Pages

Wednesday, June 5, 2013

நேற்று ரயில்வே மேன்! இன்று ஹீரோ!!


மனோகர், ரயில்வே தொழிலாளிகளின் ஹீரோ ஆகியிருக்கிறார். கடந்த மே மாதம், கும்மிடிபூண்டியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த வண்டியின் ஓட்டுனர் தான் இவர். கும்மிடிபூண்டியை தாண்டியவுடன் மாரடைப்பு!
உடனடியாக வண்டியை நிறுத்திய அவர், அவசர உதவி விளக்கை இயக்கிவிட்டு, சரிவில் வண்டி ஓடாமல் இருக்க சக்கரத்திற்கும், தண்டவாளத்திற்கும் நடுவில் ஒரு கல்லை வைத்துவிட்டு, சரிந்து விட்டார்.
எதிரில் வந்து கொண்டிருந்த வண்டியில் இருந்த ஓட்டுனர், விளக்கை பார்த்ததும், தன்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு, கார்ட்-ஐ(Gaurd) காவலுக்கு வைத்துவிட்டு, ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொல்லிவிட்டு, அவசர உதவி கோரிய வண்டியை இயக்கி கவரைபேட்டை ரயில் நிலையம் வரை சென்று நிறுத்திவிட்டு, மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தார்.
பின், நான்கு கிலோ மீட்டர் திரும்ப நடந்து தன்னுடைய வண்டியை இயக்கி கும்மிடிபூண்டியை அடைந்திருக்கிறார்.
மனோகருக்கும், உதவிக்கு வந்த பாலச்சந்தருக்கும் விருது வழங்கவிருக்கிறது ரயில்வே துறை.
விமர்சனம்:
ஒன்று, மனோகர் இறந்துவிட்டார். அதற்கு முக்கிய காரணம், ஆம்புலன்ஸ் வர முக்கால் மணி நேரம் ஆனதாம்!
இரண்டு, நைட் டுட்டி அலவன்ஸ் பெறுவதற்காக தனக்கிருந்த ஜுரத்தையும் பொருட்படுத்தாமல் வேலைக்குச் சென்றதாலேயே மனோகருக்கு இந்த நிலைமை.
ரயில்வேயில் ஒரு வாக்கியத்தை அடிக்கடிச் சொல்வார்கள்.முதலில் நம் பாதுகாப்பு. பிறகு தான் ரயில் பாதுகாப்பென்று. அதை உணர்ந்து பிறர் செயல்பட வேண்டும்.
ஆயிரக் கணக்கான பயணிகளின் உயிரை காப்பாற்றி இறந்த மனோகருக்கு ஒரு சல்யூட்! நேரம் கருதி சமயோசிதமாக செயல்பட்ட பாலச்சந்தருக்கு ஒரு பாராட்டு!

Sunday, June 2, 2013

கவிதை: கருமை


கருமையை சிறப்பிக்க நம் கவிஞர்கள் 
கற்பித்த உவமைகள் பற்பல..
அடை மழை யெனத் தம் பிரஜைகட்கு 
அள்ளி வழங்கிய வள்ளல் கோமான்களை
கார்மேகத்தொடு ஒப்பிட்டார் ஒருவர்;

மாந்தர் குலத்திற்கு குவி மையமாய் விளங்கும்               
மங்கையர் கருவிழியை மீன் விழியென
வர்ணித்தார் இன்னொருவர்.

அவள் கருங் கூந்தலின் நறுமணத்திற்கு 
காரணம் அறியாமல், ‘சொக்கா’ ‘சொக்கா’ என்று 
அலைந்தவர் கதையை அறியாதவர் உண்டா?

அல்லது
தம் முன்னோரின் பசி தீர்க்க, 
காக்கைக்குச் சொறிட்டு,
புண்ணியம் தேடாதவர் தான்
இப்புவியில் உண்டா?

இங்ஙனம்,
கருமையின் பெருமையைச் சொல்ல
எத்தனை கதைகள் இருந்தும்,
மனித மனம் குரங்கென்பதற் கேற்ப 
தவறாமல் தலை கீழென இயங்கினோம் நாம்!

உடலியக்க உறுதிக்கு உணவிட்டு ஊட்டி வளர்க்கும் 
உன்னதப் படைப்பாளியின் மகிமையை உணராமல்
நித்தமும் அவரை நிந்தனை செய்தோம்.
தூய மனம் கொண்டவர் துன்பத்தால் துவண்டாலும்
துர்நாற்றம் பிடிக்காமல் தூரச் சென்றோம்!

விஷ வாயுவை உள்வாங்கி
வியாதியுடன் சரசம் பாடும்,
சாக்கடைத் தொழிலாளியின் நிலை தான் என்ன?
சூத்திரன், அரிசனன் என்று கண்டதையும்
கேட்டுக் கேட்டு அவர் காதுகள்
புழுத்தது தான் மிச்சம்!

இத்தகைய வன்முறையை அரங்கேற்றும்
நம் வெள்ளை நிறமா சமாதானத்தை குறிக்கும் சின்னம்?

கரை படிந்த சிந்தையதை
இக்காரிருள் கடப்பதற்குள் களைந்தெடுத்து
சலவை செய்ய வாருங்கள்!

வேற்றுமையை வேரறுக்கும்
தொழமைக்குத் தோள் கொடுக்க,
நம் கைகளை உயர்த்திடுவோம் வாருங்கள்!

இக்கவிதை, தென்னக ரயில்வே, சிக்னல் பயிற்சிக் கூடத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் வாசிக்கப் பட்டு, பரிசும் பெற்றது.

எண்ணம்-எழுத்து,
கண்ணன் ராமசாமி