Pages

Wednesday, July 20, 2011

நம் வரலாறு: பாகம் – 5

தலிகோட்டா சண்டை:

இந்த பாகத்தை பழவேற்காட்டின் கோணத்திலிருந்தும், ஆற்காடு நவாப்களின் உதவியுடனும் விளக்கவுள்ளேன். காரணம், விஜயநகரப் பேரரசிற்கு பின் முகலாயர்களின் கீழ் நாம் சென்றதும், முகலாயர்களிடமிருந்து மெல்ல நம் குடுமி ஆகிலேயர்கள் கைக்குச் சென்றதும், இந்த கோணத்தில் தெளிவாக புரிந்து கொள்ளலாம். விஜயநகரப் பேரரசின் ஆட்சி 1646 -இல் முடிவுக்கு வந்தது. ஆனால், போர்த்துகல், ஒல்லாந்தர்கள் உட்புகுதலும், கைப்பற்றுதலும் 1556 ஆம் ஆண்டு நடந்த தலிகோட்டா சண்டையிலேயே ஆரம்பித்துவிட்டது. சென்ற பாகத்திலிருந்து, 90 ஆண்டுகள் பின் நோக்கிச் செல்லலாம்.

தலிகோட்டா சண்டையில், தக்காண( deccan ) சுல்தான்கள் எல்லோரும் சேர்ந்து விஜயநகரப் பேரரசிற்கு எதிராக கைகோர்த்து நின்றனர். அஹ்மத்நகர், பிஜாபூர், கோல்கொண்டா மற்றும் பிதார் சுல்தான்கள் இந்த சண்டையில் கலந்து கொண்டனர். விஜயநகரப் பேரரசு தூள் தூளாக நொறுங்கியதற்கு இந்த மாபெரும் கூட்டணியே காரணம். நம் மொழியில்,விஜயநகரம் டெபாசிட் இழந்தது என்று கூட சொல்லலாம். இந்த சண்டையில் யுக்திகளும்,போர் வலிமையையும் சுல்தான்களுக்கு சாதகமானது. போர் வலிமையில் இரு அணிகளுக்கும் வேறுபாடுகள் இருந்தன.

1. சுல்தான்கள் படை பெர்ஷியாவிலிருந்து கொண்டு வரப் பட்ட குதிரைப் படையை உபயோகிக்க, விஜயநகர அரசர்கள் வேகமற்ற யானைப் படையையும், குதிரைப் படையையும் கொண்டிருந்தது முதல் காரணம்.

2. சுல்தான்கள் இளைஞர்களாய் இருந்தனர்; ராம ராயர் முதற்கொண்டு விஜயநகரத்தவர்கள் எல்லோருக்கும் வயதாகி விட்டிருந்தது.

3. இரும்பால் ஆன வில் ஆயுதங்களை எதிரிகள் பெற்றிருக்க, விஜயநகரத்தவர்கள் மூங்கில் வில்களைப் பெற்றிருந்தது அடுத்த காரணம்.

4. ஏழு அடி நீளமுள்ள ஈட்டிகளை ராமராயரின் படை உபயோகிக்க, 15 அடி நீளமுள்ள ஈட்டிகளை சுல்தான்கள் உபயோகித்திருக்கிறார்கள்.

இவை எல்லாம் இருந்தாலும், விஜயநகரத்தின் தோல்விக்கு முழுமுதற் காரணம், கிலானி சகோதரர்களின் துரோகம் தான் என்று கூறப் படுகிறது. இவர்கள் விஜயநகர அரசிற்கு உதவியாய் இருந்த முஸ்லிம் சகோதர்கள். இவர்களுடைய படையின் கீழ் இருந்த ஆயிரத்திற்கும் மேலான காலாட்படையினர் இருந்திருந்தால் விஜயநகரம் வீழ்ந்திருக்கது என்று கூறப் படுகிறது.

எது எப்படியானாலும், இந்த தலிகோட்டா சண்டையில் வெற்றிக்கு உதவிய கோல்கொண்டாவின் அரசரான இப்ராகிம் கிலி கிதாப் ஷா வாலி என்ற அரசரின் கீழ் பழவேற்காடு சென்றது.


பழவேற்காடு:

விஜயநகரத்தை திரும்பவும் பெனுகொண்டா என்ற இடத்தை தலைநகராகக் கொண்டு உருவாக்கியவர், திருமலை தேவ ராயர் என்று நான்காம் பாகத்தில் கூறினேன். இவர் ராஜ்ஜியத்தை பிரித்து, சுல்தாங்களிடமிருந்து திரும்பப் பெற்ற பழவேற்காட்டை 1570 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்க தேவராயரை ஆளும் படி உத்தரவிட்டார். பழவேற்காடு, பிரளய காவேரி என்று பெயர் மாறியது.

இதற்குப் பின், 1586 ஆம் ஆண்டு, வேங்கடபதி தேவராயர், பழவேற்காட்டை தன் 'மனதிற்கினிய' ராணியான ஒபோயோமா என்ற பெண்மணி ஆளட்டும் என்று முடிவெடுத்தார். அப்போது, மறுபடியும் சந்திரகிரிக்கு தலை நகர் மாற்றப் பட்டிருந்தது. அந்த ராணி, போர்த்துகல் ஜெசூட்களுக்கு (ஜெசூட் - 1553 இல் நிறுவப்பட்ட ஏசுநாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்க குழுவின் உறுப்பினர்கள்) பழவேற்காட்டில் இருப்பிடம் அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தார்.

1614 ஆம் ஆண்டு, வேங்கடபதி தேவராயர் இறந்த பொது பலர் ஆட்சியை பிடிக்க முயன்று பின் 1617 இல் வேங்கடபதியின் மகனான ராமராயரிடம் ஆட்சி சென்றது. இவர், தன் மாமனார் எதிராஜ் என்பவரை பழவேற்காட்டின் தலைமையாக நியமித்தார். சொல்லி வைத்தது போல் அப்பாவும் பிள்ளையும் எப்படி பெண்டாட்டி தாசன் ஆனார்கள் என்று புரியவில்லை.

நான் முன்பே சொன்னது போல், 1639 இல், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், வாணிபம் செய்ய கோரமண்டல் கரையோரம் சிறிய இடத்ததை வேலூர்-சந்திரகிரி தலைமையிடமிருந்து பெற்றது. இந்த இடம் தான் சென்னை.

இதற்கிடையில், பழவேற்காட்டை வாணிபத் தளமாகவும், தங்கள் உடமையாகவும் கொண்டிருந்த ஒல்லாந்தர்களுடன் போர்த்துகல் பல முறை போரிட முயன்றது. ஆனால், எதுவும் பலிக்கவில்லை. அத்தகைய ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ஒல்லாந்தர்கள் தான் முதலில் இந்தியர்களை அடிமைகளாக பெற்று (பழவேற்காடு ப்ரோக்கர்களிடமிருந்து) வாணிபம் செய்ய ஆரம்பித்தனர். அடிமைகளை வாங்குவதற்கு அவர்கள் கொடுத்த தொகை, இன்றைய மதிப்பில் 1147 ரூபாய் தான்! பழவேற்காடு, அவர்கள் காலத்தில் பள்ளைக்கட்டா என்ற பெயரில் இருந்தது.

இவற்றை எல்லாம் அறிந்த நிலையில், விஜயநகரப் பேரரசு 1646 இல் எவ்வாறு வீழ்ந்தது என்று நாம் திரும்பவும் நினைவுபடுத்த வேண்டும். விஜயநகரத்தின் கடைசி அரசரான மூன்றாம் ஸ்ரீரங்கர், கோல்கொண்டா அரசர்களுடன் போரிட்டு தோற்றதால் தான் விஜயநகரப் பேரரசு வீழ்ந்தது என்று முன்னதாகவே எழுதியிருக்கிறேன். அந்த போர் நடந்து முடிந்த 1652 ஆம் வருடம் கோல்கொண்டாவிடம் தென்னகம் சென்றது.

இதற்குப் பின்னால், 1658 ஆம் ஆண்டு, கோல்கொண்டாவின் பல இடங்களை கைப்பற்றியது, சத்ரபதி சிவாஜி.

விஜயநகரம் வீழ்ந்த காலத்திலேயே, கோல்கொண்டா அரசர்களுக்கும், ஷா ஜகானின் புதல்வர் அவுரங்கசீப் என்ற அரசருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதில், தன் எதிரியான சிவாஜியிடம் கோல்கொண்டா அரசர்கள் தோற்றதும், அவுரங்கசீப் விழித்துக் கொண்டார். அவர் முயற்சியால், 1687 இல் முகலாயர்களின் ஆட்சியில் நம் வரலாறு இணைந்தது; அவுரங்கசீப் மூலமாக! விஜயநகரப் பேரரசு நம்மை ஆண்ட கடைசி ஹிந்து சாம்ராஜ்ஜியம் என்ற பெருமையையும் பெற்றது.

ஆற்காடு நவாப்:

அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் தான் ஆற்காடு நவாப் ஆட்சி தொடங்கியது. ஆற்காடு என்பது வேலூரிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நகரம். மராட்டிய படையை வென்றதற்காக ஜுல்பிகர் அலி நவாப் என்பவரை 1692 ஆம் ஆண்டு அவுரங்கசீப் ஆற்காடு நவாபாக நியமித்தார். விஜயநகரத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், நவாப்கள் தென் தமிழ் நாட்டை காவிரி ஆற்றங்கரை வரை விரிவாக்கம் செய்தனர். 1710 - 1732 வரை ஆண்ட சாடதுல்லாஹ் என்ற நவாப், தன் நீதிமன்றத்தை செஞ்சியிலிருந்து ஆற்காடுக்கு மாற்றினார்.

இதற்குப் பின்னால் 1749-1795 க்கு இடையில் ஆட்சி செய்த மொகமது அலி வாலாஜா என்பவர் ஆற்காட்டின் சுதந்திர நவாப் ஆனார். இவருடைய காலத்தில் அமைதியாக ஆட்சி நடந்தது. இவர் ஒரு இசுலாமியரானாலும் பல கோயில்களுக்கும், தேவாலயங்களுக்கும் மசூதிகளுக்கும் உதவினார். ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயில் இவருடைய உதவியை பெற்றது சிறப்பு.

இவர் காலம் அமைதியாக இருந்தாலும், ஆங்கிலேயர்களும், பிரெஞ்ச் காரர்களும் அதிகமாக புழங்க ஆரம்பித்தனர். அவர்களுக்குள் கர்நாடகப் போர் நடக்கும் வேளை அது. இந்த நேரத்தில்,மொகமது அலி வாலாஜா, பிரெஞ்சு காரார்களை எதிர்க்க ஆங்கிலேயர்களுக்கு உதவினார். ஆனால், அவருடன் மனரீதியாக போரிட்டுக் கொண்டிருந்த ஹைதர் அலி என்ற நவாப், வாலாஜாவை பெருங்கடனில் மூழ்கடித்தார். வாலாஜாவுக்கு வேறு வழியில்லாமல் போகவே, கிழக்கிந்திய நிறுவனத்திடம் தன் பெரும்பாலான இடங்களை கொடுக்க வேண்டியிருந்தது. இதற்குப் பின், பதின்மூன்றாம் நவாபான குலாம் மொகமது கௌஸ் கான் என்பவர் வாரிசு இல்லாமல் இறந்ததால், அற்காடின் முழு பொறுப்பு ஆகிலேயர்களிடம் சென்றது ('டாக்ட்ரின் ஆப் லாப்ஸ்' என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அந்த கொள்கையின் அடிப்படையில் வாரிசில்லாத அரசரின் கீழ் இருக்கும் நிலம், பிரித்தானியர்களுக்கு சொந்தம் என்று உள்ளது). எப்படி இருக்கிறது கதை பாருங்கள்!

1867 -இல் விக்டோரியா மகாராணியின் ஆணையை ஏற்று, கௌஸ் கானின் மாமா அசிம் ஜா என்பவர், ஆர்காடின் முதல் 'பிரின்ஸ்' ஆனார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் வரியில்லாத 'பென்ஷன்' வழங்கும் படி மகாராணி ஆணையிட்டார். (அடடே!) இந்த நடைமுறை இன்று வரை தொடர்கிறது. இவர் வம்சத்தில் இப்போதைய 'பிரின்ஸ்' அப்துல் அலி என்பவர். இவர் 1993 ஆம் ஆண்டு நியமிக்கப் பட்டார். இப்படித் தான் ஆங்கிலேயருடன் நாம் இணைந்தோம். கர்நாடகப் போர்களை பற்றி கடைசி பாகத்தில் பார்ப்போம்.

0 comments: