Pages

Friday, August 1, 2014

பிணம் தின்னும் வேலை


பிறப்பை கொண்டாடுவதும், இறப்பை எண்ணி வேதனை படுவதும் மனித சமுதாயம் தொடங்கிய காலத்திலிருந்து வழக்கமான செயல். உணவை உட்கொள்வது, குளிப்பது, பல் துலக்குவது போன்ற செயல்கள் நம் வாழ்வோடு பிணைந்த ஒன்றாக இருந்தது.



இன்று, உண்பதற்கென்று நேரம் ஒதுக்குவதும், உணவை பொறுமையாக மென்று தின்பதும் நல்ல வேலைக்காரர்களின் செயல் அல்ல என்று நினைக்கும் காலமாகிவிட்டது. உணவை வேலை செய்யும் மேஜைக்கு கொண்டு வருவது, உண்டபடியே வேலையைத் தொடர்வது, நாகரிகத்தின், அக்கறை மிகுந்த வேலையாளின் அடையாளமாகிவிட்டது.

இவ்வாறு நம் பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாக தின்று தீர்க்கும் வேலை, பிணத்தை தூக்கிப் போடுவதற்கு கூட நேரத்தை ஒதுக்க மறுக்கிறது. இதை வேறு மாதிரி சொல்லப் போனால், வேலையிலேயே மூழ்கிவிடும் இக்கால பண முதலைகள், இறப்புக்கு நேரம் ஒதுக்குவதை வேண்டாத காரியம் போல் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

திருமணத்திற்குப் போகவில்லை என்றாலும் இறப்புக்கு போய் விட வேண்டும் என்பார்கள். ஆனால், இன்று திருமணத்திற்கும் நேரம் இல்லை. இறப்புக்கும் நேரம் இல்லை.

இறப்பு நிகழ்ந்துள்ள இடத்தில் பல சங்கடங்களை சந்திக்க நேரிடும். அழுகை, ஓலம், நினைத்த நேரத்திற்கு கிளம்ப முடியாமை, முகத்தை எந்நேரமும் சோகமாகவே வைத்துக் கொள்ள வேண்டிய நிலைமை, விசாரிக்க வார்த்தைகள் இல்லை என்றாலும் சம்பிரதாயமாக பேச வேண்டிய நிர்பந்தம், சில நேரங்களில் நெருக்கமானவர்களாக இருக்கும் போது அழுகையே வராமல் அழ வேண்டிய கட்டாயம்.

ஆனால், இவற்றை முன்னிறுத்தி தேவையான நேரத்தில் ஆஜராகாமல் போவது எவ்வளவு கொடுமையான செயல் என்பதை பலர் அறிவதில்லை.

எதற்கெடுத்தாலும் வேலையை காரணமாகச் சொல்வது. தூங்கவில்லை என்றால், வேலை; சாப்பிட நேரம் இல்லை என்றால் வேலை; திருமணம் செய்து கொள்ள ஏன் இவ்வளவு நாள் என்றால், வேலை; குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியது தானே என்றாலும் வேலை; சம்பாதிக்க வேண்டும்.

இதே தவறை நானும் ஒரு காலத்தில் செய்திருக்கிறேன். என்னுடைய வேலை நிமித்தமாக ஒரு தேர்வு எழுத வேண்டியிருந்தது. அதன் தேதி அறிவிக்கப் படாததால் படுக்கையில் கிடந்த நெருக்கமான உறவு என்னை முடிவாக ஒரு முறை பார்க்கப் பிரியப் பட்ட போது நான் போகவில்லை. பிறகு அந்தத் தேர்வு, அந்த உறவை இழந்த ஆறாவது மாதத்தின் ஒரு தேதியில் தான் நடந்தது. அதை ஈடு கட்ட மற்றொரு உறவின் படுக்கை நாட்களில் நான் துணையாக எல்லா உதவிகளையும் செய்யும் வாய்ப்பு அமைந்தது.

இன்று நான் திருமணத்தையும் விடுவதில்லை. இறப்பையும் விடுவதில்லை. நாம் எல்லாம் முதலில் மனிதர்கள். சக மனிதர்கள் பிரியும் போது விடை கொடுக்க வேண்டியது நம் கடமை. துக்கம் இருந்தாலும், இல்லை என்றாலும், நாம் அங்கிருப்பது முக்கியம். இறப்புக்குப் போக முடியவில்லை என்றாலும்  குறைந்தபட்சம் சடங்கிற்காவது போகவேண்டும்.

0 comments: