என் வாழ்வில், இந்த நேரத்தில், சொல்லிக் கொள்ளும் படியான
ஒரு நிகழ்வு நடந்தேறி இருக்கிறது. இது வரை லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற கொள்கையை
விடாப் பிடியாக கடை பிடிக்க வேண்டும் என்று பல முறை நான் முயற்சித்திருக்கிறேன். சில
நேரங்களில் வென்றிருக்கிறேன். ஆனால், சிறு சிறு தவறுகள் நிகழ்ந்து, வெளியே
சொல்லிக் கொள்ளும்படியாக அவை இல்லாமல் போயின. இப்போது, ஒரு வேலையை லஞ்சம் இல்லாமல்
முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளேன்.
என்ன வேலை அது? என்னை சேர்ந்த பலருக்குத் தெரியும். நான்
தென்னக ரயில்வே துறையில் இணையப் போகும் விவரம். அந்த வேலையைப் பெற வாடிக்கையாக
அரசு எதிர்பார்ப்பது, ஆர்.டி.ஒ அலுவலகத்தில் இருந்து ஒரு உறுதிச் சான்று(attestation).
“பூ மிதிக்கணும். அவ்வளவு தானே?” என்று கவுண்ட மணி பாணியில்
ஆர்.டி.ஒ-அலுவலகத்திற்குப் போன எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக இதன் வீரியம் புரியத்
தொடங்கியது.
“தம்பி, ஆர்.டி.ஒ அட்டச்டேஷன் வேணும்-னா முதல்-ல தாசில்தார்
ஆபீஸ்-ல இருந்து ஒரு ரிபோர்ட் வரணும். அங்கே போ”, என்று சொல்லி என்னுடைய
படிவத்தொடு ஒரு கடிதத்தை இணைத்து, அஞ்சல் கவரில் தபால் கொடுத்து அனுப்பினார்கள். இதைச்
செய்வதற்கே மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டார்கள்.
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று நான் பார்த்த போது,
விஷயம் இன்னும் பெரிதாகியது.
“தாசில்தார் சும்மா போட்டுற மாட்டார். நீ ரெவன்யு இன்ஸ்பெக்டரிடம்
போய் ரிபோர்ட் வாங்கிட்டு வா” என்று சொல்லி தேதி சீல் அடித்துக் கொடுத்தார்கள்.
அதை எடுத்துக் கொண்டு வருவாய் ஆய்வாளரிடம் நான் சென்றேன்.
அங்கு இருந்த உதவியாளர், ‘இதுக்கு முதல்-ல வி.ஏ.ஒ கிட்ட இருந்து ஒரு ரிபோர்ட்
வாங்கணும்’ என்றார். அவரையும் தேடித் பிடித்து கேட்டேன்.
“நாளைக்கு போட்டுத் தர்றேன். சீக்கிரம் போய் போலீஸ்
வெரிஃபிகேஷேன் வாங்கிட்டு வா” என்றார். ஆக, லஞ்சம் வாங்கும் முக்கிய பிரமுகர்கள்
எல்லோரிடமும் சென்று வர வேண்டிய நிலை எனக்கிருந்தது.
காவல் நிலையத்திற்குச் சென்றேன்.
வரவேற்பு அரையில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். விவரத்தை
சொன்னவுடன் மற்றொருவரிடம் செல்லச் சொன்னார். அவர் என்னைப் பார்த்ததும் சைகையாலேயே உட்காரச்
சொன்னார்.
“அடடே எப்போதும் இல்லாத மரியாதை இருக்கிறதே!” என்று எண்ணிக்கொண்டே
உட்கார்ந்தேன். விவரத்தை அவரிடமும் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, நான்
கொண்டு போயிருந்த காகிதங்களை புரட்டிப் பார்த்துவிட்டு,
“கடிதம் இருக்கிறது. படிவம் எங்கே?” என்றார். எனக்கு தூக்கி
வாரிப் போட்டது. காரணம் என்னிடம் வேறு படிவங்கள் ஏதும் இல்லை. எங்கேயும் கேட்டு
வாங்கிக் கொண்டும் வர முடியாது. இது நடக்குமா நடக்காதா என்ற பயம் மனதை கவ்விக்
கொண்டது.
“நீங்கள் தான் படிவம் தரவேண்டும். என்னிடம் இதை மட்டும்
தான் கொடுத்தார்கள்”, என்றேன்.
“எங்க கிட்ட படிவம் எல்லாம் இல்ல. நீங்க தான் கொண்டுட்டு வரணும்”,
என்றார் அவர். அப்போது, தற்செயலாக ஒரு அதிகாரி உள்ளே வந்து என் பிரச்சனையை கேட்டு
அறிந்தார். என்னிடம் பேசிக் கொண்டிருந்த அதிகாரியிடம்,
“நம்ம கிட்ட ஃபாரம் இருக்கு சார். இருங்க நான் தேடி
எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
“என்ன படிவம் இருக்கிறது? என்ன இல்லை?” என்று கூட தெரியாத
ஒருவர் அங்கே உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் நான் மரியாதையாக பேசிக்
கொண்டிருக்கிறேன். தலை எழுத்து என்று மனக் கைகளால் அடித்துக் கொண்டேன். சில
நிமிடங்கள் கழித்து படிவம் வந்தது. நானே நிரப்பினேன். துணை ஆய்வாளர் வந்து கை
எழுத்திட்டார். போகும் போது,
“சார் நான் கிளம்புறேன். கோர்ட் பக்கத்துல போய் நாலு
வண்டியை மடக்கனும். இன்ஸ்பெக்டர் வர்றதுக்குள்ள எஸ்கேப் ஆயிடுறேன். இல்லாட்டி அவர்
வந்து ஏதாவது வேலை கொடுத்திடுவார்”, என்று கூறிவிட்டுச் சென்றார் அந்த பெண்
சப்-இன்ஸ்பெக்டர்.
படிவத்தில் சீல் இட்டு, நகல் எடுத்து அவர்களிடம்
கொடுத்துவிட்டு, அசல் படிவத்திற்காக காத்திருந்தேன். அப்போது,
“கொடு ஒரு ஆயிரம் ரூபாய்! நல்லா சம்பாதிப்ப இல்ல?” என்றார்
அந்த அதிகாரி. நான் சிரித்தபடி நின்றேன்.
“என்ன? காசு கொண்டு வரலையா? இந்த வெரிஃபிகேஷேன்
சர்டிஃபிகேட்-ஐ கொடுக்குறதுக்கு முன்னாடி உன் மேல கேஸ் இருக்கா-ன்னு செக்
பண்ணிட்டு ஒரு வாரம் கழிச்சுத் தான் கொடுக்கணும். ஏதோ கவர்மென்ட் வேலையில சேரப்
போறியே; உதவி பண்லாம்-னு சீக்கிரம் தர்றோம். கொடு”, என்றார்கள் இரண்டு பெரும்.
அது ஒரு நாளில் முடியக் கூடிய வேலையாக தான் எனக்குத் தெரிந்தது.
வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கும் அந்த இருவரும் நினைத்திருந்தால் அப்போதே
என்னுடைய நன்னடத்தை பற்றி ஆய்வு செய்திருக்கலாம். தன்னுடைய கடமையை செய்துவிட்டு
எனக்கு உதவி செய்ததாய் அவர்கள் சொன்னது கோபத்தை ஏற்படுத்தியது. அசிங்கப் படுத்த
வேண்டும் போல் இருந்தது.
“இந்தாங்க. என் கிட்ட இவ்வளவு தான் இருக்கு”, என்று கூறி
இரண்டு இருபது ரூபாய் தாள்களையும், ஒரு பத்து ரூபாய் தாளையும் நீட்டினேன்.
“அம்பது ரூபாயா?! என்னப்பா நீ?” என்று ஆச்சர்யமாக கேட்டார்
புதிதாக வந்த அதிகாரி.
“உண்மையாவே என் கிட்ட பணம் இல்லை”, என்று காலி பாக்கெட்டை
திறந்து காண்பித்தேன். உடனே அவர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு,
“இதை வாங்கினா எங்களுக்கு அசிங்கம். உனக்கே தோணிச்சுன்னா,
இந்த பக்கம் போகும் போது ஒரு 200 ரூபாய் கொடுத்துட்டுப்
போ”, என்று கூறி படிவத்தை கொடுத்து
அனுப்பினார்கள். முதல் வேலை லஞ்சம் தராமல் முடிந்தது. இருந்தாலும் என் மனதில்
நிம்மதி இல்லை.
“அந்த ஐம்பது ரூபாயை கூட வாங்கிப் பையில் போட்டுக் கொள்ளும்
கேடு கெட்டப் பிறவிகள் இருக்கிறார்கள். இனி அதைக் கூட கொடுக்கக் கூடாது”, என்று
தோன்றியது.
அடுத்த முதலையிடம் சென்றேன். அதாவது கிராம நிர்வாக அலுவலர்.
அவர் அசல் போலீஸ் ரிகார்ட்-ஐயும், அசல் குடும்ப அட்டையையும் பார்த்துவிட்டு,
ஆர்.டி.ஒ-விடம் இருந்து நான் பெற்ற கடிதத்தை படித்துப் பார்த்தார். அதில்,
“விண்ணப்பித்தவரின் பள்ளிக்குச் சென்று, அவர் அங்கே
படித்தது உண்மை தானா என்றும், அவர் தலைமை ஆசிரியரிடம் பெற்றுள்ள உறுதிச் சான்று
உண்மையில் அவரால் தான் போடப் பட்டதா என்றும் கிராம நிர்வாக அலுவலர் உறுதி செய்து
நன்னடத்தை சான்று அளிக்க வேண்டும்’ என்று எழுதப் பட்டிருந்தது.
“போச்சு! வெறும் கை எழுத்துக்கே இருநூறு ரூபாய் கேட்டங்க.
இங்கே பள்ளி வரை கூட்டிக்கிட்டு போனா எவ்வளவு கேட்பாங்களோ?” என்று யோசித்துக்
கொண்டே கிராம நிர்வாக அலுவலர் முன்பு நின்றேன். கடிதத்தை முழுவதுமாக படித்து
முடித்த அவர்,
“வந்து பார்க்குறேன். ஆனா, அதுக்கு முன்னாடி உங்க தலைமை
ஆசிரியர் ஸ்கூல்-ல இருக்காரா-ன்னு பார்த்துட்டு வா” என்றார். பொதுவாக என்னுடைய
தலைமை ஆசிரியர் மதிய நேரங்களில் சந்திப்புக்கு தயாராக இருப்பார் என்று எனக்குத் முன்னதாகவே
தெரியும். இருந்தாலும் ஒரு முறை கேட்டுவிடலாம் என்று நினைத்து பள்ளிக்குச் சென்று
விசாரித்தேன். அங்கே அவர் இருந்தார். இதை சொன்னவுடன், என்னோடு மிதிவண்டியின் பின்
இருக்கையில் உட்கார்ந்து கொண்டு கிராம நிர்வாக அலுவலர் பள்ளிக்கு வந்தார்.
என்னை நன்றாகத் தெரியும் என்று தலைமை ஆசிரியர் கூறி கை
எழுத்திட, மறுபடியும் அதே மிதிவண்டியில் என்னுடன் திரும்பினார் அலுவலர்.
“சைக்கிள்-ல வந்ததுக்கு இன்னும் நூறு ரூபாய் அதிகம்
கேட்பானோ?” என்ற கேள்வி எனக்குள் சங்கடத்தை ஏற்படுத்த, அவருடைய இருக்கைக்கு முன்பு
அமைதியாக உட்கார்ந்திருந்தேன். ஒரு ஏ.ஃபோர் சீட்-ஐ எடுத்து எழுத ஆரம்பித்தார்
அவர்.
நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன். அது சட்ட விரோதம். உங்களை
திருத்த நூறு அண்ணா ஹஜாரே வந்தாலும் முடியாது. என்றெல்லாம் மனதிற்குள்ளேயே வசனம்
பேசுவது போல் யோசித்துக் கொண்டிருந்தேன்.
மனுதாரர் மீது எந்த வழக்கும் இல்லை; கிராம விசாரணையில் எந்த
வில்லங்கமும் இல்லை என்று புலனாகிறது; என்றெல்லாம் அவர் எழுதிக் கொண்டிருந்ததை
படித்தேன். நடுவில் பலர் வந்து குறுக்கிட்டுக் கொண்டே இருக்க, அந்த ஒரு காகிதத்தை
எழுதி முடிக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.
பின்னர், தன்னுடைய கை எழுத்தை இட்டு, சீல் போட்டுவிட்டு,
என்னிடம் கொடுக்கும் போது,
“நீ உங்க தெருவுல சண்டை போட்டிருக்கியா?” என்று கேட்டார்.
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இருந்தாலும், அடக்கி வாசித்து,
“இல்லை சார். வேணும்-னா எங்க தெருவுல வசிக்கிறவங்க கிட்ட
இருந்து எழுத்துப் பூர்வமா ஒரு உறுதிக் கடிதம் வாங்கிட்டு வர்றேன்” என்றேன்.
“அதெல்லாம் வேணாம். உன்னை விசாரிக்கணும்-னு மட்டும் தான்
இங்கே எழுதி இருக்காங்க. விசாரிச்சாச்சு. இந்தா”, என்று ரிப்போர்ட்-ஐ கொடுத்தார்.
பின், ‘பெற்றுக் கொண்டேன்’ என்று எழுதி என்னுடைய கை எழுத்தை ஒரு நோட்டுப்
புத்தகத்தில் போடச் சொன்னார்.
“இனிமேல் தான் கச்சேரி இருக்கிறது”, என்ற எண்ணத்துடன் கை
எழுத்து போட்டுவிட்டு, அவருடைய அறிக்கையை வாங்கி கையில் வைத்துக் கொண்டே, ‘நன்றி.
வரேன் சார்’ என்றேன். அவரும், ‘வாங்க’ என்று சொல்லிவிட்டு வேறு வேலையை பார்க்க
முகத்தை திருப்பிக் கொண்டார்.
ஒரு பைசா கேட்கவில்லை! வழ வழா குழ குழா என்று பேசவில்லை.
“உன் கூட சைக்கிள்-ல அவ்வளவு தூரம் வந்தேன்-ல? அதுக்கு
ஏதாவது செய்” என்று முறையிடவில்லை. ‘முறையா பார்த்தா இதை ஒரு வாரம் கழிச்சுத் தான்
கொடுக்கணும். நான் ரெண்டு நாள்-லையே கொடுத்துட்டேன்” என்று போலியாக ரூல்ஸ்
பேசவில்லை. ஒரு நியாயமான அதிகாரியை முதல் முறையாக நான் அன்று சந்தித்தேன்.
இந்தச் சம்பவம் என் மனதிற்குள் ஒரு குற்ற உணர்வை உருவாக்கியது.
எல்லா அரசு அலுவலகத்திற்குள்ளேயும் நரிகள் நமக்காக காத்திருக்கின்றன என்ற பயத்தோடு
செல்வது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தேன். ‘கெட்டவர்கள் எல்லா இடங்களிலும்
எதிர்பார்ப்பது போலவே, நல்லவர்களையும் எதிர்பார்க்க வேண்டும்’ என்று தோன்றியது.
அதே எண்ணத்துடன் அடுத்து வருவாய் ஆய்வாளரின் அறைக்குச் சென்றேன். அங்கேயும்
விவரத்தை கூறி விளக்கினேன்.
“நாளை காலை வா”, என்றார் உதவியாளர். அடுத்த நாள் சென்றேன்.
“இன்று மாலை வா”, என்றார் உதவியாளர். மாலை போய் நின்றேன்.
“இன்னும் அவர் வரவில்லை. பூண்டி போயிருக்கிறார். நாளை வா”,
என்றார் மறுபடியும்.
“நாளை சனிக்கிழமை”, என்றேன்.
“சரி. திங்கட் கிழமை வா”, என்று சொல்லி அனுப்பி விட்டார்.
பொறுமை இழந்த நான் வீட்டிற்கு வந்து இரவு யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது, என்
தந்தை இறப்பதற்கு முன்பு ஒரு முறை சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது:
“இந்த மாதிரியான இடங்களில் பொறுமை தான் அவசியம். எத்தனை
முறை திருப்பி அனுப்பினாலும் கோபத்தை காட்டக் கூடாது. அது அவர்களை எரிச்சலடையச்
செய்யும். அரசு, பணிச்சுமைக்கு ஏற்றார் போல் அதிக அதிகாரிகளை நியமிக்கவில்லை”
ஆம் இது உண்மை தான்! சமீபத்தில் கூட புதிதாக நியமிக்கப்பட்ட
1900
வி.ஏ.ஒ-க்கள் பணிச்சுமை
தாங்க முடியாமல் வேறு அரசுத் துறைக்கு தாவிவிட்டதாக டிசம்பர் முப்பதாம் தேதி
செய்தி வந்தது. இதை என் தந்தை சொன்ன போது நான் பெரிதாக கண்டு
கொள்ளவில்லை. ஆனால், அந்த அறிவுரை எனக்கு இப்போது உதவியது. அமைதியாக இருந்தேன்.
திங்கள் அன்று சென்றேன்.
“ஏதாவது வேலை இருந்தா முடிச்சிட்டு வா. இன்னும் ஆர்.ஐ
வரலை”, என்றார் உதவியாளர்.
“எனக்கு எந்த வேலையும் இல்ல”, என்றேன்.
“இங்கேயே உட்கார்ந்திருக்க கூடாது. வெளியே எங்காவது போய்
சுத்திட்டு வா”, என்று சொல்லி அனுப்பிவிட்டார். போக இடம் தெரியாமல், எதிரில்
இருந்த டீ கடையில் ஒரு பட்டர் பிஸ்கட் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே ஹெட் லைன்ஸ்
படித்தேன். வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே ஒருவர் சுக்கு காப்பி விற்றுக்
கொண்டிருந்தார். அதையும் வாங்கிக் குடித்தேன். நோட்டம விட்டுக் கொண்டே இருந்ததில்
அரை மணி நேரம் கழிந்தது.
ஆர்.ஐ வந்து விட்டாரா என்று பார்க்க அலுவலகத்திற்குச்
சென்றேன். நேரம் பதினொன்று ஆகியும் வரவில்லை. மறுபடியும், அவர் நேரம் தவறி வருவதை
பற்றி புகார் அளித்து, அவரை கேள்வி கேட்க அதிகாரிகள் வரும் போது தயங்கித் தயங்கி
வருவாய் ஆய்வாளர் பதில் சொல்வது போன்ற கற்பனை. ஆனால், எங்கேயும் புகார் அளிக்கவில்லை.
பதினொன்றரை மணிக்கு ஆர்.ஐ-ன் தரிசனம் கிடைத்தது. முதல் ஆளாக
நான் போய் அலுவலக வாசலில் நின்றேன். பாத் ரூம் போய்விட்டு பொறுமையாக வந்து
உட்கார்ந்த அவர், என்னை உள்ளே அனுமதித்து, நான் கொண்டு சென்ற ரிப்போர்ட்-ஐ
வாங்கிப் படித்தார்.
“சாயங்காலம் வாங்க. பார்த்து செஞ்சுக் கொடுத்துடுறேன்”,
என்றார்.
“அடடே! இங்கு கால் கடுக்க நிற்க வேண்டாம் போலிருக்கிறதே!”
என்று சந்தோஷப் பட்டுக் கொண்டே வீட்டிற்குச் சென்றேன். மாலை வரை நிம்மதியாக
இருந்தது. ஐந்து மணிக்கு வரச் சொல்லி இருந்தார்கள். நாலரை மணிக்கே சென்றுவிட்டேன்.
கூட்டமாக இருந்த அலுவலகம் அப்போது காலியாக இருந்தது. அதிகாரி என்னை பார்க்க,
“காலையில நன்னடத்தை சான்று வாங்க வந்தேனே சார்”, என்று கூறி
உள்ளே சென்றேன் தயக்கத்துடன்.
“ஆமா தம்பி! சொல்லுங்க”, என்றார். என்னத்த சொல்றது? நீங்க
தான் சொல்லணும் என்று தோன்றினாலும்,
“வாங்கிட்டு போகலாம்-னு வந்தேன்”, என்றேன்.
“அது வந்து, எழுதுற பையன் லீவ் இன்னைக்கு. நாளைக்கு வாங்க
கண்டிப்பா முடிச்சுத் தந்துடுறேன்” என்றார் கால் ஆட்டிக் கொண்டே.
“கால் ஆட்டுற நேரத்துல நீங்களே எழுதிக் கொடுக்கக் கூடாதா?”
என்று கேட்கத் தோன்றியது. கேட்கவில்லை. வீட்டிற்குத் திரும்பி வந்து அடுத்த நாள்
காலைக்காக காத்திருந்தேன்.
ரயில்வேயில் சொன்ன தேதி புதன் கிழமை தான். அன்று வரை வி.ஏ.ஒ
வேலை மட்டும் தான் முடிந்திருந்தது. வருவாய் ஆய்வாளரிடம் ரிப்போர்ட்
வாங்கிவிட்டால் தாசில்தாரிடம் ஒரு கை எழுத்து, ஆர்.டி.ஒ-விடம் ஒரு கை எழுத்து
என்று சுலபமாக முடிந்துவிடும். ஒரு நாள் தள்ளி வியாழக் கிழமை அன்று சென்று விடலாம்
என்று மனக் கணக்கு போட்டுக் கொண்டேன்.
ஆனால், எதிர்பார்த்ததை போலவே அடுத்த நாளும் அந்த பையன்
வரவில்லை. என் மனதில் இருந்ததை சொல்லிவிட்டேன்.
“சார் எனக்கு இன்னைக்கு அப்பாயின்ட்மென்ட் ஆக வேண்டி
இருந்தது. நீங்களே மூணு நாள் டிலே பண்ணிட்டீங்க”
“சரி..சரி..இன்னைக்கு கண்டிப்பா கொடுத்துடுறேன். வெளியே
வேலை இருந்தா பார்த்துட்டு வா”, அதே வசனம்; வேறு வாயிலிருந்து.
“இவன் ‘அதுக்கு’ சரி பட்டு வரமாட்டான்”, என்று மனதிற்குள்
சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றினேன். சரியாக ஒரு மணி நேரம்
கழித்து திரும்பி வந்தேன். மனதிற்கு உற்சாகமூட்டும் வகையில் வி.ஏ.ஒ-வின் அறிக்கையை
பார்த்து காப்பி அடித்துக் கொண்டிருந்தார் ஆர்.ஐ.
அரசு அலுவலகத்தில் நம்முடைய காகிதத்தை அலுவலர் கையில்
வைத்திருக்கும் நேரம் மிகவும் நிம்மதியானது. கூடிய விரைவில் வந்த வேலை முடியப்
போகிறது என்ற நிம்மதி அலாதியானது. இது ஒரு தொல்லை புடிச்ச இடம்; தாலுகா ஆபீஸ்-ஐ
பார்த்தாலே எனக்கு அலர்ஜி என்ற பொதுவான எண்ணங்களைத் தாண்டி, அந்த இடத்தை விட்டு
வெளியேறும் போது நம் கையில் தைக்கப்பட்ட காகிதங்கள் கத்தையாக இருந்தால், சம்பள
நாள் அன்று கிடைக்கும் சந்தோசம் நிச்சயம் இருக்கும்.
அப்படி ஒரு சந்தோசம் தான் அன்று எனக்கு கிடைத்தது.
தன் கைப்பட எழுதிய அறிக்கையை படிவத்தொடு சேர்த்து
தைத்துவிட்டு, கை எழுத்திட்ட ஆர்.ஐ, சீல் போட்டுத் தரும்படிச் சொல்லி உதவியாளரிடம்
கொடுத்தார். அவர் சீல் போட்டுவிட்டு ஒவ்வொரு காகிதமாக பிரித்துப் பார்த்துக்
கொண்டே இருந்தார்.
இரண்டு மூன்று முறை திருப்பித் திருப்பி விரல் ஈரத்தால்
காகிதம் நனையும் அளவிற்கு பார்த்தார். என் கையில் அதை கொடுக்க அவருக்கு
மனமில்லாதது போல் தெரிந்தது.
“ஓ! இவர் நம்ம கிட்ட மேட்டர் எதிர்பார்க்குறார் போல”, விவேக்
வசனம் நினைவுக்கு வந்தது. நான் எதுவும் பேசாமல் கையை நீட்டிக் கொண்டு நின்றேன்.
கடைசியாக நான் பேச மாட்டேன் என்று தெரிந்து கொண்ட அந்த உதவியாளர், என்னிடம் அதை
கொடுத்துவிட்டு முணு முனுத்தார்.
“இதுக்கு காசு கொடு”
“எதுக்கு? வி.ஏ.ஒ எதுவும் வாங்கலையே!”
“யாரு?” என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தார்.
“உனக்கு சீக்கிரம் முடிச்சுக் கொடுத்தார் இல்ல? காசு கொடு”
என்றார் முகத்தை சுளித்தபடி.
“என்னால கொடுக்க முடியாது”, என்று சொல்லிவிட்டு வெளியே
வந்துவிட்டேன். அவரும் எதுவும் கூறாமல் உள்ளே சென்று விட்டார்.
முதல் முறையாக யுக்திகளை பயன்படுத்தாமல் நேரடியாக லஞ்சத்தை
எதிர்த்தேன். மனதிற்குள் ஒரு தைரிய உணர்வு ஏற்பட்டது. எப்போதெல்லாம் குடும்பங்களும், நண்பர்களும்
கூடும் இடத்தில், அரசியல்வாதிகளின் ஊழல் விவகாரம் பற்றி பேச்சு எழுகிறதோ,
அப்போதெல்லாம் நான் விவாதத்திற்குள் நுழையாமல் இருந்திருக்கிறேன். காரணம்,
ஊழலுக்குத் துணை போய் விட்டு பிறரை விமர்சிக்க எனக்கு எந்த அருகதையும் இல்லை என்ற
குற்ற உணர்வு தான். இனி அந்த குற்ற உணர்வு என்னிடம் இருக்கத் தேவை இல்லை!
எந்தச் சட்டத்திலும், ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்தால்
தான் தவறு; நூறு ரூபாய் வாங்கினாலோ/கொடுத்தாலோ தவறில்லை என்று எழுதவில்லை. ஆனால்,
இந்தச் சமூகம் அதை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
‘காசு கொடுத்தா தான் வேலை நடக்கும். இல்லாட்டி
இழுத்தடிப்பானுங்க’ என்ற வாதம் வசதியாக எல்லோருடைய தவறையும் மறைத்துக்
கொண்டிருக்கிறது. அதாவது, ஒரு தவறு, இன்னொரு தவறை மறைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் பேச்சுக்களை கேட்கும் போது இனி நான் தள்ளி
நிற்கலாம். இந்த எண்ணம் பிறந்த நேரத்தில் தான் இந்த அனுபவத்தை எழுத வேண்டும் என்று
தோன்றியது. அந்த யோசனையை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, தாசில்தார் அலுவலகத்தை
சென்றடைந்தேன். மனுவை கவுண்டரில் கொடுத்துவிட்டு, எப்போது வர வேண்டும் என்று
கேட்டேன். ஒரு சீட்டு கொடுத்தார்கள். அதில், 21. 01. 2013 என்று இருந்தது! மறுபடியும் எனக்கு
தூக்கி வாரிப் போட்டது.
“கிட்டத் தட்ட ஒரு மாசமா? ஒரு சைன்
போட இவ்வளவு நாளா?” என்றேன்.
“ஆமா! அவர் இந்த சைன் போடுற வேலையை
கடைசியாத் தான் செய்வார். அவருக்கு வேற அவசர வேலைகள் நிறைய இருக்கு” என்றார்
கவுண்டர் முன்பு இருந்தவர். இதைக் கேட்டவுடன் என் மனதில் முதலில் எழுந்த எண்ணம்
என்ன என்பதை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்லக் கடமை பட்டிருக்கிறேன்.
“பேசாம காசு கொடுத்து வேலையை
முடிச்சுக்கலாமா? அப்புறம் காசே கொடுக்கலை-ன்னு கட்டுரையில எழுதிக்கிட்டா போச்சு!
யாரால கண்டு பிடிக்க முடியும்?”
இதை நான் தயக்கம் இல்லாமல் ஒப்புக்
கொள்வதற்கு ஒரு காரணம் உண்டு. பலர், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை மிக
மிகத் தூய்மையானவர்கள் போல எண்ணிக் கொண்டு, அவர்களுக்கு தவறான சிந்தனையே வராது
என்பது போல கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆனால், இது போன்ற நினைப்புகள் ‘சீக்கிரம்
வேலை முடிய வேண்டும்’ என்ற எதிர்பார்ப்போடு போகும் எல்லோருக்கும் வரத் தான்
செய்யும் என்பது யதார்த்தம். இந்த நினைப்பை வெளியே சொன்னால், தன்னுடைய கொள்கையில் குறை
கண்டு பிடிப்பார்களோ என்று பலர் அச்சப் படுவது தான் இந்தக் கற்பனை உருவாவதற்கு
முதல் காரணம்.
ஆம்! இது ஒரு கரும் புள்ளியாகத்
தான் பார்க்கப் படும். ஆனால், அதைப் பார்த்து நான் பயப்படப் போவதில்லை. காரணம்,
மனித வாழ்க்கையே, மிருக குணங்களை களைய முற்படும் ஒரு போராட்டத்தின் வெளிப்பாடாக
தான் இருக்கிறது. ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும் முதல் தருணத்தில் அவள் மேல் காமம்
கொள்வது ஆணின் இயல்பு. ஆனால், எல்லோரும் பெண்ணை கற்பழித்து தூக்கி எறிவதில்லை.
அந்த இயல்பை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறோம். அந்த கட்டுப்பாடு தான் முக்கியம்.
அது போல ஊழலை இயல்பு நிலையாக
ஏற்றுக் கொண்டு விட்ட ஒரு சமூகத்தால் சூழப்பட்ட என்னிடம் இது போன்ற எண்ணங்கள்
உருவாவதில் வியப்பில்லை.
சரி, கொடுத்தீர்களா? இல்லையா?
எங்களால் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும் உண்மையை சொல்லுங்கள் என்ற கேள்விக்கு
என்னிடம் உள்ள பதில், ‘இல்லை’. ஒரு மாதமானாலும், இரண்டு மாதமானாலும்,
பொறுத்திருக்க முடிவு செய்தேன்.
இடையில் பல்வேறு தரப்புகளில்
இருந்து பல்வேறு அறிவுரைகள். ஒருவர்,
“யாராவது தெரிஞ்ச ஆளை புடிச்சு
சீக்கிரம் வாங்கினா, சீக்கிரம் வேலைக்குப் போகலாம் இல்ல?” என்று கேட்டார். அதாவது
எனக்கு முன்னால் காத்திருப்பவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு நான் முதலில் வேலையை
வாங்கிக் கொள்ள வேண்டுமாம். இன்னொருவர்,
“அப்படித் தான் கேட்பாங்க.
கொடுத்தா தான் வேலை முடியும். அவ்வளவு ஏன்? நீயே நாளைக்கு வாங்குவ பாரு! ஜமாய்..”,
என்று தோளில் தட்டிக் கொடுத்து, பிற்காலத்தில் ஊழல்வாதியாக வாழ்த்துக்கள் என்று
சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனார். இதெல்லாம் எனக்கு சிரிப்பை வர வழைத்த போது, நான்
மிகவும் மதிக்கும் ஒரு நபர் கொடுத்த அறிவுரை என்னை கோபம் கொள்ளச் செய்தது.
“டிசம்பருக்குள் அப்பாயின்ட்மென்ட்
ஆர்டர் வாங்கிட்டா, உன்னுடைய சர்வீஸ்-ல 2012-ஆவது வருஷத்தையும்
சேர்த்துக்குவாங்க. அதனால அம்பதோ, நூறோ கொடுத்து சீக்கிரம் வாங்கப் பாரு” என்றார்
அவர். நான் அந்த நேரத்தில் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை. அவரை நான்
மதிப்பதால் எதிர்த்துப் பேச எனக்கு விருப்பம் இல்லை. பேசினாலும் அவர் மனம் மாறப்
போவதில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். மேலும், ஒரு தவறான கருத்தை யாரேனும்
சொன்னால், அந்தக் கருத்தை நான் எதிர்க்கிறேன் என்று எழுதலாம்; தவறில்லை. ஆனால், தனிப்பட்ட
முறையில் அவரை விமர்சித்து காயப்படுத்துவது எந்த வகையிலும் ஆரோக்கியமில்லை என்று
நினைத்ததால், ‘சரி’ என்று மட்டும் கூறிவிட்டு பேச்சை மாற்றினேன்.
அவர் சொல்வதில் என்ன தவறு?
உன்னுடைய ஆதாயத்தை நீ பார்த்தால் உனக்குத் தானே நல்லது? உன்னுடைய நல்லதுக்கு அவர்
அட்வைஸ் செய்வது சரி தானே? என்ற கேள்வி எழலாம்.
இப்படி தவறான முறையில் அந்த
ஓராண்டு கால சர்வீஸ்-ஐ வாங்குவதால் கிடைக்கப் போகும் ஆதாயம், என்னுடைய வாழ்வில்
எத்தகைய மாற்றத்தை கொண்டு வந்துவிடும்? குறைந்த பட்சம் பிரமோஷன் கிடைப்பதில் உதவலாம்.
அல்லது உதவாமலும் போகலாம். அதிக பட்சம் என்னுடைய சம்பளத்தில் ஒரு சிறு மாற்றம்
ஏற்படலாம்; அல்லது ஏற்படாமலும் போகலாம். இல்லை என்றால் எனக்குத் தெரியாத, நான்
பிற்காலத்தில் நினைத்து வருந்தப் போகும் ஒரு வாய்ப்பு என்னை விட்டு நழுவிச்
செல்லலாம்.
எது எப்படி இருந்தாலும், இந்த
உத்திரவாதம் இல்லாத ஒரு எதிர்கால நன்மைக்காக ஒரு ஆயிரம் ரூபாயை கறுப்புப் பண
அகவுன்ட்-ல் டெபாசிட் செய்ய வேண்டும் என்று என்னிடம் அறிவுரை கூறுவது எவ்வாறு
சரியாகும்?
அடுத்தவர் பொருளுக்கு ஆசை படக்
கூடாது; நேர்மையாக வாழ வேண்டும்; என்ற போதனையை ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில்
ஒரு கதையின் மூலம் படித்ததாக ஞாபகம். அஞ்சாங் கிளாஸ் பாடத்தையே பின்பற்றாத இந்த
சமூகம் எவ்வாறு வல்லரசாக மாறப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. சமூகம் என்பது
ஒரு எந்திரமா? இல்லையே! மனிதர்களால் ஆனது தான் ஒரு சமூகம்? ஒவ்வொரு மனிதனும்
பாலில் தண்ணீர் கலக்காமல் விற்றால் தானே இந்தச் சமூகம் ஆரோக்யமாக வாழ முடியும்?
இரண்டு சொட்டு கலந்தால் கூட அதற்கேற்றார் போல சத்து குறையத் தானே செய்யும்?
இது போல எத்தனை விவாதங்களை
முன்வைத்தாலும் இந்த சமூகம் திருந்தப் போவதில்லை. மாறாக என்னைத் தான் மடையன்
என்பார்கள். பிழைக்கத் தெரியாதவன் என்பார்கள். இது போன்ற நேர்மையான நடைமுறைகளை
பின்பற்றுவதால் நம் பிழைப்பு ஒன்றும் பாழாகிவிடுவதில்லை. உயிர் பயம் கொள்ளும்
அளவிற்கு நேர்மை ஒன்றும் கொடியதும் இல்லை. எனக்குக் கிடைக்கப் போவது அடிமட்ட
சம்பளமும் இல்லை!
ஒரு கூட்டத்தில் கூச்சல் எழ
வேண்டும் என்றால், முதலில் ஒருவன் கத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதைக் கூட ஞாயம்
என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், செவுட்டு மெஷினை கழற்றிவிட்டு, யாருமே
கத்தவில்லையே என்று வாதாடுபவர்களிடம் எதைச் சொல்லியும் விவாதத்தை வெல்ல முடியாது.
வெல்ல வேண்டும் என்ற விருப்பமும் என்னிடம் இல்லை.
ஒரு வழியாக தாசில்தாரிடம் கை
எழுத்து வாங்கி விட்டேன். ஆர்.டி.ஒ-விடம் படிவத்தை கொடுத்திருந்த எனக்கு இன்று ஒரு பெரிய அடியாக ஒரு செய்தி வந்திருக்கிறது. தாசில்தார் தனியாக ஒரு ரிப்போர்ட் தர வேண்டுமாம். அதை கேட்க நாளை செல்ல வேண்டும். இது எவ்வளவு இழுத்தடித்தாலும், ஒரு
பைசா செலவு செய்யாமல் ஒரு ரவுண்ட் வந்துவிட முடிவு செய்திருக்கிறேன். அடுத்த முறை இதே போன்று ஒரு
நிலைமை வந்தாலும் இதைத் தான் செய்வேன். மற்றவர்களிடம் இருந்து நான் பிந்தங்குவது
நாள் கணக்கில் தான். இதே வேலையை மற்றவர்கள் காசு கொடுத்து ஐந்து நாட்களில்
முடித்திருக்கலாம். அவர்கள் மிச்சம் பிடித்த அந்த இருபத்தி ஐந்து நாட்களில்
‘சாதனை’, ‘சாதனை’ என்ற கூச்சல் மட்டுமே வெளிப்பட்டு நிற்கும். ஆனால், கூச்சலை
தாண்டி, மிச்சம் பிடித்த நேரத்தில் அவர்கள் உருப்படியாக என்ன செய்தார்கள் என்பது
தான் என்னுடைய கேள்வியாக இருக்கும்! ஒரு புத்தகத்தையாவது படித்து முடித்தீர்களா?