Pages

Monday, December 10, 2012

லைஃப் ஆஃப் பை விமர்சனம்


                                                                                                       

டிசம்பர் ஒன்பதன்று அபிராமி ரோபோ தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன். இது Cast Away மாதிரி இருக்கும் என்று சிலர் சொன்னார்கள். ஆனாலும் இந்தியாவில், அதிலும் பாண்டிச்சேரியில் எடுத்த படம் என்பதால் போய் பார்த்தேன். அந்த நினைப்பு பொய் என்று தெரிந்தது. இது ஒரு மனிதனுக்கும், விலங்குமான தொடர்பு சம்மந்தப் பட்ட படம்.


எங்கள் வீட்டில் ஓர் நாட்டு நாய் உள்ளது. நாயுக்கும் எனக்குமான தொடர்பு மனிதத் தொடர்பை விட மேலானது. நான் என்ன பேசுகிறேன் என்று அதற்குப் புரியும். அது என்ன சொல்கிறது என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியும். ஆச்சர்யப் படும் விஷயம் என்னவென்றால், நான் தினமும் குளித்து, புதிய ஆடை அணியும் போது, என்னை நுகர்ந்து பார்த்து வாலாட்டும். தினமும் காலையில் என் மேல் கால் வைத்து எழுப்பும். 

அதே நேரம், இரண்டு முறை கடித்திருக்கிறது. முதல் முறை கடித்த போது அது சிறிய குட்டி. என்னை விளையாட அழைக்கும் நோக்கில் தொடையில் வாயை வைத்தது. புதிதாக வளர்ந்த கூர்மையான பல் அறியாமலே உள்ளே இறங்கி விட்டது. இரண்டாவது முறை கடித்த போது மூன்று வயது. அதனுடைய காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தேன். வலி தாங்காமல் கவ்வியது. பல முறை விளையாடும் போது தெரியாமல் நகம் படும். ஆனால் ஒரு முறை கூட என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு எதையும் செய்ததில்லை. எதிர்ப்பை தெரிவிக்க வாயைத் திறந்தாலும், பற்களை உள்ளே செலுத்தியதில்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், படத்தின் நாயகன், அவன் அப்பா நடத்தி வந்த சூவை(zoo) மூடிவிட்டு கனடாவுக்கு விலங்குகளை எடுத்துச் செல்லும் போது தனியாக மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து ஓர் சிறிய படகில் ஏறிக் கொள்கிறான். அப்பா, அம்மா, சகோதரன் எல்லோரும் மூழ்கி விடுகிறார்கள். நான்கு மிருகங்கள் மட்டும் தப்பிக்கின்றன. அவை இவனுடைய படகில் ஏறிக் கொள்கின்றன. அந்த நாயகன், எப்படி ஒரு பெங்கால் புலியுடன் பயணித்து கடலில் இருந்து தப்பிக்கிறான் என்பது தான் கதை. புலியுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதை படத்தில் அற்புதமாக காட்டி இருக்கிறார்கள்.


புலியும் நாயும் ஒன்றல்ல. ஆனால் புலியுடைய பல்வேறு செய்கைகளை நான் என் நாயிடம் பார்த்திருக்கிறேன். கம்பை எடுத்தால் ஒரு காலால் அதை தடுப்பது, சோம்பல் முறிப்பது, உட்காருவது இது எல்லாமே தத்ரூபமாக இருக்கிறது.

தொடக்கத்தில் ஒரு தமிழ் பாடல்! விலங்குகளை காண்பிக்கும் போது பின்னணியில் அந்த இசை காதுக்கு இனிமையாக இருந்தது. ஒரு ஓரங்குடன் குரங்கின் தாய்ப் பாசத்தை காட்டியது, நரியை சமாளிக்க முடியாமல் அந்த குரங்கும் ஜீப்ராவும் இறப்பது மனதை கனக்கச் செய்தது. வில்லனாக சித்தரிக்கப் பட்டுள்ள அந்த நரியை வேட்டை ஆட ‘come on’ என்று நாயகன் சொல்லும் போது, நரியை கொல்ல புலி பாய்ந்து வந்தது தான் படத்தின் ஹை லைட்! அந்த புலிக்கு அது ஒரு ‘introduction scene’ என்றே சொல்லலாம்.

பசிக்காத வரை தான் மிருகம் நல்லபடியாக இருக்கும் என்று யதார்த்தத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர். அது உண்மை தான். அதே நேரம், மனிதனும், மிருகமும் மனதளவில் இணக்கமாக வாழ வழி உள்ளது என்பதையும் உணர்த்தி இருக்கிறார்.

படம் முழுவதும் உள்ளோட்டமாக கடவுள் நம்பிக்கை வருகிறது. நாயகன், இந்தியாவின் முக்கிய மூன்று மதங்களை ஒரே நேரத்தில் பழகுகிறான். கடலில் தத்தளிக்கும் போது கடவுள் நம்பிக்கை அவனுக்கு உதவுகிறது. முடிவில், கப்பல் ஏன் மூழ்கியது என்று கேட்டு வரும் ஜப்பானிய அதிகாரிகளிடம் தன் கதையை சொல்கிறான். ஆனால் அவர்கள் ஒரு தவறை கண்டு பிடித்து அந்தக் கதையை நம்ப மறுக்கிறார்கள். அதனால்,
மிருகங்களுக்கு பதில் மனிதர்களை கதாபாத்திரங்களாக மாற்றி அதே கதையை வேறு விதமாக சொல்கிறான். இரண்டில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று கதை கேட்கும் நம்மிடம்(நம் பிரதிநிதியாக படத்தில் ஒருவர் இருக்கிறார்) கேட்கிறான். நம்மைப் போலவே அவரும் டைகர் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார். அப்படியானால் நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்று சொல்கிறான்.


ஒரு தீவில் பகல் முழவதும் நிம்மதியாக வாழும் உயிரினங்களுக்கு இரவில் அத்தீவே எதிரியாகிறது. அங்கு உள்ள நீரில் ஒருவகையான ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இதை என்னால் நிரூபிக்க முடியவில்லை. ஓரங்குடன் குரங்கு கடலில் மிதக்கிறது என்று நான் சொன்னேன். அதை அவர்கள் நம்பவில்லை. ஆனால் இதெல்லாம் உண்மை. நான் பார்த்தேன்- என்று கூறி கடவுள் நம்பிக்கையை நியாயப் படுத்துகிறான்.

இந்த வாதத்திற்கு கண்டிப்பாக விஞ்ஞானத்திடம் பதில் உள்ளது. ஆனால் உணர்வு சம்மந்தமான படத்தில் அந்தக் கேள்விகள் தேவை அற்றவை. ஒரு நம்பிக்கை நன்மை செய்தவரையில் நாம் எந்த கேள்வியை எழுப்பப் போவதில்லை. எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் ஒருவனிடம் கடவுள் நம்பிக்கை இருந்து விட்டுத் தான் போகட்டுமே!   

0 comments: