Pages

Sunday, July 10, 2011

நம் வரலாறு : பாகம் - 1

வணக்கம். என் மனதிற்கு நெருக்கமான இடுவுகளைப் பற்றி நான் எழுதும் போது மற்றவர்கள், தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை விடுத்துப் பாராட்டுவது, என் மனதை குளிர வைத்திருக்கிறது. உங்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டாமா?

ஒவ்வொரு மனிதனுக்கும் வெற்றிக்கான இலக்கணம் வேறுபடும். ஒருவருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தால் வெற்றி; மற்றவருக்கு பிடித்த காதலி கிடைத்தால் வெற்றி; ஆனால், எல்லா மனிதர்களும் உண்மையில் வெற்றி பெறுவது, சிறந்த கல்வியை பெரும் போது தான். மனிதனுக்கு அடையாளம் ஆறாவது அறிவு தானே! கல்வியை ஊட்டுவது, புத்தகங்களிற்கு டுத்ததாக அனுபவங்கள். அத்தகைய அனுபவங்களை இலவசமாக, நினைத்த நேரத்தில் பெற உதவுவது, வரலாறு!

உங்களுக்காக ஏதோ ஒன்று செய்யப் போகிறேன் என்று தெரிந்ததும், கற்பனைகளில் மூழ்க வேண்டாம். என்னால், என் எழுத்தால், என்ன முடியுமோ, அது தான் நான் கொடுக்கப் போவது. "வரலாறு என்றாலே வெறுப்பு", என்ற கருத்து ஒரு சாமானியனிடம் இருப்பது சகஜம். வரலாற்றில் ஆர்வமுள்ள சிலர், இவர்களைப் பார்த்து நகைப்பதும், ஒதுக்குவதும் சகஜம் தான். ஆனால், இருவருக்கும் அவரவர் நிலைப் பாட்டிற்கு ஒரு காரணம் உண்டு. வரலாற்றினுள் நுழைந்து விட்டால் அது தரும் போதை அலாதியானது என்பது ஒரு சாரரின் கருத்து. அதே போல், நுழையாதவர்கள் வேறு களத்தில் போதையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள் என்பதும் உண்மை. அவர்கள் இதை சாடுவதும், இவர்கள் அதை சாடுவதும் அன்றாடம் நாம் காணும் ஒரு நிகழ்வு தான். வரலாறு பிடிக்காதவர்களை திட்டி, மேலும் அவர்களை வெறுப்பேற்றுவதற்கு பதிலாக, அதன் சுவையை சரியான முறையில் ஒருவரின் நாக்கில் தேய்த்துவிட்டால், தாமாகவே பிடித்துக் கொள்வார்கள் என்பது என் கருத்து. அதை சரியாக செய்தவர்களில் முக்கியமானவர், கல்கி!

உங்களுக்கு எந்த மாதிரியான கதை பிடிக்கும் என்று மக்களிடம் கேட்டால் காதல், சண்டை, பரபரப்பு, பிரம்மாண்டம், அறிவுப் பூர்வம், இசை, இப்படி சொல்லிக் கொண்டே போவார்கள். இப்படி ஏறத்தாழ எல்லா ரசனைகளையும் கொண்ட ஒரு நூல், பொன்னியின் செல்வன்! வரலாறு பிடிக்கவில்லை என்றால், அதை பிடிக்கும்படி புகுத்த வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால் தான் ஒரு சோழப் பரம்பரையின் வரலாற்றை எல்லோருக்கும் ரசிக்கும்படி படைத்திருந்தார்.

அவரை போல் நான், என்று கூறிக் கொண்டால், என்னை நானே தூக்கக் கலக்கத்தில் கல்லால் அடித்தாலும் அடிப்பேன். அவர் குளிக்காத நாட்களில் தன் உடம்பிலிருந்து எடுத்த அழுக்கைப் சுருட்டிப் போட்டால் எப்படி இருக்குமோ, அப்படி இந்த படைப்பு இருக்கும் என்று வேண்டுமானால் நான் கூறிக் கொள்ளலாம்.

என்னை சுற்றி உள்ளவர்கள், வரலாற்றின் மீது ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்ள, அவர்கள் இடத்தைப் பற்றிய வரலாற்றை அவர்களுக்கே அறிமுகம் செய்தால் சுவையாக இருக்கும் என்ற நினைப்பில் இதை எழுதுகிறேன். விக்கிபீடியாவிலோ, வேறு இணைய தளத்திலோ இல்லாத விவரங்களை இங்கு எதிர்பார்க்கலாம். திருவள்ளூரில் வசிக்காதவர்களுக்கும் இது சுவையானதாகவே இருக்கும். ஏனெனில், திருவள்ளூரின் வரலாற்றில், சென்னையும், காஞ்சிபுரமும், செல்கல்பட்டும், பழவேர்காடும் அடக்கம். அதனால், சென்னை வாசிகளும், மற்றவர்களும் கூட இதை படிக்கலாம்.

ஊரின் பெயர்:

என் ஊரின் பெயர், திருவள்ளூர். இது திருஎவ்வுள்ளூர் என்ற பெயரிலிருந்து திரிந்த பெயர். இதன் சொல்லர்த்தம், திருமால் பாம்பின் மீது உறங்கிய ஊர் என்பதாகும்.திருமால், ‘நான் எங்கு உறங்குவது?’ என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம் இது தான் என்பது செவி வழிச் செய்தி. அதனால் தான் இங்கு வீரராகவர் உறங்கும் நிலையில் எழுந்தருளியிருப்பதாக தகவல். இந்த ஊருக்கு பிக்ஷ்வரண்யம் என்ற பெயரும் உண்டு. இது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பெயரின் பொருள், பிட்ஷை எடுத்து வாழ்கையை நடத்தும் முனிவர்கள் வாழும் காடு. ஆக, நான் கணினியின் முன்பு உட்கார்ந்து தட்டச்சிட்டுக் கொண்டிருக்கும் இந்த இடம், ஒரு காலத்தில் காடாக இருந்தது. இங்கு முனிவர்களும் வாழ்ந்திருக்கின்றனர்!

வீர ராகவ கோயில் :

இந்த கோயிலின் திருமாலுக்கு, வைத்திய வீர ராகவர் என்ற பெயரும் உண்டு. கோயிலில் தனியாக ஒதுக்கப் பட்ட இடத்தில் உப்பை காணிக்கை இட்டாலோ, குளத்தில் வெல்லத்தை காரைத்தாலோ, பிணி நீங்கும் என்பது ஐதீகம். இது உண்மையா என்று கேட்காதீர்கள்; அது இப்போது பிரச்சனையை அல்ல. இந்த கோயில், ஐயாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததென்று சிலர் கூறுவதாய் விக்கிபீடியா கூறுகிறது. ஆனால், என்னிடம் 1600 வருட வரலாறு தான் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல், நான் அறிந்த வரை, இந்த கோயில் விரிவாக்கம் செய்யப் பட்டது, பல்லவ ஆட்சிக் காலத்தில் தான் என்று நான் நினைக்கிறேன். மூலவர் பிரதிஷ்டை செய்து, கோயில் ஆரம்பிக்கப் பட்டது வேண்டுமானால் அதற்கு முன்னால் நடந்திருக்கலாம் என்பது என் கணிப்பு.

இந்த கோயில் அமாவசை நேரங்களில் மக்கள் வெள்ளத்தில் நிறைவதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த கோயிலின் அருகில் ஒரு சிவன் கோயிலும் உள்ளது. தக்ஷன் என்ற பிராமணரை வதம் செய்த காரணத்தினால், சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்திருந்த நேரத்தில், இந்த திருத்தலத்திற்கு வந்ததால் அந்த தோஷம் நீங்கியதாம். அதனால், குளத்தின் அருகில் ஒரு சிவன் கோயிலும் கட்டப்பட்டது. கோயிலின் வரலாற்றைப் பற்றி வேறு ஒரு சமயத்தில் பார்க்கலாம். திருவள்ளூரின் வரலாற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

அறிமுகம் :

திருவள்ளூரின் வரலாறு என்றால், அந்த ஊரை யார் ஆண்டார்கள்? இங்கு என்ன போர் நடந்தது என்று புட்டு புட்டு வைக்க முடியாது. இந்த ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் என்ன நடந்தது என்று மட்டுமே கூற முடியும். அவை, நீங்கள் வசிக்கும் இடத்தில் நடந்தவையாகத் தான் பொருள். நம் தமிழ் நாட்டின் அரசியல் போராட்டங்கள் பற்றி எழுதினால், அதில் திருவள்ளூரின் போராளிகளும் அடங்குவார்கள் அல்லவா? அப்படித் தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பார்த்தால், நான்காம் நூற்றாண்டிலிருந்து, நம் நாட்டின் சுதந்திர தினம் வரை, காஞ்சீபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர், வேலூர் ஆகிய இடங்களின் வரலாறு, இணக்கமுற்றதாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த இடங்களை கைபற்றும் அரசர்கள், இவற்றை ஒன்றாகவே ஆட்சி நடத்தி வந்திருக்கின்றனர். இதை மனதில் வைத்துக் கொண்டு, அடுத்து வரும் தொடர்களைப் படியுங்கள்.

0 comments: