7ஆவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அரசு ஊழியர்களுக்கு
போனான்சா என்று அனைத்து ஊடகங்களும் கூப்பாடு போடத் துவங்கி விட்டன. 7000 ரூபாயாக இருந்த சம்பளம் தற்போது 18000 ரூபாயாக
உயர்ந்திருக்கிறது என்பதே இவர்களது கவலை. இதன் கணக்கை சரிபார்த்துக் கொண்டு
மேற்படி கட்டுரையை தொடருகிறேன்.
சராசரியாக ஒரு அடிமட்ட மத்திய அரசுத் தொழிலாளியின் சம்பளம்
எவ்வளவாக இருந்தது?
அடிப்படை சம்பளம்: 7000 ரூ, அகவிலைப்படி 8750, மொத்தம் 15750. இதில் தேசிய பென்ஷன் திட்டத்திற்கு
பிடித்தம் செய்யப்படும் 10% ஐ கழித்தால் 14175 என்பது அலவன்சுகள் இல்லாமல் கையில் நிற்கும் சம்பளம்.
தற்போது சம்பளக் கமிஷனின் பரிந்துரையின் படி, எவ்வளவு
சம்பளம்?
அடிப்படைச் சம்பளம்: 18000, அகவிலைப்படி பூஜ்ஜியம். தேசிய பென்ஷன்
திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படும் 10% போக கையிருப்பு, 16200.
ஆக, 2025 ரூபாய் தான் உண்மையான சம்பள உயர்வு
என்பதை அறிந்து கொள்ளாலாம். இந்த சம்பள உயர்வின் உண்மையான சதவிகிதம் 14.7% மட்டுமே. கடந்த 70 ஆண்டுகளில்
இல்லாத அளவிற்கு இது குறைவான சம்பளம். அலவன்சுகளைச் சேர்த்தால் சம்பள உயர்வு 23%
கூடுதலாக வரும். இதற்கு தான் ஒரு சம்பளக் கமிஷன். அதற்கு இவ்வளவு
கூப்பாடு.
சம்பளக் கமிஷன் அமைப்பதன் நோக்கமே, பத்து ஆண்டுகளில்
அதிகரித்துக் கொண்டே வரும் பண வீக்கத்தை சமாளிக்க தொழிலாளிகளுக்கு திராணியை
ஏற்படுத்துவதே. ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கையின் ஏழாவது பக்கத்தில், அரசு என்பது
சேவைகளுக்கு முன்மாதிரியாக, தொழிலாளிகளை முறையாக நடத்தி அவர்களுடைய நம்பிக்கைகள்
தொய்வுறாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
ஆனால், அருண் ஜெயிட்லி அவர்களோ, தற்போது தனியாருக்கு இணையாக
அரசுத் துறையிலும் சம்பளம் இருக்கிறது என்று சொல்லி, தனியார் நிறுவனங்களை
முன்மாதிரியாக நிறுத்துகிறார். மக்களோ, இதை விட காண்ட்ராக்ட் தொழிலாளிகள், அமைப்பு
சாராத் தொழிலாளிகளின் நிலைமை படு மோசம். அதனால், இந்த சம்பள உயர்வு தேவையா? அல்லது
இதை எதிர்த்து போராட்டங்கள் தேவையா என்று யோசிக்கின்றனர்.
இங்கு தனியாரை முன்னுதாரணமாக நிறுத்துபவர்கள் ஒரு விடயத்தை
அறியவில்லை. தனியாரில் வேலை செய்பவர்கள் உழைப்புக்கு உகந்த சம்பளத்தை என்றுமே
பெறுவதில்லை. உதாரணத்திற்கு, அமரிக்காவின் சம்பள விகிதத்தை(100%) அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, ஆசிய பசிபிக் பகுதியில் இருப்பதிலேயே
குறைவான சம்பளத்தை பெறுபவர்கள் பிலிப்பைன்ஸ்(17%)
நாட்டிற்குப் பிறகு, இந்திய திறனாளர்கள் தான் (18%). இந்தோனேஷியா,
தாய்லாந்து, மலேஷியா, சீனா ஆகிய நாடுகள் நம்மைக் காட்டிலும் அதிகமாக
சம்பாதிக்கிறார்கள்.
காண்ட்ராக்ட் தொழிலாளிகளின் நிலைமையோ அதள பாதாளத்தில்
உள்ளது. இது வரையில் அவர்களின் சராசரி வருமானம் மாதத்திற்கு 6000 ரூ தான். இதை 10000 ஆக உயர்த்த இப்போது தான் தொழில்
அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது. மொத்தம் உள்ள 3.6 கோடி
காண்ட்ராக்ட் தொழிலாளிகளில் வெறும் 60 லட்சம் பேர் தான் Contract
Labour (Regulation and Abolition) Act 1970 ன் கீழ் வருகிறார்கள்.
மற்றவர்கள் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களால் சுரண்டப் படுகிறார்கள்.
இத்தகைய சூழலைத் தான் நமது மாண்பு மிகு அருண் ஜெயிட்லி
அவர்கள் முன்னுதாரணமாக நிறுத்துகிறார். இத்தகைய சூழலுக்கு இணையாகத் தான் அரசு
ஊழியர்களும் எதிர்பார்க்க வேண்டும் என்று நினைகிறார்கள் மக்கள்.
இந்தியா மட்டும் அல்லாத அனைத்து நாடுகளிலும், எட்டு மணி நேர
வேலை நேரத்திற்காக கடுமையான போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. 1974 ல் இந்திரா காந்தி அம்மையாரின் ஆட்சியில், 17 லட்சம்
ரயில்வே ஊழியர்கள் எட்டு மணி நேர வேலை நேரத்திற்காகவும், ஓட்டும் தொழிலாளிக்கு 12
மணி நேர வேலை நேரத்திற்காகவும், சம்பள உயர்விர்காகவும் போராட்டம்
செய்ததை யாரும் மறக்க முடியாது. பிரிட்டனில் நடந்த Eight Hour Day புரட்சி (1886) யைப் பற்றி நம் நாட்டவர்
அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1850 களில் வாழ்ந்த ராபர்ட் ஓவன்
என்பவர் தொடங்கிய “Eight hours Labour, Eight hours Recreation and Eight
hours Rest” வாசகத்தின் தாக்கத்தால் முதன் முதலாக ஃபோர்ட் இந்த
நடைமுறையைக் கொண்டு வந்தார். இதனால் அவருடைய தொழில் விருத்தி அடைந்ததை முன்னிட்டு
மற்றவரும் இதே நடைமுறையைக் கையாண்டனர்.
நம்மிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், 1974 ற்குப் பிறகு, கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிகப் பெரியதான ஒரு
தொழிலாளர் பேரணியை நாம் பார்த்ததே இல்லை என்பதாகும். நம்மிடையே போராட்டம் என்பது
தவறான ஒரு செயலாக சிறு வயது முதலே கற்பிக்கப் பட்டு விட்டது. இதற்கு இணையாக, அரசு
எந்திரம் எப்போதும் நல்லதே செய்யும் என்றும், அதன் செயல்பாடுகளின் மீது விமர்சனம்
வைப்பதும், போராட்டங்களின் மூலம் கோரிக்கைகளை அறியச் செய்வதும் தவறான செயல் என்று
போதிக்கப் பட்டுள்ளது. போராட்டம் என்று போகும் போது, அரசின் எதிர்வினையால் வேலையும்,
கையிருப்பாகிய பணமும், வாழ்க்கையும், போகும் என்கிற பயத்திலேயே தான் தொழிலாளிகள்
இன்று வேலை செய்கிறார்கள். இது ஒரு வகையில் தொழிலாளர் போராட்டங்களை எதிர்கொள்ள
முடியாமல், எதிர் காலத்தில் உள்ள நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அரசு மேற்கொண்ட
தற்காப்பு நடவடிக்கையால் உருவானது என்று கூறலாம்.
தனியார் துறையில், இன்று வரையிலும் அவர்கள் தங்களுடைய
குறைகளை தீர்த்துக் கொள்ள குறைகளுக்குக் காரணமானவர்களிடமே தான் முறையிட வேண்டும்
என்கிற நிலை இருக்கிறது. அவர்கள் ஒன்று கூடி தொழிற் சங்கங்கள் அமைக்க அனுமதி
இல்லாத ஒரு சூழலில் தான் கடந்த ஜூன் மாதம், புதிய ஜனநாயகம் தொழிலாளர் முன்னணி
சார்பில் தொடரப் பட்ட வழக்கிற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, ஐ.டி துறையில் வேலை
செய்யும் 4.5 லட்சம் தொழிலாளிகளும் சங்கம் அமைக்கலாம் என்கிற வரலாற்று
சிறப்பு மிக்க ஒரு அறிவிப்பை கொடுத்தது.
ஆனால், இவற்றை பற்றிய பிரக்ஞை எத்தனை பேருக்கு இருக்கிறது
என்று இது வரை எனக்குத் தெரியவில்லை. தங்களுடைய குறைகளை தீர்த்துக் கொள்ள அரசிடம்
முறையிட தைரியம் இல்லாத தனியார் துறையினர் தான், எட்டு மணி நேரம் வேலை நேரத்தை
முறையாக போராடிப் பெற்ற அரசு அலுவலர்களை விமர்சிக்கிறார்கள்.
இந்தியாவில் ஆண்டுக்கு 13 மில்லியன் மக்கள் வேலை
வாய்ப்பிற்காக தயாராகிக் கொண்டிருக்கும் போது, அரசு உருவாக்குவதோ மிகச் சொற்பமான
வேலை வாய்ப்பு. 2013 ஆம் ஆண்டு முக்கியமான எட்டு துறைகளில்
உருவான வேலை வைப்பின் எண்ணிக்கை 4.19 லட்சம் ஆகும். இது 2014
ல் 4.21 லட்சமாகவும் 2015 ல் வெறும் 1.35 லட்சமாகவும் உள்ளது. கடந்த ஆண்டின்
வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. ஆண்டுதோறும்
வெறும் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவே நாம் ஆண்டுக்கு 60000
கோடி அளவிற்கு வரிச் சலுகைகளை அள்ளி வீச வேண்டியிருக்கிறது. இந்த
உண்மையை மறைப்பதற்காகத் தான் இருக்கும் வேலையைப் பெறுவதற்கு கடினமான சூழல்களை
உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இது மறைமுகமாக நம்முடைய இளைஞர்களை வேலை இல்லாத்
திண்டாட்டத்தில் தள்ளுவதோடு நில்லாமல், வேலை கிடைக்காததற்கு தான் தான் காரணம்
என்கிற குற்ற உணர்ச்சியில் மன நோயாளிகளாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.
அரசை விமர்சிக்க முடியாத இவர்களும், பொது மக்களும்,
தங்களுடைய ஆதங்கங்களை, அவர்களில் ஒருவரான அரசுப் பணியாளர்கள் மீது திணிக்க
முற்படுகிறார்கள். ஒரு குறுகலான சாலையில், வாகன ஓட்டிகள் அனைவரும் ஆட்டோக்காரரை
திட்டித் தீர்ப்பது போலத் தான் இந்த நிலையும் என்று நமக்குப் புரிவதில்லை. இதனால்
தான் ஒரு தலைபட்சமான தமிழக இயக்குனர்களின் இந்தியன், அந்நியன் போன்ற கதைகள் சக்கை
போடு போடுகின்றன. இந்த கவனச் சிதறலினால், இவர்கள் அரசு ஊழியர்கள் எல்லோரும் காற்று
வாங்கிக் கொண்டு சுகமாக வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கொஞ்சம்
கடிவாளத்தை விலக்கி விட்டுப் பார்த்தால், அரசுப் பணியாளர்களின் நிஜ முகம்
புரியும்.
இவர்கள் நினைப்பது போல, அரசு அதிகாரிகள் வேலையே செய்யவில்லை
என்றால், பல்வேறு துறைகளில் எவ்வாறு அரசு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடிகிறது?
நாம் புல்லட் ரயிலை பற்றிக் கனவு கண்டு கொண்டிருக்கும் போது, மிகவும் பாதுகாப்பாக
நம்மை வேலையிடத்தில் இருந்து வீடு வரை கொண்டு சேர்த்து விடுவது யார்? உள்நாட்டு
அலுவல்களுக்கான பணிகளில் (Human Affairs) ஈடுபட்டுள்ள பணியாட்களின்
வேலைத் தரத்தின் மீது விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவர்களின் பணிச் சுமை
குறித்து எல்லோரும் அறிந்திருப்பார்கள். நான் குறிப்பிட்ட இந்த இரண்டு
அமைச்சகங்களில் முறையே 2014 ஆம் ஆண்டின் அறிக்கை படி 15.51
லட்சம் பணியாட்களும், 10.56 லட்சம்
பணியாட்களும் பணியில் இருக்கலாம் என்பது பரிந்துரை. ஆனால் இருப்பது, முறையே 13.16 லட்சம் மற்றும் 9.8 லட்சம் பணியாட்கள் தான்.
மொத்தமாக அரசுப் பணியில் 40.49 லட்சம் ஆட்கள் இருக்க வேண்டிய
இடத்தில், 33.02 லட்சம் ஆட்களே வேலையை பகிர்ந்து செய்து
கொண்டிருக்கிறார்கள். மொத்தமாக அரசுப் பணிகளில் மட்டும் நிரப்பப் படாத பணியிடங்கள்
மட்டும் ஏழு லட்சத்தை தாண்டுகின்றன. ஆனால் இதற்கு இணையாக வேலைச் சுமை ஒன்றும்
குறைவதாய் இல்லை.
இந்த பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்பு வருகிறது.
மக்கள் எழுதுகிறார்கள். மிகவும் கடினமான இந்தத் தேர்வுகளை எழுதும் அளவிற்கு
கல்வித் தரம் நம் நாட்டில் இல்லை. மறுபடியும் இவை காலியாகவே விடப் படுகின்றன. இந்தக்
கோபம் மக்களின் மனதில் ரிசர்வேஷனுக்கு எதிராகவும், தாழ்த்தப் பட்ட சமூகத்திற்கு
எதிராகவும் திரும்புகிறது. இங்கே 199.99 கட் ஆஃப் என்கிற எட்ட முடியாத இலக்கை
நிர்ணயித்தவர்கள் மீது யாருக்கும் கோபவம் வருவதில்லை. 198.9 கட்
ஆஃப் பெற்று முந்திச் செல்லும் ஒரு இட ஒதிகீட்டு மாணவனின் மீது தான் கோபம்
பொத்துக் கொண்டு வருகிறது.
உண்மையில் இந்தப் பணியிடங்கள் காலியாகவே இருப்பதற்குக்
காரணமாக சொல்லப் படுவது, அவர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்க அரசிடம் பணம் இல்லை
என்பதாகும். இந்த காரணத்தை சொல்லி தேபராய் கமிட்டி சார்பில் அரசிடம், இருப்பதிலேயே
அதிக பணியாட்கள் வேலை செய்யும் ரயில்வே துறையில் படிப்படியாக 9 லட்சம் வேலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் பரிந்துரைகள் அளிக்கப்
பட்டிருக்கிறது. இங்கு தான் சம்பளக் கமிஷன் பற்றிய மற்றொரு தவறான புரிதலுக்கு விடை
கிடைக்க இருக்கிறது.
அரசு தன்னுடைய நிறுவனங்களின் மூலம் ஈட்டும் பணத்தில் பெரும்
பங்கு பணியாட்களின் சம்பளத்திற்கே போய் விடுவதாக கவலை கொள்கிறார்கள் ஊடங்கங்கள்.
இதில் மேலும் சம்பளத்தை கூட்டினாலோ, புதியவர்களை பணியில் அமர்த்தினாலோ மிகப் பெரிய
நிதிச் சுமை அரசின் மீது விழும் என்கிறார்கள்.
ஒரு அரசு நிறுவனம் சேவைகளை செய்யும் போது லாபக்
கண்ணோட்டத்தில் யோசிக்கக் கூடாது என்பது முதல் குற்றச் சாட்டு. அடுத்ததாக,
நொண்டிச் சாக்குகள் எல்லாம் உண்மை தானா என்றும் பார்த்து விடுவோம்.
முதலாவதாக, சம்பளக் கமிஷனுக்குப் பிறகு, 1, 02, 100 கோடி கூடுதல் நிதிச் சுமை கஜானாவின் மீது விழுமாம். இதை பார்ப்பவர்கள்
அனைவருக்கும் வாய் விரியத் தான் செய்யும். ஆனால், இதற்கு நிகராக ஏழாவது சம்பளக்
கமிஷனில் தெரிவித்தது போலவே இந்தியாவின் GDP வளர்ச்சி மிதமான
அளவில் 11.5% என்று இருந்தாலும், 80,000 கோடி அளவில் அரசுக்கு அடுத்த நிதியாண்டில் வருமானம் கிடைக்கும். GST
பில்-ன் மூலமாக வரிகள் 18% த்திற்கு உயரப்
போகின்றன. இங்கு கார்பரேட்டுகள் உருவாக்கும் சொற்ப வேலைவாய்ப்புகளுக்கு பதிலாக
அரசு விரையம் செய்த 62,000 கோடியை பற்றியும் நாம் சிந்திக்க
வேண்டும்.
அடுத்ததாக, Fiscal Deficit எனப்படும் ‘நிதியில் விழும்
துண்டு’ உயரும் என்கிற வாதம் முன்வைக்கப் படுகிறது. இதுவும் வரலாற்றைப் பார்க்கும்
போது பொய் என்று தெரிகிறது. கடந்த சம்பளக் கமிஷன்களின் செயல்பாட்டிற்குப் பின்னால்
பெரிய அளவில் துண்டுத் தொகை அதிகரித்ததற்கான சான்றுகள் இல்லை. நான்காவது மற்றும்
ஆறாவது சம்பளக் கமிஷனில் அதிகரித்த துண்டுத் தொகை உலகச் சந்தையில் ஏற்பட்ட
நிலையற்ற தன்மையாலேயே உருவானதன்றி சம்பளத்தை உயர்த்தியதால் இல்லை. சொல்லப் போனால்,
மூன்றாவது மற்றும் நான்காவது சம்பளக் கமிஷனுக்குப் பிறகு துண்டுத் தொகை
குறைந்ததற்கான சான்றுகளே உள்ளன.
மூன்றாவதாக, அரசின் செலவுகளை குறைக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள்.
ஆனால், ஐந்தாவது மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷன் செயல்பாட்டிற்கு வந்ததற்கு பிந்தைய
ஆண்டுகளில், செலவு முறையே 26% அளவிற்கும் 28%
அளவிற்கும் அதிகரித்தே வந்திருக்கின்றன.
நான்காவதாக, நுகர்வு அதிகரிக்கும் என்கிற வாதமும் உண்மை
இல்லை. நம் அரசுப் பணியாளர்கள் வரலாற்றில், அதிகம் சம்பளம் பெற்றால் அதை
எதிர்காலத்திற்காக சேமிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்று
தரவுகள் சொல்கின்றன. அன்றி, அவர்கள் அதை செலவு செய்வதில் கவனம் செலுத்துவதில்லை.
முடிவாக, 2008 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியில்
உலகின் மிகப் பெரிய நிதி சேவை நிறுவனமான லேமன் பிரதர்ஸ் வீழ்ந்த நேரத்திலும்
இந்தியா வலுவாக இருந்ததற்கு காரணம் என்ன என்று கூறி கட்டுரையை முடிக்கிறேன். இந்தியா
ஒவ்வொரு முறை பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் போது வங்கிகளிடம் இருந்து கடன்
வாங்கி அந்த நிதிச் சுமையை சரிக் கட்டும். வங்கிகளிடம் இருக்கும் fixed
deposit தொகையும், பிராவிடன்ட் ஃபண்டு பணமும், சம்பளத்தை சேமித்து
வைக்கும் பழக்கம் கொண்ட நம் இந்தியர்கள் (அரசுப் பணியாளர்கள்
உட்பட) வியர்வையில் இருந்து பெறப் பட்டது என்பதை அரசும் மறக்க வேண்டாம்! அவர்களின்
மீது ஏக்கத்தோடு நோக்கும் தனியார் துறையினரும் மறந்து விட வேண்டாம்.
நேர்மையான போராட்டங்கள் தோல்வி அடைவதற்கு காரணம் மக்களுடைய/ஊடகங்களுடைய
ஆதரவு இன்மையாலேயே. ஒருவன் தெருவில் இறங்கிக் கொடி பிடித்தால், போக்குவரத்து
நெரிசல் ஏற்படலாம். ஆனால், உரிமைகளைப் பெற தனி மனிதனுக்கு ஜனநாயகம் அளித்துள்ள
வாய்ப்பு போராட்டம் மட்டுமே என்பதை நாம் உணர வேண்டும். நம் உரிமைகளை நமக்கு
கீழுள்ள ஒருவனைப் பார்த்து திருப்தி அடைந்து, விட்டுக் கொடுக்கும் மனோபாவம் மறைய வேண்டும்.
இந்தியர்கள் மற்ற நாட்டவரை பார்க்கும் போது எந்த விதத்திலும் அறிவிலும், திறனிலும்
கீழானவர்கள் இல்லை எனும் போது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கும் எதிர்காலச்
சேமிப்பிற்குமான பணப் புழக்கமும், வாய்ப்புகளும் இங்கு உருவாக வேண்டும் என்கிற
எதிர்பார்ப்பு மட்டுமே சரியானதாக இருக்கும்.
0 comments:
Post a Comment