Pages

Saturday, December 6, 2014

கிருஷ்ண ஐயர்- ஒரு உதாரணம்


ஷம்சர் சிங் வழக்கு, மேனகா காந்தி வழக்கு, ரத்லாம் மாநகராட்சி வழக்கு மற்றும் முத்தம்மா வழக்குகளில் பேசப் பட்ட நீதியரசர் திரு. கிருஷ்ண ஐயர் சமீபத்தில் நூறு வருடங்களைக் கண்ட பிறகு கண் அயர்ந்தார். இவர் இதுவரை 70 புத்தகங்களை எழுதியிருக்கிறார். 
இத்தகைய தகவல்களை மட்டும் அல்ல, இவர் யார் என்பதையே அறியாத பலர் நமக்கிடையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதிலும், அடித்தட்டு மக்களை எவ்வாறு சமூக பொறுப்போடு வாழ வைப்பது எனும் விடை அறியாத கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு விடையாக, நான் இவரை எவ்வாறு அறிந்து கொண்டேன் எனும் கதையை சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். காந்தி இறந்த நாளில் பிறந்த எனக்கு, எதற்காக அவரை நினைவில் வைத்துக் கொண்டு மௌன அஞ்சலி செலுத்துகிறார்கள் என்பது கூடத் தெரியாத காலம் அது. என் பள்ளிக்கு எதிரிலேயே நூலகம் இருந்தும், அதன் சுவறுகளில் ஒட்டப்படும் திரைப்படங்களின் போஸ்டர்கள் மட்டுமே என் கண்ணில் பட்டு வந்தது அந்த நாளில். ஒவ்வொரு நாளும் நான் என்னவாக ஆகப போகிறேன் என்று என் தந்தை மண்டையை உடைத்துக் கொள்ளும் அளவிற்கு சண்டையோடு கடந்து கொண்டிருந்தது அப்போது. நான் ஒன்றும் படிக்காத பிள்ளையாக இருக்கவில்லை. சமூகப் பொறுப்பு கூடிய பிறகு நான் பெற்ற மதிப்பெண்னை விட அதிகமாகவே அப்போது எடுத்து வந்தேன். ஆனால், எந்த ஒரு குறிக்கோளும் இல்லாத காலம் தான் அது.
அத்தகைய நேரத்தில் எனக்கு பாடம் புகட்ட எவராலும் முடியவில்லை என்று தான் கூற வேண்டும். காரணம், என்னுடைய பார்வை பாடத்தை நோக்கி என்றுமே சென்றதில்லை. வயதுக் கோளாறினால் பெண்கள் பின்னாலும், சினிமாவின் பின்னாலும் தான் அலைந்து கொண்டிருந்தேன். 
அப்போது தான் என் வாழ்வில் முதல் மாற்றம் இந்த இரண்டு ஈடுபடுகளில் ஒன்றின் மூலமாக ஏற்பட்டது. மரண தண்டனை குறித்த ஒரு முக்கிய பதிவாக விருமாண்டி வெளியானது.
என்னைப் போன்று நோக்கமில்லாமல் திரிந்து கொண்டிருப்பவனுக்கு ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க துரதிர்ஷ்ட வசமாக சினிமாவால் மட்டுமே முடியும் என்பதை புரிந்து கொண்ட நாள் இது.
ஆம்! அந்தப் படம் மட்டும் வராமல் இருந்திருந்தால் நான் சமூகத்தின் பக்கம் என் பார்வையை திருப்பி இருப்பேனா என்பது சந்தேகமே. எனக்கு உருவாகியிருக்கும் பல கருத்துக்களுக்கு அதுவே ஆரம்பம் என்று நினைக்கிறேன்.
இங்கு அந்த படத்தை எடுத்த கமல் ஹாசனுக்கு பாராட்டு விழா எடுப்பதில்ல எனக்கு நோக்கம். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்தவே இந்த படத்தை பற்றிக் கூறுகிறேன்.
அடுத்த தலைமுறைக்கு நல்ல மனிதர்களையும், கருத்துக்களையும் அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கும் சமயத்தில், அதை எவ்வாறு இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் செய்வது எனும் கேள்வி நம் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
இதற்கு சுய முயற்சி அவசியம் என்பது சரியே. ஆனால், ஒருவரிடம் சுய முயற்சி உருவாக வேண்டுமானால் அவருக்கு ஒரு ஆரம்பத்தை கொடுத்தே தீர வேண்டும்.
அத்தகைய வகையில் கிருஷ்ண ஐயரின் பேட்டியோடு அந்தப் படம் துவங்கியது அம்மனிதருக்கு மட்டும் அல்லாமல் அவருடைய கருத்துக் களுக்கும் ஒரு நல்ல விளம்பரமாக அமைந்தது.
சினிமா கலைஞர்கள் மீது பல குற்றச் சாட்டுகள் வைக்கப் படும் போது, இது போன்று இடைவெளியை நிரப்பும் பாலமாக அவர்கள் செயல்பட்டால் நம் சமூகம் முன்னேற வழி கிடைக்கும். 
மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்று இன்னமும் நான் ஆய்வு செய்து கொண்டே தான் இருக்கிறேன். இந்த விஷயத்தில் எனக்கு இன்னமும் தெளிவு ஏற்படாததற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், முக்கியமாக என்னை இது குறித்து யோசிக்க வைத்ததே கிருஷ்ண ஐயரின் வெற்றி. ஒவ்வொரு முடிவுக்கும் ஆரம்பம், மனதளவில் நாம் மேற்கொள்ளும் சத்திய சோதனை தான். அந்த வகையில் கிருஷ்ண ஐயர் என்றுமே என் நினைவில் நிற்பார். 
மேலும், ஒரு மனிதரை அவருடைய  ஜாதியைக் கடந்து மதிக்க வேண்டுமானால், அவர் முற்போக்கான சில கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். இன்று தவறாக விமர்சிக்கப் படும் எந்த ஒரு பிராமணரும், தன்னுடைய கருத்துக்களுக்கே விமர்சகர்கள் எதிரியாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, இவரை ஒரு முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.

நன்றி..தி இந்து புகைப்படத்திற்கு.

0 comments: