார் ராஜேஷப்பா. சாதியைக் குறிப்பிட்டுப் பேசியதால் வெறுப்பாகிப் போன சேகர்,
அப்படிப் பாத்தீன்னா, பானி பூரி விக்கிற இந்திக் காரன் எல்லாம் யார் தயவால இங்கே வந்து கடை போட்டிருக்கான்?
இந்தக் கேள்வி ராஜேஷப்பாவை கொஞ்சம் புரட்டித் தான் போட்டு விட்டது. தண்டவாளத்தின் இணைப்பில் ரயில் ஏறி இறங்கும் போது ஏற்படும் அதிர்வை அவர் தன் மனதிலும் உணர்ந்தார்.
சேகர், எதைப் பத்தி வேணாலும் பேசு. அவிங்கள பத்தி மட்டும் பேசாதே சிடு சிடுவென்று எறிந்து விழுந்தார் ராஜேஷப்பா.
ஏன்? ஏன்? அவரை மடக்கி விட்ட மகிழ்ச்சியில் சேகர் பதில் அறிய அவசரப் பட்டார்.
என் பையன கெடுக்குறதே அவங்க தான். கொஞ்ச நாள்-ல ஊருக்குள்ள வந்து அவங்க பண்ற அட்டூழியம் தாங்கல
அப்படி என்ன கெடுத்துப் புட்டாங்க? பால் டின்னின் வாயில் திணித்திருந்த வைக்கோல் மூடியில் இருந்து ஒன்றை உருவி வாயில் அதக்கிச் சப்பிக் கொண்டே கேட்டார் சேகர்.
பின்ன என்னப்பா? முதல்ல ஒரு சின்ன கடையை கொண்டு வந்து விரிச்சான். சாயந்திரம் நாலு மணிக்கு கடைய போட்டான்னா இரவு பத்து, பத்தரை வரைக்கும் கூட்டம் அள்ளுது. ஸ்கூல் பசங்க, காலேஜ் பசங்க பஸ்சை விட்டு இறங்குற இடமா பாத்து விரிச்சான். இன்னைக்கு சோத்துப் பருக்கைய மோச்ச ஈயாட்டம் வதவதன்னு ஊருக்குள்ள பத்து கடைங்க அவனுக்கு. குடிச்சிட்டு பிரியாணி கடையில கூடுற கூட்டமாட்டும் இல்ல இருக்குது! வெளி ஊர்-ல இருந்து அவன் இங்கே வந்து சம்பாதிக்கிறான். எம்மகன் பழக்கத்துக்காக அவன் கடையில சேர்வா கவர் கட்டுறான். ஷேய்!!
அவனுக்கு எதுல நாட்டம் போகுதோ அதையே அவனுக்கு குடுக்க வேண்டியது தானே? நீ சொல்லுறதையே தான் நானும் சொல்றேன். பானி புரி கடைக்காரனை பாரு. இங்கே வந்து கடை விரிச்சு கல்லா கட்டினதும், அவனைப் போலவே நாலு இந்திக் காரங்களை வரவழைச்சான். ஊர்-ல முக்கியமா மக்கள் கூடுற நாலு இடத்தை புடிச்சு தள்ளு வண்டி போட்டு இப்போ கலக்ஷனுக்கு போய் சம்பாதிக்கிறான்.
இன்னைக்கு மக்களை ஏமாத்திக்கிட்டு திரியிற பாதி கம்பெனிங்க இவன் செய்றதை தானேய்யா செஞ்சுக்கிட்டு இருக்கு? உலகத்துலேயே குறைவான சம்பளத்துக்கு வேலை செய்ற ஆளுங்க நம்ம பசங்க தான்-ன்னு சரியா கண்டு புடிச்சு ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு கம்பெனியை தொறந்து விட்டானுல்ல? அவன் உன்னைய மாதிரியா யோசிச்சுக்கிட்டு இருந்தான்?
சேகர் சொன்ன வார்த்தை ராஜேஷப்பாவுக்கு சுருக்கென்று உறுத்தியது.
அப்போ என் மகன் படிப்பு?
என்ன படிக்க வெச்சு இஞ்சினியர் ஆக்கப் போறியா? ஹீ..ஹீ...இன்னைக்கி இஞ்சினியரிங் படிச்ச பாதிப் பசங்க நீ சொன்ன அந்த பானிப் பூரி கடையில அரட்டை அடிச்சுக்கிட்டு தான் இருக்கான்.
இதோ பாரு! படிப்புங்குறது ஏட்டுக் கல்வி மட்டுமில்ல. எந்த தொழிலும் கேவலமில்லை-ன்னு நினைக்காதவன் எத்தனை புஸ்தகத்தை படிச்சாலும் வீணாத் தான் போவான். இந்தியாவுல பாதிக்கு பாதி சனங்க தொழில் செஞ்சு தான் பிழைப்பை ஓட்டுறாங்க. அவங்களுக்கும் படிப்பு தேவை தான்! ஆனா சம்பாதிக்க மட்டும் இல்லை.
எனக்குத் தெரிஞ்ச ஒரு காய்கறிக் கடைக்காரன் அற்புதமா கணக்குப் போடுவான். இப்போ போடுற மாதிரி மொபைல்-ல இல்ல! மனக் கணக்கு...முக்கியமா, பிழையில்லாம! அவன் படிச்சவன் இல்லையா? நீ ஏன் உன் மகன் மத்தவங்க படிக்கிற அதே படிப்பை படிக்கணும்-ன்னு நினைக்கிறே? ஒவ்வொருத்தனுடைய வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி வித்யாசமானது இல்லையா? உன் மகன் வாழ்க்கையை கத்துக்கட்டும்! அது தான் இருக்குறதுலேயே ரொம்ப கஷ்டமான கல்வி
சேகர் சொன்னதில் ஏதோ உண்மை இருப்பது போலத் தோன்றியது ராஜேஷப்பாவிற்கு. அவர் பேச்சு கொடுத்த தைரியத்தில் வட்டிக்கு பணம் பெற்று ஒரு தள்ளு வண்டிக் கடையை கட்டித் தர முடிவெடுத்தார். அவருடைய நண்பரான சைக்கிள் கடை பாய் இந்த வேலையில் கை தேர்ந்தவர்.
விஷயம் கேள்விப் பட்ட பாய் ராஜேஷப்பாவுக்கு உதவ முன்வந்து, செலவை குறைக்க தானே ஒரு வண்டியை தயார் செய்து கொடுத்தார். அதன்படி முதலில், தன்னிடம் இருந்த பழைய சைக்கிள்களின் வீல்களை எடுத்து, ஓட்டுவதற்கு ஏற்றபடி பென்ட் எடுத்து, ஒன்றாக  கம்பிகளோடு சேர்த்து வெல்ட் வைத்தார்.
தனக்குத் தெரிந்த ஆசாரியிடம் சென்று பழைய மரக் கட்டில்களின் நான்கு கால்களைப் பெற்று வந்து, அதை பழைய இத்துப் போன மரத் தகடுகளோடு மேலும் கீழுமாக இணைத்து, அடியில் குப்பை சேகரித்து வைக்க, ஐஸ் பெட்டி எடுத்துச் செல்ல இடமும் ஏற்படுத்திக் கொடுத்து, ஒரு பக்காவான தள்ளு வண்டிக் கடையை தயார் செய்து விட்டார் பாய்.
தள்ளு வண்டியைப் பார்த்ததும் குதுகலம் அடைந்த ராஜேஷ் தானே அதற்கு வண்ணம் தீட்டி அழகு பார்த்தான். அவன் முதன் முதலாக ஒரு வேலையில் ஈடுபாடு காட்டியதை அன்று தான் ராஜேஷப்பா பார்க்கிறார். அவருடைய முகத்தில் குடி கொண்ட சந்தோஷத்திற்கு திருஷ்டி கழிக்கும் விதமாக வண்ணம் தீட்டிய ராஜேஷ் முடிவாக தள்ளு வண்டியின் முன்னால், மகிழ்ச்சி குளிர்பான நிலையம் என்று எழுதி ரஜினியின் போட்டோவை ஓட்டினான்.
அப்பன் கஷ்டப்பட்டு கடன் வாங்கித் தொழில் செய்ய வழி காட்டிக் கொடுக்குறான். இவன பாரு! சினிமா வசனத்தை வண்டியில எழுதுறான் முகம் சுளித்தார் ராஜேஷம்மா.
ஆரம்பிச்சிட்டியா? நம்ம கடையில ஜூஸ் குடிக்க வர்றவங்க எல்லாம் யூத்-மா! அவங்களுக்கு இப்படி பேரு வெச்சாத் தான் புடிக்கும். கருப்ப சாமி துணை எல்லாம் பழைய ட்ரெண்டு என்று சொல்லி விட்டு கிளம்பினான் ராஜேஷ். தொங்கிப் போன முகத்தோடு நிற்கும் மனைவியிடம் சாந்தமாக எடுத்துரைத்தார் ராஜேஷப்பா.
உனக்கு இதன் பின்னால் இருக்கும் அரசியல் புரியலைடி. சினிமாவும் ஒரு வியாபாரம் தான். அதுவும் சில நுணுக்கங்களை மனசுல வெச்சே எடுக்கப் படுது. யாருக்கு பொழுது போக்கு மிக அவசியம்? கஷ்டப்படும் ஜனங்களுக்கு தான்! நம்மள மாதிரி ஜனங்களுக்கு இருக்கும் கஷ்டத்தை திரையில காட்டி தானே நடிகர்கள் எல்லாரும் அரசியலுக்கு வர்றாங்க? அன்னைக்கி ஆட்டோக் காரனா நடிச்சா சக்கை போடு போட்டிச்சு! இன்னைக்கு எல்லா நடிகனும் ஐ.டி கம்பெனியில வேலை செய்ற மாதிரி படம் எடுக்குறான். இது இப்படி தான் இருக்கும்! ஒரு கட்டத்துல எது வாழ்க்கை-ன்னு அவனே புரிஞ்சுக்குவான்
அவர் பேசி முடிப்பதற்குள் வாசலைத் தாண்டி விட்ட வண்டியை நிறுத்தி அம்மா ஏதோ மறந்து விட்ட எண்ணத்தில் உள்ளே போய் வெளியே வந்தார். நான்கு எலுமிச்சை பழங்களை வண்டியின் சக்கரங்களுக்கு அடியில் வைத்து மிதிக்கச் சொல்லி, நான்கு தூண்களிலும் மஞ்சள் தேய்த்து மங்களகரம் ஆக்கினார்.
உஹும்! இது அதை விட டேஞ்சர் என்று ராஜேஷப்பா சிரிக்க, அவர் குமட்டில் மஞ்சள் கையால் ஒரு குத்து விட்டார் அம்மா. இருவரும் மனதில் நம்பிக்கையோடு வியாபாரத்திற்குப் போகும் தன் மகன் போகும் திசையை பார்த்து பெருமூச்சு விட்டனர்.
வண்டி வைத்த முதல் வாரம் வியாபாரம் டல் அடித்தது. ராஜேஷப்பாவிற்கு தேர்வு செய்த இடம் சரியில்லையோ என்று சந்தேகம் எழத் தொடங்கியது.
காலை எட்டு மணிக்கி போறே. சாயந்திரம் ஏழு மணிக்கு வர்ற. பத்தில் இருந்து அஞ்சு மணி வரை பத்தே பத்து பேர் தான் லெமன் சோடா வாங்கி குடிச்சிருக்கான். இப்படி தினம் நூறு ரூவா சம்பாரிச்சு நீ என்னைக்கி முன்னேறிப் போறது? என்று கேட்டார்.
ஐயோ! அப்பா, இருப்பா...இப்போ தானே கடை போட்டிருக்கோம். இனிமே தான் கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் வரும். அதுக்குள்ளே முன்னேறிப் போறதைப் பத்தி பேசாதே
ராஜேஷிற்கு அந்த ஊரின் பானி புரி விற்பனையாளர்களை விட்டுப் பிரிய மனமில்லை. அவர்கள் இவனைக் கவர்ந்திருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. பானி பூரி விற்பனை என்பது சாதாரண விஷயம் அல்ல என்று அவன் எப்போதும் நினைப்பான். அவர்களோடு எப்போதும் காலம் கழிப்பதால் அவனுக்கு இப்படி தோன்றி இருக்கலாம். அவர்கள் எல்லோரும் கூடி ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கி வருகின்றனர். அந்த வீட்டில் எட்டு வண்டிகளை வைக்க போதிய இடம் இருப்பதால் அதிக வாடகை கொடுத்து குடி பெயர்ந்திருந்தனர்.
தினமும் காலை எழுந்தவுடன் வெங்காயம் வெட்டுவதற்கும், கேரட் துருவதற்கும், சேர்வா செய்வதற்கும், சுண்டல் வேக வைப்பதற்கும் மூன்று பேர் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றனர். வேலை முடிந்ததும் அவர்கள் சென்ற நாளின் பாத்திரங்களை கழுவுதல், சென்னை கொண்டித்தோப்பில் உள்ள இந்தி பேசும் நண்பர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு பூரிகளை வாங்கி வருதல் ஆகிய வேலைகளுக்கு நேரத்தை செலவிடுவர்.
மற்ற எட்டு பெரும் ஒவ்வொரு வண்டியிலும் அன்றைக்குத் தேவையான சரக்குகளை ஏற்றிக் கொண்டு, மாலை நான்கு மணி அளவில் வியாபாரத்திற்கு செல்வர். லாபத்தை பதினோரு பங்காக பிரித்துக் கொண்டு, தங்களுடைய தினச் சாப்பாடு மற்றும் இதர தேவை போக மீதத்தை பீகாரில் உள்ள தங்களுடைய குடும்பங்களுக்கு அனுப்பி வைப்பார்.
இவர்களுடைய வாழ்க்கையை ஒரு ஓரத்தில் நின்று பார்க்கும் சந்தர்ப்பம் ராஜேஷிற்கு வாய்த்ததனால், தனக்கென்று தனி வியாபாரம் வந்த பிறகும் அவர்களுடைய பணியை ரசிப்பதற்காகவே பானி புரி கடைக்கு அருகிலேயே தன்னுடைய கடையையும் நிறுவிக் கொண்டான்.
அவனுக்கு அப்பாவின் சந்தேகம் புரியாமல் இல்லை. ஆனால், அதற்கு அவனிடம் தீர்வும் இல்லை. அந்த இடத்தில் பானி புரி வியாபாரம் பிய்த்துக் கொண்டு போவதற்கும், தன்னுடைய வியாபாரம் டல் அடிப்பதற்கும் என்ன காரணம் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு வாரம் கழித்து அப்பா மெதுவாக அவனுடைய நடவடிக்கைகளை நோட்டம் விடத் தொடங்கினார். அப்போது தான் அவருக்கு விவரம் புரிந்தது.
ராஜேஷ் கடை விரித்திருக்கும் இடம் ஒரு மிகப் பெரிய தனியார் பள்ளியின் அருகில் இருந்தது. அந்த பள்ளியை சுற்றி உருவான புதிய குடியிருப்புப் பகுதியாக அது வளர்ந்து நிற்கிறது. அங்கு வசிப்பவர்களில் பலர், வீட்டில் குறைந்தபட்சம் ஒரு குழந்தையை/பதின்பருவப் பிள்ளையை வைத்திருக்கின்றனர். அதனால் தான் அங்கே பானி புரி வியாபாரம் சக்கை போடு போடுகிறது. அங்கு வரும் பிள்ளைகள் எல்லோரும் மாலை நான்கு மணிக்கு மேல் அங்கு கூடுவது வழக்கம். வீடுகளின் ஆண்கள் அதிகாலை வேலைக்குச் சென்று விட்டு இரவு சாய்ந்த பிறகே வீட்டிற்கு வருவார்கள். இல்லத்தரசிகள் கணவனையும் பிள்ளைகளையும் அனுப்பி விட்டு வீட்டிலேயே அடைந்து கிடப்பார்கள். அதனால் வெயில் நேரத்தில் அந்த இடத்திற்கு வரும் ஆட்கள் குறைவு. அந்தக் குடியிருப்பைத் தாண்டி வழிப்போக்கர்களாக செல்லும் ஆட்களும் இல்லை என்பதாலும், மக்கள் கூடும் அலுவகங்களோ, மருத்துவ மனைகளோ கிடையாது என்பதாலும் ஜூஸ் கடைக்கு அங்கு வேலை இல்லை.
இதை அறியாத ராஜேஷ் வாரங்கள் தாண்டி வியாபாரம் சூடுபிடிக்க காத்துக் கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்து கொண்டார் ராஜேஷப்பா. விவரத்தை சொல்லி,
அரசு ஆஸ்பத்திரி பக்கமா ஒரு இடம் பாத்து வெச்சிருக்கேன். பிரசவ வார்டும் அங்கே தான் இருக்கு. எதிரிலேயே தாலுக்கா ஆபீசும் இருக்கு. அதனால நிறைய வியாபாரம் ஆகும் என்று ராஜேஷிற்கு அறிவுரை சொன்னார்.
அப்பா சொல்வது சரி என்று பட்டாலும் சிடு மூஞ்சியுடனேயே அவன் ஒப்புக் கொண்டான். தன்னுடைய சந்தோசம் பறிபோய் விட்டதே என்று அவன் கவலை கொண்டான். ஆனால், கூடியவிரைவிலேயே எல்லோருடனும் சகஜமாக பழகக் கூடிய பேச்சுத் திறமையின் காரணமாக ராஜேஷின் கடையில் டேரா போட்டு அரட்டை அடிக்க வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமானது.
ஆஸ்பத்திரியில் அடிபட்டு, நோய்வாய்பட்டு அனுமதிக்கப் பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், புதிதாக குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களின் கணவன்கள், தாலுக்கா அலுவலகத்தில் காத்திருக்கும் போது கூடும் கூட்டம் என அவனுடைய கடையில் தினசரி வந்து போகும் ஆட்களின் எண்ணிக்கையும் அதிகமானது. கோடைக் காலத்தில் ஒரு நாளைக்கு ஐம்பதில் இருந்து எழுபது பேர் சாத்துக் குடி சாறும், சுமார் நூறு பேருக்கும் அதிகமானோர் எலுமிச்சை சாறு/சோடாவும் குடித்துச் சென்றதால் நல்ல வருமானம் பார்க்க முடிந்தது. ராஜேஷின் கடினமான உழைப்பை மெச்சி பாராட்டிய அப்பா கூடவே ஒரு வியாபார யுக்தியையும் கற்றுக் கொடுத்தார்.
நீ எப்போதும் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கணும். நம்ம கிட்ட வியாபாரம் செய்ய வர்றவங்க, அவங்க குடுத்த காசுக்கு கொஞ்சம் கூடுதலா பொருள் எடுத்துட்டு போனா சந்தோஷப் படுவாங்க. தன்னுடைய வாடிக்கையான கடையையும், புதுசா போட்டிருக்கு உன்னுடைய கடையையும் ஒப்பிட்டு எது சிறந்தது-ன்னு எடை போடுவாங்க. அதனால, நீ பத்து ரூபாய்க்கு கொடுக்குற ஜூஸாக இருந்தாலும், இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு விக்கிற ஜூஸாக இருந்தாலும் யோசிக்காம ஒரு கால் கிளாஸ் அதிகம் கொடுக்க பழகிக்கோ! உண்மையில் உனக்கு அதிக செலவினம் தண்ணீரிலோ, ஐஸ் கட்டியிலோ தான் ஆகப் போகுது. ஆனாலும் அது அவங்களுக்கு கொடுத்த காசுக்கு ஏமாறாம வியாபாரம் செஞ்ச திருப்தியை கொடுக்கும்
அப்பாவின் இந்த அறிவுரையையும் ராஜேஷ் கடைபிடித்தான். அவன் காதுபடவே சிலர் நண்பர்களுடன் பேசும் போது,
இங்கே ஒரு கிளாசுக்கு மேல வந்தா எடுத்து தனியா வெச்சுக்காம நமக்கே குடுத்துடுவான். நல்ல பையன்! அதனால தான் இங்கே அடிக்கடி வர்றது என்று குறிப்பிடுவதை கேட்டு அப்பாவின் அனுபவத்தை மெச்சினான்.
மேலும் தன்னுடைய ஈடுபாட்டின் பேரில் மேல் தட்டு வர்க்கத்தினரின் வருகையை அதிகரிக்க சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்தான். தன்னுடைய தலைக்கு பொருந்தும்படியாக ஒரு சமையல்கார தொப்பியை தைத்து, மேலங்கியும் கையுறையும் வாங்கி அணிந்து கொண்டு ஜூஸ் போடத் தொடங்கினான். மேலும், மேற்கத்திய பாணியில் உடை அணிந்து வந்தால் அவர்களுக்கு பேப்பர் கப்பில் ஜூஸ் கொடுக்கத் தொடங்கினான். தனியாக ஸ்டூல் போட்டு அவர்களை உட்கார வைத்தான். இதனால் காரில் செல்பவர்களும் இறங்கி இவன் கடைக்கு வந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
தன்னுடைய மகனின் இத்தகைய சமயோசித புத்தியைப் பார்த்து ராஜேஷப்பா நெகிழ்ந்து போனார். அவனுடனான முட்டல் மோதல் போக்கை சற்று தளர்த்திக் கொண்டு வீட்டில் மரியாதையாக அவனை நடத்தத் தொடங்கினார். ஞாயிறுகளில் அவன் வீட்டில் தங்கும்படியாக ருசியாக சமைத்து அவனுக்கு பரிமாற தானே மெனக்கெட்டு கடைக்குச் சென்று கறி வாங்கித் தந்தார். இதனால் ராஜேஷும் அப்பாவுடன் நெருக்கமானதோடு அவர் மீதிருந்த பயத்தை போக்கிக் கொண்டான்.
பயம் குறைந்ததோடு வீட்டிற்கு அவன் தரும் பணமும் குறைந்து கொண்டே போனது. ஒரு நாள் தனக்குப் பிடித்த ஆடைகளை வாங்கிப் போட்டுக் கொண்டான்.
நான் தான் அவனுக்கு எதுவும் வாங்கித் தரலை. அவனாவது வாங்கி சந்தோஷமா இருக்கட்டும் என்று விட்டு விட்டார் அப்பா.
ஒரு நாள், செல் போன் வாங்கி வந்து ஆசையாக அப்பாவிடம் காட்டினான்.
கடையில சும்மா இருக்கும் போது போர் அடிக்கிது பா. கடைக்க வர்ற பசங்க நிறைய படம் ஏத்திக்கிட்டு வர்றாங்க. நானும் வாங்கிப் பாத்தேன்-ன்னா கொஞ்சம் பொழுது போகும் என்றான்.
அதுக்காக பத்தாயிரத்துக்கு செல் போன் வாங்கனுமா? என்று கேட்க வாய் எடுத்தவர் அப்படியே வார்த்தைகளை அமுக்கி விட்டார்.
அடுத்தபடியாக, என்னோட ஃப்ரென்ட் ஒருத்தன் புது வண்டி வாங்கப் போறான். அதனால அவன் கிட்ட இருக்குற பழைய பல்சரை விக்கப் போறானாம். நமக்கும் ஐஸ் கட்டி எடுத்து வர, கடைக்குப் போய் வர, தண்ணிக் கொடம் தூக்க எல்லாம் வண்டி தேவைப் படுதுல்ல? இருபதாயிரம் தானாம். வாங்கிக்கவா? என்று கேட்டான்.
எங்கே வேண்டாம் என்று கூறினால் மறுபடியும் சண்டை ஆரம்பித்து விடுமோ என்று யோசித்தவர்,
உனக்கு தெரியாதது ஒன்னும் இல்லை. உங்க அம்மாவுக்கு செக் அப் பண்ணலாம்-னு பாத்தேன். மூணுமாசமா நீ நிறைய செலவு பண்றதால தள்ளிப் போகுது. வெய்யில் போன பிற்பாடு வியாபாரம் டல் அடிக்கும். சரி உன் விருப்பப் படி செய்! நாம வேற ஏதாச்சும் வித்து வைத்தியம் பார்த்துக்கலாம் என்று சூசகமாக சொல்லி விட்டார்.
தான் அப்படிச் சொன்னால் அவன் நிச்சயமாக அம்மாவின் மருத்துவ செலவைத் தான் கவனிப்பான் என்று அவர் நினைத்தது தவறாகப் போய் விட்டது. சந்தோஷமாக வண்டியை வாங்கி வந்து அப்பாவிடம் சாவியைக் கொடுத்து ஓட்டச் சொன்னான்.
கொஞ்ச நாளைக்கு இருந்த நிம்மதி போயிடும் போல இருக்கே என்று மனம் கோணத் தொடங்கினார் ராஜேஷப்பா. தன்னுடைய குறையை ரயிலில் போகும் போது மறுபடியும் சேகரிடம் சொல்லி வருத்தப்பட்டார். சேகர் எதுவும் சொல்லவில்லை. தலை ஆட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு ஒரு நாள் அவனை சந்திக்க ராஜேஷப்பாவிற்கு தெரியாமல் கடைக்கே சென்று விட்டார்.
அவர் ராஜேஷின் கடைக்குச் சென்று மூன்றாமவர் போல ஜூஸ் குடிக்க தன்னுடைய நண்பரோடு நின்றிருந்தார்.
ஒரு சாத்துக் குடி ஜூஸ். ஒரு லெமன் சோடா என்று அவனிடம் சொல்ல, ராஜேஷ் போட்டுக் கொடுத்து விட்டு எச்சில் கிளாஸ்களை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைத்திருந்த கலங்கிய நீரில் முக்கி எடுத்தான்.
சாவு கிராக்கிங்க... என்று திட்டி விட்டு மறுபடியும் அதன் மேல் நல்ல நீரை குடத்திலிருந்து எடுத்து ஊற்றி, இரு விரல்களை விட்டு தேய்த்துக் கழுவினான்.
சோத்துக்கு எவன் கால்ல வேணாலும் உழுவானுங்க..ஒரு சாத்துக்குடி ஜூசுக்கு காசு கொடுக்க வக்கக் காணும் என்றவன்,
ஒரு கிளாசில் ஊற்றிய நீரையே அடுத்த க்ளாசிலும் ஊற்றிக் கழுவி கீழே ஊற்றினான். அது ராஜேந்திரனின் வலக்கை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கை கூப்பி அல்லக் கையிடம் இருந்து பெற்ற பழைய அரசியல் பேனரின் மிருதுவான மேற்பரப்பில் தேங்கி வழிந்தோடியது.
வழிந்தது போக தேங்கியிருந்த நீரை கையால் தள்ளு வண்டியின் ஒரு ஓரத்தில் இருந்த துளையின் பக்கமாக ஒதுக்கி விட, அது அடியில் சொருகப் பட்டிருந்த வாஷிங் மெஷின் குழாய் வழியாக பாதாள சாக்கடை கால்வாய்க்குள் ஓடிக் கலந்தது. ஜூஸ் வண்டியின் அடியில் வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த நாய் வாஷிங் குழாயில் இருந்த ஓட்டை வழியாக ரோட்டில் கசியும் நீரை நாக்கை வைத்து நக்கிக் குடித்து, ஈரத்தின் சுகம் காணப் படுத்துக் கொண்டிருந்தது.
அந்த நாயின் முதுகில் பலமாக ஒரு எத்து விட்டான் ராஜேஷ். அது, ‘கை...கை...கை... என்று கத்திக் கொண்டே பூக்கட்டும் அம்மாவின் பக்கமாக சென்று முனகியது.
அட ஏம்பா! இந்த வயசுல உனக்கு இவ்வளவு கோபம்? என்று பேச்சுக் கொடுத்தார் சேகர்.
பின்ன என்னங்க? இந்த நாயுக்கும் அவங்களுக்கும் என்ன வித்யாசம்?
எவங்களுக்கும்?
உங்களுக்கு முன்னாடி ஜூஸ் குடிச்சிட்டு கடன் வெச்சிட்டு போனானுங்களே! அவங்க தான். மூஞ்சியும் கண்ணாடியும் அவனும். ஒரு கிழிஞ்ச பேனரை இலவசமா கை நீட்டி அவங்க கிட்ட இருந்து வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கு பாருங்க. ஒவ்வொரு முறையும் வந்து ஜூஸ் குடிச்சிட்டு போறானுங்க. காசு கேட்டா அப்புறம் தர்றேன்
அவன் அரசியல் வாதி. அதிகாரத்தை இப்படிப் பட்ட அற்ப காரியங்களுக்கு பயன்படுத்துறான். நீ நல்லவன் தானே? அம்மாவோட சிகிச்சைக்கு பணம் கொடுத்தியா?
ராஜேஷிற்கு தூக்கி வாரிப் போட்டது. இவர் அப்பாவிற்கு தெரிந்தவராகத் தான் இருக்க வேண்டும். தலை குனிந்து நின்றான்.
நீங்க யாருங்க சார்?
நான் யாருங்குறது இருக்கட்டும். கொஞ்ச நேரம் முன்னாடி நீ என்ன செஞ்சுக்கிட்டு இருந்தே? கொஞ்சம் யோசிச்சு சொல்லு?
ஜூஸ் போட்டுக் கொடுத்தேன்
திட்டிகிட்டு இருக்கும் போது என்ன செஞ்சே?
க்ளாஸ் கழுவி வெச்சேன்
எப்படி கழுவுனே? ராஜேஷ் யோசித்தான்.
முதல்-ல ஒரு பாத்திரத்தில் க்ளாசை முக்கி கழுவிட்டு, அதன் மேல நல்ல தண்ணீர் ஊத்தி கழுவும் போது, ஒரு குவளை நீரையே அத்தனைக்கும் பயன்படுத்தலாம்-னு உனக்கு சொல்லிக் கொடுத்தது யாரு?
சேமிப்பு நம்ம நாட்டு மக்களுடைய ரத்தத்துல ஊறின விஷயம். அது அவர்களுடைய எல்லா செய்கைகளிலும் இருக்குது. ஒரு கதை கேள்விப் பட்டிருப்பியே! மூணு பெண்களை சேத்துல நடக்கச் சொன்னாங்க. ஒரு குவளை நீர் கொண்டு யார் அந்த சேற்றை முழுமையா கழுவுறா-ன்னு பார்த்தாங்க-ன்னு. அந்த சேமிப்புப் பழக்கம் பெண்களுக்கு மட்டும் இல்லை. ஆண்களுக்கும் வேணும்.
சட்டை வாங்குறது, பைக் வாங்குறதெல்லாம் தப்பா? எல்லாரும் தான் செய்றாங்க
தப்பில்லை. உன் அம்மாவோட உடம்பைக் காட்டிலும் அது முக்கியம்-னு நீ நினைக்கிறது தான் தப்பு. நான் அதிகம் பேச விரும்பலை. இந்தா புடி.., முப்பத்தி ஐந்து ரூபாயை சில்லரையாக நீட்டிய சேகர் வணக்கம் சொல்லி விட்டுச் சென்றார்.
ராஜேஷ் அவர் போகும் திசையையே பார்த்துக் கொண்டு நின்றான். மகிழ்ச்சி குளிர்பான நிலையம் என்கிற அவனுடைய தள்ளுவண்டியின் பெயரை உடனடியாக மாற்றவேண்டும் போல இருந்தது அவனுக்கு. ரஜினியின் போட்டோவை கிழித்துவிட்டு அப்பாவின் புகைப்படத்தை மாட்ட வேண்டும் போல் இருந்தது. ஆனால் இப்படியே இன்னும் மூன்று நாட்களுக்கு தோன்றுகிறதா பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டவனாக அந்த நினைப்பை அப்படியே விட்டுவிட்டான். 

Monday, September 19, 2016

ஏழாவது சம்பளக் கமிஷன் : தி டைம்ஸ் தமிழ்

7ஆவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அரசு ஊழியர்களுக்கு போனான்சா என்று அனைத்து ஊடகங்களும் கூப்பாடு போடத் துவங்கி விட்டன. 7000 ரூபாயாக இருந்த சம்பளம் தற்போது 18000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்பதே இவர்களது கவலை. இதன் கணக்கை சரிபார்த்துக் கொண்டு மேற்படி கட்டுரையை தொடருகிறேன்.
சராசரியாக ஒரு அடிமட்ட மத்திய அரசுத் தொழிலாளியின் சம்பளம் எவ்வளவாக இருந்தது?
அடிப்படை சம்பளம்: 7000 ரூ, அகவிலைப்படி 8750, மொத்தம் 15750. இதில் தேசிய பென்ஷன் திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படும் 10% ஐ கழித்தால் 14175 என்பது அலவன்சுகள் இல்லாமல் கையில் நிற்கும் சம்பளம்.
தற்போது சம்பளக் கமிஷனின் பரிந்துரையின் படி, எவ்வளவு சம்பளம்?
அடிப்படைச் சம்பளம்: 18000, அகவிலைப்படி பூஜ்ஜியம். தேசிய பென்ஷன் திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படும் 10% போக கையிருப்பு, 16200.
ஆக, 2025 ரூபாய் தான் உண்மையான சம்பள உயர்வு என்பதை அறிந்து கொள்ளாலாம். இந்த சம்பள உயர்வின் உண்மையான சதவிகிதம் 14.7% மட்டுமே. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இது குறைவான சம்பளம். அலவன்சுகளைச் சேர்த்தால் சம்பள உயர்வு 23% கூடுதலாக வரும். இதற்கு தான் ஒரு சம்பளக் கமிஷன். அதற்கு இவ்வளவு கூப்பாடு.
சம்பளக் கமிஷன் அமைப்பதன் நோக்கமே, பத்து ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டே வரும் பண வீக்கத்தை சமாளிக்க தொழிலாளிகளுக்கு திராணியை ஏற்படுத்துவதே. ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கையின் ஏழாவது பக்கத்தில், அரசு என்பது சேவைகளுக்கு முன்மாதிரியாக, தொழிலாளிகளை முறையாக நடத்தி அவர்களுடைய நம்பிக்கைகள் தொய்வுறாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
ஆனால், அருண் ஜெயிட்லி அவர்களோ, தற்போது தனியாருக்கு இணையாக அரசுத் துறையிலும் சம்பளம் இருக்கிறது என்று சொல்லி, தனியார் நிறுவனங்களை முன்மாதிரியாக நிறுத்துகிறார். மக்களோ, இதை விட காண்ட்ராக்ட் தொழிலாளிகள், அமைப்பு சாராத் தொழிலாளிகளின் நிலைமை படு மோசம். அதனால், இந்த சம்பள உயர்வு தேவையா? அல்லது இதை எதிர்த்து போராட்டங்கள் தேவையா என்று யோசிக்கின்றனர்.
இங்கு தனியாரை முன்னுதாரணமாக நிறுத்துபவர்கள் ஒரு விடயத்தை அறியவில்லை. தனியாரில் வேலை செய்பவர்கள் உழைப்புக்கு உகந்த சம்பளத்தை என்றுமே பெறுவதில்லை. உதாரணத்திற்கு, அமரிக்காவின் சம்பள விகிதத்தை(100%) அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, ஆசிய பசிபிக் பகுதியில் இருப்பதிலேயே குறைவான சம்பளத்தை பெறுபவர்கள் பிலிப்பைன்ஸ்(17%) நாட்டிற்குப் பிறகு, இந்திய திறனாளர்கள் தான் (18%). இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா, சீனா ஆகிய நாடுகள் நம்மைக் காட்டிலும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.
அதே சமயம் இங்கு வேலை நேரம் என்று பார்க்கும் போது, இந்தியர்கள், சர்வ சாதாரணமாக 9, 10 மணி நேரம் வேலை செய்கிறார்கள். 2 ல் இருந்து 3 மணி நேரம் பணியிடங்களுக்குப் போய் வரும் போக்குவரத்து நெரிசலில் கழிந்து விடுகிறது. சராசரியாக இந்தக் குறைவான சம்பளத்தை ஈட்டுவதற்கு, இந்தியாவில் உள்ள அனைத்து பணியாட்களும் தங்களுடைய ஒரு நாள் பொழுதில் 12 மணி நேரத்தை செலவிடுகிறார்கள். சிலருக்கு ஐந்து நாட்கள் வேலை. பலருக்கு ஆறு நாட்களும் வேலை இருக்கிறது.
காண்ட்ராக்ட் தொழிலாளிகளின் நிலைமையோ அதள பாதாளத்தில் உள்ளது. இது வரையில் அவர்களின் சராசரி வருமானம் மாதத்திற்கு 6000 ரூ தான். இதை 10000 ஆக உயர்த்த இப்போது தான் தொழில் அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது. மொத்தம் உள்ள 3.6 கோடி காண்ட்ராக்ட் தொழிலாளிகளில் வெறும் 60 லட்சம் பேர் தான் Contract Labour (Regulation and Abolition) Act 1970 ன் கீழ் வருகிறார்கள். மற்றவர்கள் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களால் சுரண்டப் படுகிறார்கள்.
இத்தகைய சூழலைத் தான் நமது மாண்பு மிகு அருண் ஜெயிட்லி அவர்கள் முன்னுதாரணமாக நிறுத்துகிறார். இத்தகைய சூழலுக்கு இணையாகத் தான் அரசு ஊழியர்களும் எதிர்பார்க்க வேண்டும் என்று நினைகிறார்கள் மக்கள்.
இந்தியா மட்டும் அல்லாத அனைத்து நாடுகளிலும், எட்டு மணி நேர வேலை நேரத்திற்காக கடுமையான போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. 1974 ல் இந்திரா காந்தி அம்மையாரின் ஆட்சியில், 17 லட்சம் ரயில்வே ஊழியர்கள் எட்டு மணி நேர வேலை நேரத்திற்காகவும், ஓட்டும் தொழிலாளிக்கு 12 மணி நேர வேலை நேரத்திற்காகவும், சம்பள உயர்விர்காகவும் போராட்டம் செய்ததை யாரும் மறக்க முடியாது. பிரிட்டனில் நடந்த Eight Hour Day புரட்சி (1886) யைப் பற்றி நம் நாட்டவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1850 களில் வாழ்ந்த ராபர்ட் ஓவன் என்பவர் தொடங்கிய Eight hours Labour, Eight hours Recreation and Eight hours Restவாசகத்தின் தாக்கத்தால் முதன் முதலாக ஃபோர்ட் இந்த நடைமுறையைக் கொண்டு வந்தார். இதனால் அவருடைய தொழில் விருத்தி அடைந்ததை முன்னிட்டு மற்றவரும் இதே நடைமுறையைக் கையாண்டனர்.
நம்மிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், 1974 ற்குப் பிறகு, கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிகப் பெரியதான ஒரு தொழிலாளர் பேரணியை நாம் பார்த்ததே இல்லை என்பதாகும். நம்மிடையே போராட்டம் என்பது தவறான ஒரு செயலாக சிறு வயது முதலே கற்பிக்கப் பட்டு விட்டது. இதற்கு இணையாக, அரசு எந்திரம் எப்போதும் நல்லதே செய்யும் என்றும், அதன் செயல்பாடுகளின் மீது விமர்சனம் வைப்பதும், போராட்டங்களின் மூலம் கோரிக்கைகளை அறியச் செய்வதும் தவறான செயல் என்று போதிக்கப் பட்டுள்ளது. போராட்டம் என்று போகும் போது, அரசின் எதிர்வினையால் வேலையும், கையிருப்பாகிய பணமும், வாழ்க்கையும், போகும் என்கிற பயத்திலேயே தான் தொழிலாளிகள் இன்று வேலை செய்கிறார்கள். இது ஒரு வகையில் தொழிலாளர் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல், எதிர் காலத்தில் உள்ள நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அரசு மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கையால் உருவானது என்று கூறலாம்.  
தனியார் துறையில், இன்று வரையிலும் அவர்கள் தங்களுடைய குறைகளை தீர்த்துக் கொள்ள குறைகளுக்குக் காரணமானவர்களிடமே தான் முறையிட வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. அவர்கள் ஒன்று கூடி தொழிற் சங்கங்கள் அமைக்க அனுமதி இல்லாத ஒரு சூழலில் தான் கடந்த ஜூன் மாதம், புதிய ஜனநாயகம் தொழிலாளர் முன்னணி சார்பில் தொடரப் பட்ட வழக்கிற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, ஐ.டி துறையில் வேலை செய்யும் 4.5 லட்சம் தொழிலாளிகளும் சங்கம் அமைக்கலாம் என்கிற வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அறிவிப்பை கொடுத்தது.
ஆனால், இவற்றை பற்றிய பிரக்ஞை எத்தனை பேருக்கு இருக்கிறது என்று இது வரை எனக்குத் தெரியவில்லை. தங்களுடைய குறைகளை தீர்த்துக் கொள்ள அரசிடம் முறையிட தைரியம் இல்லாத தனியார் துறையினர் தான், எட்டு மணி நேரம் வேலை நேரத்தை முறையாக போராடிப் பெற்ற அரசு அலுவலர்களை விமர்சிக்கிறார்கள்.
இந்தியாவில் ஆண்டுக்கு 13 மில்லியன் மக்கள் வேலை வாய்ப்பிற்காக தயாராகிக் கொண்டிருக்கும் போது, அரசு உருவாக்குவதோ மிகச் சொற்பமான வேலை வாய்ப்பு. 2013 ஆம் ஆண்டு முக்கியமான எட்டு துறைகளில் உருவான வேலை வைப்பின் எண்ணிக்கை 4.19 லட்சம் ஆகும். இது 2014 ல் 4.21 லட்சமாகவும் 2015 ல் வெறும் 1.35 லட்சமாகவும் உள்ளது. கடந்த ஆண்டின் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. ஆண்டுதோறும் வெறும் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவே நாம் ஆண்டுக்கு 60000 கோடி அளவிற்கு வரிச் சலுகைகளை அள்ளி வீச வேண்டியிருக்கிறது. இந்த உண்மையை மறைப்பதற்காகத் தான் இருக்கும் வேலையைப் பெறுவதற்கு கடினமான சூழல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இது மறைமுகமாக நம்முடைய இளைஞர்களை வேலை இல்லாத் திண்டாட்டத்தில் தள்ளுவதோடு நில்லாமல், வேலை கிடைக்காததற்கு தான் தான் காரணம் என்கிற குற்ற உணர்ச்சியில் மன நோயாளிகளாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.
அரசை விமர்சிக்க முடியாத இவர்களும், பொது மக்களும், தங்களுடைய ஆதங்கங்களை, அவர்களில் ஒருவரான அரசுப் பணியாளர்கள் மீது திணிக்க முற்படுகிறார்கள். ஒரு குறுகலான சாலையில், வாகன ஓட்டிகள் அனைவரும் ஆட்டோக்காரரை திட்டித் தீர்ப்பது போலத் தான் இந்த நிலையும் என்று நமக்குப் புரிவதில்லை. இதனால் தான் ஒரு தலைபட்சமான தமிழக இயக்குனர்களின் இந்தியன், அந்நியன் போன்ற கதைகள் சக்கை போடு போடுகின்றன. இந்த கவனச் சிதறலினால், இவர்கள் அரசு ஊழியர்கள் எல்லோரும் காற்று வாங்கிக் கொண்டு சுகமாக வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கொஞ்சம் கடிவாளத்தை விலக்கி விட்டுப் பார்த்தால், அரசுப் பணியாளர்களின் நிஜ முகம் புரியும்.
இவர்கள் நினைப்பது போல, அரசு அதிகாரிகள் வேலையே செய்யவில்லை என்றால், பல்வேறு துறைகளில் எவ்வாறு அரசு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடிகிறது? நாம் புல்லட் ரயிலை பற்றிக் கனவு கண்டு கொண்டிருக்கும் போது, மிகவும் பாதுகாப்பாக நம்மை வேலையிடத்தில் இருந்து வீடு வரை கொண்டு சேர்த்து விடுவது யார்? உள்நாட்டு அலுவல்களுக்கான பணிகளில் (Human Affairs) ஈடுபட்டுள்ள பணியாட்களின் வேலைத் தரத்தின் மீது விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவர்களின் பணிச் சுமை குறித்து எல்லோரும் அறிந்திருப்பார்கள். நான் குறிப்பிட்ட இந்த இரண்டு அமைச்சகங்களில் முறையே 2014 ஆம் ஆண்டின் அறிக்கை படி 15.51 லட்சம் பணியாட்களும், 10.56 லட்சம் பணியாட்களும் பணியில் இருக்கலாம் என்பது பரிந்துரை. ஆனால் இருப்பது, முறையே 13.16 லட்சம் மற்றும் 9.8 லட்சம் பணியாட்கள் தான். மொத்தமாக அரசுப் பணியில் 40.49 லட்சம் ஆட்கள் இருக்க வேண்டிய இடத்தில், 33.02 லட்சம் ஆட்களே வேலையை பகிர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். மொத்தமாக அரசுப் பணிகளில் மட்டும் நிரப்பப் படாத பணியிடங்கள் மட்டும் ஏழு லட்சத்தை தாண்டுகின்றன. ஆனால் இதற்கு இணையாக வேலைச் சுமை ஒன்றும் குறைவதாய் இல்லை.
இந்த பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்பு வருகிறது. மக்கள் எழுதுகிறார்கள். மிகவும் கடினமான இந்தத் தேர்வுகளை எழுதும் அளவிற்கு கல்வித் தரம் நம் நாட்டில் இல்லை. மறுபடியும் இவை காலியாகவே விடப் படுகின்றன. இந்தக் கோபம் மக்களின் மனதில் ரிசர்வேஷனுக்கு எதிராகவும், தாழ்த்தப் பட்ட சமூகத்திற்கு எதிராகவும் திரும்புகிறது. இங்கே 199.99 கட் ஆஃப் என்கிற எட்ட முடியாத இலக்கை நிர்ணயித்தவர்கள் மீது யாருக்கும் கோபவம் வருவதில்லை. 198.9 கட் ஆஃப் பெற்று முந்திச் செல்லும் ஒரு இட ஒதிகீட்டு மாணவனின் மீது தான் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.
உண்மையில் இந்தப் பணியிடங்கள் காலியாகவே இருப்பதற்குக் காரணமாக சொல்லப் படுவது, அவர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்க அரசிடம் பணம் இல்லை என்பதாகும். இந்த காரணத்தை சொல்லி தேபராய் கமிட்டி சார்பில் அரசிடம், இருப்பதிலேயே அதிக பணியாட்கள் வேலை செய்யும் ரயில்வே துறையில் படிப்படியாக 9 லட்சம் வேலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் பரிந்துரைகள் அளிக்கப் பட்டிருக்கிறது. இங்கு தான் சம்பளக் கமிஷன் பற்றிய மற்றொரு தவறான புரிதலுக்கு விடை கிடைக்க இருக்கிறது.
அரசு தன்னுடைய நிறுவனங்களின் மூலம் ஈட்டும் பணத்தில் பெரும் பங்கு பணியாட்களின் சம்பளத்திற்கே போய் விடுவதாக கவலை கொள்கிறார்கள் ஊடங்கங்கள். இதில் மேலும் சம்பளத்தை கூட்டினாலோ, புதியவர்களை பணியில் அமர்த்தினாலோ மிகப் பெரிய நிதிச் சுமை அரசின் மீது விழும் என்கிறார்கள்.
ஒரு அரசு நிறுவனம் சேவைகளை செய்யும் போது லாபக் கண்ணோட்டத்தில் யோசிக்கக் கூடாது என்பது முதல் குற்றச் சாட்டு. அடுத்ததாக, நொண்டிச் சாக்குகள் எல்லாம் உண்மை தானா என்றும் பார்த்து விடுவோம்.
முதலாவதாக, சம்பளக் கமிஷனுக்குப் பிறகு, 1, 02, 100 கோடி கூடுதல் நிதிச் சுமை கஜானாவின் மீது விழுமாம். இதை பார்ப்பவர்கள் அனைவருக்கும் வாய் விரியத் தான் செய்யும். ஆனால், இதற்கு நிகராக ஏழாவது சம்பளக் கமிஷனில் தெரிவித்தது போலவே இந்தியாவின் GDP வளர்ச்சி மிதமான அளவில் 11.5% என்று இருந்தாலும், 80,000 கோடி அளவில் அரசுக்கு அடுத்த நிதியாண்டில் வருமானம் கிடைக்கும். GST பில்-ன் மூலமாக வரிகள் 18% த்திற்கு உயரப் போகின்றன. இங்கு கார்பரேட்டுகள் உருவாக்கும் சொற்ப வேலைவாய்ப்புகளுக்கு பதிலாக அரசு விரையம் செய்த 62,000 கோடியை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
அடுத்ததாக, Fiscal Deficit எனப்படும் ‘நிதியில் விழும் துண்டு’ உயரும் என்கிற வாதம் முன்வைக்கப் படுகிறது. இதுவும் வரலாற்றைப் பார்க்கும் போது பொய் என்று தெரிகிறது. கடந்த சம்பளக் கமிஷன்களின் செயல்பாட்டிற்குப் பின்னால் பெரிய அளவில் துண்டுத் தொகை அதிகரித்ததற்கான சான்றுகள் இல்லை. நான்காவது மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷனில் அதிகரித்த துண்டுத் தொகை உலகச் சந்தையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையாலேயே உருவானதன்றி சம்பளத்தை உயர்த்தியதால் இல்லை. சொல்லப் போனால், மூன்றாவது மற்றும் நான்காவது சம்பளக் கமிஷனுக்குப் பிறகு துண்டுத் தொகை குறைந்ததற்கான சான்றுகளே உள்ளன.
மூன்றாவதாக, அரசின் செலவுகளை குறைக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள். ஆனால், ஐந்தாவது மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷன் செயல்பாட்டிற்கு வந்ததற்கு பிந்தைய ஆண்டுகளில், செலவு முறையே 26% அளவிற்கும் 28% அளவிற்கும் அதிகரித்தே வந்திருக்கின்றன.
நான்காவதாக, நுகர்வு அதிகரிக்கும் என்கிற வாதமும் உண்மை இல்லை. நம் அரசுப் பணியாளர்கள் வரலாற்றில், அதிகம் சம்பளம் பெற்றால் அதை எதிர்காலத்திற்காக சேமிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்று தரவுகள் சொல்கின்றன. அன்றி, அவர்கள் அதை செலவு செய்வதில் கவனம் செலுத்துவதில்லை.
முடிவாக, 2008 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியில் உலகின் மிகப் பெரிய நிதி சேவை நிறுவனமான லேமன் பிரதர்ஸ் வீழ்ந்த நேரத்திலும் இந்தியா வலுவாக இருந்ததற்கு காரணம் என்ன என்று கூறி கட்டுரையை முடிக்கிறேன். இந்தியா ஒவ்வொரு முறை பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் போது வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கி அந்த நிதிச் சுமையை சரிக் கட்டும். வங்கிகளிடம் இருக்கும் fixed deposit தொகையும், பிராவிடன்ட் ஃபண்டு பணமும், சம்பளத்தை சேமித்து வைக்கும் பழக்கம் கொண்ட நம் இந்தியர்கள் (அரசுப் பணியாளர்கள் உட்பட) வியர்வையில் இருந்து பெறப் பட்டது என்பதை அரசும் மறக்க வேண்டாம்! அவர்களின் மீது ஏக்கத்தோடு நோக்கும் தனியார் துறையினரும் மறந்து விட வேண்டாம்.
நேர்மையான போராட்டங்கள் தோல்வி அடைவதற்கு காரணம் மக்களுடைய/ஊடகங்களுடைய ஆதரவு இன்மையாலேயே. ஒருவன் தெருவில் இறங்கிக் கொடி பிடித்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். ஆனால், உரிமைகளைப் பெற தனி மனிதனுக்கு ஜனநாயகம் அளித்துள்ள வாய்ப்பு போராட்டம் மட்டுமே என்பதை நாம் உணர வேண்டும். நம் உரிமைகளை நமக்கு கீழுள்ள ஒருவனைப் பார்த்து திருப்தி அடைந்து, விட்டுக் கொடுக்கும் மனோபாவம் மறைய வேண்டும். இந்தியர்கள் மற்ற நாட்டவரை பார்க்கும் போது எந்த விதத்திலும் அறிவிலும், திறனிலும் கீழானவர்கள் இல்லை எனும் போது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கும் எதிர்காலச் சேமிப்பிற்குமான பணப் புழக்கமும், வாய்ப்புகளும் இங்கு உருவாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டுமே சரியானதாக இருக்கும்.

Tuesday, August 2, 2016

வலம்: நாவல் விமர்சனம்

 வலம் நாவலின் முன்னுரையில் அதன் எழுத்தாளர் விநாயக முருகன் இப்படியாக அறிவிக்கிறார்:
நான் வரலாற்று ஆசிரியன் அல்ல. கிடைத்த தகவல்களை எல்லாம் ஆவணப்படுத்துவது என் நோக்கமும் அல்ல. ஒரு கற்பனை சித்திரத்தை முன்வைக்கும் ஓவியன்
இது தான் வலம். எந்தவொரு வரலாற்று எழுத்தாளருக்கும் தன்னுடைய ஆய்வு முடிவுகள் உண்மையானதாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், வரலாற்றுப் பின்னணியில் சேதி சொல்லும் புனைவுச் சித்திரத்தை மட்டும் வரையும் ஓவியரின் இத்தகைய அசாத்திய தைரியம் பாராட்டுக் குரியது.
16 ஆம் நூற்றாண்டில் தொடங்கும் கதையில் சென்னையின் மையப் பகுதியில் அமைந்த நரிமேடு அறிமுகப் படுத்தப் படுகிறது. நரிகளும், நடிமேட்டினை நம்பிக்கைக்குப் பாத்திரமாக மாற்றிய ஆன்மிகமும், அந்த மேட்டினை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டும் கவனித்து நாசங்களை ஏற்படுத்திய ஆங்கிலேயரும், அந்த நரிமேட்டின் முக்கோண வடிவத்தில் சரியாகப் பொருந்துகின்றனர். 16ஆம் நூற்றாண்டில் இன்றைய பிராட்வே பகுதியில் கடல் மட்டம் உயர்ந்ததால், பல இடங்களில் குன்றுகளும் பள்ளங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் அட்டப் பாலம் என்று அழைக்கப் பட்டது.
அப்போது அய்யப்ப நாயகர் என்பவரிடம் இருந்து நல்ல விலைக்கு ஜார்ஜ் டவுன் இருக்கும் இடத்தை கிழக்கிந்திய கம்பெனியின் முதல் ஏஜெண்டான ஆண்ட்ரூ கோகன் வாங்கினான். அங்கு வாணிபம் செய்வதே அவனுடைய முக்கிய நோக்கம். அவனுக்கு அடியில் வேலை செய்தவனே பிரான்சிஸ் டே.
அப்படியே இருநூறு ஆண்டுகள் கடந்தால், ஸ்டீபன் போப்பம் (Stephen Popham’s) எனும் வரலாற்றுக் கதாபாத்திரம் Black town என்று அழைக்கப்பட்ட George Town ல் ஒரு இடத்தை வாங்கித் தங்குகிறார். அவருக்கு Fort St. George கோட்டைக்கு எதிரில் நிற்கும் நரிமேடு எனும் குன்று அச்சுறுத்தலாகத் தெரிகிறது. அதை உடனடியாக இடித்து தரைமட்டம் ஆக்க வேண்டும். அதோடு, போபம் தன்னுடைய நிலத்திற்கு அருகில் உள்ள அட்டப்பாலத்திற்குள் கொட்டி சமன்படுத்துவதற்கு மணலும் தேவைப்படுகிறது என்று எண்ணுகிறான். இதன் மேல் ஒரு விரிவான சாலையை அமைக்கவும் திட்டம். இந்த இரு திட்டங்களையும் சொல்லி போபம் நரிமேட்டினை தரைமட்டம் ஆக்குவதற்கு அனுமதி பெறுகிறான். அதிலிருந்து கிடைத்த மணலை எடுத்து அட்டப்பாலத்தில் நிரப்பி, George town வழியாக பெரிய சாலையை அமைக்கிறான். அது Popham’s Broadway எனும் பெயரைப் பெறுகிறது. இந்த Popham’s broadway தான் இப்போது வெறும் ப்ராட்வேவாக நம்மால் அறியப் படுகிறது. தரைமட்டம் ஆக்கப் பட்ட நரிமேட்டின் மேல் தான் தற்போது பொது மருத்துவமனையும், மெட்ராஸ் யுனைடட் க்ளப்பும், பார்க் டவுன் போஸ்ட் ஆபீசும் இருக்கிறது.
இந்த யோசனையை செயல்படுத்திய Stephen Popham’s தான் 1782 ல் மெட்ராஸ் காவல் படையை அமைத்திருக்கிறார். இந்த இணைப்பை, 19 ஆம் நூற்றாண்டின் புனைவுக் கதாபாத்திரமான ஆண்ட்ரூ கோகன், மதராசப்பட்டின காவல் படையில் கேப்டனாக இருப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இங்கே, மதராசப்பட்டினத்தை உருவாக்கிய பெருமை பொருந்திய இரு நண்பர்களில் ஒருவரான ஆண்ட்ரூ கோகனின் வியாபாரப் பேராசையும், பொதுவாகவே சொந்த நாட்டில் தாங்காமல், வலம் சென்று பிற நாடுகளின் இயற்கை அமைப்புகளில் மாற்றங்கள் செய்யும் ஆண்களும், சாதிய உட்பிரிவுகளை ஏற்படுத்தி ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து அடிமை படுத்த அனுமதி அளித்த நம்பிக்கை அமைப்பும் விமர்சிக்கப் படுகின்றன. இம்மூவரின் நடவடிக்கைகளால் எப்படி இயற்கையின் சமன்பாடு நரிமேட்டுடன் சேர்த்து உடைக்கப் படுகிறது என்று விளக்குகிறது நாவல்.
ஆண்ட்ரூ கோகனால் நரிமேடு தரைமட்டம் ஆக்கப்பட்ட பிறகு, மதராசப் பட்டினம் வடக்கில் வெள்ளையர் நகரமாக (அடையாற்றுக்கு அருகில்), சையதுஷாபேட்டை என்று அழைக்கப்பட்ட சைதாப்பேட்டையை ஒட்டிய ஆற்றங்கரையோரம் கருப்பர்களாகிய பணியாட்கள் தாங்கும் சேரிகளாக உருவாகுகின்றன. இந்நிலையில் நரிமேட்டில் இருந்து துரத்தப்பட்ட நரிகள் அடையாற்று காடுகளில் தஞ்சம் புகுகின்றன.
நரி மேட்டை தகர்க்கும் போது எதிர்த்த நரிகளையும், செம்படவர்களையும் ஒரே குழியில் இட்டு எரிக்கிறார்கள் கோகனின் ஆட்கள். இதை முதலில் படித்ததில் இருந்து இந்தக் கதை நெடுகிலும் எனக்கு உள்ளுணர்வாக ஒரு விடயம் அரித்துக் கொண்டே இருந்தது. நரிகளும் மனிதர்களும் தனித்தனியாக நடமாடுவது இக்கதையில் தெளிவு படுத்தப் பட்டிருந்தாலும், எனக்கு நரிகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட நிஜ மனிதப் போராளிகள் என்றும், நரிகளைக் கொல்ல உதவும் பாக்ஸ் ஹவுன்ட் நாய்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் சொன்னதைச் செய்யும் ராணுவ சிப்பாய்கள் என்றும், ராஜபாளையம் நாய்கள், சுய ஆதாயத்திற்காக தம் மக்களை தாமே கொல்லும் இந்திய ராணுவ மற்றும் மத நம்பிக்கையாளர்கள் என்றும் தோன்றியது. இத்தகைய ஒப்புமை கதையை மேலும் சுவாரசியமாக்குகிறது.
இதற்கான பல உதாரணங்களை மேற்கோளிட வேண்டும்:
1.   பிராசிஸ் டேவின் குழந்தை நரிமுகத்துடன் பிறக்கிறது. இது ஒரு வகையான மிஸ்டிகல் ரியலிச சிந்தனையை உருவாக்குகிறது. ஒருவேளை நரிமுகம் என்பது இந்திய முகம் தானோ? அப்படியானால், பிராசிஸ் டேவின் மனைவி, ஒரு இந்தியனோடு உறவு வைத்துக் கொண்டதால் தான் அப்படி எழுதி இருக்கிறாரோ? இந்திய ஆண்களை புணரும் பிரிட்டிஷ் பெண்களை நரிகளைப் புணரும் நாய்கள் என்று பேட்டர்சன் என்கிற கதாபாத்திரம் விமர்சிக்கிறான். இந்தியர்களை அவ்வப்போது நரிப்பசங்க என்று விமர்சிக்கும் இடங்களும் கதையில் இருக்கின்றன. இவை எல்லாம் நரிகளின் மூலமாக இந்தியர்களையும் குறிப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
2.   ஆங்கிலேயர்கள் விரட்டும் போது நரிகள் தந்திரமாக செயல்படுவது நமது இந்தியர்களின் கொரில்லா யுக்திகளை நினைவுபடுத்தாமல் இல்லை. வெள்ளையர்களால் விரட்டப்படும் நரிகள் ஏன் மறுபடியும் சொந்த இடத்திற்கே வருகின்றன என்கிற கேள்விக்கு, மாசானம் என்கிற கதாபாத்திரம் சொல்கிறார், நரிகளை இங்கிருந்து விரட்டினாலும், பிறந்த இடத்தின் நினைவுகளை அவற்றின் மனதுகளில் இருந்து அவ்வளவு எளிதாக விரட்ட முடியாது என்று. இதனை கிளர்ச்சியாளர்களின் மன நிலையோடும் பொருத்திக் காணலாம்.
3.   கோகனின் காவல் நிலையத்தை முற்றுகை இடுகிறார்கள் பறையர்கள். அப்போது பிரிட்டிஷ் அரசின் அதிகார அமைப்பு பற்றிய குறிப்பு வருகிறது. அவர்கள் எப்போதும் மேலதிகாரிகளுடைய கட்டளைக்கு கீழ் பதிவார்கள். ஆனால், நாமோ வேலூர் புரட்சியிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், தனி மனித புரட்சி எந்த வித இலக்கும் அற்று இருக்கும் என்பது தான். இதை பாக்ஸ் ஹவுன்ட் நாய்களின் கீழ்படிதலுக்கும், ராஜபாளையம் நாய்களின் வெறித்தனமான தாக்குதலுக்கும் ஒப்பீடாகக் கருதலாம்.
4.   நரிகளைக் கொல்வது ஒரு கவர்ச்சிகரமான விளையாட்டாக ஆங்கிலேயர்களால் பார்க்கப் படுகிறது. அது அவர்களது சிறு வயதில் இருந்தே பழக்கமாக ரத்தத்தில் கலக்கப் படுகிறது. அவர்கள் தங்களுடைய சக்திக்கு மீறிய புலிகளைக் கொல்ல நினைப்பதில்லை. அதைக் காட்டிலும், சக்தி குறைந்த, ஆனால் தந்திரங்களின் மூலம் கொல்ல வேண்டும் என்கிற கிளர்ச்சியை ஏற்படுத்தும் நரிகளைத் தான் அவர்கள் கொல்ல பிரியப் படுகிறார்கள் என்கிற கருத்து, இந்தியர்களை ஆங்கிலேயர்கள் ஏன் கொன்றார்கள் என்கிற கேள்விக்கு பதிலாகவும் அமைகிறது. நரி விளையாட்டுக்கு மாற்றாகத் தான் கிரிக்கெட் விளையாட்டும் இங்கு அறிமுகப் படுத்தப் படுகிறது. கிரிக்கெட் விளையாட்டு பண்டைய கால கலோசிய பாணியில் வட்டமாக உட்கார்ந்து அனைவரும் ரசிக்கும் விளையாட்டாகவும் இருப்பது இங்கு ஒப்புமை செய்து யோசிக்கத் தக்கது. ஆக நரிகளையும், இந்தியர்களையும் அவர்கள் க்ளாடியேட்டர்களின் நீர்த்துப் போன வடிவமாகத் தான் கருதியிருக்கிறார்கள் எனும் கருத்துக்கு இங்கு இடம் இருக்கிறது.
5.   இந்தியர்களின் புழு போன்ற உடலையும், கருப்பு நிறத்தையும், கிளிஞ்சல் கண்களையும் நரிகளின் குள்ள உருவத்தோடும், கண்களோடும் ஒப்பீடு செய்திருக்கிறார் வி.மு. இந்திய சாதிய கட்டமைப்பில் ஒரு சாதியினர் மற்றொரு சாதியை அடிமைப் படுத்துவதும், அவர்களே இன்னொரு சாதியினருக்கு கீழ் அடிமையாய் இருப்பதுமான வினோதம் நிகழ்கிறது. இதனை ஆங்கிலேயர்களின் கையால் மரணிக்கும் நரிகள், ஆமைகளையும் எலிகளையும் கொண்டாட்டமாக விளையாடிக் கொல்வதை ஒப்புமையாகக் கருதலாம்.
இவ்வாறாக, நரிகளையும், நாய்களையும் மனிதர்களோடு ஒப்பிட்டு நோக்கச் செய்து, வாசகனாகிய என்னையும் கதைக்குள் மாற்றங்கள் செய்ய வைக்கும் வலம் ஒரு முக்கிய படைப்பாகிறது.
அடுத்ததாக, பல முக்கிய பிரச்சனைகள் குறித்த அரசியல் பார்வைகளை இக்கதை முன்வைக்கிறது. அவற்றையும் ஒவ்வொன்றாகக் காணலாம்:
மதம், சாதிய அமைப்பு:
பொதுவாகவே மதவாதிகளும், சாதியத்தின் பாதுகாவலர்களும் ஒரு பொதுவான கருத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்வது வழக்கம். அது பகுத்தறிவாளர்கள் ஒற்றைப்படையாக இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்கிற குற்றச் சாட்டு. இது நிஜத்தில் அடிப்படைவாத இந்திய நாத்திகர்களின் குணம். ஆனால், பகுத்தறிவு என்பதே ஒரு சார்பற்ற நிலைக்கு வித்திடும் உண்மை இவர்களுக்கு விளங்குவதில்லை. இந்தப் புத்தகம் ஒரு சிறந்த பகுத்தறிவாளரை இனம் காணச் செய்கிறது என்பதற்கான உதாரணங்கள்:
சாதிய அமைப்பின் அடிப்படையே கல்வியை மறுதலிப்பதாகும். காரணம், நம்பிக்கைகளும், பகுத்தறிவும் ஒன்றாக பயணிப்பது கடினம் என்பதே. நரிமேட்டுச் சித்தர், அணையாத விளக்கு என்று தொடங்கி இக்கதையில் நடக்கும் மரம், நரிமனிதன் என எண்ணற்ற மூடநம்பிக்கைகளைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. நியாயமான கேள்விகளை எல்லாம் நம்பிக்கைகளுக்கு எதிரான புண்படுத்தும் கேள்விகளாகப் பார்க்கும் மனிதர்கள் இதிலும் இருக்கிறார்கள். பின்னி மில்லில் சாதிய அமைப்பின் மேல் நிலையில் உள்ள பிராமணர்கள் எவ்வாறு ஊதிய வேறுபாட்டின் மூலம் பிள்ளை, நாயக்கர், பறையர் சமூகத்திற்குள் வேற்றுமையை ஏற்படுத்தினார்கள் என்றும் தெளிவாக எழுதப் பட்டிருக்கிறது. சாதிய கட்டுமானம், இனக் கலப்பை குறைத்து இந்தியர்களின் உடல் உறுதியை உருக்குலைத்து விட்டதாக ஜாக் ஓரிடத்தில் கூறுகிறான். பிராமணர்களின் புத்தி கூர்மைக்கும் ரத்த சுத்திக்கும் தொடர்பில்லை என்கிற உண்மையை ரத்தினமும், தாசரும் உணர்த்துகிறார்கள். இந்து-பௌத்த மதங்களுக்கு இடையிலான சண்டைகளைப் பற்றிய விவாதமும் இடம் பெறுகிறது.
இதற்கு இணையாக, கிறித்தவ நடைமுறைகளைப் பற்றிய விமர்சனங்களும் இடம் பெறுகின்றன. கத்தோலிக்க கிரித்தவர்களுடைய மன நிலையும், பிராமணர்களுடைய மனநிலையும் ஒன்று என்கிற இந்த நாவல். இருவருக்கும் தாங்கள் உயர்குடியில் பிறந்தோமென்ற செருக்கு இருக்கும் என்று ஜாக் ஓரிடத்தில் சொல்கிறான். இங்கிருக்கும் உட்பிரிவுகளுக்கு இடையிலான மோதல், ஆங்கிலேயர்களுக்கு அநுகூலமாகி விட்டது என்று கருத்து தெரிவிக்கப் படுகிறது.
அதோடு, சில கிறித்தவர்களின் நற்பணிகளால் மக்களுக்கு நன்மை விளைந்தது உண்மை தான் என்றாலும், அதன் பின்னணியில் மத மாற்றம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது எனும் போது, அந்த சேவை விஷத்தன்மை கொண்டதாகும் என்கிற வெளிப்படையான கருத்தும் இடம் பெறுகிறது. பிரிட்டிஷாரின் உதவிகள் பெரும்பாலும் கிருத்தவ தொண்டு நிறுவனங்களுக்கே சென்றது எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகிறது.
கத்தோலிக்கர்களை மட்டும் விமர்சிக்கிறாரே! இவர் ப்ராடஸ்டன்ட் அபிமானியா என்றும் கூட மத நம்பிக்கையாளர்கள் கேட்கலாம். இதற்கு விடையாக, பேட்டர்சனின் தந்தை கூறுகிறார். நாம் செல்டிக் இனத்தை சேர்ந்தவர்கள். ப்ராடஸ்டண்டுகளின் நடவடிக்கையால் நாம் துரத்தப் பட்டோம் என்று. இதன் மூலம், அதிகார வேட்கையால் செயற்கையாக அயர்லாந்தில் உருவாக்கப்பட்ட பஞ்சம் மற்றும், கிறித்தவர்களின் வெறியாட்டம் இந்திய நிலைமையோடு ஒப்புமை படுத்தப் படுகிறது.
ஆங்கிலேயே ஆட்சியில், மதத்தால் உந்தப்பட்ட பெண்கள் பிரசவத்தில் கூட இறக்க நேரிட்டது எனும் உண்மையை கோஷா அணியும் இசுலாமியப் பெண்களை முன்வைத்து சொல்லி இருக்கிறார் வி.மு.
இவ்வாறாக எந்த மதமும் ஒடுக்கப் பட்டவர்களை விட்டு வைக்க வில்லை என்கிற வலுவான ஆதாரத்துடனான வாதம் முன்வைக்கப் படுகிறது.
இயற்கை சீரழிவு:
ஒற்றை வைக்கோல் புரட்சியை எழுதிய மசனோபு ஃபுக்குவோக்கா, ஒரு வயலில் வெட்டுக் கிளியின் பங்கு என்ன? சிலந்திகளின் பங்கு என்ன? என்று தரம் பிரித்து, இயற்கை விவசாயம், ஒன்றும் செய்ய வேண்டியிறாத விவசாயம் என்று விளக்கி இருப்பார். மனிதன் இயற்கைக்கு உதவுகிறேன் என்கிற பெயரில் எதையும் செய்து வைக்கத் தேவையில்லை. இயற்கை தன்னை தானே பார்த்துக் கொள்ளும் என்பார். அவ்வாறு மனிதன் இயற்கையை புரிந்து கொள்ளாமல் செய்யும் எதுவும் அதன் சமன்பாட்டை குலைத்து, நாசத்தை ஏற்படுத்தும் என்பதே அவர் கற்ற பாடம்.
இந்த நாவல் ஏறக் குறையை இதையே சொல்கிறது. முன்னேற்றம் என்பது யாது? என்கிற கேள்விக்கு விடையாக பலர் பலவற்றைக் கூறலாம். ஆனால், மனித சமுதாயத்தோடு கூடி இயற்கையின் அனைத்து படைப்புகளும் உயிர் வாழ வேண்டும் என்கிற ஒரு சூழலே முன்னேற்றத்திற்கான சூழல்.
ஆனால், நகரமயமாதலின் தொடக்கமாக ஆண்ட்ரூ கோகன் செய்த அந்த நாச வேலை தான் கதையின் பின் பகுதியில் வரும் அனைத்திற்கு காரணியாக விளங்குகிறது. ஸ்டீபன் போபம் தான் வாங்கிய நிலத்தின் மதிப்பு கூட வேண்டும் என்கிற காரணத்திற்காகத் தான் நரிமேடு கோட்டைக்கு அச்சுறுத்தல் என்று கூறி அதை இடிக்கவும் வைத்தான். இதன் மூலம் அவன் இரண்டாவது கோகனாகவும் மாறுகிறான்.
இந்த நாவலும் பல இடங்களில் இயற்கையின் ஒன்றுக் கொன்று தொடர்புடைய விடயங்களைப் பற்றிய செய்திகளை தூவிச் செல்கிறது.
1.   நரிகள், ஆங்கிலேயரும் பிறரும் நினைப்பது போல தந்திரமான விலங்குகள் இல்லை. அவை செத்துப் போன விலங்குகளை உண்டு காடுகளை சுத்தம் செய்கின்றன என்று சொல்வதில் இருந்து தொடங்குகிறது இது பற்றிய குறிப்புகள்.
2.   சாணி வண்டுகள் மட்டும் இல்லை என்றால் இந்த இடமே மிருகங்களின் கழிவுகளால் பாழ்பட்டுப் போகும் என்கிறார் மாசானம். இங்கு நம் கழிவுகளை அள்ளும் சக்கிலி, அருந்ததியர் மீது கவனம் திரும்புகிறது.
3.   கொசுக்களுக்கு விலங்குகளின் ரத்தமே போதும். காடுகளை அழிப்பதால் தான் அவை மனிதனை தேடி வருகின்றன.
4.   செம்படவர்கள் நரிகளை கடவுளாக ஏற்றுக் கொண்டதால் அவர்கள் என்றும் பஞ்சத்தினால் பாதிப்பை சந்தித்ததில்லை.  
5.   ஒரு புலி பசி அடங்கிவிட்டால் மான்களை வேட்டையாடுவதில்லை. மனிதனிடம் தான் அந்த எண்ணம் உள்ளது.
இவ்வாறாக பல இடங்களில் இயற்கையை புரிந்து கொள்ளாததால் தான் தவறுகள் நிகழ்கின்றன என்று கருத்துச் சொல்கிறது இந்த நாவல்.
பெண் அடிமைத் தனம்:
பெண்களை ஆங்கிலேயர்கள் எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு சான்றாக கரோலினும், சூசனும் இக்கதையில் வலம் வருகிறார்கள்.
இங்கே குறிப்பிடப் படும் சூசன் என்பவர் நிஜ வரலாற்றில் ராபர்ட் போர்க் முதலாம் பேரன் கன்னிமாராவின் முதல் மனைவியான லேடி சூசன் ராம்சே என்பவர் தான். கன்னிமாரா மெட்ராஸ்-ன் கவர்னராக இருந்த போது சென்னையையும் கல்கத்தாவையும் இணைக்கும் கிழக்குக் கோஸ்டல் ரயில்வே லைனை மேம்படுத்தினார். இவருடைய பெயரைத் தாங்கியே கன்னிமாரா நூலகம் இன்றும் இயங்கி வருகிறது.
அந்தக் காலத்தில் கன்னிமாரா விவாகரத்து பல செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியாக வந்திருக்கின்றன. சூசனுக்கு கொசுக்கடியால் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்ற சமயத்தில் அவரால் விருந்துகளில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. அப்போது கன்னிமாரா, லேடி ஈவா என்கிற பெண்ணை சூசனுக்கு உதவியாகவும், விருந்துகளில் உபசரிக்கவும் உடன் வைத்திருந்திருக்கிறார். நாளடைவில் சூசனுக்கு கன்னிமாராவின் மேல் சந்தேகம் ஏற்படத் தொடங்கி உள்ளது. கண்ணிமாராவுக்கும் லேடி ஈவாவுக்கும் (கதையில் இவள் பெயர் கரோலின்) ஒன்றாக இருக்கக் கூடாது என்பதற்காக கோடையில் சூசன் அவரோடு ஊட்டிக்கு சென்றிருக்கிறார். அக்டோபரில் சூசனுடன் சர்ஜியன் மேஜர் ப்ரிக்க்ஸ் (கதையில் டாக்டர் பைடி) ஊட்டியில் தங்க, கன்னிமாரா தன்னுடைய மனைவிக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக லேடி ஈவா வை மறுபடியும் மதராசப் பட்டினத்தில் வேலைக்கு அமர்த்தி இருக்கிறார். இதற்குப் பிறகு 1890 ல் குடும்ப நபர்களின் அறிவுறுத்தலுக்கு மாறாக சூசன் விவாகரத்து கோரியிருக்கிறார்.
இந்தக் கதையில் சூசனின் கதாபாத்திரம் கண்ணியத்தோடும், பரிவோடும் இந்தியர்களை நடத்தும் பெண்ணாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு பெண் தான் மனிதனின் வாழ்க்கையை முழுமை படுத்துகிறார். அவளுக்கு சொந்த இடத்தைப் பற்றிய நல்ல அபிப்ராயங்களே மனதில் தங்குகிறது. ஆனால், அவளை ஆண் அடிமை படுத்தி வைத்திருக்கிறான். ஆண், எப்போதும் சொந்த இடத்தை விமர்சித்துக் கொண்டே இருக்கிறான். அதனாலேயே அவன் வலம் செல்கிறான். நாசங்களை ஏற்படுத்துகிறான். இது போன்ற வித்யாசனமான கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன.
இக்கதையில் கரோலின் தமிழ் நாட்டுப் பெண்ணாக வருகிறாள். நிஜத்தின் அடிப்படையில் எழுதப் பட்டிருந்தாலும், இவளுடைய கதாபாத்திரத்தில் சற்று புனைவு கலந்துள்ளதாக தெரிகிறது. கரோலினுக்கும் (லேடி ஈவா) கவர்னருக்கும் தொடர்பு உள்ளது என்று அறிந்த பிறகு, சூசன் தன்னைத் தானே திட்டிக் கொள்கிறாள். தான்னால் தான் இவள் மெட்ராசுக்கு வந்தாள். அதனால் தான் இவளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்று நினைக்கிறாள். அதனால் அவளை காக்க வேண்டும் என்பதற்காக கோகனுடன் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்துகிறார். நிஜத்தில் லேடி ஈவா கவர்னரின் உதவியாளரான கேப்டன் க்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  
எனக்குத் தெரிந்த வரையில் இந்நாவலை நான் போதுமான அளவிற்கு அலசிவிட்டதாக நினைக்கிறேன். விமர்சனம் என்று வரும் போது குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம் தான்.
இந்தக் கதையில் எழுத்தாளர் கையாண்டிருக்கும் நேர்த்தியை பற்றி முதலில் சொன்னால், குறைகள் இல்லை; வெறும் எதிர்பார்ப்புகள் மட்டுமே உள்ளன என்று புரிந்து கொள்ள முடியும். கதை சொல்லும் போது எழுத்தாளர் முதலில் சில அறிமுகங்களை செய்து பின், அதை விளக்காமாக தகுந்த இடங்களில் கட்டவிழ்த்துக் கொண்டே வருகிறார். இக்கதை எந்தெந்த அரசியல்களை பேச வேண்டும் என்பதை பட்டியல் இட்டு, அதன்படி நேர்த்தியாக கதையின் போக்கை வடிவமைத்திருப்பது புரிகிறது.
அதே நேரம், கதாபாத்திரங்களின் குணங்களை விளக்கும் பத்திகள் நிறைய உள்ளன. அடிப்படையில் இது ஒரு இன்வெஸ்டிகேஷன்-ஐ மையமாக வைத்து பயணிக்கிறது என்றாலும் கதையின் முதல் பாதியிலேயே குற்றவாளி யாராக இருக்க முடியும் என்று கணித்து விட முடிகிறது. ஒருவேளை, எழுத்தாளர் இதை சஸ்பென்ஸ்-ஆக முன்னிறுத்த வில்லையோ என்று கூட தோன்றுகிறது. ஏனெனில், முக்கிய கதாபாத்திரங்களுக்கு உரிய இடம் தரப் பட்டிருப்பதால் தான் இந்த சஸ்பென்ஸ் உடைந்து விடுகிறது. கதாபாத்திரங்களின் குணங்களை விளக்கும் போது யார் குற்றவாளியாக இருக்க முடியும் என்று நம்மால் கணித்து விட முடிகிறது.
மெட்ராஸ் ரீஜியனைப் பற்றிய தகவல்கள் அதிகமாக இல்லை என்பதால் இந்தக் கதையின் வரலாற்றுப் பின்னணி சற்று குறைவாக இருப்பது போலத் தெரிகிறது. நாம் தினமும் காணும் இடங்களைப் பற்றிய குறிப்புகள் இருப்பதால் இது சற்று சமன்பட்டு தெரியாமல் போகிறது. ஆனால் கூடியவிரையில் வி.மூவிடம் இருந்து முழுமையான ஒரு வரலாற்று நூலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் புனைவுக்கு இணையாக வரலாறும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.

அன்புடன்
கண்ணன் ராமசாமி (பரமபதம் (2014) மற்றும், விரைவில் வெளியாக இருக்கும் ‘ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு’ நாவல்களின் எழுத்தாளர்)