
பின், திமுக ஆட்சிக்கு வந்ததும் பெரும் பொருட்செலவில் புதிய தலைமைச் செயலகம், ஓமந்தூரார் எஸ்டேட்டில் கட்டப்படும் என்று அறிவித்தது. அதற்கு கலைஞர் அவர்களின் பெயரை சூட்டப் போவதாக அறிவிக்கப் பட்டது.
இந்நிலையில், கட்டுமானம் முடிவதற்கு முன்னாலேயே திமுக, பிரதமர் தலைமையில் திறப்பு விழா கொண்டாடியது. முடிக்கப் பெறாத மாடிகளை திரை வைத்து மறைத்து சட்டசபையும் கூடியது. முன்னதாக தலைமைச் செயலகம் இருந்த இடமான செயின்ட் ஜார்ஜ் கோட்டை செம்மொழி நூலகமாக மாறியது.
இந்த வருடம் நடந்த தேர்தலின் முடிவால் ஆதிமுக மறுபடியும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நேரத்தில், தலைமைச் செயலகம் மறுபடியும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாறும் என்று எதிர்பார்க்கப் பட்டது. அது போலவே முதல்வர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் புதுப்பிக்கப் பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு தலைமைச் செயலகம் மாறியது. உடனே தி.மு.க, ம.தி.மு.க முதலான பல கட்சிகள் 'ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை' என்ற தலைப்பில் கண்டனத்தை தெரிவித்தனர். பலர், “மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை அப்படியே விட்டுவிடுவது சரியில்லை; அந்த கட்டிடத்தை சரியான முறையில் உபயோகிக்கவேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த கருத்துக்களும், விமர்சனங்களும் முதல்வரை பதில் கூற நிர்பந்தித்தன. தலைமைச் செயலகம் ஏன் மாற்றப்பட்டது என்பதற்கான காரணத்தை கூறி, இந்த முடிவு காழ்ப்புணர்ச்சியின் காரணத்தால் எடுத்தது அல்ல என்றும், அந்த கட்டிடம் உரிய முறையில் உபயோகப்படுத்தப் பட்டு, செலவிட்ட பணத்திற்கு மதிப்பு கொடுக்கப் படும் என்றும் முதல்வர் பதிலளித்தார். அவர் கூறிய காரணங்கள் இவையாவன:
௧. கட்டிடம் இன்னும் கட்டிமுடிக்கப் படவில்லை. சினிமா செட் போல திரையை போட்டு சமரசத்துடன் சபை கூடியது.
௨. அரசின் 36 துறைகளுள் 30 துறைகள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து தான் இயங்கின; ஆறு துறைகள் மட்டும் பெயருக்கு அங்கு இயங்கிக் கொண்டிருந்தன. இது சரியான அரசியக்கத்திற்கு சான்று அல்ல.
௩. கட்டுமானத்தில் ஊழல் நடந்திருக்கிறதா என்று ஆய்வு செய்ய குழு நியமிக்கப் பட்டிருக்கிறது. கட்டப்பட்ட கட்டிடம் செயலகத்திற்கு தகுதியற்றது.
இந்த காரணங்களில், முதல் இரண்டு காரணங்களுக்கு ஆவணங்களும் அரசு சார்பில் அளிக்கப் பட்டன. கட்டிடத்தில் திரை போட்டு சபை கூடியதற்கும் புகைப்பட ஆவணங்களும் இணையதளத்தில் உலாவின.உடனே தற்காலிகமாக செயலகம் மாறியது குறித்து 'மௌனத்தின்' மூலம் கட்சிகள் பதிலளித்தன. ஆனாலும், பாரம்பரியம் மிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையை செம்மொழி நூலகமாக மாற்றிய திமுகவைப் போல், இந்த கட்டிடமும் ஒப்புக்கு உபயோகிக்கப் பட்டால், கொடி தூக்கத் தயாராய் இருக்க கட்சிகள் முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால், மேலும் முக்கிய பிரச்சனையான சமச்சீர் கல்வி, அவர்கள் கவனத்தை குத்தகை எடுத்திருந்தது.
சமச்சீர் கல்வி விவகாரத்தில் ஒரு முடிவு கிடைத்துவிட்டது. எதிர்ப்புகளும் அடங்கிவிட்டன. அடுத்து புதிய செயலகக் கட்டிடம் என்ன ஆகும் என்ற பிரச்சனையைப் பற்றி பிறர் யோசிக்கத் தொடங்குவதற்குள், முதல்வரிடமிருந்து அரசாணை வெளிவந்துவிட்டது. அவர் ஆணையில் கூறப்படுவதாவது,
"புதிய கட்டிடத்தின் A பிரிவில் AIIMS இற்கு இணையான ஒரு மருத்துவமனை நிறுவப்படும். முக்கியமாக ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படும்; B பிரிவில் ஒரு மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் படும் "
இந்த அரசாணையால், கட்டிடம் ஒப்புக்கு உபயோகபடுத்தப் படுகிறதென்று எந்த கட்சியும் வாதமிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், செம்மொழி நூலகத்தை செயலகமாக மாற்றி அமைத்ததற்கே பெரிய சர்ச்சை எழுந்தது.
பிற்காலத்தில் திமுக ஆட்சிப் பீடத்தில் ஏறினால், அரசு மருத்துவமணை மற்றும் கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க பெரிய இடம் தேவைப் படும். இதே போன்ற இடம் கிடைக்குமா என்பது சந்தேகம். இடம் கிடைக்காமல் மூட முடிவு செய்தால், அது மேலும் சிக்கலில் கொண்டு பொய் விடும். இது திமுகவுக்கு தர்மசங்கடமான நிலை.
இனி செயலகம் வேறு இடத்திற்கு மாறுவதும், அதை திரும்பவும் தான் முதல்வர் ஆனதும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதும் நடக்கக் கூடாது என்ற தந்திரத்தோடு இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்பது புரிகிறது.
மக்கள் நலனின் பார்வையில் கூறவேண்டுமானால்,இந்த முடிவு சரியான முறையில் பயனளித்தால் பாராட்டப் படவேண்டிய முடிவு. அப்படி அல்லாமல், அரசியல் தந்திரமாக மட்டும் செயல்பட்டால், திமுக சாலை மறியல் செய்து பலத்தை நிரூபிக்க இடமளிக்கும் மற்றொரு அவசர முடிவாக தான் கருதப்படும்.
0 comments:
Post a Comment