Pages

Saturday, October 19, 2013

பின்னாலேயே தொடருமாம் பூதம்!

எனது அனுபவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்குக் காரணம், நான் சந்திக்கும் புதிய மனிதர்கள். முதலில் அவர்களுக்கு எனது வணக்கங்கள். நல்ல அனுபவமானாலும், கெட்டதானாலும் அது கிடைக்க வழி கிடைப்பது பெரும் பாடு. அதனால், கருத்தொற்றுமை இல்லாதவர்களுக்கும் வணக்கங்கள்.
இப்போதைய அனுபவம், ஒரு பூதத்தை பற்றியது. வேறொன்றுமில்லை. எனது ஜாதி தான். நகரத்தை ஒட்டிய ஓர் ஊரில் இருப்பதாலோ என்னவோ, மேல்தட்டு வர்க்கத்தினரைப் போல, "இப்போதெல்லாம் ஜாதிப் பிரிவினை இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் ஜாதிக் கலவரங்கள் நடக்கின்றன" என்ற கருத்தை நானும் கொண்டிருந்தேன்.
அப்பாவி மக்களின் வாழ்க்கை பற்றிய புரிதலை கொஞ்சமாக உள்வாங்கிவிட்ட இவ்வேளையில், வலிந்து போய் நானாக பிராண்டட் செருப்புகளின் ரேகைகளுக்குக் கீழே மண்ணோடு மண்ணாய் கலந்து  வாழ்ந்து கொண்டிருக்கும் அடித் தட்டு மக்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரு விவரத்தை முழுமையாய் உணர்ந்திருக்கிறேன்.
ஜாதி வெறியும், கலவரமும், பிரிவினையின் பிரதிநிதிகள் அல்ல. அவை மனிதனின் உள்ளிருக்கும் பிரிவினை எண்ணங்களின் வெளிப்பாடு மட்டுமே. தடுக்கப்பட வேண்டியது, எண்ணம் தானே தவிர, வெறியோ, கலவரமோ அல்ல. 
அவ்வாறே, அழியாமல், அழிக்க முடியாமல் இருக்கப்போகும் பிரிவினை எண்ணம், என்னைப் பின்தொடர்ந்து வரும் பூதமாய் தொடர்கிறது.
எங்கு போனாலும் எனது குணம் என்னவென்று கவனிக்க மனித எண்ணம் மறுக்கிறது. 
நீங்க 'யாரு'? 
உங்க கேஸ்ட் என்ன?
ராமஸ்வாமி-ன்னா, ஒண்ணு, ஐயரா இருக்கணும்; இல்ல, நாயுடுவா இருக்கணும்.
என்பன போன்ற சூசகக் கேள்விகளும், நேரடியான கேள்விகளும் என்னைப் பின் தொடர்கின்றன.
அதனால் என்ன? என்று கேட்கிறீர்களா? நிறைய பிரச்சனைகள். சொல்கிறேன்.
முதலில், என் முகத்தைப் பார்த்ததும், என்னால் எந்த ஒரு கடினமான வேலையும் செய்ய முடியாது என்று அவர்களாகவே முடிவு செய்து கொள்கின்றனர். ஆனால், தோட்டத்தில் குழி வெட்டுவது முதற்கொண்ட, கடினமான வேலைகலை செய்து எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த எண்ணத்தால், பல நேரங்களில் வேடிக்கை பார்த்தபடி நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறேன். எனக்குப் பிடிக்காத ஒன்று, தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது.
அடுத்து, ஆயிரமாண்டு ஆதிக்க புத்தி இவனுக்கும் இருக்கும் என்ற எண்ணம். ஒரு முறை, தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த ஒரு நபர், வழிந்து வரும் வியர்வை கண்ணுக்குள் விழுவதால் ஏற்படும் எரிச்சலைப் போக்க, கையால் துடைக்க முற்பட்டார். ஆனால், அவர் கை முழுவதும் கிரீஸ் கரையாக இருந்தது.  இதைப் பார்த்ததும், என் கைக்குட்டையை எடுத்து துடைத்து விடத் தோன்றியது எனக்கு. அவரைப் பார்த்து புன்னகைத்து நெருங்கினேன். உடனடியாக அவர் கேட்ட கேள்வி,
"என்ன சிரிக்கிரீங்க? எங்கள பார்த்தா நக்கலா இருக்கா?" என்பது தான்.
எனக்கு கோபம் வரவில்லை. மாறாக, அன்று மாலை கண்ணாடியில் என் முக வடிவத்தைக் கண்டதும் வருத்தம் தான் வந்தது. என் முகத்தில் அவனது நண்பன் முகம் தெரியவில்லை. காரணம், அவனுக்கு என் முக ஜாடையில் நண்பர்களே இல்லை! இதற்கு ஜாதி தானே காரணம்? நட்பில் கூட ஜாதி பார்த்துத் தான் கூடுகிறார்கள்; இன்றும்!
அடுத்து, இன்னொருவர், "நீங்க பிராமின்-ன்னு அப்பவே நெனச்சேன். ஏன்னா, மத்ததுங்க எல்லாம், திருட்டுக் கோட்டுங்க மாதிரியே இருக்கும்" என்றார். நான், "பொறப்புல என்ன இருக்கு? அவனவன் வளந்த விதம் தான்" என்றேன். உடனே அதற்கு அவர், "அய்யா, உங்களை எதுவும் சொல்லலை" என்றார். அதாவது, அடுத்த ஜாதிக் காரனுக்காக ஒரு பிராமணன் வக்காலத்து வாங்கிப் பேசியது அவர் காதுகளில் விழவே இல்லை! எப்போதும் போல, பிராமணன் தன்னையே உயர்வை நினைப்பான் என்ற எண்ணத்தில், உங்களை குறை சொல்லவில்லை என்கிறார். 
படிப்பவர்களுக்கு, நான் யாரைக் குறை சொல்கிறேன் என்று குழப்பமாக இருக்கலாம். தவறுகளை துடைக்க முற்படும் வரை இந்த இடர்பாடுகளை நான் சந்திக்கத் தான் வேண்டும் என்றே கூறுகிறேன். என் பின்னால் வரும் பூதத்தை கீழே இறக்கி வைத்து விட்டால் மட்டும் போதாது. அதை உலகறியச் செய்யவும் வேண்டும் என்றே கூறுகிறேன். 

0 comments: