Pages

Thursday, July 14, 2011

நம் வரலாறு-பாகம் 3

சோழர் பரம்பரை:

பத்தாம் நூன்றாண்டில் பல்லவர்கள் வீழ்ந்ததை முன்பு பார்த்தோம். இப்போது, அவர்களை வீழ்த்தியவர்களை பற்றி பார்ப்போம். அவர்களை பற்றிக் கூறுவதற்கு முன், அவர்கள் முன்னோர்களை பற்றி கூற விழைகிறேன். மனு நீதிச் சோழன், நலங்கிள்ளி, கரிகாலச் சோழன், நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன், போன்றோரால் சங்க காலத்தில் கொழித்துக் கிடந்தது சொழர்ப் பரம்பரை. அதில், முக்கியமாக கரிகாலச் சோழன் காலத்தில், நமக்கு தேவையான செய்திகள் உள்ளன.

ஏசு பிறப்பதற்கு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் தொண்டை நாடு ‘நாகா’ அரசர்களிடமிருந்து சோழப் பரம்பரையில் இணைக்கப் பட்டது.இந்த நாகா அரசர்கள் இருளர்கள் என்று அழைக்கப் பட்டனர். இவர்களின் புகைப் படங்களை இங்கு இணைத்துள்ளேன். இந்த இருளர்கள், பர்மாவை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல். திருவள்ளூரை சேர்ந்த இருளர்கள் மட்டும் தமிழ், மற்றும் தெலுங்கு பேசிக் கொண்டிருந்தார்கள் என்று ஒரு செய்தி. ஆக, முனிவர்கள் மட்டும் அல்லாமல், இருளர்களும் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற இடங்களில் இருந்திருக்கிறார்கள்.

கரிகால சோழன் தொண்டை மண்டலத்தை இருளர்களிடமிருந்து பெற்ற பின்னர், சுமார் ஆயிரத்தி இருநூறு வருடங்கள் கழித்து தான், அதாவது 10- ஆவது நூற்றாண்டில் தான் மறுபடியும் சோழர் பரம்பரையில் காஞ்சிபுரமும் சுற்றியிருந்த இடங்களும் இணைந்தன. சோழர்களின் பெருமையை மீட்டெடுத்தவர் விஜயாலயச் சோழன். இவர், பல்லவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடந்த போர்களை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு தஞ்சாவூரை வசப் படுத்தினார். அதற்கு முன் சோழர்கள், தங்கள் 'இருள்' காலத்தில் இருந்தார்கள் என்று கூறப் படுகிறது. அவர்கள் அந்த காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பது குழப்பமாகவே இருக்கிறது. இங்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில், சோழர்களை அழுக்காக காட்டியவுடன் அவர்களை பற்றி ஆராயாமல் எடுத்து விட்டார் செல்வராகவன் என்று விமர்சித்தனர். அவர், இருள் காலத்தில் சோழர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து கூட படம் எடுத்திருக்கலாம். விமர்சித்தவர்கள், சோழர்களின் பொற்காலத்தை மட்டுமே பார்ப்பதால் தான் இந்த அறியாமை.

சோழர்களின் பெருமையை மீட்டெடுத்த விஜயாலைய சோழரின் காலத்தில் பல்லவர்களுடன் உள்நாட்டுப் போர் நடந்தது. இது மிக முக்கியமான, உணர்ச்சி மிகுந்த போராகும். இதில் பாண்டியர்களுக்கு எதிராக, சோழர்களும், பல்லவர்களும் இணைந்து போரிட்டனர். போரில், எல்லா யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும் இழந்த பின்னர், என்ன செய்வதென்று தெரியாமல் சோழர்கள் திணறிக் கொண்டிருந்த பொது,விஜயாலயச் சோழன், தன்னுடைய தொண்ணூறாவது வயதில், இரண்டு கை, ஒரு கால் மற்றும் ஒரு கண்ணுடன் களம் புகுந்தார். இந்த போரில் சோழர்கள் தோற்றால் அதோடு மறுபடியும் எழுந்து வெல்வது கடினம் என்று உணர்ந்திருந்தார். அவருடைய புதல்வர் ஆதித்ய சொழரிடமும், அபரஞ்சித பல்லவரிடமும் இரண்டு உரம் மிக்க சோழ வீரர்களாவது இருக்கின்றார்களா என்று கேட்டதற்கு, உணர்ச்சிப் பெருக்கோடு, இருநூறு போராளிகள் அவருடன் இணைந்தனர்.

விஜயாலய சோழன், ஆதித்ய சோழன், அபரஞ்சித பல்லவன் மற்றும் இருநூடு வீரர்கள் மட்டும் படை எடுத்து ஆயிரமாயிரம் பாண்டியர்களை எதிர் கொண்டனர்! விஜயாலய சோழரை தோளில் சுமக்க இருவர் இருவராக ஐம்பது ஜோடிகள் ஒன்று சேர்ந்து தாக்க வேண்டும் என்ற போர் யுக்தி வகுக்கப் பட்டது. அத்தகைய பலம் கொண்டப் படையை, ஒரே ஆளாக விஜயாலயர் சந்தித்தார். அவருடைய வாள் வீச்சின் வேகம், ஒரு சக்கரம் சுற்றுவதைப் போல இருந்ததாக வியந்து கூறுகிறது வரலாறு. ஒவ்வொரு ஜோடியும் மாண்டு விழும் போது, அடுத்த ஜோடி வந்து தாங்கிப் பிடித்து பாண்டியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் போரிட்டது. இதை கண்ட ஆதித்யரும், அபரஞ்சிதரும், மற்ற போராளிகளும், உத்வேகம் அடைந்து பாண்டியர்களை வீழ்த்தி சொழர்கொடியை நிலைநாட்டியாதாக உணர்ச்சிப்பெருக்குடன் வரலாறு செப்புகிறது. இவை எல்லாம் நடந்தது எங்கோ ஒரு மூலையில் அல்ல. கும்பகோணம் அருகில் இருக்கும் திருப்புறம்பியத்தில் தான்!

பல்லவர்களின் பெருமையை நிலைநாட்டியவர்களுள் அபரஞ்சிதரும் ஒருவர். அவர், ஆதித்ய சோழருடன் சேர்ந்து பாண்டியர்களை வீழ்த்திய பிறகு, அவருக்கே முடிசூட்டிவிட்டு, ஒதுங்கிய பெருமை கொண்டவர். ஆனால், அத்துடன் நிற்க மனமில்லாத ஆதித்ய சோழர், பல்லவர்களின் மற்ற இடங்களை முற்றுகை இட்டார். பல்லவர்களின் கீழ் இருந்த தொண்டை மண்டலத்தை தன்னுடையதாக்கிக் கொண்டு, சோழர்களின் எல்லைக் கோட்டை விரிவாக்கம் செய்தார். ஆக, நாம் இருக்கும் இடம், ஆதித்யரின் காலத்தில் தான் சோழப் பரம்பரையில் இணைந்தது. அதாவது, நான் முன்பே கூறியது போல் பத்தாவது நூற்றாண்டில்.

ஆதித்யருக்கு பின்னால் வந்த முதலாம் பராந்தக சோழர், வெற்றியையும், செல்வத்தையும் சோழர்களின் சடாமுடியில் சூட்டியவர். அவர் ஆட்சிக் காலத்தில், மகாபலி அசுரனின் வம்சத்தில் வந்தவர்கள் என்று கூறப் பட்ட பானர்களிடமிருந்து வடக்கு காஞ்சிபுரத்தை மீட்டார். மற்றபடி இவர் மதுரையையும், இலங்கையையும் சோழர் குலத்தில் சேர்த்ததற்கு பெருமை பெற்றார். பராந்தக சோழரின் ஆட்சிக் காலத்தில், ரஷ்ட்ரகுடா குலத்தவர்கள் உட்புகவே, அவரும், அவருடைய மூத்த மகனுமான ராஜாதித்த சோழரும் தக்கோலம் என்ற இடத்தில் போரிட்டனர். இந்த போரில் ராஜாதித்த சோழர் மரணம் அடைந்தார். சோழர் படையும் தோற்றது. இந்த போர் நடந்த இடம், இன்று நமக்கெல்லாம் தெரிந்த அரக்கோணத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது என்பது நாம் அதிசயிக்க வேண்டிய செய்தி!

பராந்தக சோழர், தனக்குப் பின்னால், தன்னுடைய மற்றொரு மகனான, கண்டராதித்ய சோழரை மன்னராக முடிசூட்டிவிட்டார். ஆனால், அவர் அரசை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தாமல், பக்தியில் திளைத்துக் கொண்டிருக்க, பராந்தக சோழரை வென்று பெற்ற தொண்டை மண்டலத்தை ரஷ்ட்ரகுடா குலத்தவர்களே வைத்திருந்தனர். இதில் சுவையான செய்தி என்னவென்றால், கண்டராதித்யர், போர் செய்ய விரும்பாமல் அமைதியாக இருந்தார் என்று சிலர் கூறுகின்றனர். மாறாக, ஈழத்தை காத்துக் கொள்ளவும், பாண்டியர்களை மறுபடியும் எழாமல் தடுக்க தொண்டை நாடு அவர்கள் பிடியிலேயே இருப்பது சரி என்று நினைத்தார் என்றும் சிலர் கூறுகின்றனர். இது உண்மையானால், ஈழத்தை அருமையை தமிழர்கள் அன்று உணர்ந்திருந்தது புலப்படுகிறது.

கண்டராதித்யரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், அவருடைய ராணியின் பெயர், மாதேவடிகளர். அந்த அம்மையாரின் மற்றொரு பெயரை கூறினால் உங்களுக்கு முக்கியத்துவம் புரியலாம். அவர் தான் செம்பியன் மாதேவி! இவருக்கு பொன்னியின் செல்வன் காவியத்தில் சிறப்பான இடம் உண்டு. இவருடைய புதல்வர்களில் ஒருவர் தான் உத்தம சோழர். இவரை பற்றிக் கூற, இவர் வம்சாவளியை அறிமுகம் செய்ய வேண்டும்.

கண்டராதித்யருக்கு பின்னர், அவருடைய இளைய சகோதரரான அரிஞ்சய சோழர் ஆட்சி புரிந்தார். அரிஞ்சய சோழரின் புதல்வர் இரண்டாம் பராந்தக சோழர் பின்னால் ஆட்சி செய்தார். அதற்குப் பின், கண்டாராதித்யர்- செம்பியன் மாதேவி ஆகியோரின் புதல்வரான உத்தம சோழர், அரியணை ஏறினார். பராந்தக சோழரின் இரு மகன்களான ஆதித்த கரிகாலரும், ராஜ ராஜ சோழரும் (அருள் மொழி வர்மன்) உயிருடன் இருந்த போதும், உத்தம சோழர் அரியணை ஏறியது ஏன் என்பது தான் பொன்னியின் செல்வன் கதையில் முக்கியமான 'சஸ்பென்ஸ்'. அதை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள். நாம் பராந்தக சோழரின் இரு புதல்வர்களை பற்றிப் பார்ப்போம்.

ஆதித்த கரிகாற் சோழரும் பாண்டிய போரில் சிறப்பு வாய்ந்தவர். ஆதித்த கரிகாலன் என்பவர் தான் பொன்னியின் செல்வனில் 'விசித்திர' மரணம் அடிந்த கரிகாற்சோழன். அவர் வீர பாண்டியனை பாண்டிய போரில் கொன்றதால் தான் சூழ்ச்சியின் பிடியில் சிக்கி இறந்தார்.

பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு இவரை பற்றியும், பாண்டியர்களின் உளவுக் கோளான நந்தினி என்ற பெண்ணை பற்றியும் அறிந்திருப்பார்கள். இவர்கள் இருவரின் கதாபாத்திரம் ரொம்பவே முக்கியமானது.

அருள் மொழி வர்மன் என்ற ராஜ ராஜ சோழர் தான் பொன்னியின் செல்வன் கதையின் ஹீரோ! இவர் உத்தம சோழர் ஆட்சிக்கு வந்த போது அதை எதிர்க்காமல், தன் பெரியமனதை நிரூபித்தவர். இவரை சூழ்ச்சி செய்து பாண்டியர்கள் கொலை செய்ய முயன்றாலும், அதிலிருந்து தப்பி, ஆட்சிப் பீடத்தை அலங்கரித்தவர். இவர் காலத்தில் தான் தஞ்சாவூரின் பிரசித்தி பெற்ற கோயிலான பிரகதீஸ்வரர் திருத்தலம் கட்டப் பட்டது. கடவுள் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு கூட இந்த கோயிலின் சிற்ப வேலைப் பாட்டை கண்டால் மனம் கனிந்து விடும். அது மட்டும் இல்லாமல், இவர் ஆட்சியில் சோழர்களின் எல்லை, தெற்குப் பகுதியில் இலங்கை முதல், வடகிழக்குப் பகுதியில் ஒரிசா வரை நீண்டது. இவர் ஈடுபட்ட போர்களில் முக்கியமானவை, வெங்கி மற்றும் கலிங்கப் போர்கள்.

இவர் காலத்தின் ஆட்சி முறைக்கு ஒரு சான்று கூறுகிறேன். இவர் ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு உறுப்பினரும், இருநூறு காசுகளுக்கு மேல், அதாவது இரண்டு ரூபாய்க்கு மேல் செலவிடக் கூடாது. அப்படி செய்தால், மகாசபையில் அனுமதி வாங்க வேண்டும். இன்றைய நிலைமையில் இப்படி ஒரு கட்டுப் பாடு இருந்தால் எப்படி இருக்கும்? யோசித்துப் பாருங்கள். இது, நான் தஞ்சாவூரில் கண் கூடாக பார்த்த விதிமுறை. அதை நான் புகைப்படமாக எடுத்து வைத்துள்ளேன். இங்கே பார்க்கலாம். இவரைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம். ஆனால், இன்னும் பல அரசர்களைப் பற்றி கூறவேண்டியிருக்கிறது. அதனால் இதோடு விடுகிறேன்.

இவருடைய மகனான ராஜேந்திர சோழர் தான் அடுத்த அரசர். இவருடைய வெற்றிக் கதையில், அந்தமான், மாலைதீவுகள், இலட்சத்தீவுகள்,பர்மா ஆகியவை அடக்கம். தன்னுடைய பதினேழாவது வயதில் கங்கைகொண்ட சோழபுரத்தை கண்டுபிடித்த சிறப்பும் இவரைச் சாரும். காலஹஸ்தி கோயிலையும் இவர் தான் கட்டினார். இவர் காலம், சோழர்களின் கை பறந்து விரிந்து செழித்த காலமாக கருதப் படுகிறது.

இவருக்கு பின்னால், ஜெயம்கொண்ட சோழன் என்று அழைக்கப் பட்ட ராஜேந்திரராஜ சோழர் ஆண்டார். இவர் காலத்தில் இலங்கையில் எதிரிகளுக்கு எதிரான போரும், சாளுக்யர்களுடனான போரும் தொடர்ந்தது.

இவருக்கு பின்னால், இரண்டாம் ராஜேந்திர சோழர், வீரராஜேந்திர சோழர் மற்றும் ஆதிராஜேந்திர சோழர் ஆகியோர் ஆட்சி செய்தனர். இத்துடன், இடை நிலை சோழற்பரம்பரை முடிவுக்கு வந்து, குலோத்துங்க சோழர் பரம்பரைக்கு வழி வகுத்தது. அதாவது அண்ணா நாமம் நலிந்து, எம்.ஜி.ஆர் நாமம் மணத்ததாய் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆதிராஜேந்திர சோழரின் காலத்தில் சோழர் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்தது. இந்நிலையில் தான் ராஜகேசரி என்று அழைக்கப் பட்ட, பெரும் பெருமை கொண்ட சோழ அரசர்களில் ஒருவரான குலோத்துங்கர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவர் ஆட்சி ஏற்ற சில வருடங்கில், எல்லா திசைகளிலிருந்தும் போரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரண்டு கலிங்கப் போர்கள், சாளுக்ய அரசர் விக்ரமாதித்தருடனான போர், இலங்கையில் ஈழப் போர்கள் மற்றும் பாண்டியர்களுடனான சிக்கல்கள் என்று சில வருடங்கள் போரிலேயே கழிந்தது. இதில் இலங்கையை தவிர மற்ற எல்லா போர்களிலும் வெற்றி பெற்றார். இது மட்டும் அல்லாமல், சீனாவுக்கு தன் தூதரகத்தை அனுப்பியதும் இவரிடம் குறிப்பிடும்படியான ஒன்று. இவர் தான் சொக்கநாதர் கோயிலையும் கட்டினார். சிறு மதுரை என்று அழைக்கப் படும் இடமும், அன்று குலோத்துங்க சொழபுரமாகத் தான் இருந்தது.

இவருக்கு பின்னால் வந்தவர் விக்கிரம சோழர். இவர் குலோத்துங்கர் இழந்த வெங்கியையும், கலிங்க நாட்டையும் மீட்டவர். இவரும், இவருக்கு பின்னால் வந்த இரண்டாம் குலோத்துங்க சோழரும் சிதம்பரத்தில் உள்ள சிவன் கோயிலை சீரமைத்து பெருமை தேடிக் கொண்டனர்.

இவருக்கு பின்னால் வந்த இரண்டாம் ராஜராஜ சோழரும், இரண்டாம் ராஜாதிராஜ சோழரும் ஆட்சி செய்த காலத்தில், சோழர்களின் பலம் குறைய ஆரம்பித்தது.

பின்னாளில் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழர்,கும்பகோணத்தில் உள்ள கம்பஹறேச்வர கோயிலை கட்டினாலும், சோழர்களின் வளர்ந்துவரும் வீழ்ச்சியை இவரால் தடுக்க முடியவில்லை. அவருக்கு பின்னால் வந்த மூன்றாம் ராஜராஜ சோழரும், மூன்றாம் ராஜேந்திர சோழரும் சோழர்களின் முடிவை கண்முன்னால் கண்டு இறந்தவர்கள்.

நானூறு ஆண்டுகள் சோழர்களின் கீழ் இருந்த நாம் கண்ட கடைசி சோழ அரசர், மூன்றாம் ராஜேந்திர சோழர் ஆகும். ஆக, சோழர்களுக்கு நாம் பெப்பே கொடுத்தது, பதினான்காம் நூன்றாண்டில்!

இந்த பகுதியின் முடிவில் ஒன்றை கூற நினைக்கிறேன். இந்த பாகத்தில் ஆரம்பத்தில், அபரஞ்சித பல்லவரை ஆதித்யர் ஏமாற்றிவிட்டார் என்று தான் எல்லோரும் நினைத்திருப்பீர்கள். இங்கு ஒரு முக்கியமான போர் நெறியை புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு நிகழ்வையும் சரி, தவறென முடிவு செய்ய இந்த சூழ்நிலை உதவும். ஆதித்யர், பல்லவர்களின் உதவியை பெற்றுக் கொண்டு, அவர்களையே பிற்காலத்தில் வீழ்த்தியதை பில்லா போன்ற 'டான்'கள் இப்படி எடுத்துக் கொள்வார்கள்.

"வரலாற ஒரு நிமிஷம் பாருங்க. அது சொல்றதெல்லாம் ஒண்ணு தான். நாம வாழனும்-னா எத்தனை பேரை வேணாலும் கொல்லலாம்"

இதையே, வேலு நாயக்கர் போன்ற 'டான்'கள், இப்படி எடுத்துக் கொள்வார்கள்.

"நாலு பேருக்கு நல்லது-ன்னா எதுவும் தப்பில்ல"
இதில் எந்த 'டான்' சரியாக சொல்லியிருக்கிறார்? இரண்டாமவர் தான். காரணம், ஆதித்யரின் நம்பிக்கை துரோகத்தை ஈடு செய்யும் வகையில், பல்லவர்களால் செய்ய முடியாதவற்றை எல்லாம் சோழர்கள் செய்தனர்.

ஆக, 'சிவா மனசுல சக்தி' படத்தில், வேலு நாயக்கர் கூறியதை 'பழசு' என்று கூறி 'பில்லா'வின் பேச்சை கேட்கும் படி ஜீவா சொன்னார் என்பதால் அவர் பேச்சை கேட்டு விடாதீர்கள்.

எப்போதும், நீங்கள் நன்மை செய்வதாய் இருந்தால் தான் 'தவறு' சரியாகும். நன்மையை மறந்துவிட்டு, தன் தவறை மட்டும் சரியென்று வாதிடும் பில்லா, ஹீரோ இல்லை; ஜீரோ- என்பது தான் இந்த பாகத்தில் 'டெயில் பீஸ்'.

3 comments:

Anonymous said...

harey yar were is part 3 contents??????????

kannan ramaswamy said...

What's your problem? pls elaborate.

Balaji.K said...

sokka mudichu vacha thala...!