Pages

Sunday, November 16, 2014

ரஜினியும் அரசியலும்- லிங்கா பேச்சு

நேற்று லிங்கா கேசட் வெளியீட்டு விழாவில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து மறுபடியும் பேசியது குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவர் பேசியதற்கு முன்பாக அமீர் முதற்கொண்ட திரைத் துறையினர் பேசியது தான் இந்த கேசட் வெளியீட்டு விழாவின் பிரபல்யத்திற்குக் காரணம். ஏனெனில், ரஜினியை பேச வைக்க யாராவது எங்காவது சாவியைத் திருகிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. 
தமிழ் நாட்டை காப்பாற்ற ரஜினியால் மட்டுமே முடியும் என்கிற இவர்களது பேச்சு அரசியலில் இவரை விட முதிந்தவர்கள் இல்லவே இல்லை என்கிற மாயையை கிளப்பும் நோக்கில் வடிவாகிறது. 
ரஜினியும், விஜயும் அடிக்கடி தன்னுடைய ரசிகர்கள் மூலமாகவும், படங்களின் மூலமாகவும் அரசியல் ஸ்டுன்ட் அடிப்பதால், இவர்களில் ஒருவர் அரசியலுக்கு வந்தால் மிகப் பெரிய மாறுதல் நிகழும் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இது போலவே பிதற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையில் இவர்களது அரசியல் பிரவேசம் எனும் பரபரப்பு இல்லையெனில், இவர்களது சினிமா வாழ்க்கையே கேள்விக்குரியதாகும் என்பது தான் நிஜமான உண்மை.
ரஜினியும், விஜயும் திரையில் தோன்றினாலே படம் ஹிட் என்பது இவர்களது கணிப்பு; நம்பிக்கை. உண்மையில் இவர்கள் இருவருமே அவ்வப்போது தங்களுடைய நட்சத்திர அந்தஸ்த்தை பிடித்து நிறுத்த திணறியபடியே சினிமாவில் தொங்கிக் கொண்டிருப்பது எவரும் அறியாத உண்மை.
அதிர்ஷ்டவசமாக நாம் அதிக காலம் பின்னோக்கிப் போகாமல், சமீபத்திய நிகழ்வுகளையும், அவ்விருவரின் பேட்டிகளையுமே எடுத்துக் காட்டாக அடிக்கோடிடலாம்.
லிங்கா பாடல் வெளியீட்டு விழாவிலேயே ரஜினி, கோச்சடையானின் தோல்வி பற்றி உருக்கமாக பேசியுள்ளார். விஜய், எஸ்.ஜே சூரியாவின் படப் பாடல் வெளியீட்டு விழாவில் சில உண்மைகளை சொல்லியிருக்கிறார். 
விஜய், எஸ்.ஜே சூரியா எடுத்த குஷி தான் தன்னை காப்பாற்றியது என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுள்ளார். இது போலவே, வேலாயுதம் வெளியான நேரத்தில், தன்னுடைய தொடர் தோல்வியை தடுத்து நிறுத்த ராஜா போன்ற ஒரு இயக்குனர் கிடைத்தது நிம்மதியை கொடுத்ததாக பேசியிருந்தார்.
எந்த ஒரு சினிமா கலைஞனுக்கும் இருக்கும் இயல்பான ஒரு போராட்டம் தான் இது. எந்த ஒரு நடிகரும் இதுவரை தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையை அடைந்ததே இல்லை. ஆனால், அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் ஒருவரின் ரசிகர்கள் உருவாக்கும் மாயையில், அவர்களுடைய படத்தின் தொடக்கத்தில் வரும் புரட்சிகரமான பாடல் வரிகளையும் நம்பி மக்கள் ஏமாந்து போகிறார்கள்.
ஒரு நடிகர் அரசியல் ஆதாயம் தேட நினைப்பதாலேயே அவருக்கு மிகப் பெரிய கூட்டம் கூடிவிடும் என்று நினைப்பது முட்டாள் தனம். அதே போல முதல் நாள், முதல் ஷோவில் முண்டி அடிக்கும் கூட்டம் எல்லாம் அரசியல் கூட்டமாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் சிறுபிள்ளைத் தனமானது.
விஜய், பேருக்கு நற்பணி மன்றம் என்று வைத்துக் கொண்டாலும், போஸ்டர் அடிப்பதில் தொடங்கி எல்லாவற்றையும் அரசியல் சாயத்தோடு தான் செய்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும் நற்பணி மன்றத்திற்கு தலைவர், துணைத் தலைவர், செயலாளர் என்று பதவிகளை உருவாக்கி, அவர்களுடைய புகைப்படத்த்திற்கு அதிக இடம் கொடுத்து, பெயரை இரட்டை வண்ணத்தில் எழுதி, பிற அரசியல் கட்சிகளைப் போல பெரியார், அண்ணா புகைப்படத்திற்கு பதிலாக எஸ்.ஏ.சியின் புகைப்படத்தை வைத்து தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்காக மக்களை டியூன் செய்கிறார்.
ரஜினி ரசிகர்களோ, தன்னுடைய தலைவர் அரசியலுக்கு வருவார் வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போன கதைகளை இணையதளத்தில், ரஜினிக்கு கடிதம் எனும் பேரில் வெளியிட்டு ஆதங்கத்தை தீர்த்துக் கொள்ளுகிறார்கள்.
இவர்கள் இருவரும் எவ்வளவு தான் புரட்சிகரமாக வசனம் பேசினாலும், போஸ்டர் ஓட்டினாலும், படம் ஓடுகிறதா என்று பார்த்தால், அது இயக்குனரின் அறிவாற்றலை நம்பியும், திரைக்கதையின் வேகத்தை நம்பியுமே இருக்கிறது.
ரஜினியின் படங்கள் ஓடினால் குதிரையைப் போலவும், ஓடாவிட்டால் எலியைப் போலவும் சுருண்டி விடுகின்றன. விஜயின் நிலைமை மிகக் கவலைக் கிடம். அவருடைய படம் நூறு கோடிகளைத் தொடுவதற்கு ஒவ்வொரு முறையும் தள்ளாடுவதை பாக்ஸ் ஆபீஸ் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.
ரஜினி எனும் பிம்பம் உருவான பிறகு, 1984-93 இற்கு இடையில், அன்புள்ள ரஜினிகாந்த், ராகவேந்திரா, விடுதலை, மாவீரன், நான் அடிமை இல்லை, சிவா, நாட்டுக்கு ஒரு நல்லவன், வள்ளி என்று பல மோசமான தோல்விகளைக் கண்டவர் ரஜினி. அதற்குப் பிறகும், பாபா, குசேலன், கொச்சடையான் என்று தோல்விகளைக் கண்டவர் தான் ரஜினி.
அதே போல, விஜயும் திருமலைக்கு முன்பும் பின்பும் பல தோல்விப் படங்களை தந்திருக்கிறார்.
இதை நன்கு அறிந்தவர்கள் ரசிகர்கள் அல்ல. துரதிர்ஷ்ட வசமாக ரஜினியும், விஜயும் தான். ஆகவே தான் அவர்கள் இருவருமே இந்த அரசியல் பிரவேசம் எனும் ஸ்டன்ட்-ஐ கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
ரஜினி கமலைப் பெற்றிப் பேசும் போது, நான் தொட்டதையெல்லாம் அவர் தொட்டார்; ஆனால் அவர் தோட்டத்தை என்னால் தொட முடியவில்லை என்கிறார். விஜயோ, தனக்கு வருவது இது தான்; அதைத் தான் மாற்றி மாற்றி செய்ய வேண்டியிருக்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இவர்கள் இத்தனை வெளிப்படையாக உண்மையை ஒப்புக் கொள்வது அவர்களுடைய பெருந்தன்மை என்று கூறும் அதே நேரத்தில் இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நாம் தயங்குகிறோம்.
சினிமாவில் மட்டும் தான் ஒருவர், மற்றொருவரை விடக் குறைவாக செயல்பட்டத்தை ஒப்புக் கொண்டதற்கு பாராட்டப் படுகிறார். ஒரு வட்டத்திற்குள் தன்னை அடைத்துக் கொண்டு செயல்படுபவர் ஒவ்வொரு நாளும் முள்ளின் மீது நடக்கும் இக்கட்டான நிலையில் இருக்கிறார் என்பதை இத்தமிழகம் உணர மறுக்கிறது.
ரஜினியும், விஜயும் தங்களுடைய பாதை எதுவாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒருமுறையும் மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர். இதற்கு அத்தாட்சி, அவர்களுடைய படங்களின் தோல்விகளே!
இன்று வரை, ரஜினியால் ஷங்கர், கே.எஸ் ரவிகுமார் தவிர மற்றொரு வெற்றி இயக்குனரை கண்டு பிடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம், அவரை சுற்றியிருக்கும் அரசியல் வட்டம் தான். ரஜினிக்கு ஏற்ற வகையில் கதை எழுதுவது கடினம். காரணம், அவருடைய தலைக்குப் பின்னால் ஒளிவீசும் போலியான பிம்பம். எவ்வளவு தான் யோசித்தாலும், அவருடைய அரசியல் எதிர்காலத்தை முன்வைத்தே எழுத வேண்டியிருக்கிறது. இதில் சற்று மாற்றமிருந்தால், அவருடைய தெய்வீக அனுபவங்களையும், பழைய வில்லன் முகத்தையும் தோண்ட வேண்டியிருக்கிறது. இதில் சற்று சறுக்கினாலும் தோல்வி தான்!
இதுவே விஜயின் நிலைமையும் கூட. பல இளம் இயக்குனர்களை நம்பித் தொடர்ச்சியாக தோல்விகளைக் கண்ட விஜய், பாக்ஸ் ஆபீசை அஜீத்திற்கு விட்டுக் கொடுத்த பிறகு, இன்று வெற்றி இயக்குனர்கள் என்று வலம் வரும் சிலரை நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்.
இந்த நிலை இப்படி இருக்க, வெளியே ஓங்கி ஒலிக்கும் கூச்சல்களை நம்பி ஒருசிலர் இவ்விருவருக்கும் மிகப் பெரிய அரசியல் எதிர்காலம் இருப்பதாக சொல்வது சிரிப்பை தான் வரவழைக்கிறது.
இவ்விருவரிடம் அரசியலுக்குத் தேவையான எந்த தகுதியும் இல்லாதிருப்பது அடுத்த குறை. அரசியலுக்கு முக்கியத் தேவையே தைரியம் தான். எதையும் எதிர்நோக்கக் காத்திருக்க வேண்டும். இனிமேல் எழவே முடியாது எனும் நிலையிலிருந்து முன்னேறி வந்திருக்கும் கட்சிகள் ஏராளம். ஆனால் ரஜினியோ, நான் சந்தேகம் கொண்டிருக்கிறேன் என்கிறார். கடவுள் தான் இதற்கெல்லாம் வழி என்று தீர்க்கமில்லாமல் பேசுகிறார்.
விஜயோ தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றிய முன்யோசனை இல்லாமல், எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் கோக் விளம்பரத்தில் நடித்துவிட்டு, அந்த கம்பெனிக்கு எதிராகவே புரட்சிகரமாகப் பேசுகிறார்.
ஆனால், இவர்கள் இருவரிடமும் ஒரு முக்கிய தகுதி இருக்கிறது. அது, நல்லது செய்வேன்; தமிழ் நாடு தான் என் வீடு என்று கூறி மக்களை ஏமாற்றும் வித்தை. அது தான் இவர்களை மேஜையை தட்ட அழைக்க உந்துதலாக இருக்கிறது.
இல்லை என்றால், அரசியலே வேண்டாம் என்று கூறும் கமலை குப்பை அள்ள சொல்லி விட்டு, இவர்களை ஆட்சிக்கு அழைப்பார்களா? 

0 comments: