Pages

Tuesday, March 19, 2019

கணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை

புல்வாமாவில் தற்கொலைப் படை தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு எனது அஞ்சலிகள்.
இந்த நேரத்தில் ஆளும் பாஜக அரசு இந்த தாக்குதலை தவிர்க்க என்ன முயற்சி செய்தது? இதை தேர்தலுக்காக பயன்படுத்துமா பாஜக? காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? அவர்கள் இதன் மீதான அரசியலை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்களா? எந்த பிரபலம் இறந்தவர்களின் குழந்தைகளை படிக்க வைக்க முன்வந்திருக்கிறார்? தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவரின் வாக்குமூலம் என்ன? வெடிகுண்டு வெடித்ததன் CcTv கேமரா Footage வெளியாகிவிட்டதா? இது குறித்து பிரிவினைவாதிகளாக சித்தரிக்கப்படுபவர்களது நிலைப்பாடு என்ன? எந்தெந்த கம்பெனிகள் இந்த தாக்குதலை ஆதரித்த நபர்களை நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றியிருக்கிறது? முடிவாக போர் வேண்டுமா? வேண்டாமா? #indiawantsrevenge Hashtag Trending ல் உள்ளதா?
இவ்வாறாக அனைத்து சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்களும் ஊடகங்களும். புல்வாமா தாக்குதல் சம்பவம் ஒரு பொழுதுபோக்காக இன்னும் மாறிவிடவில்லை என்பதை அறிந்தே இதை எழுதுகிறேன். ஆயினும் அரசியல் பதிவுகளுக்கு அப்பாற்பட்டு இந்த துர்மரணங்கள் மீதான மக்களின் பாய்ச்சலை உளவியல் ரீதியில் பேச நினைக்கிறேன்.
முகநூலில் ஒரு பதிவை பார்த்தேன். அதில் உள்ள நபர் தன்னை ராணுவக் குடும்பத்தின் பிள்ளையாக அடையாளப் படுத்திக் கொண்டு சொல்கிறார்,"இன்று போர் வேண்டும் என்று கதறுபவர்கள் போரின் கோரம் குறித்து அறிந்திருக்கவில்லை. உங்களுடைய கோபத்தை தீர்த்துக் கொள்வது மட்டுமே போரினை எதிர்பார்க்க போதுமான காரணமாகாது. நீங்கள் IPL ஓடு உங்கள் விளையாட்டை நிறுத்திக் கொள்ளுங்கள்"
இந்த பதிவு என்னை கொஞ்சம் ஆசுவாசப் படுத்தியது. மேலும் அந்த பதிவின் மூலம் அவர் போருக்கான வேட்கையின் பின்புலத்தை அருமையாக அடிக்கோடிட்டு சென்று விட்டார். அவர் ஒரு வரியில் சொன்ன சேதி, இது விளையாட்டல்ல என்பது தான்.
போருக்கும் விளையாட்டிற்குமான தொடர்பு என்?
வில்லியம் ஜேம்ஸ் என்பவர் விளையாட்டினை "moral equivalent to war" என்கிறார். அதாவது, போருக்கான தார்மீக இணை என்று புரிந்து கொள்ளலாம். வரலாறு இரண்டு அடையாளக் குழுக்களுக்கு இடையிலான மற்றும் மனிதனின் ஆதிக்க வேட்கைக்கான போர்களை மட்டும் தான் அதிக அளவில் பதிவு செய்திருக்கிறது. இத்தகைய வரலாற்றை கற்ற நாம் போரை தானே கேட்க முடியும்? வரலாற்றில் இருவருக்கு இடையிலான அன்பை பரிமாறிக் கொண்டு, பரஸ்பரம் விட்டுக் கொடுத்து சென்ற அரசர்களை பற்றி பேசவே இல்லையே ஏன்? இவை குறித்து விரிவாக பார்ப்போம்.
தற்போதைய நிலையில், போர்களின் எண்ணிக்கை உலகம் ஜனநாயகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் குறையத் தொடங்கி இருப்பதையும், அதற்கு இணையாக இரு அடையாளக் குழுக்களின் பிரதிநிதிகளின் மோதலை நாம் விளையாட்டின் மூலமாக கண்டு ரசிப்பதையும் உளவியல் பூர்வமாக பார்க்கலாம்.
விளையாட்டு நம் போருக்கான வேட்கையை தணிக்கிறது. எதிர் அணியின் வெற்றியில் நம் நாடு வென்று விட்டதென்ற உணர்வு மேலெழுந்து தற்காலிகமாக ஆவி பறக்கும் ஆதிக்க வேட்கையை ஊதுகுழலாக செயல்பட்டு அணைக்கிறது.
இயல்பிலேயே ஒரு விளையாட்டின் முடிவு 'mental edge' என்றழைக்கப் படும் இரு அணிகளுக்கு இடையிலான உளவியல் ரீதியிலான வித்யாசத்தை மையமாக வைத்தே முடிவாகிறது. இதனால் தற்போதைய காலங்களில் sports psychology என்றொரு புதிய துறை வளர்ந்து வருகிறது. அதே போன்று 'என்னுடைய நாடு வெல்ல வேண்டும்' 'யாரிடம் தோற்றாலும் இந்த அணியை மட்டும் வீழ்த்தி விட வேண்டும்' என்பன போன்ற எண்ணங்கள் அடிப்படையில் இரண்டு குழுக்களுக்கு இடையிலான வேற்றுமையை மையமாக வைத்தே உருவாகிறது. விளையாட்டில் உயிர் சேதமும், போரின் மூலம் சீட்டு கட்டை தட்டி விட்டது போன்று நிகழும் நாசங்களும் நிகழ்வதில்லை என்பதால் நாம் அதிகமாக விளையாட்டை நாடத் தொடங்கியிருக்கிறோம்.
குழந்தைகளுக்கு பாலியல் கல்வி வேண்டாம் என்று பதைபதைக்கும் பெற்றோர்கள் அவர்கள் கேட்கும் முன்பே வாங்கித் தருவது, விடியோ கேம். ஒரு காலத்தில் மரியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தனர் 90ஸ் கிடஸ். ஆனால் இன்றோ விளையாடப் படும் விளையாட்டுக்கள் நவீன ரக துப்பாக்கிகள் கைவினை குண்டுகளை கொண்டு கொலை செய்யும் விளையாட்டுகளாக உள்ளன. இவை விளையாடுபவரை தொடர்ச்சியாக ஆபத்துக்களில் இருந்து தப்பிக்கும் இறுக்கமான மனநிலையில் வைக்கின்றன. நாளடைவில் இயல்பான நிலையை அசௌகரியமாகக் கருதும் அசாதாரண நிலைக்கு மனநிலை தள்ளப் படுகிறது. மேலும் இதன் மூலம் கிடைக்கும் வெற்றி என்பது நிஜ வாழ்க்கையின் உண்மையான வெற்றியாக இல்லை என்றாலும் அத்தகைய வெற்றியை ருசிப்பது ஒரு வகையான ஆதிக்க மனநிலையை தருகிறது.
நிஜமான போரில் வெற்றி தோல்விகளை காட்டிலும் போர் கேட்கும் விலையாக உடல் உழைப்பும், மனச் சிதைவும் பரிசாக வழங்கப் படுகிறது. இதனை அறியாமல் கைகளும் கண்களும் மட்டுமே வேலை செய்யும் ஒரு Virtual reality ல் நம் இளைய சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஏன் மனிதன் அமைதியை காட்டிலும் போரை விரும்புகிறான்?
கடந்த காலங்களில் நடந்த போர் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அடையாளக் குழுக்களுக்குள்ளாக நடக்கும் போராகவே இருந்திருக்கின்றன. ஒரு சித்தாந்தத்தை விரிவு படுத்தும் நோக்கிலும், மக்களை ஆதிக்கம் செலுத்தவும், நாடுகளை அபகரிக்கவும், வளங்களை சுறண்டவும் தான் போர் நடத்தப் படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் ஆதாயத்தை காட்டிலும் இரு பக்கமும் ஏற்படும் பொருட் சேதமும், மனித வள இழப்பும் தான் அதிகமாக உள்ளது.
போர் என்றுமே ஆண் குழுக்களின் Testosterone வேட்கையாகவே உள்ளது. பெண் குழுக்கள் கூடி மற்றொரு பெண் குழுவை போரின் மூலம் வீழ்த்த நினைக்கிறார்களா என்று வரலாற்றில் பார்த்தால் மிக மிகக் குறைவான உதாரணங்களே கிடைக்கும்.
Empathy எனப் படும் பெண்ணிய உணர்ச்சி அமைதியை நாடி, பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்ளும் இயல்பினை உடையது. ஆனால் அந்த உணர்ச்சியை ஆண் எப்போதும் தனது ஆதிக்கத்திற்குள்ளேயே வைத்திருக்கிறான். பேச்சுவார்த்தையினால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று தன்னுடைய ஆதிக்கத்தின் மூலம் நிறுவுகிறான்.
அமைதியில் விசேஷமாக ஒன்றும் இல்லை. ஆனால் போர் ஒரு நாட்டின் வீழ்ச்சியை தூக்கி நிறுத்தும் புல்லறிப்பை ஏற்படுத்துகிறது. அமைதி அடிபணிபவர்களின் அடையாளமாக பார்க்கப் படுகிறது. போர் அடிபணியச் செய்பவரின் அடையாளமாக உள்ளது.
அறிவியல் ரீதியாக நாம் ஏன் அமைதிப் பேச்சு வார்த்தையை காட்டிலும் போரை விரும்புகிறோம்?
அமைதிப் பேச்சுவார்த்தை குடும்பத்திற்குள்ளாக நடக்கும் நிலையிலே கூட யாரிடம் நாம் நல்ல இணக்கமான சூழலில் இயங்குகிறோமோ அவருடன் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தயாராகிறோம். நம்முடன் உரசல் போக்கை கடைபிடிப்பவருடன் எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை இல்லை என்பதே நமது நிலைப்பாடு. இதையே நாட்டிற்கும் பொருத்திக் காணலாம். போர் என்கிற வார்த்தையை தொடர்பில்லாத நபரிடம் பயன்படுத்துவதற்கு நாம் வெட்கப் படுவதே இல்லை. இதயே நம்முடைய சொந்தம் தவறு செய்தால் செய்வோமா என்றால் இல்லை.
இதற்கு அடிப்படையில் நம்முடைய Neural science பதிலளிக்கிறது. உணர்வு ரீதியாக ஒரு ஆபத்தை சந்திக்கும் போது அது நமக்கு நேர்வதாக இருந்தால் நம்முடைய கண்களுக்கு பின்னால் உள்ள Amygdala என்கிற பாதாம் கொட்டை வடிவிலான உறுப்பு வேலை செய்கிறது. இது தான் பயம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை கட்டுப் படுத்துகிறது. இதையே அடுத்தவர்களுடைய பிரச்சனைகளுக்கு பொருத்திக் கண்டோம் என்றால், dorsal medial prefrontal lobe என்கிற பகுதி வேலை செய்யத் தொடங்குகிறது. இது நம்முடைய பகுத்தறிவுக்கு பயன்படும் பகுதி.
ஆக நம்முடைய பிரச்சனைகளை உணர்வு ரீதியாகவும் பிறருடைய பிரச்சனைகளை அறிவு ரீதியாக மதிப்பிடத் தொடங்கும் செயல்பாடு எத்தகைய வகையில் இது போன்ற மதவாத பிரச்சாரங்களுக்கு காரணமாகிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
மதவாதத்தை எதிர்ப்பதில் Selective amneisa!
இந்துத்துவ வெறியர்கள் இசுலாமிய தாக்குதலை தொடர்ந்து கேஷ்மீரில் படிக்க வரும் மாணவர்களை Facebook ல் தீட்டம் தீட்டி கொல்ல முடிவெடுத்திருக்கிறார்கள் என்கிற செய்தியை அறிந்த மாணவர்கள் ஒரே அறைக்குள் மூன்று நாட்களை உணவில்லாமல் கழித்துள்ளார்கள். கழிப்பறை இல்லாததால் நெகிழிக் கவர்களை பயன்படுத்தி மலம் கழித்திருக்கிறார்கள். இதனை இசுலாமிய பயங்கரவாதத்தை விமர்சித்த எந்த இந்துவும் விமர்சித்ததாக தெரியவில்லை. அதே போன்று இசுலாமிய பயங்கர வாதத்தை கண்டிக்காத சானியா மிர்சா மீது விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. அவர் அதற்கு, "என் நாட்டுப் பற்றை விமர்சித்து புரிய வைக்க வேண்டியதில்லை!" என்று பதிலளித்திருக்கிறார்.
இவ்வாறாக தன்னுடைய தவறுகளை கண்டும் காணாமல் இருந்துவிட்டு பிறரிடம் மட்டும் கண்டனத்தை தெரிவிக்க கட்டாயப் படுத்துவது இத்தகைய இயல்பினாலேயே ஆகும். இந்துத்துவ தீவிரவாதக் கருத்துக்களை பதிவிடுவதும் போஸ்டர் ஒட்டுவதும் இங்கே சர்வ சாதாரணமாக நடக்கும் செயல். அதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுவதில்லை. கேள்விகளுக்கு, அது உணர்ச்சி வசப்பட்டு எழுதப் பட்ட/அல்லது சொல்லப் பட்ட கருத்து என்று பதில் வருகின்றது. ஏனெனில் சொன்னவர் தனக்கு நெறுக்கமான நபர். ஆனால் இதையே மற்றவர்களை செய்தால் போர் போர் என்று கூச்சலிட யாரும் தயங்குவதில்லை. அவர்களின் செயலை தர்க்க ரீதியாக மறுக்க பகுத்தறிந்து வாதத்தை தயார் செய்து கொள்ளத் தவறுவதில்லை.
போரை ராணுவத்தினர் விரும்பினாலும் அதனை தடுக்க நினைப்பதே அரசுகளுடைய கடமையாக இருக்க வேண்டும்.
பிரச்சனைகளை எப்படித் தான் சமளிப்பது என்கிற கேள்விக்கும் விடை வேண்டுமல்லவா? ஒரு நாட்டிற்கு ராணுவம் அத்தியாவசியமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ராணுவத்தை அதிக அளவில் வலுப்படுத்த மக்களின் வரிப் பணத்தை விரயம் செய்வதை எதிர்த்து சர்வதேச அமைப்புகள் குரல் கொடுத்திருக்கின்றன. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
மத ரீதியாக/குழு ரீதியாக ஒன்று கூட்டி அரசை வழிநடத்த துடிப்பது அடுத்த மாபெறும் தவறு. அத்தகைய தவறை செய்வதே குறிப்பிட்ட வாதத்தை ஏற்காதவர்களை வன்முறையின் பக்கமாக தள்ளி விடுகிறது. அரசை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அறிவியல் ரீதியிலான திட்டங்கள், மனிதத்துடனான அணுகுறையோடு கூடிய அம்சங்களுடன் சார்பற்று இயங்கச் செய்வதே அனைத்து நாடுகளிடம் இன்றைய கோரிக்கையாக உள்ளது.
அறிவியலை மறுக்கும் எந்த நம்பிக்கையும் தன்னையே புரிந்து கொள்ளாத மனிதர்களை உருவாக்கும். கல்வி முறையில் அனைத்து மதங்களையும் சரியான வகையில் புரிந்து கொள்ளும் அணுகுமுறை தேவை. சாதி மத பூகோள ரீதியில் அல்லாது உலகின் அனைவரும் சகோதரர்கள் என்கிற அடிப்படையிலான சிந்தாந்த முறையை கல்வியின் மூலம் புகுத்துவதே வன்முறையின் பக்கம் செல்லாத மனிதர்களை உருவாக்க முதல் படி.
ராணுவத்தை பலப்படுத்த அதிக அளவில் செலவிடுவது தொடர்ச்சியாக ஒரு வலைக்குள் நம்மை சிக்க வைக்கும் என்பதை நாடுகள் அறிய வேண்டும்.
வர்த்தக உலகில் சிக்குண்டு கிடக்கும் ராணுவ வீரர்கள்.
ராணுவத் தளவாடங்களை நவீன முறையில் மாற்றியமைத்துக் கொண்டே செல்வது என்பது புதிது புதிதாக ஒவ்வொரு ஆண்டும் செல்பேசியின் கேமரா, ரேம், ஸ்க்ரீன் ரெசல்யூசனை அதிகப் படுத்திக் கொண்டே செல்லும் வர்த்தக முறையை ஒத்தது. ஒரு ராணுவ வீரனின் உடலை சிமுசேஷன் செய்து அவனுடைய ஒவ்வொரு உறுப்பையும் ஒரு ஆயுதத்துடன் இணைப்பது என்பதாக தசைப் பிண்டமாக அவன் மாற்றப் படுகிறான். அவன் பயன்படுத்தும் ஆயுதங்கள் சில ஆண்டுகளில் வேறொரு புதிய கண்டுபிடிப்பால் செல்லாக் காசாக்கப் பட்டு விடும்.
இதையும் தாண்டி ஒரு ராணுவ வீரன் ஆபத்து நேரங்களில் சரியான மனநிலையில் விரைவாக செயல்பட அவனை உளவியல் ரீதியில் தயார் படுத்தும் ஆய்வுகளையும் நாடுகள் செய்து வருகின்றன. ஆபத்து நேரங்களில் Damage control mode (பாதிப்பை குறைக்கும்) ல் அவனை செயல்படச் செய்ய மூளையை பயிற்சிக்கு உட்படுத்தும் நோக்கில் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
போரில் ஈடுபடும் வீரர்களை கேள்விகளுக்கு உட்படுத்தி அவர்களின் மன ரீதியிலான பாதிப்புகள் என்ன என்ற ஆய்வுகளும் இணையாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ராணுவத்தில் பணிபுரிந்து விட்டு வீட்டிற்கு செல்பவர்கள் மறுபடியும் போர் சூழலுக்கு செல்லும் போது அதனை விரும்புவதில்லை என்பது பெரும்பாலான ஆய்வுகளின் முடிவாக உள்ளது. இதனை திங்கட்கிழமை வேலைக்கு செல்ல சோம்பிரித் தனப்படும் மக்கள் சற்று கருத்தில் கொள்ள வேண்டும். அடிப்படையில் போருக்கு எதிரானது மனிதனின் ஆழ் மனது. ஆனால் நம்முடைய அரசியல் நிலைப்பாடுகளும் சித்தாந்தங்களும் அதன் மேல் மேற்பூச்சாக போருக்கான வேட்கையை பூசி விடுகின்றன.
நாம் ராணுவ வீரர்களை உண்மையில் மதிப்பதாக இருந்தால் நம்முடைய விடியோ கேமில் ரத்தம் குப்பளிக்க விழுந்து சாகும் Virtual மனிதர்களாக அவர்களை எண்ணாமல் ரத்தமும் சதையும் கொண்ட உணர்வுள்ள நிஜ மனிதர்களாக அவர்களை கருத வேண்டும். முடிவாக அவர்கள் இறந்தால் 'New life' Option ஐ தட்டி விட முடியாதே!
கண்ணன் ராமசாமி

0 comments: